ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Rohini Hensman’s Indefensible: The ISO discovers its muse—the CIA

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது : சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது

By Alex Lantier
14 December 2018


நியாயப்படுத்தமுடியாதது

பின்வரும் கட்டுரை நியாயப்படுத்தமுடியாதது: ஜனநாயகம், எதிர்ப்புரட்சி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றிய வார்த்தையாடல் என்ற புத்தகம் மீதான திறனாய்வாகும்.

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகத்தினரால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நியாயப்படுத்தமுடியாதது (Indefensible) என்ற புத்தகம் ஏகாதிபத்திய போருக்கான உரத்த குரலிலான ஒரு வழிமொழிவாக இருக்கிறது. சிரியப் போர் ஒரு “ஜனநாயகப் புரட்சி” என்பதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களது களைத்து ஓய்ந்துபோன பொய்களின் வழி பயணிக்கும் அப்புத்தகம், 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் ஜனநாயகக் கட்சியால் தொடுக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு போர் அல்லது வெளிநாட்டு நடவடிக்கைக்கும் ஆதரவாய் பேசுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போது அமெரிக்கப் போர்கள்தான் பிரதான விடுதலை சக்தியாக இருந்து வந்திருக்கின்றன என்ற ஓர்வெல்லிய (ஜோர்ஜ் ஓர்வெல்) வகையிலான ஹென்ஸ்மனின் விவாதங்கள் ஒரேதிசையில் விலகவியாலாமல் பயணிக்கின்றன.

நியாயப்படுத்தமுடியாதது புத்தகத்தின் பெரும்பகுதி இடது-சாரி மற்றும் சோசலிச போர்-எதிர்ப்பாளர்கள் மீதான கடுமையான தாக்குதல்களைக் கொண்டிருக்கிறது. ரோஹினி ஹென்ஸ்மன் இந்தியாவில் வசிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளரும் செயல்பாட்டாளரும் ஆவார், இவர் இலங்கை மாவோயிசக் குடும்ப பின்புலத்தைக் கொண்டவராக கூறிக் கொள்கிறார். பிரிட்டனில் உள்ள கார்டியன் செய்தித்தாளுடனும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் (CPI) தொடர்புகளை கொண்டுள்ளார். தனது புத்தகத்தில் இவர், பத்திரிகையாளர்களான ஜோன் பில்ஜர், சேய்மூர் ஹேர்ஷ், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியான் அசாஞ்ச், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வெளியிடப்படும் உலக சோசலிச வலைத் தளத்தை கண்டனம் செய்கிறார்.

இந்த பிற்போக்குத்தனமான முன்னெடுப்பு, போர்-ஆதரவு கல்வியாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க, ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சிகளின் ஒரு கணிசமான அடுக்கை ஒன்றாகக் கொண்டுவந்திருக்கிறது. இதில் லான்னன் அறக்கட்டளை (Lannan Foundation) போன்ற பெருநிறுவன அமைப்புகளால் நிதியாதாரம் அளிக்கப்படும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகம்; பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை (NPA) சேர்ந்த இலண்டனில் நியாயப்படுத்தமுடியாதது புத்தக வெளியீட்டுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜில்பேர் அஷ்க்கார்; அத்தோடு ஆஸ்திரேலியாவில் உள்ள பப்லோவாத சோசலிஸ்ட் கூட்டணியை (SA) சேர்ந்த பேராசிரியர் மைக்கல் கராட்ஜிஸ் (Michael Karadjis) ஆகியோரும் அடங்குவர்.

நியாயப்படுத்தமுடியாதது புத்தக வெளியீடானது இந்தக் கட்சிகள் இடது-சாரி கட்சிகள் அல்ல, மாறாக வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கான போலி-இடது அமைப்புகளாகும் என்ற ICFI இன் பகுப்பாய்வு சரியென்பதை நிரூபணம் செய்கிறது. அஷ்க்கார், கராட்ஜிஸ் மற்றும் ஏனையவர்களின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் ரோஹினி ஹென்ஸ்மனின் வாதங்கள் இந்த குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய மற்றும் தீர்மானகரமான கட்டத்தைக் குறித்துநிற்கிறது. 2011 இல் லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய போர்களை ஏற்றுக் கொண்டதன் பின்னர், இப்போது இவர்கள், பொதுவாக, இடதுகளின் விமர்சனத்திற்கு எதிராக ஏகாதிபத்தியப் போரை நனவுடன் பாதுகாப்பவர்களாக எழுந்து கொண்டிருக்கின்றனர். ஆயினும், சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடித்தளமாக இருக்கும் முன்னோக்கு, இந்தக் குழுக்களின் மீதான ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தில் இருந்தே எழுகின்றது.

ரோஹினி ஹென்ஸ்மன் சிரியாவில் நேட்டோவின் போரை பாதுகாக்கிறார்

சிரியாவில் இரத்தம் சிந்தப்படுவதை கண்டு கொதிப்படைந்த ஒரு பார்வையாளராக தன்னைக் காட்டிக்கொண்டு, ரோஹினி ஹென்ஸ்மன் எழுதுகிறார்: “சிரிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவது, முதலாகவும் முதன்மையாகவும், அதற்கான காரணங்களை அடையாளம் காண்பதை இன்றியமையாததாக்குகின்றது. தங்களை ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்களாக அழைத்துக் கொள்ளும் சிலரைப் பொறுத்தவரை, அந்த நெருக்கடிக்கு ஒரேயொரு காரணம் தான்: மேற்கத்திய (அதாவது, வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய) ஏகாதிபத்தியம், ஈராக் மற்றும் அல்-ஷாம் இல் இஸ்லாமிக் அரசு (ISIS) இன் வளர்ச்சி உள்ளிட அத்தனை குருதிகொட்டலுக்கும் அதுதான் பொறுப்பு....”

உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் தான் சிரியப் போரை ஆரம்பித்ததற்கும் அதனைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் மிகப்பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ரோஹினி ஹென்ஸ்மன் நேட்டோவின் போரை எதிர்ப்பவர்களை சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கருவிகள் என்று அவதூறு செய்கிறார்: “அசாத் மற்றும் புட்டினின் இந்த ஆதரவாளர்களை ‘போலி-ஏகாதிபத்திய-எதிர்ப்புவாதிகள்’ என்றே நான் கூறுவேன்” என அவர் எழுதுகிறார், “ஒரு ஜனநாயக எழுச்சியை, ஈரானிய மற்றும் ரஷ்ய ஏகாதிபத்தியத்துடன் கூட்டு கொண்ட ஒரு சர்வாதிபத்திய அரசால் இனப்படுகொலை வழியாக நசுக்கப்படுவதை ஆதரிக்கின்ற, அல்லது எதிர்க்கத் தவறுகின்ற, போலி-ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் தார்மீக மற்றும் அரசியல் சீரழிவின் ஒர் சான்றாக சிரியா இருக்கிறது.”

ரோஹினி ஹென்ஸ்மனின் போர்-ஆதரவு சீற்றத்தின் இலக்குகளில் பிரதான இலக்காக ஆகியிருப்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும் (ICFI). “சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும் சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலும்” என்ற தலைப்பில் WSWS இல் 2013 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை மேற்கோளிட்டு, அவர், சிஐஏ ஆதரவுடனான இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை ஜனநாயகப் புரட்சியாளர்களாக பாராட்டாததற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் உலக சோசலிச வலைத் தளத்தையும் கண்டனம் செய்கிறார்:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலக சோசலிச வலைத் தளம், அசாத்திற்கான அதன் ஆதரவில் இன்னும் முன்னே செல்கிறது. 2013 மே 1 அன்று, முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் இருந்தான இருநூறுக்கும் அதிகமான புத்திஜீவிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள், ‘ஆகவே, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள், 2011 மார்ச் முதலாக கண்ணியத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடி வரும் மில்லியன் கணக்கான சிரியர்களுடன் ஐக்கியப்பட்டு நிற்கிறோம். சிரிய ஆட்சி அதன் ஒடுக்குமுறையையும் சிரிய மக்கள் மீதான போரையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உலக மக்கள் அதற்கு நெருக்குதலளிக்க நாங்கள் அழைக்கிறோம்’ என்று ஆரம்பிக்கும் ஒரு அறிக்கையை (Socialist Worker 2013,) விடுத்தபோது, WSWS, ‘இந்த ஆவணத்தின் முழு பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல்ரீதியாக கேடுகெட்ட தன்மையானது கிட்டத்தட்ட ஒரு சுயவிளக்கமுள்ளதாக இருக்கிறது’ என்று குற்றம்சாட்டுவதன் மூலமாக பதிலிறுப்பு செய்தது, ஏனென்றால் அவர்கள் பார்வையில், அசாத்திற்கு எதிராக எந்த சிரியரும் சுதந்திரத்திற்காகவும் கண்ணியத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கவில்லை, இஸ்லாமிய தீவிரவாதிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் (நோர்த் மற்றும் லான்ரியே 2013). அம்மக்கள் ஒருபோதும் இருக்கவில்லை... என்பதான அசாத்தின் பிரச்சாரத்தை ஒப்புவிப்பதன் மூலமாக ஜனநாயக எதிர்ப்பாளர்களை, அவர்களது குடும்பங்களை மற்றும் சமுதாயங்களை அசாத் படுகொலை செய்வதை WSWS மூடிமறைக்கிறது, ஆகவே அது இந்தப் படுகொலைகளில் ஒத்துழைக்கிறது.

ஒரு படுகொலையில் ஒத்துழைக்கின்ற சக்திகள் நேட்டோ போர்களது எதிர்ப்பாளர்கள் அல்ல, மாறாக ரோஹினி ஹென்ஸ்மன் மற்றும் ISO போன்ற போர் பிரச்சாரகர்களே. பாரசீக வளைகுடாவின் எண்ணெய் ஷேக் ஆட்சிகளால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற வலது-சாரி ஆயுதக்குழுக்களை “சுதந்திரத்திற்கும் கண்ணியத்திற்குமான” ஒரு புரட்சியின் நாயகர்கள் என்று ஊக்குவித்ததன் பின்னர், இவர்கள் மத்திய கிழக்கு எங்கிலுமான வாஷிங்டனின் இரத்தக்களரியான அட்டூழியத்தை தழுவிக் கொள்வதில் வந்து முடிந்திருக்கின்றனர்.

2011 வசந்தகாலத்தில், துனிசியா மற்றும் எகிப்தில் வெகுஜன தொழிலாள-வர்க்க எழுச்சிகள் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரிகளை கவிழ்த்ததன் பின்னர், டெரா, ஹமா மற்றும் ஹோம்ஸ் (Deraa, Hama, Homs) போன்ற சிரிய நகரங்களிலும் —இவற்றின் பல பகுதிகள் வரலாற்றுரீதியாக சிரியாவின் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்புக்கு ஆதரவளித்தவை— ஒரு எதிர்ப்புப் போராட்ட இயக்கம் தொடங்கியது. ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களில் எவ்வகையான சக்திகளது கலவை பங்கேற்றிருந்தாலும், வெகுவிரைவிலேயே அவை சிஐஏ ஆதரவளிக்கும் இஸ்லாமியவாதிகளால் மேலாதிக்கம் செய்யப்பட்டன. போர் தொடங்கி ஒரு வருடத்தில், 2012 இல், எதிர்ப்பு ஆயுதக்குழுக்களின் தலைமையில் இருப்பது அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணி என்று அமெரிக்க அரசாங்கமே தெரிவித்தது, அதுமட்டுமே கிட்டத்தட்ட 600 குண்டுவெடிப்புகளை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றிருந்தது.

WSWS இந்த அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தியதோடு, சிரியப் போரானது எகிப்து மற்றும் துனிசிய எழுச்சிகளுக்கு பின்னர் வெடித்த காரணத்தினால் மட்டுமே, அது சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு புரட்சியாக இருந்தது என்பதான கூற்றுக்களை மறுத்தது. ரோஹினி ஹென்ஸ்மனால் தாக்கப்படுகின்ற 2013 கட்டுரையில், அது விளக்கியது:

கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் லெவான்டில் (Levant) என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பெரிய ஆழம்காணமுடியாத மர்மம் ஒன்றும் கிடையாது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய அரசியலில் வன்முறையான விதத்தில் ஒரு மறுகட்டுமானத்தை செய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் அதி-பிற்போக்குவாத வளைகுடா ஏவலாளி அரசுகளின் உதவியுடன் செய்யும் முயற்சிகளில் சமீபத்திய அத்தியாயமே சிரியப் போராகும். 2001 இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003 இல் ஈராக் மீது படையெடுத்த பின்னர் அங்கு நவ-காலனித்துவ ஆட்சிகளை வாஷிங்டன் பதவியில் அமர்த்திய நிகழ்வில் மிகத் தெளிவான அடையாளங்களைக் கொண்டிருக்கும் இந்தத் தாக்குதலானது எண்ணமுடியாத நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது. இத் தாக்குதலின் பாகமாக, புஷ் நிர்வாக அதிகாரிகளால் தொகுக்கப்பட்டிருந்த “தீய அச்சு” பட்டியலில் இடம்பெற்றிருந்த சிரியா, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலமாய் வாஷிங்டனின் துப்பாக்கிகளது குறியில் வைக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் நிகழ்வுகளை எகிப்திய புரட்சியுடன் ஒப்பிடுவது, ஆபாசப்படுத்துவதற்கு குறைவான வகைப்பட்ட ஒன்றல்ல. எகிப்தில் கட்டவிழ்ந்த பாரிய வெகுஜன இயக்கம் ஒரு உண்மையான புரட்சியின் அத்தனை குணாம்சங்களையும் தாங்கியிருந்தது. ஆரம்பகட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஒரு பொது வேலைநிறுத்தமாக வளர்ந்து, முபாரக்கின் வீழ்ச்சியையும் தொழிலாள வர்க்கத்திற்கு மேம்பட்ட வாழ்க்கைத் தரங்களையும் கோரின. அந்த புரட்சிகர இயக்கம் ஆர்ப்பாட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் பங்குபெற்ற முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் ஐக்கியப்படுத்தியது. அந்த இயக்கத்தின் வெகுஜன மற்றும் முற்போக்கான தன்மைக்கான மிக நிச்சயமான அடையாளமாய், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் எதிர்க்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கான முபாரக்கின் முயற்சிகளை ஒபாமா நிர்வாகம் ஆதரித்தது. முபாரக்கை இனி காப்பாற்ற முடியாது என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர்தான் அமெரிக்கா அதன் எதிர்ப்புரட்சிகர தந்திரோபாயத்தை மாற்றியமைத்துக் கொண்டு பழைய சர்வாதிகாரத்திற்கான ஒரு மாற்றாக முஸ்லீம் சகோதரத்துவத்தை ஊக்குவித்தது.

இந்த பகுப்பாய்வு முற்றிலுமாய் சரியென நிரூபணமாகியிருக்கிறது. சிரியாவில் கட்டவிழ்ந்தது ஒரு புரட்சியல்ல மாறாக, ஷியாய்ட் அலவைத்-தலைமையிலான அசாத் ஆட்சிக்கு எதிராக, சுன்னி இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை நேட்டோ அணிதிரட்டிய ஒரு இரத்தம்தோய்ந்த குறுங்குழுவாதப் போராகவே அது இருந்தது. சிரிய ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் ஒரேயொரு பொது வேலைநிறுத்தமும் —எகிப்து அல்லது துனிசியாவில் போல, மிக இரத்தக்கறை படிந்த ஒடுக்குமுறை ஆட்சியையும் கூட ஸ்தம்பிக்க வைக்கிறதான ஒரு நிகழ்வு— கூட இருக்கவில்லை, மாறாக பிற்போக்கான ஆத்திரமூட்டல்களின் ஒரு தொடர் நிகழ்வே இருந்தது.

சிரிய முதலாளித்துவத்தின் ஒரு பிற்போக்கான ஆட்சிக்கு தலைமை கொடுக்கும் அசாத்திற்கு ICFI ஒருபோதும் எந்த அரசியல் ஆதரவும் வழங்கியதில்லை. ஆயினும், அசாத்தைத் தூக்கிவீசுவது சிரியத் தொழிலாள வர்க்கத்தின் கடமையேயன்றி, பென்டகன், அதன் ஐரோப்பியக் கூட்டாளிகள் மற்றும் பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக்குகளாட்சியின் பணியல்ல என்பதை அது வலியுறுத்தியது. 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத அமெரிக்க படையெடுப்பைப் போலவே, இது, மூலோபாய எண்ணெய்வளம் செறிந்த மத்திய கிழக்கின்மீது அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பது; ஈரானின் ஒரு கூட்டாளியாக இருக்கும் சிரியாவை அழிப்பது; அத்துடன் ரஷ்யாவின் எஞ்சியிருக்கும் ஒரே அரபுக் கூட்டாளி மற்றும் ஒரே மத்தியதரைக்கடல் கடற்படைத் தளமாக இருக்கும் நாட்டை அகற்றுவதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்துவது என்ற ஒரு ஏகாதிபத்திய திட்டநிரலைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு போராக இருந்தது.

இந்தப் புள்ளிகளை மறுப்பதற்கு ரோஹினி ஹென்ஸ்மன் இம்மியளவு ஆதாரத்தையும் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர், சிரியாவில் வெகுஜன எழுச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அமெரிக்க போர்களை ஆதரிப்பது உள்ளிட்ட என்ன விலை கொடுத்தேனும் அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்ற பிரச்சார கூற்றுகளைக் கொண்டு வாசகரை மூழ்கடிக்கிறார். அவர் மேற்கோளிடும் ஆதாரங்களை வழங்கியிருப்பவை போர்-ஆதரவு பெருநிறுவன ஊடக நிறுவனங்களாகவோ, சரிபார்க்கமுடியாத சாட்சிகளை மேற்கோளிடும் பெயர்தெரியாத வலைப் பதிவுகளாகவோ, அல்லது ஏற்கனவே அம்பலப்பட்டு விட்டிருக்கின்ற அல்லது மதிப்பிழந்து விட்டிருக்கின்ற அமெரிக்க உளவு முகமையின் ஊதுகுழல்களாகவோ தான் தெரிய வருகின்றன.

அப்பாவிமக்களுக்கு எதிராக அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்ற பயங்கரமான மற்றும் பொய்யான கூற்றுக்களைக் கொண்டு சிரியாவில் நேட்டோவின் நேரடி இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு நடத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரங்கள் மிக இழிபுகழ்பெற்ற ஆத்திரமூட்டல்களாக இருந்தன. 2012 மேயில் கூலா (Houla) இல், 2013 மார்ச்சில் கான் அல்-அஸ்ஸால் (Khan al-Asal) இல், 2013 ஆகஸ்டில் கூத்தா (Ghouta) இல் நச்சுவாயுத் தாக்குதல்களை அசாத் ஒழுங்கமைத்ததாகக் கூறப்பட்ட கருத்துக்கள் முறையே ஜேர்மனியின் Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையால், ஐக்கிய நாடுகள் சபையால் மற்றும் பத்திரிகையாளர் சேய்மூர் ஹேர்ஷ் ஆலும் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமும் ஐ.நா. சபையினாலும் மறுக்கப்பட்டன. பல்வேறு நேட்டோ சக்திகளுடன் சேர்ந்து செயற்பட்ட எதிர்ப்பு ஆயுதக் குழுக்கள்தான் குற்றவாளிகளாக இருந்தன என்பதையும், அவையே சிரியா மீது ஒரு நேரடி அமெரிக்கத் தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கும் பொருட்டு இரசாயன வாயுத் தாக்குதல்களை நடத்திவிட்டு பழியை அசாத் மீது போட்டன என்பதையும் அந்த விசாரணைகள் அடையாளம் கண்டன.

ரோஹினி ஹென்ஸ்மன் நேர்மையற்ற முறையில் கூத்தா தாக்குதலுக்கு அசாத் மீது பழிபோட முயல்கிறார். கூத்தா தாக்குதலை அசாத் ஒழுங்கமைத்தார் என்பதற்கான ஆதாரத்தை அவர் கூறவில்லை அல்லது வழங்கவில்லை, அல்லது சிரிய நச்சு வாயுத் தாக்குதல்கள் குறித்த ஏனைய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொய்யென நிரூபணமாகின என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாய் அவர், கூத்தாவில் சிரிய ஆட்சிக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுக்களை அதிக நம்பகமானதாகத் தெரியச் செய்வதற்காக, சேய்மூர் ஹேர்ஷ் ஐ அசாத்தின் கைப்பாவை என்று கூறி அவதூறு செய்து அவரது பெயருக்கு கரிபூச முயற்சிக்கிறார்.

அமெரிக்க உளவு சேவையின் முன்னாள் அதிகாரி டான் காஸெட்டாவை (Dan Kaszeta) மேற்கோளிடும் ரோஹினி ஹென்ஸ்மன், அவர் பிரிட்டன் ஆதரவளிக்கும் Bellingcat வலைப் பதிவுக்காக வேலைசெய்கிறார் என்றபோதிலும் கண்ணியமான விதத்தில் அவரை, “இரசாயன ஆயுத வல்லுநர்” என்று மட்டுமே குறிப்பிடுகிறார்: “சரின் தயாரிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன, ஆட்சி அதனைக் கையாண்டவிதமானது கூத்தாவில் ஆரம்ப UN/OPCW சோதனைக் குழுவால் அளிக்கப்பட்ட தடய ஆதாரத்துடன் நெருக்கமாகத் தொடர்புகொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது”. அதன்பின் அவர் Linux Beach என்ற அடையாளம்தெரியாத சிரியப் போர் ஆதரவு வலைத் தளம் ஒன்றிலிருந்து பின்வருமாறு மேற்கோளிடுகிறார்: “சேய்மூர் ஹேர்ஷ், பஷார் அல்-அசாத்துடன் நீண்டகால தொடர்பு கொண்டவர்.... சேய்மூர் ஹேர்ஷ், அசாத் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்.”

நடந்து கொண்டிருப்பதாக ரோஹினி ஹென்ஸ்மன் கூறும் புரட்சியைக் கண்டுபிடிக்க போர்-ஆதரவு வலைப் பதிவுகளை சல்லடை போட்டுத் தேடாததற்காக, அதனை சிரியா மீதான அமெரிக்காவின் ஒரு நேரடித் தாக்குதல் என மிக மும்முரமாக வாதாட முனைகின்ற, சிரியப் போர் மீதான விமர்சனப் பார்வை கொண்ட ஏனைய பத்திரிகையாளர்களை அவர் கடுமையாகத் திட்டுகிறார். அப்பத்திரிகையாளர்கள் இவ்வாறான போர் ஆதரவு வலைப் பதிவுகளைக் கண்டிருந்தார்களேயானால், “சிரிய எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் ஒபாமா, ஆயுதபாணியாக்க அறியாமையுடன் மறுத்ததற்கான பதிலிறுப்பாக, ‘ஆம், ஜனாதிபதி திரு.ஒபாமா அவர்களே! பல்மருத்துவர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள்தான் கண்ணியமான புரட்சிகளுக்கு தலைமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்; முட்டாள்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் குற்றவாளிகள் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று சிரியர்கள் பதாகைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் நிழற்படங்களைக் காண நேரிடுவார்கள். (Karadjis 2014)

இந்த பிரச்சாரம் அவலட்சணமானதாய் இருக்கிறது. அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கு கோரிக்கைவிடுகின்ற அத்துடன் தனது தலைமை சக்தியாக பல்மருத்துவர்களின் ஒரு குழுவை அணிதிரட்டுகின்ற ஒரு “கண்ணியமான புரட்சி” தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் புரட்சியல்ல. அத்துடன் சிரியாவில் ஒரு வெகுஜன எழுச்சி நடந்து கொண்டிருப்பதற்கான ஆதாரங்களை வழங்குவதாக எண்ணி ரோஹினி ஹென்ஸ்மன் எதையாவது முன்வைக்கும் ஒவ்வொரு முறையும், அது ஒரு வெற்று மோசடியாகவே நிரூபணமாகிறது.

அதில் ஒன்றாய், சிரியாவில் போரிடுகின்ற அமெரிக்க-ஆதரவு குர்திஷ் குடிப்படைகளுடன் சேர்ந்து செயற்படும் ஜஸ்மின் மொபயீட் (Yasmeen Mobayed) என்ற நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி, சிரியாவிலான ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களை அசாத் ஒடுக்கியமை தொடர்பாக கூறும் குற்றச்சாட்டுக்களை ரோஹினி மேற்கோளிடுகிறார்: “ஆயிரக்கணக்கான ஆவணப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகள் அசாத் படைகளின் கரங்களில் சித்திரவதைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ’சீசர்’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் அண்மையில் ஆட்சியின் தரப்பிலிருந்து விட்டோடிய ஒரு புகைப்படக்காரர், சமீபத்தில், 11,000க்கும் அதிகமான சித்திரவதை செய்யப்பட்ட சாதாரண மக்களிலான கைதிகளின் 55,000 புகைப்படங்களைக் கசிய விட்டார்.”

ஒரு புரட்சி நடந்து கொண்டிருந்ததாக கூறும் தனது வாதத்திற்கு வலுச்சேர்க்க “சீசர்” ஐ மொபயீட் நம்பியிருப்பதானது ரோஹினியின் ஒட்டுமொத்த விவரிப்பையும் பலவீனப்படுத்துகிறது. “சீசர்” ஒரு நீரூபிக்கத்தக்க ஆதாரமும் அல்ல நம்பத்தகுந்த ஆதாரமும் அல்ல.

2011 முதலாக சிரிய எதிர்ப்பு ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து செயற்பட்டு வந்திருந்த ஒரு உளவாளியான “சீசர்” 2014 இல் கட்டாரின் எண்ணெய் ஷேக்குகளாட்சியால் நிதியாதாரமளிக்கப்பட்ட மனித உரிமை ஆய்வாளர்கள் குழு ஒன்றை பெயர்கூறப்படாத ஒரு மத்திய கிழக்கு நாட்டில் சந்தித்தார். 11,000 சிரியக் கைதிகளின் 55,000 புகைப்படங்கள் தன்னிடம் ஒரு தகவல் சேமிப்பு பதிவு தட்டில் உள்ளதாகக் கூறிய அவர், ஆனால் விசாரணையாளர்களுக்கு இந்த புகைப்படங்களை பார்க்க அனுமதிக்க மறுத்து விட்டார். இறுதியாக அவர்கள் தெரிவித்தனர், “சுமார் 5,500 படங்கள் தடயவியல் குழுவால் பரிசோதிக்கப்பட்டன... இந்த 5,500 படங்களில் இறந்துபோன மொத்தம் 835 பேரின் புகைப்படங்கள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன. இவற்றில் 20 சதவீத படங்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்டிருந்தன, 30 சதவீதம் கேள்விக்கிடமானவையாக இருந்தன. நாற்பத்திரண்டு சதவீதம் உடல்நலிவைக் காட்டின.”

“சீசர்” அவர் வெளியிட்ட படங்களில் இருந்த நேரம் மற்றும் தேதி பதிவுகளை உருத்தெரியாதபடி ஆக்கிவிட்டதால், பாதிக்கப்பட்ட இந்த 835 பேரும் கூட யார், எப்போது எங்கே அவர்கள் கைது செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் சரிபார்ப்பதற்கு சாத்தியமளிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், 835 தனிமனிதர்கள் அடையாளம்தெரியாத மனிதர்களால் படுபயங்கரமாக நடத்தப்பட்டிருக்கின்றனர் என்று விசாரணை அமைப்பினர் திட்டவட்டமாகக் கூறுவதற்கும் அப்பால் வேறெதற்கான ஆதாரத்தையும் “சீசர்” கசிய விட்ட புகைப்படங்கள் வழங்கவில்லை.

ஆனால் ஹென்ஸ்மனோ, சிரியாவிலான அத்தனை படுகொலைகளுக்குமான பழியை அசாத் மீது போடுவதற்கும் போரைத் தீவிரப்படுத்துவதற்கான தனது அழைப்புகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கும் இவற்றைப் பயன்படுத்துகிறார். அதற்கு மேலும் அவர், 2013-2014 இல் உருவாகி, அசாத்தின் படைகள் மீது மட்டுமல்லாது, அருகிலுள்ள ஈராக்கில் இருக்கும் அமெரிக்க கைப்பாவை ஆட்சியின் மீதும் கூட தாக்குதல் நடத்திய ஒரு சுன்னி இஸ்லாமிய பயங்கரவாத ஆயுதக்குழுவான ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) இன் வளர்ச்சிக்கும் அசாத்தின் ஆட்சி மீதே பழிபோடுகிறார். பிரிட்டனின் வலது-சாரி டெய்லி டெலிகிராப் தினசரியையும் மற்றும் ISIS இல் இருந்து விலகி அமெரிக்க போர் முயற்சிக்கு துணைநிற்கும் பலரும் இணைந்த ஒரு குழுவையும் மேற்கோளிட்டு, அவர் எழுதுகிறார்:

இஸ்லாமியக் குழுக்களில் மிகத் தீவிரமானதான ISIS உடன் ஒரு கூட்டணி கொள்ள அசாத் முடிவெடுத்தார். மதசார்பற்ற கலகக்காரர்கள் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இலக்கான அதேவேளையில், “ஆட்சி எங்கள் மீது குண்டுவீசாது என்று எங்களுக்கு நம்பிக்கையிருந்தது” என்று ISIS இல் இருந்து விலகிவந்தவர் கூறினார்... மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்புடன் தொடர்புடைய ஒரு கிளர்ச்சிப் போராளி கூறியதைப் போல, ஆட்சியானது “பானியாஸ் (Banias) மற்றும் லாத்தாக்கியா (Latakia) இல் உள்ள இரண்டு பெரும் எண்ணெய் குழாய்களில் எண்ணெய் இடையூறின்றி பாய்வதற்காக ஜபாத் அல்- நுஸ்ரா (Jabhat al-Nusra) க்கு மாதந்தோறும் 150 மில்லியன் சிரியன் லீரா [£1.4m] க்கும் அதிகமான தொகையை கொடுத்து வந்தது. இரண்டு தரப்பினரதும் நம்பிக்கையை பெற்றிருந்த இடைத்தரகர்கள் இந்த உடன்பாட்டுக்கும் பணம் அந்த அமைப்பிற்கு பாய்வதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.’ உண்மையில், டெலிகிராப் இன் ஒரு கட்டுரை தெரிவித்ததைப் போல, அசாத்தின் ஆட்சியானது வெறுமனே ISIS இடம் இருந்து எண்ணெய் வாங்கியதுடன் நிற்கவில்லை, அது அவர்களுடனான ஒத்துழைப்புடன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகளையே நடத்தி வந்தது. …

ISISக்கான நிதியின் மிகப்பெருமளவு சிரியாவுக்குள்ளிருந்து தான் வந்தது, அத்துடன் அதன் பெரும்பகுதி அசாத் ஆட்சியுடனான எண்ணெய், எரிவாயு உடன்பாடுகள் மூலமாக வந்தது என்பதற்கான ஏராளமான ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில், ISISக்கு வெளி நாடுகளில் இருந்து அல்லது அவற்றுடனான எண்ணெய் உடன்பாடுகள் மூலமாக நிதி கிட்டியதற்கு மிகக் குறைந்த ஆதாரமே இருக்கிறது. வளைகுடா முடியாட்சிகளிடம் இருந்தான, குறிப்பாக சவுதி அரேபியாவிடம் இருந்தான, நிதியளிப்பைப் பொறுத்தவரை, இந்த நாடுகளில் இருக்கின்ற தனிநபர்கள் ISISக்கு நிதியளிக்கக் கூடும், ஆனால் அரசின் உதவி ISIS உடன் போரிட்டுக் கொண்டிருக்கும் ஆயுதக் குழுக்களுக்கே போயிருக்கிறது; வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 'ISIS இன் எழுச்சிக்கு அசாத்தை முதன்மையாக குறைகூறுவதே’ பாதுகாப்பானதாகத் தென்படுகிறது (Rowell 2014).

இது விடயத்தில் WSWS மீதும் ரோஹினி ஹென்ஸ்மன் தாக்கி இவ்வாறு எழுதுகிறார்: “ISIS ஐ அசாத் ஊக்குவிப்பதன் மீதும், சிரியாவின் இறையாண்மையை ஈரான் இஸ்லாமிய அரசுக்கு விட்டுக்கொடுப்பதன் மீதும் நோர்த்தும் லான்ரியேயும் மௌனம் காக்கின்றனர்.”

ISIS இன் மூலங்கள் 1981-1989 சோவியத்-ஆப்கான் போரின் போது நேட்டோ சக்திகள் மற்றும் அவற்றின் பாரசீக வளைகுடா கூட்டாளிகளால் உருவாக்கப்பட்ட சர்வதேசிய இஸ்லாமிய ஆட்சேர்ப்பு வலைப் பின்னல்களில் அமைந்திருக்கின்றன. இன்று மீண்டும் உயிரூட்டப்பட்டிருக்கும் இவற்றுடன், ஈராக்கில் 2003-2011 அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எழுந்த எதிர்ப்பை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட குறுங்குழுவாத குடிப்படைகளில் இருந்தும்தான் இன்று சிரியப் போரில் பங்கெடுக்க பத்தாயிரக்கணக்கான வெளிநாட்டு போரிடுபவர்கள் எடுக்கப்படுகின்றனர். சிரியாவில் போரிடுவதற்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும் இருந்து போரிடுபவர்கள் பயணம் செய்தனர். சிரியப் போர் வளர்ச்சியடைந்த நிலையில், இந்த சக்திகள் அருகிலிருக்கும் ஈராக்கில் இருந்த சுன்னி இஸ்லாமிய குடிப்படைகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டன.

கட்டுமான நிறுவனமான லாஃபார்ஜ் (Lafarge) மூலமாக ISISக்கு மில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்சிய சிரியாவின் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ சக்திகளிடம் இருந்து ISIS அரசு நிதியாதாரம் பெற்றது என்பது ஒரு ஆவணப்படுத்தப்பட்ட உண்மையாகும். ஹென்ஸ்மனும் மறுக்காத, உத்தியோகபூர்வமற்ற சவுதி ஆதாரங்களிடம் இருந்தான நிதியாதாரத்தையும் சேர்த்தால், அசாத்தை கவிழ்க்க விழைகின்ற அரசாங்கங்களால் ISIS ஆதரவளிக்கப்பட்டது என்பதை இது தெளிவாக்குகிறது.

சிரிய நகரங்களுக்கான எரிசக்தி விநியோகத்தை துண்டித்துவிடும் என்ற காரணத்தால், ISIS வசமிருந்த எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை அசாத் நிறுத்தவில்லை என்பது உண்மையே. ஆயினும், அசாத் ஆட்சியானது, பின்னர் ரஷ்ய மற்றும் ஈரானியக் கூட்டாளிகளது உதவியுடன், ISIS மீது தாக்குதல் நடத்தி அந்த எண்ணெய் வயல்களை மீண்டும் கைப்பற்ற முயன்றது, அச்சமயத்தில் ISIS ஐ பாதுகாக்க தலையிட்ட அமெரிக்க படைகளே அவற்றின்மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

ரோஹினி ஹென்ஸ்மன் அரசியல் மோசடி இழைப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. மரணதண்டனைப் படைகளைக் கொண்டுள்ளதும் மற்றும் அப்பாவி மக்களைக் கூட்டங்கூட்டமாய் கொலை செய்யும் காணொளிகளை வெளியிட்டதுமான ISISக்கு நேட்டோ மற்றும் பாரசீக வளைகுடாவின் ஆதரவானது, இந்த போரானது ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான விடுதலைக்கான ஒரு போர் என்பதான ரோஹினி ஹென்ஸ்மனின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரு பொய் என எடுத்துக்காட்டுகிறது. ஏகாதிபத்திய சூறையாடல் போர்களையும் அவற்றின் இஸ்லாமியவாத பினாமிகளையும் ஆதரிப்பதற்கு தார்மீக கடமையை அவர் இழுப்பதென்பது உதாசீனத்தை தவிர்த்த வேறெதற்கும் தகுதியானதாயில்லை.

பாரூக் பிரிகேட் (Farouq Brigades) போன்ற “மிதவாத” இஸ்லாமிய எதிர்ப்பு ஆயுதக்குழுக்களை மைக்கல் கராட்ஜிஸ் ஆதரித்ததில் அவர்களது அரசியல் மற்றும் தார்மீக சீரழிவு உச்சமடைந்தது. பாரூக் பிரிகேட் இன் தலைவரான காலித் அல்-ஹமாட் (Khalid al-Hamad), சிஐஏ ஐயும் பாரசீக வளைகுடா ஷேக் ஆட்சிகளையும் கவர்கின்ற நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு YouTube நிதி திரட்டல் காணொளியில், சிரிய படைவீரர் ஒருவரது சடலத்தை சிதைத்து அவரது உள்ளுறுப்பைக் கடிக்கின்ற காட்சிக்காய் இழிபுகழ் பெற்றவராவார். சிரியா விடயத்தில் கருத்துக்கூறும் ஆளுமை உள்ளதாக ரோஹினி ஹென்ஸ்மன் மேற்கோளிடும் மைக்கல் கராட்ஜிஸ், இந்த படுபயங்கரமான காணொளியை, “சிறு நரமாமிசத்தனம்” (“minor cannibalism”) மட்டுமே என்று குறைத்துக்காட்டினார்.

WSWS மீது வெறிகொண்டு தாக்குதவதில், ரோஹினி ஹென்ஸ்மன் தனது சொந்த வாதத்தின் முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டு கடைசியில் போரில் அசாத்தின் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பதில் சென்று முடிகிறார். அவர் எழுதுகிறார்:

உலக சோசலிச வலைத் தளத்தின் (2013) டேவிட் நோர்த் மற்றும் அலெக்ஸ் லான்ரியேயின் தலையீடு நவ-பாசிச வலதுகளின் அடையாளமுத்திரையாக ஆகியிருக்கும் முஸ்லீம்-விரோத சகிப்பின்மையையும் எதிரொலிக்கிறது. அசாத்திற்கான ஒட்டுமொத்த சிரிய எதிர்ப்பையும் ‘இஸ்லாமியவாத’ என்று குணாம்சப்படுத்துவதன் மூலமாக, அது முஸ்லீம்-அல்லாத கிளர்ச்சியாளர்களை உதாசீனப்படுத்துவதுடன் அசாத்தை எதிர்க்கும் முஸ்லீம்களிலுள்ள நான்கு தனித்தனி வகைகளுக்கு இடையிலான பிரிப்புக்கோட்டையும் மழுங்கடிக்கிறது. முதல் வகையினர் முஸ்லீம்களாக தம்மை அடையாளப்படுத்துவதுடன் மதசார்பற்ற மற்றும் முற்போக்கானவர்களாவர். தமக்கு மதநம்பிக்கைகள் இருந்தாலும், ஒரு மதசார்பற்ற அரசில் வாழ விரும்பும் முஸ்லீம் அடிப்படைவாதிகள் (’சலாஃபிக்கள்’) இரண்டாவது வகையினரில் வருகிறார்கள்.... தேர்தல்கள் மூலமாக ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க விரும்பும் அரசியல் இஸ்லாமியவாதிகள் மூன்றாம் வகையினரில் இருக்கிறார்கள். இவர்கள் ஆபத்தானவர்களாக கருதத்தக்கவர்கள், ஏனென்றால் அதிகாரத்துக்கு வருவார்களாயின் தவிர்க்கவியலாமல் ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரங்களையும் இவர்கள் இல்லாதொழிப்பார்கள், ஆகவே இவர்களை சித்தாந்தரீதியிலும் அரசியல்ரீதியிலும் எதிர்க்க வேண்டும். வன்முறை மூலமாக ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க விரும்பும் அரசியல் இஸ்லாமியவாதிகள் நான்காவது வகையினரில் வருகிறார்கள். சாத்தியமானால் அவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் வழக்கமாய் குண்டுவைத்து தகர்க்கின்ற அப்பாவிமக்களை பாதுகாப்பதற்காக அவர்களை இராணுவரீதியாக எதிர்ப்பதும் கூட அவசியமானதாகலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தை முஸ்லீம்-விரோதமானதாகவும் நவ-பாசிஸ்டாகவும் அவதூறுசெய்வது வெற்றுப்பேச்சை அடிப்படையாகக் கொண்டதாகவும், எதிர்ப்பு குடிப்படையினரை நான்கு வகையினராக பிரிப்பது வெற்று போலிமேதாவித்தனத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கிறது. அசாத்திற்கான முற்போக்கான எதிர்ப்பு சிரியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே வருகிறது. இஸ்லாமிய எதிர்ப்பு குடிப்படையினரைப் பொறுத்தவரை, அது அல்நுஸ்ரா மற்றும் ISIS ஆனாலும் சரி அல்லது “மிதவாதிகள்” என்று சொல்லப்படுகின்ற சிரிய விடுதலை இராணுவம் (Free Syrian Army) அல்லது பாரூக் பிரிகேட் போன்றவர்களாயினும் சரி, அவர்கள் அனைவருமே “வன்முறை மூலமாக ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க விரும்பும் அரசியல் இஸ்லாமியவாதிகள்” தான். அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களை “இராணுவரீதியாக எதிர்ப்பதற்கு” ஆலோசனை சொல்வதன் மூலமாக, ஹென்ஸ்மன், அவரையும் அறியாமல் அவர்களுக்கு எதிரான அசாத்தின் போரை வழிமொழிபவராகிறார்.

ஏகாதிபத்தியப் போரை ஆதரிப்பதற்கான ஒரு ட்ரொட்ஸ்கிச-விரோத காரணம்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களது முதுகிற்குப் பின்னால் அல்கெய்தாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு நேட்டோ சக்திகளால் சிரியாவில் நடத்தப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான போரானது, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா எங்கிலும் மூன்று தசாப்த காலமாய் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட போர்களின் விளைபொருளாய் இருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இந்த குற்றங்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவுகொண்டு 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் உலகப் போருக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் தீர்க்கப்படாமலேயே இன்னும் இருக்கின்றன என்ற உண்மையையும் அவை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

முதலாளித்துவத்தின் 1930களுக்குப் பிந்தைய மிக ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் பல டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவுசெய்யப்பட்டிருக்கும் இந்த இரத்தம் தோய்ந்த போர்களுக்கு ஆழமான மக்கள்வெறுப்பு இருந்தபோதிலும் கூட, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாக்களித்து அந்தந்த அரசாங்கங்களை பதவியில் இருந்து அகற்றுவதன் மூலமாக இவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு வாக்காளர்கள் செய்திருக்கும் முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அத்தனை அரசியல் வண்ணங்களையும் சேர்ந்த அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்கள், மாறாக, இவற்றை மேலும் தீவிரப்படுத்தவே செய்திருக்கின்றன. அத்துடன் இக்கொள்கையானது ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஆளும் வர்க்கத்தால் வழிமொழியப்படுகின்ற ஒரு கொள்கையாகவும் ஆகியிருக்கிறது என்பது தெளிவு. உதாரணமாக, நேட்டோ-ஆதரவு கிளர்ச்சிப் போராளிகளுடன் போரிடுவதில் உதவுவதற்கு சிரிய ஆட்சி மாஸ்கோவை அழைத்தபோது, நேட்டோ இந்தப் போரை ஒரு அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலாக தீவிரப்படுத்தியது. முதலாம் உலகப் போரும் ரஷ்யப் புரட்சியும் வெடித்து ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறையானது ஒரு அணுஆயுத பெரும்சுவாலையின் விளிம்பில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைத் தலைவரும், ஸ்ராலினின் எதிர்ப்பாளரும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட முதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டுக்குமான அரசியல் மாற்றீட்டின் நீடித்துநிலைத்திருக்கும் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலக சோசலிசப் புரட்சி குறித்த ஸ்ராலினிசத்தின் தேசியவாத நிராகரிப்பிற்கு ட்ரொட்ஸ்கி வைத்த விமர்சனமும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் அதன் நடுத்தர-வர்க்கக் கூட்டாளிகளிடம் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் நடத்திய அயராத போராட்டமும்தான் இன்று புரட்சிகர சோசலிச அரசியலுக்கான அடித்தளமாய் தொடர்கின்றன. 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சி செய்யப்படுவதற்கு இட்டுச்சென்ற ஸ்ராலினிசம், மார்க்சிசத்தையும் போல்ஷிவிசத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பதையும், மாறாக சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருந்த எவ்விதமான ஒழுங்கமைக்கப்பட்ட மார்க்சிச செல்வாக்கையும் அழித்த ஸ்ராலினின் குற்றங்களையும் அவர் எடுத்துக்காட்டினார். ஆயினும், இக் குற்றச் செயல்களால், உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தையும், 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியால் தொடங்கி வைக்கப்பட்டவாறாக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கும் தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இன்று பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த முன்னோக்கினை நோக்கித் திரும்ப முடியும், திரும்பியாக வேண்டும்.

இதற்கு நேர்மாறாக, ரோஹினி ஹான்ஸ்மனும் அவர் கூடி செயற்படுகின்ற ISO, பிரெஞ்சு NPA மற்றும் ஆஸ்திரேலிய SA ஆகிய இவை அனைத்துமே ட்ரொட்ஸ்கிசத்திலிருந்தான பல்வேறு ஓடுகாலிகளது வம்சாவளிகளிடம் இருந்து தங்களுக்கான உத்தவேகத்தைப் பெறுகின்றன. இவர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்திற்கு முற்றாக தங்களது சேவையை வழங்குகின்றனர்.

ISO ஆனது, 1939-40 இல் சோவியத் ஒன்றியம் “அதிகாரத்துவ கூட்டுவாத” (“bureaucratic collectivist”) வகையானது என்று கூறி ட்ரொட்ஸ்கியிடம் இருந்தும் நான்காம் அகிலத்திடம் இருந்தும் முறித்துக் கொண்ட மக்ஸ் சாக்ட்மனின் வழிவந்ததாகும். பின்னாளில் பிரிட்டனில், சோவியத் ஒன்றியத்தை ஒரு “அரசு முதலாளித்துவ” (“state capitalist”) சமூகம் என்று கூறி தாக்கிய டோனி கிளிஃப் (Tony Cliff) போன்று, சாக்ட்மனும், சோவியத் ஒன்றியமானது ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல ஒரு உருக்குலைந்த தொழிலாளர்’ அரசாக இல்லை, மாறாக ஒரு புதிய ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தைக் கட்டியெழுப்பி விட்டிருந்த ஒரு வரலாற்று கருச்சிதைவாகவே இருந்தது என்று வாதிட்டார். இந்த அடிப்படையில் சாக்ட்மன், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த அமெரிக்க தொழிற்சங்கங்களை நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டார், டோனி கிளிஃப் பிரிட்டனின் சமூக ஜனநாயக தொழிற் கட்சியை நோக்கி தனது நோக்குநிலையை அமைத்துக் கொண்டார்.

ரோஹினி ஹான்ஸ்மன் சோவியத் ஒன்றியத்தை ஒரு “அரசு முதலாளித்துவ தனியார் திரட்சி”யாக (“state capitalist privative accumulation”) காணும் கண்ணோட்டத்திற்கு அடிப்படையாக ரஷ்யாவில் அரசு முதலாளித்துவம் என்ற புத்தகத்தை மேற்கோளிடும் வேளையில், அஷ்க்கார் மற்றும் கராட்ஜிஸ் போன்ற பப்லோவாதிகளை அவர் புகழ்ந்து போற்றுகிறார், அவர்களை மேற்கோளிடுகிறார். அவர்களது கட்சிகளான, முறையே பிரான்சின் NPA யும் ஆஸ்திரேலியாவின் SA யும், ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரத் தலைமைகளை வழங்கும் எனக் கூறி 1953 இல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்தும் முறித்துக் கொண்ட சக்திகளின் வழி வந்தவையாகும். சோவியத் ஒன்றியம் குறித்த இவர்களின் மதிப்பீடுகள் எத்தனை பரந்த வித்தியாசங்களைக் கொண்டிருப்பதாக தென்படுகின்ற போதிலும், ஒரு விடயத்தில் இவர்கள் அனைவருமே ஒன்றுபட்டிருந்தார்கள்: ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அக்டோபர் புரட்சியின் புரட்சிகரத் தொடர்ச்சியை பராமரிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை இவர்கள் அனைவரும் நிராகரித்தனர்.

இந்த மந்தபுத்தி கொண்ட, ட்ரொட்ஸ்கிச-விரோத மரபுகளின் அடிப்படையில், ரோஹினி ஹான்ஸ்மன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் முனைப்பையும் ஆதரிப்பது ஒன்றே, இன்றிருக்கக்கூடிய ஒரே தெரிவு என்று முடிவு கூறுகிறார். சோவியத் ஒன்றியத்தையும் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த 20 ஆம் நூற்றாண்டு ஸ்ராலினிச அரசுகளையும் “அரசு முதலாளித்துவம்” என்று கூறி நிராகரித்து, ஒட்டுமொத்த போல்ஷிவிக் தலைமையையும் “ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகள்” என கண்டனம் செய்கின்ற அவர், முதலாளித்துவத்திற்கு எந்த அரசியல் மாற்றீடும் இல்லாத ஒரு உலகத்தை முன்வைக்கிறார். அவர் எழுதுகிறார்:

அனைத்து துறைகளிலும் சந்தையின் ஆட்சிக்கு ஆதரவளிக்கின்றதாகவும், கிட்டத்தட்ட அனைத்திலும் தனியார்மயமாக்கத்தை ஊக்கப்படுத்துகிறதாகவும், சமூக பாதுகாப்பு மற்றும் சமூகநல உதவிகளுக்கான அரசு செலவினத்தை எதிர்க்கிறதாகவும் அத்துடன் தொழிற்சங்கங்களுக்கு குரோதமானவையாகவும் இருக்கும் மேற்கிலான நவதாராளவாதக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமற்றவை என்பது உண்மையே. ஆயினும், அரசு முதலாளித்துவ அல்லது முன்னாள் அரசு முதலாளித்துவ ஆட்சிகளும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக நல உதவிகளில் அரசு செலவினத்தை ஒரேயடியாக வெட்டி வந்திருக்கின்றன என்பதும், அரசில் இருந்து சுயாதீனமாக இருக்க முனைந்த தொழிலாளர்களது தொழிற்சங்கங்கள் மீது ஆக்ரோஷமாக ஒடுக்குமுறை நடத்துகின்றன என்பதும், அத்துடன் ஒரு மிகச்சிறு எண்ணிக்கையிலான செல்வந்த சிறுபான்மைத்தட்டுக்கும் மிகப்பரந்த வறுமைப்பட்ட பெரும்பான்மையினருக்கும் இடையிலான பிரம்மாண்டமான மற்றும் அதிகரித்துச் செல்லும் சமத்துவமின்மையால் குணாம்சப்படுத்தப்படுகின்றன என்பதும் அதேஅளவுக்கு உண்மையாக இருக்கிறது.

ஆகவே முக்கியமான வேறுபாடு, உழைக்கும் மக்கள் அவர்களை சுரண்டுகின்ற மற்றும் ஒடுக்குகின்ற சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதிக்கின்ற ஜனநாயக அரசுகளுக்கும், மற்றும் இத்தகைய போராட்டங்களை பல வழிகளில் தடுக்கின்ற எதேச்சாதிகார அரசுகளுக்கும் இடையிலேயே அமைந்திருக்கிறது... ஒடுக்கப்படுகின்ற மற்றும் சுரண்டப்படுகின்ற மக்கள் எதிர்த்துப் போராடுவதற்கான நிலைமைகளை உருவாக்கித் தருவதற்கான போராட்டத்திற்கு முன்னுரிமையளிப்பவர்களை “இடது-சாரிகள்” என்றும், இத்தகைய போராட்டங்களை நசுக்கி எதேச்சாதிகார சித்தாந்தங்களையும் சமூகத்தில் சமத்துவமின்மையையும் ஊக்குவிப்பவர்களை “வலது-சாரிகள்” என்றும் குணாம்சப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரோஹினி ஹான்ஸ்மனின் பிற்போக்கான பகுப்பாய்வின் இறுதிவிளைவை காண்பது கடினமல்ல. அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தற்போது நிலவும் சமூக அமைப்புமுறைக்குள்ளாக தொழிலாளர்கள் “எதிர்த்துப் போராட இயலுகின்ற” அரசுகளாகவும், சிரியா, ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவை “இத்தகைய போராட்டங்களை தடுக்கின்ற எதேச்சாதிகார அரசுகள்” என்றும் ஒருவர் தவறாக அணுகுவாரேயானால், பின் அமெரிக்காவிலானதைப் போன்ற நிலைமைகளை இந்த நாடுகளின் மீது பலவந்தமாகத் திணிப்பதே முக்கியமான பணி என்றாகிவிடும். இது சிரியாவிலும் அதனைத் தாண்டியும் ஆட்சிமாற்றத்திற்காக அமெரிக்கா நடத்துகின்ற போர்களை, விடுதலைக்கான போராக பாராட்டுவதற்கான ஒரு போலிக்காரணத்தை அவருக்கு வழங்குகிறது.

ஏகாதிபத்தியம் மற்றும் எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவம் இரண்டிற்கு எதிராகவும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பை, எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடாமல், ரோஹினி ஹான்ஸ்மன் நிராகரிக்கிறார். அத்துடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்ததையும் அவர் ஒரேயடியாக மறுதலிக்கிறார். அவர் எழுதுகிறார், “’வலது-சாரி’ என்றால் தனியார் முதலாளித்துவத்தை ஆதரிப்பவராக இருக்க வேண்டும் என்றும், 'இடது-சாரி’யாக இருந்தால் அரசு முதலாளித்துவத்தை அல்லது அரசு-ஆதரவுடனான ஒருசிலராதிக்க முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்றுமான கருத்து மிகத் தீவிரமான பிழை கொண்டதாகும்.” “திரும்பிப் பார்க்கும்போது, பனிப்போர் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான தீவிரமான போட்டியின் ஒரு நெடுங்காலமாக இருந்தது என்பது தெளிவாகிறது” என்று அவர் சேர்த்துக் கொள்கிறார்.

முதலாளித்துவ சொத்துடைமை ஒழிக்கப்பட்டிருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் ஏகாதிபத்தியம் கொள்ளையடிக்க முனைந்த மற்றும் இப்போதும் முனைந்து கொண்டிருக்கின்ற காலனித்துவ நாடுகள் இரண்டுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியம் விடுக்கும் மிரட்டல்கள் மற்றும் செய்யும் சூழ்ச்சிகளின் பக்கமாய் ரோஹினி ஹான்ஸ்மன் நிற்கிறார். ISO இன் குட்டி-முதலாளித்துவ வட்டத்திற்குள்ளிருந்தபடி, ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவை ஏகாதிபத்திய சக்திகளாகக் கூறி நடத்தப்பட்ட தாக்குதல்களை ICFI மறுதலித்தமையின் சரியான தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது:

சீனா மற்றும் ரஷ்யாவுக்கு “ஏகாதிபத்திய” என்ற அடைமொழி வார்த்தையை சேர்ப்பது என்ன அரசியல் நோக்கத்திற்கு பயன்பட இருக்கிறது? என்பதை ஒருவர் கேள்வியெழுப்பியாக வேண்டும். நடைமுறை அரசியல் அர்த்தத்தில் அது குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்ய சேவைசெய்கிறது. முதலாவதாய் இது, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மையமான மற்றும் தீர்மானகரமான உலகளாவிய எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை முக்கியத்துவமற்றதாக்கி, அதன்மூலம் அதனை குறைத்துக் காட்டுகிறது. ரஷ்யாவினால் ஆதரவளிக்கப்படும் அசாத் ஆட்சி அமைந்திருக்கும் சிரியாவில் போன்ற ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் போலி-இடதுகளது செயலூக்கமான ஒத்துழைப்புக்கு இது வழியமைத்துத் தருகிறது. இரண்டாவதாக, இன்னும் மிக முக்கியமானதாக, சீனாவையும் ரஷ்யாவையும் ஏகாதிபத்தியங்களாக —ஆகவே மறைமுகமாக, இன, தேசிய, மொழி மற்றும் மத சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற காலனித்துவ சக்திகளாக— கூறுவது ஏகாதிபத்திய-ஆதரவு “தேசிய விடுதலை” எழுச்சிகளுக்கும் “வண்ண புரட்சி”களுக்கும் போலி-இடதுகள் ஆதரவளிக்க ஏற்பளிக்கிறது.

ரோஹினி ஹான்ஸ்மனும் ISO வினரும் ஒப்புக்கொள்ள விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் ஏகாதிபத்தியத்தினதும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தினதும் முகாமில் இரண்டு கால்களையும் ஊன்றி நின்று கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க தலைமையிலான போர்களுக்கும் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய அல்கெய்தா பயங்கரவாத வலைப்பின்னலுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள் குறித்து ரோஹினி ஹான்ஸ்மன் மௌனம் காப்பது அவரது புத்தகத்தின் மிகக்குறிப்பிடத்தக்க விடுபடல்களில் ஒன்றாக இருக்கிறது. பென்டகனின் 2012 அறிக்கைகளுக்குப் பின்னர், சிரியாவில் அமெரிக்கா-அல்கொய்தா கூட்டணி என்பது பகிரங்கமாய் பதிவாகிய ஒரு விடயமாகும். என்றபோதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான நடிப்புகளது மோசடித் தன்மையை குறிப்பாக தெளிவாக்குகின்றதாய் இருக்கும் இந்தக் கூட்டணி, பனிப்போர் காலம் வரை பின்னோக்கி நீண்டு செல்வதாகும்.

சோவியத்-ஆதரவு ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) 1978 இல் அதிகாரத்திற்கு வந்தபின்னர், PDPA க்கு எதிரான இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு பென்டகன் ஆயுத உதவி வழங்கத் தொடங்கியது. வியட்நாமிலான தோல்வியில் தள்ளாடிப் போயிருந்த அமெரிக்க அதிகாரிகள், சிஐஏ இன் ஒரு அதிகாரியான ரோபர்ட் கேட்ஸ் அவருடைய From the Shadows என்ற 1996 நினைவுப்புத்தகத்தில் எழுதியதைப் போல, ஆப்கானிஸ்தானில் “சோவியத்துகளை ஒரு வியட்நாமிய சதுப்புக்குள் உறிஞ்சும்” ஒரு கொள்கையை வகுத்தனர். காபூலில் உள்ள PDPA ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் ஆப்கான் ஆளும் உயரடுக்குடனான PDPA இன் உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்குமான ஒரு பிற்போக்குத்தனமான முயற்சியில், 1979 டிசம்பரில் கிரெம்ளின் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது, ஆப்கானிஸ்தானை சோவியத் இராணுவத்தின் இரத்தத்தை சிந்தச் செய்கின்ற ஒரு போர்க்களமாக வாஷிங்டன் பயன்படுத்திக் கொண்டது.

இந்தக் கொள்கையின் முன்னெடுப்பாக ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சண்டையிடுவதற்காக பத்தாயிரக்கணக்கான இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை உலகெங்கும் இருந்து கொண்டுவருவதில் சிஐஏ இன் முக்கியமான கூட்டாளிகளில் ஒருவராக ஒரு இளம் சவுதி பில்லியனர் இருந்தார், அவர்தான் அல்கொய்தாவின் பின்னாள் தலைவரான ஒசாமா பின் லாடன். சிஐஏ-அல்கெய்தா கூட்டணி விடயத்தில் மவுனம் காக்கின்ற அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கையை வழிமொழிகின்ற ரோஹினி ஹான்ஸ்மன், அதனை சோவியத் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு விடுதலைப் போராட்டமாக சித்தரிக்கிறார்.

அவர் எழுதுகிறார், “ஆப்கானிஸ்தானை ரஷ்யர்கள் படையெடுத்து ஆக்கிரமித்தபொழுது, 1978 இல் PDPA இன் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை முகம்கொடுத்த பழங்குடியினரது கலகங்கள் 1979 அளவில் ஒரு முழு அளவிலான எழுச்சியாக அபிவிருத்தி அடைந்தது. அதனைப் பின்தொடர்ந்த இராணுவப் பிரச்சாரமென்பது அப்பாவிக் குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் வியட்நாமிலான அமெரிக்காவின் பிரச்சாரத்தை ஒத்திருந்தது.... 1980களில், ஏற்கனவே முஜாஹிதீனை ஆதரித்துக் கொண்டிருந்த ரேகன், ஸ்ரிங்கர் விமான-எதிர்ப்பு ஏவுகணைகளை அவர்களுக்கு விநியோகிக்க உடன்பட்டபோது, போர் ஒரு இக்கட்டான நிலையை எட்டியிருந்தது. இந்த ஆயுதங்கள் ரஷ்யர்களுக்கு எதிரான அலையாக மாறின...”

ரோஹினி ஹான்ஸ்மன் சோவியத்-ஆப்கான் போரில் அமெரிக்காவின் பாத்திரத்தை பாதுகாத்துப் பேசுவதும், சிஐஏ-ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னல்கள் விடயத்தில் மவுனமாய் இருப்பதும் பிற்போக்கானவையாகும். 1979-1992 ஆப்கானிஸ்தானிலும் 1979-1982 சிரியாவிலும் நடந்த சிஐஏ-ஆதரவு இஸ்லாமியவாத பினாமிப் போர்களின் இரத்தக்களரியான தன்மையை அவர் மூடிமறைக்கிறார். அதே இஸ்லாமியவாத சக்திகளது வம்சாவளிகள் தான் இன்று ரோஹினி ஹான்ஸ்மன் “ஜனநாயகப் புரட்சி” என்று போற்றும் சிரியப் போரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கால்நூற்றாண்டு கால அமெரிக்கப் போர்களை வழிமொழிவது

தனது புத்தகத்தின் மிகுதிப் பகுதியில் ரோஹினி ஹென்ஸ்மன், 1990களில் யூகோஸ்லாவியாவில், மற்றும் ஒபாமாவின் கீழ் லிபியா, உக்ரேன் மற்றும் சிரியாவில் என சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளால் நடத்தப்பட்ட ஒரு தொடர் அமெரிக்க போர்களுக்கு ஆதரவளிக்கின்றார். பென்டகன் இஸ்லாமிய பயங்கரவாத அல்லது அதி-வலது சக்திகளின் கூட்டுடன் நடத்திய இந்தப் போர்களை, தார்மீகக் கடமை மற்றும் மனித உரிமைகள் என்ற சிடுமூஞ்சித்தனமான பதாகையின் கீழ் சந்தைப்படுத்துகிறார். “தார்மீக கடமையையும் மனிதாபிமானத்தையும் மீண்டும் அரசியலில் கொண்டு வருவதே” இன்றைய பணி என அவர் உறுதியளிக்கின்றார். “தார்மீகக் கடமையானது உண்மையின் பக்கம் நிற்பதை அவசியமாக்குகிறது, ஆயினும் அதனினும் அதிகமான ஒன்றையும் அது அவசியமாக்குகிறது: அது ஏதேனும் ஒரு பக்க சார்பாக நிற்பது”.

ரோஹினி ஹென்ஸ்மனை பொறுத்தவரை, “தார்மீகவழி” நிற்பது என்பதன் அர்த்தம், அமெரிக்கப் போர்களை விளம்பரம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொய்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை ஏற்றுக்கொள்வது என்பதாய் இருக்கிறது. இந்தப் போர்களை எதிர்ப்பவர்களை வெறுப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்களை, வாஷிங்டன் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கும் ஆட்சிகளது கைப்பாவைகளாக அவர் நிராகரிக்கிறார். “போலி-ஏகாதிபத்திய-எதிர்ப்புவாதிகளின் தார்மீக சீரழிவை பொஸ்னியாவில் மிலோசெவிக், கராட்ஜிச், மற்றும் மிலாடிச்; ரஷ்யா, உக்ரேன் மற்றும் சிரியாவில் புட்டின்; ஈரான், ஈராக் மற்றும் சிரியாவில் கொமெய்னி மற்றும் காமெனி; மற்றும் சிரியாவில் அசாத் என கொலைகாரர்களின் பக்கத்தை நாடுவதற்கு அவர்கள் காட்டுகின்ற விருப்பத்தைக் காட்டிலும் சுருக்கமாக வேறொன்றையும் கூறிவிட முடியாது” என்கின்றார்.

இந்த ஆட்சிகள் பிற்போக்கானவை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆயினும், புட்டினை, கமேனியை, மற்றும் அசாத்தை என்ன செய்ய வேண்டும் என்ற பணி ரஷ்ய, ஈரானிய மற்றும் சிரிய தொழிலாள வர்க்கத்திற்கு உரியதாகும். இந்த ஆட்சிகளைக் குறிவைத்தான ஏகாதிபத்தியப் போர்களுக்கு ரோஹினி ஹென்ஸ்மன் ஆதரவளிப்பது நேட்டோ இராணுவங்களால் மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் மத்திய கிழக்கிலும் அவை உதவிக் கொண்டிருக்கும் பிற்போக்கான சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இரத்தக்களரியை ஆதரிப்பதில் அவரை ஈடுபடுத்துகிறது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர், நேட்டோ சக்திகள் யூகோஸ்லாவியாவை சிதறடிப்பதை நோக்கி துரிதமாய் நகர்ந்தன. அதன் பாகமாக இருந்த குடியரசுகளின் சுதந்திரத்தை 1992 இல் தொடங்கி ஆத்திரமூட்டும் விதமாக அங்கீகரித்தன. இது வரிசையாக குரோஷியா, பொஸ்னியா மற்றும் இறுதியாக கொசோவோவில் கடுமையான இனரீதியான போர்களுக்கு இட்டுச் சென்றது, கொசோவோவின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க நேட்டோ யூகோஸ்லாவியாவின் மீது குண்டுவீசியதில் இது உச்சமடைந்தது. யூகோஸ்லாவியாவின் சேர்பிய குடியரசில் பெல்கிராட்டில் இருந்த மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவான அந்தந்த குடியரசுகளில் இருந்த சேர்பிய சக்திகள், வாஷிங்டன் மற்றும் நேட்டோ சக்திகளின் தொடர்ச்சியான இலக்காக இருந்ததால் மக்கள், போட்டி தேசியவாதக் கன்னைகளால் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டனர்.

ஒரு சோசலிசக் கொள்கை என்பது ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை சார்ந்திருக்கிறது. ஆனால், ஹென்ஸ்மன், யூகோஸ்லாவியாவின் மீது குண்டு வீசாததற்காகவும் சேர்பியர்களை இன்னும் மூர்க்கமாக தாக்காததற்காகவும் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கூட்டாளிகள் மீது தாக்குகிறார். “சேர்பிய தேசியவாதிகள் யூகோஸ்லாவியாவை கிட்டத்தட்ட துண்டுதுண்டாக கிழித்துப் போடுகின்ற வரையில் அவர்களுக்குக் கடிவாளம் போட மேற்கு சக்திகள் அவமானகரமான விதத்தில் தவறியதை” குறித்து அவர் புலம்புகிறார்.

குரோஷியாவில் இருந்து சேர்பியர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளிய 1995 நேட்டோ-ஆதரவு குரோஷிய இனச் சுத்திகரிப்பு தாக்குதலான Operation Storm குறித்தும், பொஸ்னிய இஸ்லாமியப் போராளிகளுடன் அல் கொய்தா கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் ரோஹினி ஹென்ஸ்மன் மூச்சும் விடவில்லை. நேட்டோ அதிகாரிகள் அந்த நாட்டின் மீது குண்டுவீசுவதற்கு நியாயம் கற்பிப்பதற்காக, மற்ற இனங்களுக்கு எதிரான சேர்பிய இனப்படுகொலைகள் என்ற ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே அவர் முழுமையாக சார்ந்திருக்கிறார். ஆயினும், யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக்கும் சேர்பியர்களும் 100,000 அல்லது இன்னும் 250,000 பேரையும் கூட கொலை செய்து கொண்டிருந்ததாக கூறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட 1999 நேட்டோ போருக்குப் பின்னர், மிலோசெவிக் 391 மரணங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டார்.

அல்-கொய்தாவுடன் இணைந்த கொசாவோ விடுதலை இராணுவத்திற்கும் (KLA) —வாஷிங்டன் யூவோஸ்லாவியப் போரில் இதனை ஆதரித்தபோதும் உத்தியோகபூர்வமாக ஒரு பயங்கரவாத அமைப்பாக இதை வகைப்படுத்தியது— ஹென்ஸ்மன் ஆதரவளிக்கிறார். “KLA அதன் தலைவரான ஹஸிம் தச்சி ஒப்புக்கொண்டவாறாக, ‘நாங்கள் மேற்கொண்ட எந்த ஆயுதமேந்திய நடவடிக்கையும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை கொண்டுவரும். நாங்கள் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களின் வாழ்க்கையை ஆபத்து சூழச் செய்து கொண்டிருக்கிறோம்’ என்பது தெரிந்தே சேர்பிய பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்தான ஒரு கெரில்லா யுத்தத்தை தொடக்கியது. ஹஸிம் தச்சி கூறியது சரியே. சேர்பிய பாதுகாப்புப் படையினர் அப்பாவிமக்களைக் கண்மூடித்தனமாக படுகொலை செய்வதன் மூலமாக கெரில்லா தாக்குதல்களுக்கு பதிலிறுத்தனர்” என்று அவர் எழுதுகிறார்.

இவ்வாறிருந்தும் ரோஹினி ஹென்ஸ்மன் KLA மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவாய் இன்னும் பெரிய ஏகாதிபத்திய தலையீட்டுக்கு உற்சாகமாகக் கோருவதோடு, போரின் மீதான இடது-சாரி விமர்சனத்தையும் கண்டனம் செய்கிறார். அவர் எழுதுகிறார்:

பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் பேராசிரியரான ஜேம்ஸ் பெட்ராஸ் கூறுவதன்படி, ‘ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முற்போக்காளர்களில் அநேகமானோர் அமெரிக்க-ஆதரவு பொஸ்னிய அடிப்படைவாதிகளை, குரோஷிய நவ-பாசிசவாதிகளை மற்றும் கொசோவோ-அல்பானிய பயங்கரவாதிகளை ஆதரித்தனர், இது இனச் சுத்திகரிப்புக்கும் ஒருகாலத்தில் இறையாண்மை கொண்ட அரசுகளாக இருந்த அவை அமெரிக்க இராணுவத் தளங்களாகவும், ஏவல் ஆட்சிகளாகவும் மற்றும் பொருளாதாரரீதியாக முழு ஊனமானவையாகவும் மாற்றப்பட்டு பலதேசிய யூகோஸ்லாவிய நலன்புரி அரசினை முழுமையாக அழிப்பதற்கும் இட்டுச்சென்றது’ (Petras 2009, 117). அழித்தொழிக்க குறிவைக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லீம்களை ‘அடிப்படைவாதிகள்’ என்றும் வெளியேற்றப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருந்த கொசோவோ அல்பானியர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றும் வகைப்படுத்தும் அவலட்சணமான அநீதியும், அத்துடன் சேர்பிய தேசியவாதிகளது இனப்படுகொலைவகையான இனச் சுத்திகரிப்பின் மீதான அவரது உரத்த மௌனமும், பெட்ராஸ் எங்கு நிற்கிறார் என்பதை மிகத் தெளிவாக்குகிறது.

லிபியாவிலான 2011 நேட்டோ போரையும் ரோஹினி ஹென்ஸ்மன் பாதுகாக்கிறார். பெங்காசியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒரு அரசு ஒடுக்குமுறையில் இரத்தக்களரியை தடுக்க நேட்டோ விரும்பியதான போலிச்சாக்கின் பேரில் தொடக்கப்பட்ட இப்போர் ஆறுமாதங்களின் பின்னர் அந்நாடு முழுமையாக குண்டுவீசி அழிக்கப்பட்டு கர்னல் மும்மார் கடாபி சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதுடன் முடிவடைந்தது. லிபிய மற்றும் சிரியப் போர்களை பாதுகாத்த NPA மற்றும் ஜில்பேர் அஷ்க்கார் இன் நிலைப்பாடுகளுக்கு ஹென்ஸ்மன் ஆதரவளிக்கிறார்.

அவர் எழுதுகிறார், “சில சோசலிஸ்டுகளும் ஜில்பேர் அஷ்க்கார் போன்ற போர்-எதிர்ப்பு செயற்பாட்டாளர்களும் நேட்டோவால் கொண்டுவரப்பட்ட பறக்கத் தடை செய்யும் மண்டலத்தை எதிர்ப்பதில்லை என்று முடிவெடுத்தனர். இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி, அஷ்க்கார் கூறினார், “பறக்கத்தடை கொண்ட மண்டலத்தை முதல் நாளில் இருந்தே எதிர்ப்பதன் மூலமாக, நீங்கள் கிளர்ச்சியாளர்கள் விடுத்த ஒரு வேண்டுகோளை நிராகரிக்கிறீர்கள், அதன்மூலம் நீங்கள் பெங்காசி மக்களின் தலைவிதியானது உங்களது தொடமுடியாத அளவுக்கு புனிதமான ஏகாதிபத்திய-எதிர்ப்பு கொள்கைக்கு முற்றிலும் இரண்டாம் பட்சமானதுதான் என்பதைப் போல நடந்துகொள்கிறீர்கள்.”

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு, அஷ்க்காரின் கண்டனத்துடன் ரோஹினி ஹென்ஸ்மன் முழுமையாக உடன்படுகிறார். போர் எதிர்ப்பாளர்களை அவர், “மணியடிக்கும் சத்தம் கேட்டாலே போதும் உண்மையில் உணவு வருகிறதோ இல்லையோ எதிர்வினையாற்றத் தொடங்கி விடுகின்ற ... Pavlov இன் நாய்கள்” உடன் ஒப்பிட்டார், “நேட்டோ நடவடிக்கையில் இறங்க முடிவெடுத்து விட்டது என்பதைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் விடயமில்லை; லிபியர்கள் என்ன சொன்னார்கள், செய்தார்கள், கருதினார்கள் அல்லது ஒழுங்கமைத்தார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்த ஏகாதிபத்திய-எதிர்ப்புவாதிகள் லிபியர்களை அவர்களது சொந்தப் புரட்சியில் இருந்தே துடைத்தழித்து விடுகின்றனர்.”

லிபியா கெடுத்து சீரழிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாகி விட்டிருப்பதன் பின்னர், அஷ்க்கார் ஒரு மாபெரும் ஏகாதிபத்தியக் குற்றத்தின் பிரச்சாரகராக அம்பலப்பட்டு நிற்கிறார். லிபியாவிலோ அதற்கு மேலாக சிரியாவிலோ நேட்டோவின் ஆசீர்வாதத்தின் கீழ் எந்த “ஜனநாயகப் புரட்சி”யும் அங்கே நடந்து விடவில்லை. திரிப்போலி, சீர்த் மற்றும் பிற நகரங்களின் மீதான நேட்டோ குண்டுவீச்சில் 30,000க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்ததற்குப் பின்னர், போட்டி இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு இடையிலே இன்றுவரை தொடரும் ஒரு உள்நாட்டுப் போரால் அந்த நாடு சிதறிச் சின்னாபின்னமாகிப் போயுள்ளது. இதனிடையே, ஐரோப்பாவிற்குள் புலம்பெயர்வோர் பாய்வை தடுத்துநிறுத்த வடிவமைக்கப்பட்டவையாக, அடிமைச் சந்தைகளும் ஐரோப்பிய ஒன்றிய-நிதியாதாரத்திலான தடுப்பு முகாம்களும், லிபிய நகரங்களில் வெளிப்படையாக இயங்கி வருகின்றன.

இறுதியாக, ரோஹினி ஹென்ஸ்மன், மைதான் சதுக்க ஆர்ப்பாட்டங்களை சூழ்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட, உக்ரேனில் ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை கவிழ்த்த நேட்டோ-ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆதரிக்கிறார். உக்ரேனிய வலது-சாரி மற்றும் நவ-பாசிச சக்திகளுடன் கூட்டணி சேர்ந்து அமெரிக்க நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரித்த கியேவ் மற்றும் மேற்கு உக்ரேனில் இருந்த நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை அணிதிரட்டுவதாகவும் இருந்த இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, நவ-நாஜி Right Sector ஆல் தலைமை கொடுக்கப்பட்டது.

தந்தை நாட்டு கட்சியின் ஆர்செனி யாட்சென்யுக் (Arseniy Yatsenyuk), தொழில்முறை குத்துச்சண்டை வீரரான விட்டாலி கிளிட்ஷ்கோ (Vitali Klitschko) இன் சீர்திருத்தங்களுக்கான உக்ரேனிய ஜனநாயகக் கூட்டணி (UDAR, அல்லது உக்ரேனிய மொழியில் “குத்து”), மற்றும் நவ-பாசிச ஸ்வோபோடா கட்சியின் ஓலே தியானிபோக் (Oleh Tyahnybok) ஆகியோரிடையேயான ஒரு கூட்டணியை இது அதிகாரத்துக்கு கொண்டுவந்தது.

ஸ்வோபோடா ஏற்கனவே டிசம்பர் 13, 2012 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ கண்டனத்திற்கான மையப்பொருளாக இருந்ததாகும். அதில் ஐரோப்பிய ஒன்றியமானது “ஸ்வோபோடா கட்சிக்கான ஆதரவில் வெளிப்பட்ட உக்ரேனிலான தேசியவாத மனோநிலை”யை அங்கீகரிக்கிறது, ஸ்வோபோடாவின் “இனவாத, யூத-விரோத மற்றும் வெளிநாட்டினர் வெறுப்பு கண்ணோட்டங்களை” விமர்சனம் செய்கிறது. அத்துடன் “இந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர, வழிமொழிய, அல்லது கூட்டணிகள் உருவாக்க வேண்டாம் என்று... ஜனநாயக-ஆதரவு கட்சிகளுக்கு கோரிக்கை விடுகின்றது.”

இருந்தும், வாஷிங்டனும், பேர்லினும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் கியேவ் ஆட்சிக் கவிழ்ப்பை பாராட்டியதுடன், அசோவ் படைப்பிரிவு (Azov Brigade) போன்ற அதி-வலது கிளர்ச்சிக்குழுக்களை கொண்டு கிழக்கு உக்ரேனின் ரஷ்யமொழி பேசும் பகுதிகளின் மீது வரிசையான தாக்குதல்களை கியேவ் ஆட்சி நடத்தியபோது அதற்கு ஆதரவளித்தன. அதேவேளையில், அந்த ஆட்சி நிலக்கரி சுரங்கத் துறையிலும் கிழக்கு உக்ரேனை மையமாகக் கொண்ட கனரகத் தொழில்துறையிலும் அரசாங்க செலவினத்தை வெட்டியது.

இது, நாட்டை பொருளாதார மந்தநிலைக்குள்ளும் உள்நாட்டுப் போருக்குள்ளும் மூழ்கடித்தது. இந்தப் போரும், ரஷ்ய-மொழி பேசும் கிரீமியா பகுதி கியேவ் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உக்ரேனை விட்டு விலகி தன்னை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதற்கு நடத்திய கருத்துவாக்கெடுப்பும் நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகளில் ஒரு பெரும் இராணுவக் குவிப்பை நடத்துவதற்கான சாக்குப்போக்குகளாக சேவைசெய்தன. சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்த யூதர்கள் மீதான நாஜிப் படுகொலையில் பங்குபற்றிய இரண்டாம் உலகப் போர் சகாப்தத்தை சேர்ந்த பாசிச OUN (Organization of Ukrainian Nationalists - உக்ரேன் தேசியவாதிகள் அமைப்பு) இன் இன்னும் உயிருடனிருக்கும் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அந்த ஆட்சி வாக்களித்தது.

கியேவிலான பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை ரோஹினி ஹென்ஸ்மன் மூடிமறைக்கிறார். மாஸ்கோவிலுள்ள ஒரு பாசிச ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டமாக அதனைச் சித்தரிக்கும் அவர் புட்டினை கொடூரமானவராக சித்தரிக்கிறார். அவர் எழுதுகிறார், “நவ-ஸ்ராலினிச விவரிப்பின் படி இது ஒரு பாசிச எழுச்சி, ஆனால் ஆதாரங்கள் அதற்கு எதிர்மாறானதையே நிரூபிக்கின்றன. அதி-வலது தேசியவாதிகள் நிச்சயமாக அதில் பங்குவகித்தனர், பெரும் விளம்பரமும் பெற்றார்கள் என்றபோதும், 2014 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது வெற்றி பரிதாபகரமான நிலையில் இருந்தது, அதிதேசியவாத ஸ்வோபோடா மற்றும் Right Sector கட்சிகள் 2014 மேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தலா 1 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தன.

மறுபடியும் ரோஹினி ஹென்ஸ்மன் கியேவ் ஆட்சி கவிழ்ப்பின் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் கிரெம்ளினின் கையாட்களாக அவதூறு செய்ய முயல்கிறார். அவர்கள் “ஒரு சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்டாக நடிக்கவும் கூட செய்யாத, அத்துடன் அதி வலதுகளுடன் வெளிப்படையாக தொடர்பு வைத்துக் கொள்கின்ற புட்டினை ஆதரிக்கின்றனர்; உக்ரேன் போன்ற முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் கீழ்ப்படிவான ஆட்சிகளை இணைத்துக் கொள்வதற்கு அல்லது உருவாக்குவதற்கு புட்டின் செய்கின்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது வரை அவர்களது ஆலோசனை நீள்கிறது” என்பதான கூற்றுக்களைக் கொண்டு அவர்களை அவர் கண்டனம் செய்கிறார்.

ரஷ்ய-விரோத பிரச்சாரமும் உக்ரேனிய பாசிசத்தை ரோஹினி ஹென்ஸ்மன் அரவணைத்துக் கொண்டமையும்

நவ-பாசிச பிரச்சாரத்திற்கு சற்று மேலான ஒன்றின் அடிப்படையில் ரஷ்யாவையும் விளாடிமிர் புட்டினையும் கொடூரமாக்கிக் காட்டுவதுதான் கியேவ் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆதரவான ரோஹினி ஹென்ஸ்மனின் வாதத்தின் மையமாய் அமைந்திருக்கிறது. ரஷ்யாவை ஆளுகின்ற சோவியத்துக்குப் பிந்தைய பிற்போக்குத்தனமான, முதலாளித்துவ ஊழல்கொள்ளையாட்சியின் பிரதிநிதியாக புட்டின் இருக்கிறார், ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது சக்திகளுடன் கூட்டணிகளை உருவாக்குகிறார். ஆனால் ரோஹினி ஹென்ஸ்மன் அவரை, ரஷ்யாவின் ஒட்டுண்ணித்தனமான முதலாளித்துவ சிலவராட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் கண்ணோட்டத்தில் இருந்து தாக்கவில்லை, மாறாக சோவியத் ஒன்றியத்தின் மீதான வெறித்தனமான வெறுப்பின் கண்ணோட்டத்தில் இருந்து தாக்குகிறார்.

சோவியத் ஒன்றியத்தை பூமியில் நரகமாக ரோஹினி ஹென்ஸ்மன் விவரிக்கிறார். ஸ்ராலினிச ஆட்சி சர்வதேசியப் புரட்சியை நிராகரித்ததற்காகவோ, இடது எதிர்ப்பாளர்கள் மற்றும் நான்காம் அகிலத்தினுள் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இருந்த மார்க்சிச சர்வதேசியவாதிகளை அது அரசியல் படுகொலை செய்ததற்காகவோ அவர் அதனை விமர்சனம் செய்யவில்லை. மாறாக, ஒட்டுமொத்த சோவியத் ஒன்றியத்தையும், ஒரு படுகொலை பாசிச ஆட்சியாக முன்நிறுத்தி அவர் கண்டனம் செய்கிறார். இந்த கொச்சையான பொய்மைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு, அவர் வைக்கும் ஒரு கண்கூடான பிற்போக்கான வாதம் தான்: நாஜி-ஆதரவு உக்ரேன் பாசிஸ்டுகள் சோவியத் “ஏகாதிபத்திய”த்திற்கு எதிரான தேசிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தனர் என்பதாகும்.

எந்த உண்மை ஆதாரமும் இல்லாமல் சோவியத் ஒன்றியம் குறித்து ரோஹினி ஹென்ஸ்மன் காட்டும் இச்சித்திரம் ஒரு கொச்சையான கம்யூனிச-விரோத கேலிச்சித்திரத்திற்கு அதிகமான எதுவொன்றாகவும் இல்லை. ரோஹினி ஹென்ஸ்மனின் கூற்றுப்படி, சோவியத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், “பிரிட்டனில் தொழிற் புரட்சியின் போது தொழிலாளர்களது துன்பத்தை ஒத்ததாய் இருந்தது மட்டுமல்ல, ரஷ்யாவின் அடிமைத் தொழிலாளர் முகாம்களிலான —ரொட்டி திருடியதைப் போன்ற சில்லறைக் குற்றங்களுக்கும் கூட ஆட்கள் இதில் அடைக்கப்பட்டார்கள் எனும்போது அரசியல் எதிர்ப்பைக் குறித்து சொல்லவும் தேவையில்லை— நிலைமைகள் இன்னும் மோசமாய் இருந்தன.”

சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யா-அல்லாத குடியரசுகளைப் பொறுத்தவரை, அவை இடைவிடாத இனச் சுத்திகரிப்பு மற்றும் படுகொலைகளுக்கு ஆட்படுத்தப்பட்டிருந்ததாக ரோஹினி ஹென்ஸ்மன் கூறுகிறார். “சோவியத் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் காலனிகளுக்கும் இடையிலான உறவு, பாரம்பரியமான ஏகாதிபத்தியத்தை ஒத்ததாய் இருந்தது... ரஷ்யா-அல்லாத தேசங்களில் பூர்வீகக்குடி மக்களை நாடுகடத்துவதுடன் சேர்த்து ரஷ்யர்களை அவ்விடங்களில் குடியமர்த்தியமையானது இந்தப் பிராந்தியங்களின் மக்கள் அமைவு சூழலை மாற்றியது. காகசஸ் மற்றும் கிரிமியாவின் இஸ்லாமிய தேசங்கள் குறிப்பாக குறிவைக்கப்பட்டன; 1943க்கும் 1944க்கும் இடையில் ஒட்டுமொத்த கராஷே (Karachai) மக்கள், கால்மைக்ஸ் (Kalmyks), செச்சனியர்கள் மற்றும் இங்குஷ் (Ingush) மக்கள், பால்கர்கள், கிரிமிய தத்தார்கள் மற்றும் மெஸ்கெத்தியான் துருக்கியர்கள் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்; இடம்பெயர முடியாதவர்கள் சுட்டுத்தள்ளப்பட்டனர், அவர்களது கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.”

உக்ரேனுக்கு மீண்டும் திரும்பும் ரோஹினி ஹென்ஸ்மன் எழுதுகிறார், ஆகவே, “அது ஒரு தேசிய விடுதலை இயக்கத்தைக் கொண்டிருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியதாகும். ஸ்ராலினால் மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு முன்பாக, 1920 முதல் 1922 வரை ஒரு சுயாதீனமான சோவியத் சோசலிசக் குடியரசாக உக்ரேனை ஸ்தாபிப்பதில் இந்த இயக்கம் ஒரு குறுகிய காலத்திற்கு வெற்றியுமடைந்தது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், உக்ரேன் தேசியவாதிகள் அமைப்பு (OUN), என்ற முன்னாள் குறுகிய வலது-சாரி இன-தேசியவாதக் குழுவாக இருந்த ஒன்று, முக்கியத்துவத்தை பெற்றது.”

யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் திமோத்தி ஸ்னைடர் ஐ மேற்கோளிட்டு ரோஹினி ஹென்ஸ்மன் எழுதுகிறார், இரண்டாம் உலகப் போரின் போது OUN “1943 இல் போல் இன (Poles - ஐரோப்பா முழுவதிலும் வாழ்ந்த போலந்துமொழி பேசும் மக்கள்) மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்தியது, அதேநேரத்தில் போல் இன மக்களுடன் ஒளிந்து கொண்டிருந்த ஏராளமான யூதர்களையும் கொலைசெய்தது”; “இதுவே புட்டினிச பிரச்சாரம் குறிப்பிடுகின்ற உக்ரேனின் பாசிச வரலாறு” என்று அவர் இதனை அழைக்கிறார். ஆனால் இந்த வரலாறு அடிப்படையில் பொருத்தமற்றது என்று வாதிடச் செல்கிறார். அவர் எழுதுகிறார், “உக்ரேனியர்களில் மிகப் பெரும்பான்மையானோர் நாஜிக்களுக்கு எதிராகப் போராடினர், ஒரு சிறுபான்மையினர் மட்டுமே ஸ்ராலினும் பல ரஷ்யர்களும் செய்ததைப் போல அவர்களுடன் ஒத்துழைத்தனர்.”

இந்த சித்தரிப்பு, ISOவின் கம்யூனிச-விரோதத்திற்கும் பாசிச பிரச்சாரத்திற்கும் இடையிலான பிரிப்புக்கோட்டை துடைத்தழித்து விடுகிறது. எல்லாவற்றையும் விட இது, அக்டோபர் புரட்சியும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமையும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் எழுச்சியும் உலக வரலாற்றின் மீது ஏற்படுத்திய அளவிடமுடியா முற்போக்குத் தாக்கத்தை நிராகரிக்கிறது.

போல்ஷிவிக்குகளின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியமையும், ரஷ்யாவில் முதலாளித்துவ சொத்துடைமை ஒழிக்கப்பட்டமையும் ரஷ்யாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு மாபெரும் பாய்ச்சலை சாத்தியமாக்கியது. ஒரு தலைமுறைக்கு சற்று அதிகமானதொரு காலத்தில், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யமானது பெருவாரியாக கிராமப்புற மற்றும் படிப்பறிவற்ற நாட்டுப்புறங்களின் ஒரு தொகுப்பாக இருந்ததில் இருந்து, ஒரு நவீன, படிப்பறிவு கொண்ட மற்றும் நகர்ப்புற சமூகமாக முன்னேறியது. விஞ்ஞானம் மற்றும் தொழிற்துறையின் மிகப்பரந்த வளர்ச்சியின் காரணத்தால்தான், பின்தங்கிய சாரிச முடியாட்சி வீழ்ந்து 40 ஆண்டுகளின் பின்னர், 1957 இல், ரஷ்யா, இந்த பூமியின் முதல் மனிதரால்-உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியது.

எப்போதும் டிக்கன்ஸ் வகையிலான விவரிப்பில் போன்ற வறுமையும் படுகொலைகளும் நிலவுகின்ற ஒரு இடமாக சோவியத் ஒன்றியத்தை கருதுகின்ற ரோஹினி ஹென்ஸ்மனின் நரகக் கற்பனைகள் ஒருபக்கம் இருக்க, உண்மையில் சோவியத் ஒன்றியத்தில் வாழ்க்கைத் தரங்களும் ஆயுட்காலமும் உயர்வு கண்டிருந்தன, அங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மிகப்பெருமளவில் அமைதியாக ஒன்றாய் வாழ்ந்து, ஒன்றாய் வேலைசெய்து வந்தனர்.

மேலும், ரஷ்யப் புரட்சியின் விளைவுகள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளை மிகவும் தாண்டிச் சென்றதாகும். சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியுடன் கூடிஒத்துழைத்ததாக குற்றம்சாட்ட பார்க்கும் ரோஹினி ஹென்ஸ்மனின் சூசகம் ஒரு பிற்போக்குத்தனமான வரலாற்றுப் பொய் ஆகும். நாஜி ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டமை, ஐரோப்பிய பாசிசம் கலைக்கப்பட்டமை, சீனாவில் 1949 சீனப் புரட்சிக்கு முன்வந்த ஆண்டுகளில் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகள் தோற்கடிக்கப்பட்டமை ஆகிய அனைத்துமே இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் அசாதாரணமான இராணுவ மற்றும் தொழிற்துறை முயற்சியின் —எல்லாவற்றுக்கும் மேல், சோவியத் மக்களுக்கு எதிராக நாஜி ஜேர்மனியால் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு போருக்கு எதிரான அதன் வெற்றியின்— விளைபொருளாக இருந்தவையாகும். இது உலகெங்கிலும் வர்க்க உறவுகளை மாற்றியமைத்தது.

முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு புலனுணரத்தக்க மாற்று எதிர்நின்ற நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவற்றைத் தாண்டிய பிரதேசங்களின் முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் மிகப்பெரும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தன. குறிப்பாக, இரண்டாம் உலகப் போரைப் பின்தொடர்ந்தும், பாசிசத்தின் குற்றங்களால் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டிருந்ததைப் பின்தொடர்ந்தும் வந்த தசாப்தங்களில், இதுவே நிலையாக இருந்தது. சமூகப் புரட்சியின் உண்மையான அபாயத்திற்கு முகம்கொடுத்த நிலையில், அவை சமூகநலன்புரி அரசுகளையும் நாடாளுமன்ற ஆட்சிகளையும் கட்டியெழுப்பின, சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் மூலமாக ஐரோப்பிய யூத-விரோதம், அல்லது அமெரிக்க இனவாத பாகுபாடு ஆகியவற்றுக்குத் தீர்வுகாண முயற்சித்தன.

ட்ரொட்ஸ்கியின் ஆய்வுகளின் மீது அடித்தளம் அமைத்துக் கொண்ட ICFI மட்டுமே, உலகப் போர் மற்றும் பாசிசத்தின் அபாயம் இன்னும் இருந்து வருகிறது என்று வலியுறுத்தியது. உலக முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் தொழிலாள வர்க்கம் அடைந்த தேட்டங்கள் எதற்கும் பாதுகாப்பு இல்லை. அக்டோபர் புரட்சியின் போல்ஷிவிக் தலைவர்களை 1930கள் மற்றும் 1940களில் கொன்றொழித்ததும், உலக சோசலிசப் புரட்சியை நிராகரிப்பதன் அடிப்படையில் ஏகாதிபத்தியத்துடன் சகவாழ்வு காண முயற்சித்ததுமான சோவியத் அதிகாரத்துவத்தினால், ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தவாறாக, முதலாளித்துவத்தை மீட்சி செய்ய முடிந்திருந்தது. 1991 இல், ட்ரொட்ஸ்கி எச்சரித்தவை நடந்தேறி, கிரெம்ளின் ரஷ்யாவில் முதலாளித்துவத்தை மீட்சி செய்ததற்குப் பின்னர், இது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக ICFI ஐ கட்டியெழுப்பும் கடமையை, இன்னும் நேரடியாக, முன்நிறுத்தியது.

ஆயினும், “அரசு முதலாளித்துவ” அல்லது பப்லோவாத இயக்கங்களது நடுத்தர வர்க்க சக்திகள், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சிக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எதிர்வினையாற்றின. வெளிநாடுகளில் சோவியத் ஒன்றியம் வழங்கிவந்த அரவணைப்பு இல்லாமல்போன நிலையிலும், தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களின் சமூக அடித்தளம் சிதறிப்போன நிலையிலும், இவை அனைத்தும் துரிதமாக ஏகாதிபத்தியம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரை நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்டன.

இவை அனைத்தும் 2014 கியேவ் ஆட்சி கவிழ்ப்பினைச் சுற்றி ஒன்றுதிரள்வதும், OUN ஐ ஒரு தேசிய விடுதலை இயக்கமாக வழிமொழியும் நியாயப்படுத்தமுடியாதது புத்தகமும் எச்சரிக்கை மணியை ஒலிக்கின்றன. இவற்றின் போலியான “ஜனநாயக” வாய்வீச்சு இருந்தபோதிலும், இந்த சக்திகள் ஒரு பாசிச திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், சோவியத் ஒன்றியம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வரலாறு குறித்து ரோஹினி ஹென்ஸ்மன் கூறுகின்ற பொய்களை நிராகரிக்காமல் உக்ரேன் குறித்து அவர் வைக்கும் வாதங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது சாத்தியமற்றதாகும்.

கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு ஆதரிப்பை நியாயப்படுத்துவதற்காக OUN ஐ அரவணைத்துக் கொள்வதன் மூலம், ரோஹினி ஹென்ஸ்மன் நாஜிக்களின் மிகவும் இரத்தக்களரியான குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு இயக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். OUN போல் இன மக்கள்மீது “இனச் சுத்திகரிப்பை” நடத்தியது என்றும் “ஒரு எண்ணத்தக்களவு யூதர்களை’ கொன்றது என்றும் சாதாரணப்படுத்தி கூறுவது, பாசிசத்தின் குற்றங்களை மூடிமறைப்பதாகும். உண்மையில், உக்ரேனிய பாசிஸ்டுகள் சோவியத் ஒன்றியத்திற்குள்ளான நாஜிக்களின் யூதப் படுகொலையில் கைகோர்த்தனர், அதன்பின் தோல்வியடைந்த நாஜி இராணுவங்கள் மேற்கு நோக்கி பின்வாங்கிய சமயத்தில், நூறாயிரக்கணக்கான போல் இனத்தவரையும் மற்றும் யூதர்களையும் தாங்களே மொத்தமாய் கொன்று குவித்தனர்.

சோவியத் ஒன்றியத்தில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான ஸ்ராலினிசக் குற்றங்களை பற்றி ரோஹினி ஹென்ஸ்மன் குறிப்பிடுவதைப் பொறுத்தவரை, ISO இன் சாக்ட்மன்வாத முன்னோடிகளது வழமையான அரசியல் நழுவலாக இது இருக்கிறது. சோவியத் அதிகாரத்துவத்தின் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, ரோஹினி ஹென்ஸ்மன், சோவியத் ஒன்றியத்திற்கும் நாஜி ஜேர்மனிக்கும் இடையிலான, அடிப்படையிலேயே மாறுபட்ட சமூகப்பொருளாதார அடித்தளங்களையும் மற்றும் அரசியல் மூலங்களையும் ஒரேமாதிரியானது என சமப்படுத்திக் காட்டுகின்றார். நாஜி ஜேர்மனி ஐரோப்பாவின் மேலாதிக்கமான ஏகாதிபத்திய சக்தியாக இருந்ததாகும், சோவியத் ஒன்றியமோ, அது தேசியவாத ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கீழ் உருக்குலைந்து இருந்தது என்றபோதிலும் கூட, அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட ஒரு தொழிலாளர் அரசாக இருந்ததாகும்.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உணர்ந்துகொண்டவாறாக, சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜிக்களின் அழித்தொழிப்புப் போரென்பது ஒரு தொழிலாளர் அரசுக்கு எதிராக ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்பட்ட ஒரு போராக இருந்தது. மார்க்சிச-விரோத, ரஷ்ய-தேசியவாத ஸ்ராலினிச அதிகாரத்துவமானது போரின் போது, தத்தார்களை நாட்டை விட்டு அனுப்பியமை மற்றும் காட்ரின் (Katyn) இல் போலிஷ் இன அதிகாரிகளை கூட்டமாய் கொலைசெய்தமை போன்ற படுபயங்கரமான குற்றங்களைச் செய்தது. இருப்பினும், நாஜிக்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஐரோப்பிய இராணுவங்களின் இனப்படுகொலைவிதமான தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பது ஒரு இன்றியமையாத பணியாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தை “அரசு முதலாளித்துவமாக” காணும் தனது சாக்ட்மன்வாத நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ரோஹினி ஹென்ஸ்மன் போரை ஆரம்பித்ததிலும் உயிர்ச்சேதத்தில் மிகப் பெருவாரியானதற்கும் நாஜிக்கள் கொண்டிருந்த பொறுப்பை மழுப்புகிறார், பாசிச நாஜி ஒத்துழைப்புவாதிகளை தேசிய விடுதலைப் போராளிகளாக சித்தரிக்கிறார். சிஐஏ மற்றும் உக்ரேனிய பாசிஸ்டுகளின் இன்றைய நாள் நடவடிக்கைகளின் பின்னால் ரோஹினி ஹென்ஸ்மன் அணிவகுப்பதற்கு ஒரு போலியான, முற்போக்கு மூடுதிரையை அளிப்பதே இந்த வரலாற்றுப் பொய்யின் நோக்கமாய் இருக்கிறது.

கியேவில் சிஐஏ-ஆதரவுடனான ஆட்சிக் கவிழ்ப்பின் மீதான இடது-சாரி விமர்சனத்தை மதிப்பிழக்கச் செய்ய முயலுவதற்கு இந்தப் பொய்யை ரோஹினி ஹென்ஸ்மன் பயன்படுத்துகிறார், பத்திரிகையாளரான ஜோன் பில்ஜர் மீதான தனது தாக்குதலில் கவனம்குவிக்கும் அவர், பில்ஜரை புட்டினின் ஒரு கையாள் என்று கண்டனம் செய்கிறார்:

‘கியேவில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக பிப்ரவரியில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு மூளையாக செயல்பட்டதன் பின்னர், கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் வரலாற்றுச்சிறப்புமிக்க, நியாயமான மிதவெப்ப-நீர் கடற்படை தளத்தை கைப்பற்ற வாஷிங்டன் போட்ட திட்டம் தோல்வியடைந்தது’ என்று ஜோன் பில்ஜர் நம்மிடம் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை, ‘மேற்கில் இருந்தான அச்சுறுத்தல் மற்றும் படையெடுப்புக்கு’ எதிராகவும், அத்துடன் ‘உக்ரேனில் ரஷ்ய இனத்தவரின் மீதான தாக்குதல்களை’ நடத்துகின்ற ‘பாசிச சக்திகளுக்கு’ எதிராகவும் ‘ரஷ்யர்கள் தங்களை தற்காத்துக் கொண்டனர்’ – இது கிழக்கில் இருந்து உக்ரேன் மீதான தங்களின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு ரஷ்யா செய்யும் பிரச்சாரத்தை கவலையூட்டும்விதத்தில் விமர்சனமற்று வாந்தியெடுப்பதாக இருக்கிறது.

உண்மையில், பில்ஜர் ரஷ்யப் பிரச்சாரத்தை வாந்தியெடுக்கவில்லை. அவர் கியேவில் பாசிச-தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அதனைச் சூழ்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் உக்ரேனில் ரஷ்யா-நேட்டோ இடையிலான இராணுவ மோதல் ஆகியவற்றின் விளைவு என்பதையே தெரிவிக்கின்றார். ரோஹினி ஹென்ஸ்மன் தான், உக்ரேனிலுள்ள சிஐஏ-ஆதரவு ஆட்சியாலும் நேட்டோ அரசாங்கங்களில் உள்ள அதன் கூட்டாளிகளாலும் மற்றும் ஊடகங்களாலும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நாஜி-ஒத்துழைப்புவாத பிரச்சாரத்தை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலுக்கு ஆதரவான ஏகாதிபத்தியப் பிரச்சாரம்

ஏகாதிபத்தியப் போர்களை ”ஜனநாயகப் புரட்சிகள்” எனக் கூறி ஆதரிப்பதற்காக ஒரு தார்மீக-மனிதாபிமான காரணத்தை வழங்க ரோஹினி ஹென்ஸ்மன் செய்யும் முயற்சிகள் ஒரு இழிவான அரசியல் பொய்யை உருவாக்குகின்றன. ரோஹினி ஹென்ஸ்மன் முன்னெதிர்பார்த்ததைப் போல, சோவியத் ஒன்றியத்தின் முடிவானது முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி வெற்றியை அறிவிக்கவுமில்லை, அமெரிக்காவின் போர்களை, உலகெங்கும் ஜனநாயகத்தை முன்னெடுப்பதற்கான ஒரு புகழத்தக்க இயங்குமுறையாக விட்டுச்செல்லவுமில்லை. மாறாக, ICFI வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, இரண்டாம் உலகப் போரில் இருந்து எழுந்த, அமெரிக்க உலக மேலாதிக்கத்தை சுற்றி அடித்தளத்தை அமைத்துக் கொண்ட, முதலாளித்துவ அரசியல் அமைப்புமுறையின் ஒரு மரணகரமான நெருக்கடியின் பாகமாக இருந்தது.

அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை, “உழைக்கும் மக்கள் தங்களை சுரண்டுகின்ற மற்றும் ஒடுக்குகின்ற சக்திகளை எதிர்த்துப் போராடுவதை அனுமதிக்கின்ற ஜனநாயக அரசுகளாக” காண்கின்ற காரணத்தால் தான் ரோஹினி ஹென்ஸ்மன் அவற்றை ஆதரிக்கிறார் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல அவற்றின் ஆட்சிமாற்றத்திற்கான போர்களை, அவற்றின் அரசியல் அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அவர் கருதுகிறார். இது ஜனநாயக உரிமைகளை நோக்கிய ரோஹினி ஹென்ஸ்மனின் அலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட இன்னுமொரு பொய்யுரையாக இருக்கிறது. உண்மையில், ஏகாதிபத்தியத்தின் இடது-சாரி எதிர்ப்பாளர்கள் மீதான அவரது நச்சுத்தனமான தாக்குதல்களானது, ரஷ்யாவுக்கு எதிராக உலகப் போருக்கு தயாரிப்பு செய்வதுடன் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அதனைத் தாண்டியும் தொழிலாளர்களுக்கு எதிரான மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை நடத்துகின்ற, மற்றும் போலிஸ்-அரசு ஆட்சிகளைக் கட்டியெழுப்புகின்ற சக்திகளது அணிவரிசையில் அவரை நிறுத்துகின்றன.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜூலியான் அசாஞ்ச் மீது ரோஹினி ஹென்ஸ்மன் வெறித்தனமாக தாக்குகிறார். ஆறு ஆண்டுகளாக ஈக்குவடோர் தூதரகத்தில் அடைபட்டிருக்கும் அசாஞ்ச், அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து ஈராக்கிலும் பிறவெங்கிலுமான அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் மற்றும் பிற உத்தியோகபூர்வ குற்றங்களுக்கான ஆதாரங்களை வெளியிட்டதற்காக வேவுக்குற்றச்சாட்டுக்களில் விசாரணை செய்வதற்கு வாஷிங்டன் செய்கின்ற முயற்சிகளின் பகுதியாக இருக்கும் ஜோடிக்கப்பட்ட வன்புணர்வு குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோஹினி ஹென்ஸ்மனோ, இந்த துணிகரமான தகவல்களை வெளிப்படுத்தியவரை புட்டினின் ஒரு கையாள் எனக் கூறி கொச்சைப்படுத்தி கண்டனம் செய்கிறார்.

அவர் எழுதுகிறார், “போலி ஏகாதிபத்திய-எதிர்ப்புவாதிகள் ரஷ்யாவால் ஆதரவளிக்கப்படும் எந்த ஆட்சிக்கும் ஆதரவளிப்பார்கள், அது எத்தனை வலது-சாரியானதாக இருந்தாலும் அது அவர்களுக்குப் பொருட்டல்ல — எப்படி விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான ஜுலியான் அசாஞ்ச், புட்டின் மீது கொண்டிருந்த இணக்கம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற உதவுவதற்கும் அதன் பின்னர் அவரைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கும் (Beauchamp 2017; Boot 2017; Ioffe 2017) இட்டுச் சென்றதோ அதைப்போல. நவ-ஸ்ராலினிஸ்டுகள் பலதரப்பட்டோர் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றனர்... அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளாக இல்லாமல் இருக்கலாம், அல்லது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைப் போல தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்றும் கூட அழைத்துக் கொள்ளக் கூடும்.”

மிகக் குறிப்பிடத்தக்க வகையில் விளாடிமிர் புட்டின் மீது அசாஞ்சுக்கு “இணக்கம்” இருந்தது என்ற தனது கூற்றுக்கு ஆதாரமான எந்த வாதத்தையும் ரோஹினி ஹென்ஸ்மன் வழங்கவில்லை, அல்லது எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வீக்லி ஸ்டாண்டர்ட் ஆசிரியரான மக்ஸ் பூட் (Max Boot) போன்ற வலது-சாரி போர் பிரச்சாரவாதிகளது அசாஞ்ச் மீதான கண்டனத்தை அவர் மேற்கோளிடுகிறார், அவரின் வார்த்தைகளே ரோஹினி ஹென்ஸ்மனுக்கு மிகவும் போதுமான தெளிவுடையதாக இருக்கிறது.

அசாஞ்சுக்கு எதிரான இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள், ஜனநாயகக் கட்சியின் தலைமையில் அமெரிக்க ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் மேற்கொள்ளப்படும் பாரிய ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்திற்கான ரோஹினி ஹென்ஸ்மனின் பங்களிப்பாய் இருக்கின்றன. அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததான முற்றிலும் ஊர்ஜிதப்படாத குற்றச்சாட்டுக்கள், இணையத்தை தணிக்கை செய்வதற்கும், WSWS மற்றும் பிற போர்-எதிர்ப்பு வலைத் தளங்களை கூகுள் தேடல்களினூடாக அணுகுவதில் இருந்து தடுப்பதற்கும், மற்றும் வலைத்தேடல் பொறிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரந்தளவிலான தணிக்கைக்கு தயாரிப்பதற்குமான ஒரு போலிச்சாட்டாக சேவை செய்திருக்கின்றன.

ரோஹினி ஹென்ஸ்மனும், சர்வதேச சோசலிச அமைப்பும் (ISO) மற்றும் அவர்களது கூட்டாளிகளும், இதுமட்டுமே “ரஷ்ய தலையீட்டில் இருந்து” அமெரிக்காவை பாதுகாப்பதற்கான ஒரே வழி எனக் கூறி, இணையத்தை தணிக்கை செய்வதற்கும் அமெரிக்காவில் ஒரு போலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதற்குமான ஆளும் உயரடுக்கின் நடவடிக்கையுடன் கைகோர்க்கின்றனர். உண்மையில், மலிவு ஊதியங்களுக்கும், கடும் சுரண்டலுக்கும், போர் மற்றும் முடிவற்ற போலிஸ் கொலைகளுக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகிச் செல்லும் சமூக எதிர்ப்பே இந்த ஆழமான ஜனநாயக-விரோத பிரச்சாரத்தின் உண்மையான இலக்காக இருக்கிறது.

ஜனநாயக உரிமைகளுக்கு ரோஹினி ஹென்ஸ்மன் காட்டும் குரோதமானது அட்லாண்டிக்கை தாண்டி ஐரோப்பா வரை நீள்கிறது. சிரியப் போரை அவர் பாதுகாப்பது, பாரிஸில் 2015, நவம்பர் 13 அன்று உணவகங்கள், பற்றாக்லோன் (Bataclan) கலையரங்கம், மற்றும் Stade de France கால்பந்து மைதானம் ஆகியவற்றைக் குறிவைத்து ISIS இன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த பின்னர் திணிக்கப்பட்ட பிரான்சில் அவசரகால நிலைமைக்கு அரசியல் எதிர்ப்பு காட்டுபவர்கள் மீதான ஒரு கடுமையான தாக்குதலாக மாறியது.

"பாரிஸில் 2015 நவம்பர் ISIS தாக்குதல்களுக்கான” இடதுசாரி பிரதிபலிப்பின் மீது ரோஹினி ஹென்ஸ்மன் கண்டனம் செய்கிறார். “இவற்றில் பலவும் முஸ்லீம் நாடுகளில் மேற்கத்திய தலையீட்டில் இருந்தான ‘எதிர்விளைவை’, அல்லது பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் ஆபிரிக்க பூர்விகம் கொண்ட மக்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டிற்கான ஒரு எதிர்வினைக்கு காரணமாகின... ‘தாக்குதல் நடத்தியவர்கள் பல்வேறுபட்டவர்களை சமத்துவமாக நடாத்தும் தன்மை மற்றும் உரையாடலுக்கான தளங்களை குறிவைத்தனர்’, இந்த வலதுசாரி தாக்குதலை அதற்குரிய விதத்தில் உணர்ந்து கொள்வதை அன்றி வேறுஎந்தவிதத்திலும் ‘விளக்குவது’ என்பது ‘மேற்கின்’ மிக முற்போக்கான அம்சங்களை குறிவைப்பதில் பங்குபெறுவதைக் கொண்டிருக்கிறது.”

பாரிஸிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் நடந்த ISIS பயங்கரவாதத் தாக்குதல்கள், ஐரோப்பிய ஏகாதிபத்தியம் வாஷிங்டன் மற்றும் ISIS உடன் கூட்டணி வைத்து சிரியாவில் நடத்திய பிற்போக்குத்தனமான போரின் விளைவுகளாய் இருந்தன. ஐரோப்பாவில் அதனையொட்டி நடந்த மற்ற அனைத்துத் தாக்குதல்களையும் போலவே பாரிஸிலான நவம்பர் 13 தாக்குதல்களும், நேட்டோ உளவு முகமைகள் நன்கறிந்திருந்த ISIS இயக்கத்தினரால் நடத்தப்பட்டவையாக இருந்தன. ISIS இன் நடவடிக்கைகளுக்கான தலைவரும் அந்த அமைப்புக்கு ஆளெடுக்கும் முக்கியமான நபருமான அப்தெல்ஹமீட் அபாவூட் (Abdelhamid Abaaoud), அவர் சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நபராக இருந்தபோதிலும், ஐரோப்பாவெங்கிலும் மற்றும் அதனைத் தாண்டியும் பிராந்திய எல்லைகளை சுதந்திரமாக கடக்க முடிந்ததை சமூக ஊடகங்களின் மூலமாக பெருமையடித்தார்.

ISIS மீதான உத்தியோகபூர்வ கண்டனங்கள் இருந்தபோதிலும், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஒரு முக்கியமான சொத்தாக, அபாவூட்டின் ஆள்சேர்ப்பு வலைப்பின்னல் பிரெஞ்சு மற்றும் நேட்டோ உளவு முகமையால் சகித்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இப்போது பிரெஞ்சு மக்களில் ஐந்தில் ஒரு பங்கினரால் அங்கீகரிக்கப்படுவதாக இருக்கின்ற இந்த விடயத்தை எடுத்துக்காட்டுவது ரோஹினி ஹென்ஸ்மனுக்கு, “‘மேற்கின்’ மிகவும் முற்போக்கான அம்சங்களின்” மீது தாக்குதவதாகத் தெரிகிறது. இது இன்னுமொரு அரசியல் மோசடியாகும். அவசரகால நிலை சட்டத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் மீதான பெரும் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைப்பது, தன்னிச்சையான தேடுதல்சோதனைகள் நடத்துவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் போலிசுக்கு உரிமை கொடுப்பது, ஊடகங்களை தணிக்கை செய்வது, மற்றும் மக்களின் மீது பாரிய முறையில் உளவுபார்ப்பது ஆகியவை சூழ்ந்திருந்தன.

ஜில்பேர் அஷ்க்காருடைய NPA இன் கூட்டாளிகளான இடது முன்னணியின் பிரதிநிதிகள், 2015 நவம்பரில் தேசிய சட்டமன்றத்தில் அவசரகால நிலையை முதலில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். இது ISO இன் வசதியான நடுத்தர வர்க்க வட்டத்துக்குள்ளாக ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு இருக்கும் பரந்த ஆதரவை சுட்டிக்காட்டுகிறது.

அவசரகால நிலையானது பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் நடத்திய ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கும் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பும் கூட இல்லாமல் அதனைத் திணிப்பதற்குமாய் பயன்படுத்தப்பட்டது. இந்த தொழிலாளர் சட்டமும், அத்துடன் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஒருதலைப்பட்சமாக திணித்த ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொழிலாளர் துறை சட்டங்களின் பின்னிணைப்புடன் சேர்ந்துதான் இப்போது மக்ரோனுக்கு நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த அனைத்து சமூக தேட்டங்களையும் அழித்தொழிப்பதற்கு அடிப்படையான கட்டமைப்பாக சேவைசெய்து கொண்டிருக்கிறது.

மக்ரோன் செல்வந்தர்களுக்கு வரி வெட்டுகளில் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை கையளிக்கின்ற அதேநேரத்தில், பிரான்சின் இராணுவ எந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கட்டாய இராணுவ சேவையை திரும்பக் கொண்டுவருவதற்குமாய் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 பில்லியன் யூரோக்கள் செலவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், இரயில் மற்றும் பொதுத் துறை தொழிலாளர்களுக்கான ஊதிய மட்டங்களை வெட்டிக் கொண்டிருக்கிறார், தேசிய இரயில்வேயை தனியார்மயமாக்குகிறார், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு, வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகைகள், மற்றும் பிற முக்கியமான வேலைத்திட்டங்களில் வரலாறுகாணா வெட்டுக்களுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கொள்கையின் வர்க்க உள்ளடக்கமானது பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத பிலிப் பெத்தானை ஒரு இராணுவ வீரர் என்று போற்றிய அவரது சமீபத்திய முடிவின் மூலம் உதாரணம் காட்டக்கூடியதாய் இருக்கிறது.

போர்-ஆதரவு மற்றும் நவ-பாசிச ரஷ்ய-விரோத மனோநிலைகளை ஊக்குவிக்கும் ரோஹினி ஹென்ஸ்மன், இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு புதிய உலகப் போருக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு இருபதாம் நூற்றாண்டில் விட்டுக்கொடுத்த அத்தனை சலுகைகளையும் மறுதலிப்பதற்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் செய்யும் முயற்சிகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கொள்கைக்கு ஒரு ஜனநாயக முலாம் பூசுவதற்கான முயற்சிகள் மோசடியானவையாகும். முழுமையாக சாதிக்கப்பட்டதாக அவர் முன்வைக்கும் ஒரு “ஜனநாயகப் புரட்சி” —2015 தேர்தலில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவந்த அமெரிக்க-தலைமையிலான ஆட்சிமாற்ற நடவடிக்கை— அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

வாஷிங்டன் இந்த ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்து கொண்டிருந்த அதேவேளையில், 2009 இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் தமிழ் பொது மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கூட்டமாய் படுகொலை செய்ததற்காக முந்தைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்க அதிகாரிகள் மீது ஐ.நா. விசாரணைகளுக்கான மிரட்டல்களையும் ஆதரித்துக் கொண்டிருந்தது. ஒருபக்கத்தில் அமெரிக்க-ஆக்கிரமிப்பிலான ஈராக்கில் நூறாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதையும், மறுபக்கத்தில் தளபதி சரத் பொன்சேகா போன்று 2009 படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்த அதிகாரிகளை அது ஆதரித்ததையும் கொண்டு, வாஷிங்டனின் இரட்டைவேடம் மீதான விமர்சனத்தை இது தூண்டியது. இறுதியில் கட்டவிழ்ந்த ஆட்சிமாற்ற நடவடிக்கையை பாதுகாப்பதற்காக, ரோஹினி ஹென்ஸ்மன் இந்த விமர்சனத்தின் மீது பின்வருமாறு கடுமையாகத் தாக்குகிறார்:

மேற்கத்திய அரசாங்கங்கள் சில சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பதற்கும் மற்ற சந்தர்ப்பங்களில் ஆதரிக்காமல் இருப்பதற்குமான இரட்டை நிலைப்பாட்டை பற்றியோ அல்லது அவற்றின் நோக்கங்களைப் பற்றியோ கேள்விகேட்பது நியாயமானது; ஆனால் போர்க் குற்றங்களுக்கான அவற்றின் பொறுப்பை பற்றி அவர்கள் மற்றவர்களை கேட்கும்போது அவர்களை எதிர்ப்பது எவ்வகையில் நியாயம்...? இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசத்தின் ‘ஏகாதிபத்திய-எதிர்ப்பு’ பிரதிநிதிகள் இலங்கையின் விடயத்தில் துல்லியமாய் இதையே செய்து கொண்டிருந்தார்கள். இலங்கைக்கு எதிரான தடைகளைப்பற்றியோ, அல்லது அதை விடக் குறைவாய், இராணுவ நடவடிக்கை பற்றியோ கேள்வி எதுவுமில்லை; அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு சங்கடமளித்து அதன் எதிர்ப்பாளர்கள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு கூடுதலாக மதிப்பளிக்கக் கூடிய ஒன்றைக் கொண்டு அதனைப் பிரதியிடுவதற்கு உதவிசெய்யக் கூடிய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன. 2009 இல் அது கூடிவரவில்லை என்ற நிலையில், பின்வந்த ஆண்டுகளில் கூடிவந்தது. இலங்கையினர் இறுதியாக 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஒருவழியாகக் கொண்டுவந்தார்கள் என்றால், அதில் இந்த போலி-ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை.

உண்மையில், சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கன்னைகளுக்கும் வலது-சாரி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையில், கிளிண்டன் அறக்கட்டளை மற்றும் சிஐஏ இன் ஈடுபாட்டின் ஊடாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கூட்டணி அரசாங்கமானது, அதற்கு முன் பதவியிலிருந்த அரசாங்கத்திலும் பார்க்க எவ்வகையிலும் “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு” கூடுதலான மதிப்பளிக்கவில்லை. இராஜபக்ஷவின் பதில் பாதுகாப்புச் செயலராக சிறிசேன தான் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுபயங்கரமான படுகொலையை மேற்பார்வை செய்தவராவார். அத்துடன் அவர், இந்த படுகொலையை திட்டமிட்டவரும் அதற்குத் தலைமை கொடுத்தவருமான இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தனது மந்திரிசபையிலும் சேர்த்துக் கொண்டுள்ளார். பாரிய படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை விசாரணைக்குட்படுத்தும் எந்த நோக்கமும் அவர்களுக்கில்லை, ஏனென்றால் அவர்கள் தான் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள்.

சிறிசேனவை அதிகாரத்தில் அமர்த்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம், இலங்கை மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்குவதல்ல, மாறாக ஆசியாவில் வாஷிங்டனின் பிரதான புவிமூலோபாய எதிரியாக இருக்கும் சீனாவுக்கு மிக நெருக்கமானவராய் அது கண்ட இராஜபக்ஷவை வெளியேற்றுவதேயாகும்.

2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையின் இறுதிவிளைவு, ரோஹினி ஹென்ஸ்மன் போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தமிழ் முதலாளித்துவ பாதுகாவலர்களது கண்ணோட்டங்களை நிரூபணம் செய்யவில்லை, மாறாக லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையே நிரூபணம் செய்தது. ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, முன்னாள்-காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ வர்க்கமானது, அவநம்பிக்கையுடன் ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்ட நிலையில், எந்த முக்கியமான ஜனநாயகப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு இலாயக்கற்று இருந்தது. அவை தீர்க்கப்படுவதற்கு ஒரு சோசலிச மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படுகின்ற ஒரு போராட்டம் அவசியமாக இருந்தது.

ஆட்சிமாற்றமானது இலங்கையில் தொழிலாளர்கள் அல்லது தமிழ் மக்கள் முகம் கொடுத்த எந்தவொரு அரசியல் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. போரினால் நாசம் செய்யப்பட்டிருந்த நாட்டில், சிக்கன நடவடிக்கைகளுக்கான பிரதிபலனாய் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியை சிறிசேன ஆட்சி நாடியது, இந்த சிக்கன நடவடிக்கைகள் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெருகும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. இந்த ஆட்சியின் முழுக்காலத்திலும், இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களைக் கண்காணிப்பதற்கு இலங்கை இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக, இலங்கையில் ரோஹினி ஹென்ஸ்மன் வெற்றிகரமாக நடந்ததாக கூறும் ஜனநாயகப் புரட்சி பொறிவதற்கு நான்குக்கும் குறைவான ஆண்டுகளே பிடித்தது. இந்த ஆண்டு, வேலைநிறுத்தங்களும் சமூகப் போராட்டங்களும் பெருகியதன் மத்தியில், சிறிசேன, அவரது பிரதமரான வலது-சாரி ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, மஹிந்த இராஜபக்ஷவை —அதாவது, ஜனநாயகப் புரட்சி யாரை தூக்கிவீச இலக்குவைத்ததாக ஹென்ஸ்மன் விவரித்திருந்தாரோ அவரை— பிரதமராக அமர்த்துவதற்கு முயற்சித்தார். இது கொழும்பின் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக ஒரு கடுமையான மற்றும் தாட்சண்யமற்ற கன்னை மோதலைத் தூண்டியது.

“மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு கூடுதல் மரியாதையை” இது உருவாக்குகிறது என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டு தனது சொந்த நாட்டிலும் ஏகாதிபத்திய ஆட்சி மாற்றத்திற்கு ரோஹினி ஹென்ஸ்மன் காட்டும் உற்சாகம் அவரது அரசியல் திவால்நிலைக்கு சாட்சியமளிப்பதாக உள்ளது. ஏகாதிபத்தியம் “அடிமுதல் தலைவரை பிற்போக்குத்தனமானது” என்று லெனின் புகழ்படக் கூறினார். ஏகாதிபத்தியத்தின் நன்னடத்தைக்கு ஆருடம்சொல்பவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில், ரோஹினி ஹென்ஸ்மன், உலகெங்கும் போர், சமூக பிற்போக்குத்தனம் மற்றும் போலிஸ்-அரசு ஒடுக்குமுறையை பாதுகாக்கும் ஒருவராக எழுந்திருக்கிறார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் போலி இடதுகளும்

பெரும் நெருக்கடிகள் அரசியல் அமைப்புகளின் வர்க்கத் தன்மையை தாட்சண்யமற்று அம்பலப்படுத்துகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க உலக மேலாதிக்கம் சிதறிக் கொண்டிருப்பதிலும், ஒரு புதிய உலகப் போரின் தொடர்ச்சியான மிரட்டல்களினாலும் அடையாளப்படுத்தப்படும் உலக முதலாளித்துவம் இப்போது கடந்து கொண்டிருக்கின்ற நெருக்கடியானது வசதியான நடுத்தர வர்க்கத்து “இடது” கட்சிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. நியாயப்படுத்தமுடியாதது புத்தகத்தை அவர்கள் வெளியிட்டிருப்பதும் ஏகாதிபத்தியப் போரை ஆதரிக்கும் ரோஹினி ஹென்ஸ்மனின் வாதங்களை அவர்கள் வழிமொழிந்திருப்பதும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் நனவான முகவர்களாக அவர்களை அடையாளப்படுத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்துபட்ட தட்டுக்கள் இவர்களுக்கு நேரெதிரான திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முடிவற்ற போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் முன்னெப்போதினும் ஆத்திரமுற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றனர், அத்துடன் சோசலிசத்தின் ஆதரவாளர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ராலினிசம், ISO போன்ற “அரசு முதலாளித்துவ” சக்திகள், மற்றும் பிரெஞ்சு NPA மற்றும் ஆஸ்திரேலிய SA போன்ற பப்லோவாதிகள் ஆகியோருக்கு எதிராய் ICFI பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்து நின்றதன் சரியான தன்மைக்கு இது ஒரு வியத்தகு நிரூபணமாகும்.

ICFIக்கும் ICFI “போலி இடதுகள்” என்று வரையறை செய்திருக்கும் இந்தக் குழுக்களுக்கும் இடையில் பிரித்து நிற்பது இடது அரசியலுக்குள்ளான தந்திரோபாய பேதங்கள் அல்ல, மாறாக உலக சோசலிசப் புரட்சிக்காகப் போராடுகின்ற ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதப் போக்கிற்கும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கான, ஏகாதிபத்திய-ஆதரவு கட்சிகளுக்கும் இடையிலான வர்க்கப் பிளவு ஆகும். அல் கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியவாதிகள் மற்றும் உக்ரேனிய பாசிஸ்டுகளுடன் கூட்டணி சேர்ந்து அமெரிக்கா நடத்துகின்ற போர்களை ரோஹினி ஹென்ஸ்மன் ஏற்றுக் கொள்வது, இந்த அரசியல் யதார்த்தத்தின் மறுக்கமுடியாத எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நியாயப்படுத்தமுடியாதது புத்தகமே கூட, பெருநிறுவன மற்றும் சிஐஏ-தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கும் Haymarket Books வெளியீட்டகத்தை நடத்துகின்ற வசதியான நடுத்தர வர்க்க நிர்வாகிகளுக்கும் ISOக்கும் இடையிலான ஊழலடைந்த தொடர்புகளின் விளைபொருளாக இருக்கிறது. Haymarket Books வெளியீட்டகத்திற்கு இப்போது ஊதியங்கள் மற்றும் செலவினங்களுக்கு நிதியாதாரம் வழங்க உதவுகின்ற, ஜே. பாட்ரிக் லான்னன் ஆல் ஸ்தாபிக்கப்பட்டதான, லான்னன் அறக்கட்டளை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

நியூ யோர்க் டைம்ஸ் 1983 செப்டம்பர் 27 அன்றான ஒரு இரங்கல் செய்தியில் லான்னன், “ஒரு வணிக நிர்வாகி, நிதி ஆலோசகர் அத்தோடு ஒரு கலைப் புரவலர்”, இவர் “சர்வதேச தொலைபேசி மற்றும் தந்தி நிறுவனத்தின் (International Telephone and Telegraph Corporation) ஒரு இயக்குநராக 36 ஆண்டுகள் சேவை ஆற்றியுள்ளார். சென்ற மே மாதத்தில் கௌரவ இயக்குநராக அவர் ஓய்வுபெற்றிருந்தார்” என்று அடையாளம் காட்டியது. “கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக லான்னன் அறக்கட்டளையை ஸ்தாபித்ததற்காக”வும் டைம்ஸ் லான்னனை பாராட்டியது.

1940கள் முதல் 1980களின் ஆரம்பம் வரையான காலத்தில் சர்வதேச தொலைபேசி மற்றும் தந்தி நிறுவனத்தின் (ITT) ஒரு இயக்குநராக லான்னன் இருந்ததான இந்த அடையாளம் காணப்பட்டமை முக்கியமானதாகும்: சிலியில் சல்வடோர் அலெண்டேயை கவிழ்த்து அகுஸ்டோ பினோஷேயின் இரத்தக்களரியான சர்வாதிகாரத்தை அமர்த்திய 1973 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் ITT ஒரு முக்கியமான சக்தியாக இருந்தது. சிலியின் தொலைபேசி நிறுவனத்தில் அது கொண்டிருந்த பங்குகளை அலெண்டே தேசியமயமாக்கியதில் கோபமடைந்து, பினோஷேயின் கவிழ்ப்புக்கு முன்னதாய் வந்த வலது-சாரி ஆர்ப்பாட்டங்களுக்கு ITT நிதியுதவி அளித்து ஆதரித்தது.

லான்னன் அறக்கட்டளையிலும் Haymarket Books வெளியீட்டகத்திலும் இருக்கும் ITT இன் பயனாளிகள், கல்வியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் ஊழல்படுத்தி கையூட்டளித்து, ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க பெருநிறுவன நலன்களை நோக்கிய ISO இன் நோக்குநிலைக்கு இணக்கமான எழுத்துக்களை உருவாக்கித் தள்ளுகின்ற விதத்தில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பாரிய போராட்டங்கள் அபிவிருத்தி காணும்போது, தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான இணைக்கமுடியாத பிளவு முழுமையாக அம்பலப்படுவதற்கு அதிக நேரம் பிடிக்காது. இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் மட்டுமே பாதுகாக்கப்படும் அக்டோபர் புரட்சியின் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியங்களை நோக்கித் திரும்புவதே அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கக் கூடிய ஒரே மாற்றாகும்.