Print Version|Feedback
ශ්රී ලංකාව: වතු පාලකයන් වර්ජනයේ ක්රියාකාරීන් දඩයම් කරයි
இலங்கை: பெருந்தோட்ட நிர்வாகிகள் வேலைநிறுத்த செயற்பாட்டாளர்களை வேட்டையாடுகின்றனர்
By our correspondents
5 January 2018
இலங்கையின் பெரும் வர்த்தகர்களான பெருந்தோட்டக் கம்பனிகள், தமது நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக ஆக்கிக்கொள்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களை நசுக்குவதற்காக, அரசாங்கத்தினதும் பொலிசினதும் பூரண ஒத்துழைப்புடன் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட களமிறங்கியுள்ளன. டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில், என்ஃபீல்ட் தோட்டத்தின் சென் எலியாஸ் பிரிவில் முன்னிலையில் நின்ற தொழிலாளர்கள் இந்த வேட்டையாடலுக்கு பலியாகியுள்ளனர்.
களனிவெளி பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான இந்த தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தோட்டத் தலைவரான சுப்பையா பாலசுரமணியம் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 5 அன்று, வேலைநிறுத்தத்தின் போது கொழுந்துடன் வந்த லொறியினை தொழிற்சாலைக்குள் செல்லவிடாது அதன் கேட்டை மூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், பாலசுப்ரமணியத்துடன் கிருஷ்ணன், பத்மநாதன், சுப்பிரமணியம் ஆகிய அந்த தோட்டத்தைச் சேர்ந்த, போராட்டத்தில் முன்நின்ற தொழிலாளர்களுக்கு எதிராகவும், அப்போது அந்த இடத்தில் இருந்ததாக அருள்நாயகி, கிளேரா, சிவசாமி ஆகிய இ.தொ.கா. அங்கத்தவர்கள் மூவருக்கு எதிராகவும், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தோட்ட நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 16, இந்த தொழிலாளர்கள் அனைவரும் ஹட்டன் பொலிஸ் நிலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு எதிரான மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு வேலை வழங்காமைக்கும், தோட்ட நிர்வாகம் இந்த குற்றச்சாட்டையே முன்வைத்துள்ளது. வேலை நிறுத்தத்தின் பின்னர் அவர் வேலைக்கு சென்றபோது, நிர்வாகம் வேலை வழங்க மறுத்துள்ளது.
பெருந்தோட்ட கம்பெனிகளின் முன்னாள் தலைவரான ரொஷான் ராஜதுரை, களனிவெளி பெருந்தோட்டத்தின் நிர்வாக முகாமையாளராக இருக்கும் நிலையில், அந்த கம்பெனிக்கு சொந்தமான தோட்டமொன்றில் இந்த வேட்டையாடல் நடப்பது புதுமையான விடயம் அல்ல. சம்பளத்தை அதிகரிக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்த போதே, ஊதிய அதிகரிப்பு கொடுப்பது எவ்விதத்திலும் சாத்தியமானது அல்ல என ராஜதுரை வலியுறுத்தினார். பெரும் பல்தேசியக் கூட்டத்தாபனங்களின் லாபத்தினை உறுதிசெய்ய செயட்படுவதிலும் அதற்காகப் பிரச்சாரம் செய்வதிலும் ராஜதுரை முன்னணி பாகம் வகிக்கின்றர்.
இதற்கு முன்னரும், களனிவெளி கம்பெனியின் தோட்டங்களில் நடந்த போராட்டங்களில் முன்நின்ற தொழிலாளர்களுக்கு எதிராக, குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 2016ல் சம்பள அதிகரிப்புக் கோரி போராடிய இன்ஜஸ்றி தோட்டத் தொழிலாளர்கள் ஏழு பேருக்கு எதிராக, தோட்ட அதிகாரியின் வீட்டுத் தோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சசாட்டின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த போராட்டத்தின் போது, தொழிற்சாலைக்கான மிசாரத்தை தடைசெய்தனர் என்ற குற்ற சாட்டில், என்ஃபீல்ட் தோட்டத்தின் நான்கு தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, தோட்ட நிர்வாகிகள் பொலிஸை ஈடுபடுத்தினர். அந்த வழக்கு இன்னமும் விசாரணையில் உள்ளது.
இந்த தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இ.தொ.கா. தலைவர்கள், நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்றவாறு பொலிஸ் மற்றும் நீதித் துறையின் ஒடுக்குமுறைக்கு வழியமைத்து கொடுத்துனர்.
டிசம்பர் 16 நடந்த விசாரணையின் போது, பாலசுப்ரமணியத்துக்கு வேலை கொடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வதாக இ.தொ.கா. பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வாய்ச்சவடால் விடுத்தபோது, தாம் கம்பெனியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே செயட்படுவதாக நிர்வாகிகள் அறிவித்தவுடன் அவர் மௌனமாகிவிட்டார்.
அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக சீரிப்பாய பொலிசுக்கு பூரண அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்டங்களை தயாரித்து வருவதோடு, இராணுவத்தையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. 2015ல் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகம், சுகாதார சேவை, எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களை ஒடுக்குவதற்கு பொலிஸையும் இராணுவத்தையும் கட்டவிழ்த்து விட்டதில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பேர்போனதாகும்.
நாளாந்த சம்பளத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபா வரை உயர்த்த முதலாளிமார் சம்மேளனம் முற்றாக நிராகரித்துள்ள அதே வேளை, ஒரு அற்ப சம்பள அதிகரிப்பைக் கொடுத்து, வருமானப் பங்கீடு முறைமையை அமுல்படுத்தி, அதன் கீழ் அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவோடு பெருந்தோட்டத் துறை முழுதும் இந்த தாக்குதலை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றது. இந்த நிலைமைகளுக்கு மத்தியிலேயே தொழிலாளர்களை வேட்டையாடி அச்சுறுத்துவதில் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களை பாதுகாக்காது, கம்பெனிகளின் திட்டத்தினை தொழிலாளர்கள் மீது சுமத்த உதவும் தொழிற்சங்கங்கள், ஆளும் வர்க்கத்துக்காக செயற்படும் பொலிஸ் படையாகும்.
வேலைநீக்கம் செய்யப்ட்டுள்ள பாலசுப்ரமணியத்துக்கு நிபந்தனையின்றி வேலைவழங்குமாறும், அவர் உட்பட ஏனைய தொழிலார்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள பொலிஸ் வேட்டையாடலை நிறுத்துமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வழியுறுத்துகிறது. தோட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் தொழிலாளர்கள் சென் எலியாஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளை இரத்துச் செய்யுமாறு கோரி, அவர்களை பாதுகாக்க தாமதமின்றி முன் வருவது அவசியமாகும்.
தொழிலாள வர்கத்தின் உரிமைகளுக்காக போராடுவதற்கு தமது சொந்த நடவடிக்கை குழுக்களை தோட்டங்களிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சோஷலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசரமும் அவசியமுமாகியுள்ளது.