ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරු අරගලය පීලිපැන්වීමට ව්‍යාජ වම්මුන් මැදිහත් වෙයි

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை தடம்புரளச் செய்ய போலி இடதுகள் தலையிடுகின்றனர்

By Sakuna Jayawardana
1 January 2019


உண்ணாவிரதத்தில் பங்குபற்றியவர்கள்

டிசம்பர் 22 அன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் அருகே, தலைநகரில் பணிபுரியும் தோட்டப்புற இளைஞர்கள் சிலரின் உண்ணா விரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, தொழிலாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் பங்குபற்றிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைக்கு ஆதரவாகவே இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் "தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக அடிப்படை நாள் சம்பளம் 1,000 ரூபா கொடு! எங்கள் இரத்தம், எங்கள் வியர்வை, எங்கள் கண்ணீர்! தொண்டமானே திகாம்பரமே நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றீர்களா?" போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஃபக்ஸிஸ் குழு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், புதிய தலைமுறை, முன்நிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் ஆகியவை கலந்து கொண்டதை காணக் கூடியதாக இருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் இடம்பெற்று வரும் கடந்த இரண்டு மாதங்களாக, இந்த போலி இடதுகள் தொழிற் சங்கங்கள் காட்டிக் கொடுப்பதற்கு இடம் கொடுத்து, முழு மௌனம் காத்தனர். இவர்கள், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்திசெயவதற்கும், அதை தோட்ட முதலாளிமார்களதும் அரசாங்கத்தினதும் சிக்கனத் திட்டத்தை தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசியல் வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கவதற்கும் எதிராகவே, வர்க்கப் போராட்டம் அல்லாத உண்ணாவிரதத்தை ஆதரித்து, தலையீடு செய்தனர்.

நாள் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் போது, முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து அவப்பேறு பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணியும், கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் பயனற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அந்தப் போராட்டங்களை கரைத்து விடுவதற்கு செயற்பட்டன. தொழிலாளர்கள் டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி ஒன்பது நாட்கள் கடந்த பின்னர், “பிரச்சினையைத் தீர்ப்பதாக” ஜனாதிபதி கொடுத்த பொய் வாக்குறுதியை சுட்டிக் காட்டிய இ.தொ.கா., வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இ.தொ.கா. அறிவிப்பு விடுத்த போதிலும், தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மேலும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சயினின் அரசியல் வழிகாட்டலின் அடிப்படையில், எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, நடவடிக்கை குழுவொன்றை அமைப்பதற்கு முன் நடவடிக்கை எடுத்தனர். இது தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் மிகவும் நனவான வெளிப்பாடாக இருந்தது.

கோட்டையில் இளைஞர் குழுவினர் செய்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது தெளிவாக இல்லை. ஆனால் தொழிலாள வர்க்கம் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக முன்னெடுக்கும் வர்க்கப் போராட்டத்துடன் எந்த தொடர்புமற்ற, மற்றும் அதற்கு எதிரான உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், பௌத்த பூஜைகள், கோவில்களில் பிரார்த்தனை செய்வது போன்ற நடவடிக்கைகள் கடந்த காலத்தில் அதிகளவில் ஏற்பாடு செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. தோட்டப்புற இளைஞர்களின் உண்ணாவிரதத்திலும் அவற்றின் தாக்கமே வெளிப்பட்டுள்ளது.


உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்கள்

முதலாளித்துவ கட்சிகள், சம சமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள், "இடது" அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் என அழைக்கப்படுபவை, தொழிலாளர்களை திசை திருப்பி விட்டு, வர்க்கப் போராட்டத்தை மழுங்கச் செய்து காட்டிக் கொடுப்பதற்கே மேற் குறிப்பிட்ட பயனற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை பாதுகாக்கும் முகவர்களாக செயல்படுகின்றன.

முதலாளிகளைப் போலவே இந்த "இடது" குழுக்களும், சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தலைதூக்கி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் சமாந்தரமாக, போராட்டங்கள் தோட்டப் புறங்களையும் ஏனைய துறைகளையும் பற்றிக்கொண்டு வளர்ச்சியடைவதையிட்டு பீதியடைந்துள்ளன. சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வழிகாட்டுதலின் மீது நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்கவும் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதை நோக்கியும் தொழிலாளர்கள் திரும்புவதை தடுக்கும் நோக்கிலேயே இவை தலையீடு செய்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்த பின்நவீனத்துவவாதியான பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை "நாகரீகம் சம்பந்தமான பிரச்சினை" என்றார். 150 ஆண்டுகளாக சுரண்டப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி அக்கறை காட்டுவது "மனசாட்சி பற்றிய ஒரு பிரச்சினை" என்று அவர் குறிப்பிட்டார்.

தேவசிறியைப் பின்தொடர்ந்த "புதிய தலைமுறை" என்ற இயக்கத்தின் சுதந்த மாதவவும், நாங்கள் “தேநீர் குடிக்கின்றவர்களாக” இருப்பதால், இந்தப் பிரச்சினை எல்லோரையும் பாதிக்கின்ற காரணத்தால், தோட்டப்புற சம்பளக் கோரிக்கையை “மனசாட்சியுடன் சகல பிரஜைகளதும் பிரச்சினையாக இதை ஆக்க வேண்டும்” என புலம்பினார்.

தேவசிறியினதும் அவர் சொன்னதையே திருப்பிச் சொன்ன சுதந்த மாதவவினதும் பரிதாபகரமான பிரேரணை என்றவென்றால், அரசாங்கத் தலைவர்களதும் முதலாளித்துவ கம்பனிகளதும் "மனசாட்சியுடன்" பேசி, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை பெறுவதே ஆகும்! தொழிலாளர்கள் அறிந்த வகையில், இலாப வெறிகொண்ட முதலாளிகளின் "மனசாட்சி" என்பது இடைவிடாத சுரண்டல் மட்டுமே ஆகும். சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த இராஜபக்ஷ ஆகிய முதலாளித்துவ தலைவர்களுக்கு கொள்கை வகுத்துக் கொடுப்பதற்கு வக்காலத்து வாங்கும் வரலாறு கொண்ட தேவசிறி, முதலாளித்துவத்துக்குள் தீர்வு காண முயலும் பேர்வழி ஆவர். 2001 இல் இராஜபக்ஷவின் பொய் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்பள உயர்வும் ஏனைய கோரிக்கைகளையும் முன்வைத்து முன்னெடுத்த நீண்ட போராட்டத்தை நிறுத்துவதற்காக, தேவசிறி பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் ஏனைய தலைவர்களையும் பயன்படுத்திக்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.

ஃபக்ஸிஸ் குழுவின் விதர்ஷன கன்னங்கர, உண்ணாவிரதப் போராட்டமானது "ஜனநாயகத்தை பரிசீலிக்கும் இடமாகும்" என வஞ்சத் தனமாகக் கூறினார். கம்பனிகள் மற்றும் அரசாங்கத்திடம் "ஜனநாயகத்தைக்" கேட்டு வேண்டுகோள் விடுப்பதே கன்னங்கரவின் கருத்தின் உண்மையான அர்த்தமாகும். தோட்டத் தொழிலாளர்களின் வாக்குறிமையை அபகரித்ததில் தொடங்கி, தொழிலாளர்களின், வறியவர்களின் மற்றும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ளும் நீண்ட சரித்திரத்தைக் கொண்ட இந்த ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகத்தைப் பரிசீலிக்க கண்ணங்கர முன்மொழிவது, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் ஒரு மோசடியான முயற்சியாகும்.

ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான லீனஸ் ஜயதிலக, “அரசினதும் முதலாளிமார்களதும் பேச்சுக்களுக்கு அடிபணிய வேண்டாம்” என தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து, "1,000 ரூபா கோரிக்கையை பலப்படுத்தப்பட வேண்டும்" என்று அறிவித்தார். நவ சம சமாஜக் கட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு முழுத் தொழிற்சங்கவாதியான ஜயதிலக, அன்றைய தினம் உரையாற்றிய ஏனையவர்களைப் போலவே, தோட்டத் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தோட்டங்களிலும் வேறு இடங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் போலவே, ஜயதிலகவும் அவரது தொழிற்சங்கங்களும் கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி அரசாங்கத்தினதும் முதலாளிமாரதும் யோசனைகளுக்கு சரணடைவதன் மூலம் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்து வந்துள்ளன.

முன்நிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தை பிரதிநிதிப்படுத்திய நிலான் பெர்னாண்டோ, "தோட்டத் தொழிலாளர்கள், காட்டிக்கொடுக்கும் தலைமைகளிடம் இருந்து பிரியவேண்டிய நிலைமை உருவாயுள்ளது" என்றார். இந்த மோசடிக் கதையை சொல்லும் முன்நிலை சோசலிச கட்சியும் அதன் போராட்ட மத்திய நிலையம் என்று அழைக்கப்படுவதும், தொழிற் சங்கங்களுக்கு புத்துயிரூட்டுவதையே தமது அரசியல் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் அமைப்புகளாகும்.

இந்த தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புகள், வெறுமனே இ.தொ.கா. அல்லது வேறு தொழிற்சங்க தலைமைத்துவத்தின் தவறின் விளைவுகளல்ல. தொழிற்சங்கங்களின் தலைமையை மாற்றி மற்றொரு தலைமையுடன் அதை பதிலீடு செய்வதன் மூலமும் காட்டிக் கொடுப்புகளை நிறுத்த முடியாது. இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அனுபவம் இதுவே ஆகும்.

முதலாளிமாருக்கும் அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்து, பேரம் பேசி சீர்திருத்தங்களைப் பெறுவதையே தனது வகிபாகமாக கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், இப்போது முதலாளிமாரின் கோரிக்கைகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்து, உரிமைகள் அபகரிக்கப்படுவதை ஆதரிக்கும் அமைப்புக்களாக மாறியுள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நாற்றமெடுப்பு இந்த அமைப்புக்களின் சீரழிவின் வெளிப்பாடு ஆகும்.

தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ முறைமையுடனும் தேசிய அரச கட்டமைப்புடனும் பிணைந்துள்ள ஒரு தேசியவாத அமைப்பாகும். சர்வதேச ரீதியில் செயற்படும் கூட்டுத்தாபனங்கள் மூலம் முதலாளித்துவ உற்பத்தி பூகோள ரீதியில் ஒழுங்கப்படும் நிலைமையின் கீழ், தேசிய ரீதியில் அடித்தளம் கொண்டுள்ள இந்த தொழிலாளர் அமைப்புகளால், அத்தகைய கூட்டுத்தாபனங்களையும் இலாபம் தேடி உலகம் முழுதும் அலையும் நிதி மூலதனத்தையும் சவால் செய்ய முடியாது. தொழிற்சங்கங்கள் மற்றும் சீர்திருத்தவாதக் கட்சிகள் உட்பட தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையகக் கொண்ட அனைத்து அமைப்புக்களதும் சரிவின் தோற்றுவாய் இதுவே ஆகும்.

தொழிலாள வர்க்கம் கரைந்து போய்விட்டது என்றும், அதன் முக்கியமான புரட்சிகர வகிபாகம் இல்லாமல் போய்விட்டது என்றும், கோட்பாடுகளைப் பிண்ணும் தேவசிறி, ஜயதிலக்க, கன்னங்கர மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சித் தலைவர்களும், அவர்களின் அமைப்புக்களும், பரந்த கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கும் முதலாளிமாருக்கும் அழுத்தம் கொடுக்கும் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றே தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்துக்கு யோசனை தெரிவிக்கின்றனர். இதன் அர்த்தம், இது போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கத்திற்கு சிறைப்படுத்திக் கொடுப்பதன் பேரில் உருவாக்கப்படும் ஒரு பொறிக் கிடங்கே என்பதாகும். தோட்டப் புறங்கள் உட்பட எல்லா இடங்களிலும், தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டங்கள் அனைத்தினதும் துன்பகரமான அனுபவங்கள் இதுதான்.

உயர் மத்தியதர வர்க்கப் பகுதியினரான போலி இடதுகள், முதலாளித்துவ முறைமையை தூக்கியெறிவதற்கான போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள். தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலாளித்துவ முறைமைக்கு எதிரான போராட்டமாக மாறிவிடுமோ என்பதைப் பற்றியே அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான அரசாங்கத்தின், கம்பனிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரேரணை என்னவென்றால், தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தொழிலாளர்களும் தோள் கொடுத்து, தமது சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை பலி கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்த நெருக்கடியானது இலாபத்தைச் சுரண்டும் முறைமையின் நெருக்கடி ஆகும். இதற்குத் தொழிலாளர்கள் பொறுப்பல்ல. உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களுக்கு, அவற்றை தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயப்படுத்தி மறு ஒழுங்கு செய்வதன் மூலமே தங்கள் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் அனுபவம் இதுவே ஆகும். பிரமாண்டமான தோட்டங்கள், வங்கிகள் மற்றும் கம்பனிகள், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட்டு, பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் சோசலிச வேலைத் திட்டத்திற்காகப் போராடுவதே, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே சாத்தியமான வேலைத் திட்டமாக உள்ளது.

தொழிலாளர்கள், தொழிற்சங்கம் என்ற இரும்புப் பட்டியை கழற்றி எறிந்துவிட்டு, பெருந்தோட்டங்களிலும், வேலைத் தளங்களிலும் மற்றும் தொழிலாளர் தங்கும் பிரதேசங்களிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, சுயாதீனமான போராட்டத்தை அபிவிருத்தி செய்யுமாறும், அந்த நடவடிக்கை குழுக்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஏழைகளதும் ஆதரவை வென்றெடுக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கோருகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.