Print Version|Feedback
හැටන් අසල ෆෝඩයිස් වත්තේ හටගත් ගින්නකින් පවුල් විසිහතරක් අවතැන් වේ
இலங்கை: ஹட்டனுக்கு அருகில் ஃபோடைஸ் தோட்டத்தில் நடந்த தீ விபத்தில் இருபத்தி நான்கு குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன
M. Thevarajah
07 January 2019
இலங்கையின் மத்திய மலையக நகரான ஹட்டனுக்கு அருகில், ஃபோடைஸ் தோட்டத்தில், கடந்த டிசம்பர் 29 அன்று, 20 லயன் அறைகள் திடீரென தீ பற்றியதால் 24 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் கடினமாக உழைத்து வாங்கிய நகைகள், இலத்திரனியல் பொருட்கள், ஆடைகள் மற்றும் பாடசாலை சிறுவர்களின் புத்தகங்களும் சீருடைகளும் தீயில் நாசமாகின. சனிக்கிழமை காலை, 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட இந்த லயன் அறைகளில் ஒரு வீட்டில் பற்றிய தீ, ஏனைய வீடுகளுக்கும் விரைவாக பரவியது. பொலிஸ் விசாரணை நடந்த போதும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
வீடுகள் எரிந்து போனதால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
35 பெண்கள், 45 குழந்தைகள் மற்றும் 28 ஆண்கள் உள்ளடங்கிய இந்த குடும்பங்கள் போதிய உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறைகள் உட்பட வசதிகள் இல்லாத நிலையில், ஒரு மருந்தகத்திலும் ஒரு திறந்தவெளி அரங்கிலும் தங்க வைப்பட்டுள்ளனர். தோட்டக் கம்பனியினால் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திறந்தவெளியில் தற்காலிக குடிசைகள் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், அந்தக் கொட்டகைகள் தற்போதைய குளிர் காலத்தில் குழந்தைகளுடன் வாழ மிகவும் சிறியதாகவும் கடினமாகவும் இருக்கும் என இடம்பெயர்ந்த குடும்பங்கள் புகார் கூறுகின்றன.
இலங்கையில் பெருந்தோட்டங்களில் வரிசை வீடுகள் தீ பற்றுவது தொடர்ச்சியாக நிகழ்கிறது. 2011 ஏப்ரலில் மஸ்கெலியாவில் ப்ரௌன்ஸ்வீக் மற்றும் உள்ள பார்கோ தோட்டங்களில 20 வீடுகள் தீயில் எரிந்தன. 2012 மே மாதம், மொக்கா தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்த 22 லயன் அறைகள் தீயில் எரிந்தன. 2014 நவம்பரில், நுவரெலியாவுக்கு அருகில் டயகம தோட்டத்தில் 22 லயன் அறைகள் எரிந்து போயின. இதில் 83 பேர் இடம்பெயர்ந்தனர். கடந்த 15 ஆண்டுகளில் மின்சாரத் கோளாருகளால் 300 க்கும் மேற்பட்ட லயன்-அறைகள் தீக்கறையாகின. எனினும், எந்தவொரு மாற்று நடவடிக்கையும் தோட்டக் கம்பனிகளால் எடுக்கப்படவில்லை.
ஃபோடைஸ் தோட்டத்தில் முழுமையாக எரிந்து போன ஒரு வீடு
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஃபோர்டைஸ் தோட்டத்தின் ஒரு தொழிலாளி, சம்பவத்திற்கு முன்னதாக தனது குடும்பம் அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாக கூறினார். "குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சிறிய குடிசையில் வாழ்வது எப்படி? இரண்டு தனிக் குடிசைகளை நாங்கள் கேட்கிறோம். ஆனால் அவர்கள் கவலைப்படவில்லை,” என அவர் கூறினார்.
முழு வீடும் அழிந்து போன ஏ. யோகேஸ்வரன், "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்,” என்றார். “என் பிள்ளைகளின் புத்தகங்கள், அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்கிய சிறிய தங்கச் சங்கிலி, சிறுவர்களின் பள்ளி சீருடைகள் உட்பட அனைத்து ஆடைகளும் சாம்பலாகிவிட்டன. சாப்பாட்டுக்கே போதாத எங்களது வறிய சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி இவற்றை மீண்டும் வாங்குவது?”
தினசரி ஊதியத்தை 500 ரூபாயிலிருந்து (2.73 டாலர்) 1,000 ரூபாவாக அதிகரிக்க கோரி 9 நாட்களாக தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர் என அவர் கூறினார். "ஆனால் அனைத்து தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தன. இப்போது நாம் எல்லா பொருட்களையும் இழந்துவிட்டோம். எப்போதும் கடன் சுமையிலேயே வாழ்ந்து வந்தோம். நாங்கள் எல்லா பக்கங்களிலும் துன்பப்படுகிறோம். எங்களுக்கு முறையான வீட்டுவசதி திட்டம் இருந்திருந்தால், இந்தளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டோம்,” என அவர் தெரிவித்தார்.
730 ரூபா நாள் சம்பளத்தைப் பெற 21 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும் அத்துடன் கொழுந்து பறிக்கும் தினசரி இலக்கு 18 கிலோவாகும் என்று அவர் கூறினார். "நாங்கள் இலக்கை முடிக்க முடிக்காவிட்டால் நாளொன்றுக்கு 500 ரூபா அடிப்படை ஊதியம் மட்டுமே கிடைக்கும். நிரந்தரமற்ற தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 500 ரூபா மட்டுமே பெறுகிறார்கள். அவர்களுக்கு கொடுப்பனவுகள் கிடையாது. பல தோட்டத் தொழிலாளர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்தையும் தங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக 500 ரூபாவுக்கு தோட்டத்தில் வேலை செய்யத் மீண்டும் சேர்ந்துகொள்கின்றனர். அதனால்தான் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை நாங்கள் கேட்கிறோம்.”
தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிக ஒடுக்கப்பட்ட தட்டினராவர். அவர்களின் சமூக நிலைமைகள் கடந்த 150 ஆண்டுகளாக மாறவில்லை.
ஃபோடைஸ் தோட்டத்தில் எரிந்து போன லைன் வீடுகள்
அவர்கள் ஒரு நாளுக்கு 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு முழு ஊதியமும் உற்பத்தித்திறன் கொடுப்பனவுகளும் மாதம் 22 நாட்களுக்கு ஒரு வேலை செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். அவர்களில் 67 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் இன்னமும் 10x12 அடி ஜன்னல்கள் இல்லாத, காற்றோட்டம் இல்லாத லயன் வீடுகளிலேயே வசிக்கின்றனர். பல குடும்பங்கள் ஒரு லயன் வீட்டில் வசிக்கிடன்றன. தோட்டத் பகுதியில் சுமார் 25 சதவீத மக்களுக்கு கழிப்பறை இல்லை. முன்னதாக, அந்த லயன் வீடுகள் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அது கைவிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதி மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி கொடுக்கின்றன, ஆனால் நடைமுறைக்கு வருவதில்லை.
நகர்ப்புற கல்வியறிவு 92 சதவிகிதத்திற்கும் அதிகமானதாக இருந்தாலும், தோட்டப்ங்களில் 66 சதவிகிதமாகவே உள்ளது. பாடசாலைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் உட்பட போதுமான வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. சுமார் 20 சதவிகித ஆசிரியர்கள் தொண்டர் ஆசிரியர்களாக உள்ளனர்.
தேயிலை உற்பத்தி நாடுகளில் வளர்ந்து வரும் போட்டிகளின் கீழ், இலங்கை தேயிலை கம்பனிகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளதுடன், குறைந்தபட்ச ஊதிய முறைமையையும் சமூக நலன்களையும் கூட இல்லாதொழிக்க வலியுறுத்துவதோடு, வருமானப் பகிர்வு முறைமையை அமுல்படுத்த நெருக்கி வருகின்றன. இந்த வருமானப் பகிர்வு முறைமையின் கீழ் தொழிலாளர்கள் நவீன குத்தகை விவசாயிகாளாக மாற்றப்படவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட சகல பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும், பெருந்தோட்ட கம்பனிகளதும் முதலாளித்துவ அரசாங்கங்களதும் ஏஜன்டுகளாகவே செயற்பட்டு வருகின்றன.
NUW, ஜ.தொ.கா. LJEWU, ம.ம.மு. ஆகியவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் அதே வேளை, இ.தொ.கா. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆதரவளிக்கின்றது. இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள், தங்கள் சலுகைகளில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.
சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய 9 நாள் வேலைநிறுத்தத்தை அவர்கள் காட்டிக்கொடுத்ததுடன், சமூக உரிமைகளை பாதுகாக்கவும் ஒரு கெளரவமான ஊதியத்துக்காகவும் ஒரு பொது போராட்டத்தை நடத்துவதை இந்த தொழிற்சங்கங்கள் முற்றாக நிராகரிக்கின்றன.
ஏழை தோட்டத் தொழிலாளர்களின் 20 லயன் அறைகள் அழிந்து போனமை, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தோட்ட கம்னிகளும் முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாளர்களின் சமூக உரிமைகளை மறுத்ததன் விளைவே ஆகும்.