Print Version|Feedback
Another 170 immigrants drown in the Mediterranean
மத்திய தரைக்கடலில், மற்றுமொரு 170 புலம்பெயர்ந்தோர் மூழ்கி இறந்துள்ளனர்
By Marianne Arens
22 January 2019
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இதுவரை 250 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இத்தாலிய அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளுமே இந்த பயங்கரமான பதிவிற்கான நேரடி பொறுப்பைக் கொண்டுள்ளன. சென்ற வார இறுதியில் மட்டும், மத்திய தரைக்கடலைக் கடக்கையில், 170 க்கும் குறையாதோர் உயிரிழந்துள்ளனர்.
சனியன்று, கப்பல் விபத்தில் சிக்கிய படகில் இருந்து எட்டு குழந்தைகள் உட்பட 47 புலம்பெயர்ந்தோரை Sea-Watch 3 மீட்பு கப்பலின் கடல்-கண்காணிப்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர். மத்திய தரைக்கடலில் இன்னும் இயங்கி வரும் அரசு சாரா அமைப்பின் (NGO) ஒரே மீட்பு கப்பலாக Sea-Watch 3 தற்போது உள்ளது. கடல்-கண்காணிப்புக் குழுவை அதன் வேலையை சரியாகச் செய்யவிடாமல் தீவிரமாக தடுத்து, பேராசிரியர் ஆல்பிரெக்ட் பென்க் (Albrecht Penck) க்கு சொந்தமான Sea-Eye என்ற மற்றொரு கப்பலுக்கு புலம்பெயர்ந்தோரை மாற்றுவதற்கு மால்டிஸ் அரசாங்கம் மறுத்துவிட்டது.
வெள்ளியன்று, திரிப்போலிக்கு கிழக்கே கராபுல்லியில் இருந்து லிபியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, 117 பேர் கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. கடலில் 10 மணி நேர தத்தளிப்பிற்குப் பின்னர், 120 பேரைக் கொண்ட படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. உதவிக்காக அவசர அழைப்புக்களும் விடுக்கப்பட்டன. அந்த நாளில் பின்னர், லிபிய கடற்கரையில் இருந்து 94 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உயிர் தப்பியவர்கள் மூன்று பேர் இருப்பதை இத்தாலிய கடற்படையைக் கொண்ட ஒரு ஹெலிகாஃப்டர் கண்டறிந்தது. மற்றுமொரு மூன்று பேர் இறந்துவிட்டனர். அவசர அழைப்பிற்கு பதிலிறுத்து, கடற்படை வந்து சேர்ந்து சற்று நேரத்தில், Sea-Watch 3 மீட்பு கப்பலும் அங்கு உடனடியாக வந்து சேர்ந்தது, என்றாலும் மேலும் உயிர் தப்பியவர்கள் எவரையும் அது கண்டறியவில்லை. எனவே, அந்த 120 பேரில் கடற்படையினர் மீட்டெடுத்த மூன்று பேர் மட்டுமே உயிர் தப்பியவர்களாக இருந்தனர்.
சூடான் மற்றும் காம்பியாவைச் சேர்ந்த அந்த மூவரும் தண்ணீரில் பல மணி நேரங்கள் உயிருக்காக போராடியுள்ளனர். அப்போது கடற்படை அவர்களை லம்படுசா (Lampedusa) தீவிற்கு கொண்டு சேர்த்தது. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (International Organisation for Migration-IOM) செய்தித் தொடர்பாளரான ஃபிளாவியோ டி ஜியாகோமா (Flavio Di Giacomo), கடலில் மூழ்கிப் போன 117 பேரில் இரண்டு மாதங்களே பூர்த்தியான ஒரு பச்சிழம் குழந்தை உட்பட, 10 பெண்களும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர் என்று Adnkronos செய்தி முகமைக்கு தெரிவித்தார்.
கிட்டத்தட்ட அதேநேரத்தில், மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினிற்கு தப்பிச் செல்கையில் கடலைக் கடக்க முயன்ற 53 பேர் பலியாகினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமை (United Nations Agency for Refugees-UNHCR) சனியன்று அதை அறிவித்தது. அதில் உயிர் பிழைத்த ஒருவர், படகு மூழ்கத் தொடங்கிய பின்னர், ஒரு மீன்பிடிப் படகு வந்து அவரை காப்பாற்றி மொரோக்கோவிற்கு திருப்பி கொண்டு செல்லும் வரை உதவிக்கு ஆளின்றி 24 மணி நேரங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். அவரைத் தவிர அனைவரும் கடலில் மூழ்கிவிட்டிருந்தனர்.
இந்த இரண்டு கொடூரமான சோக சம்பவங்களுக்கு சற்று முன்னதாக, ஜனவரி 16 வரையிலும் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 83 ஆக இருக்கக்கூடும் என்று IOM மதிப்பிட்டது. ஞாயிறன்று மேலும் இரண்டு பேர் இறந்துபோனது அறிவிக்கப்பட்டது. அப்படியானால், இவ்வாண்டின் முதல் மூன்று வாரங்களிலேயே, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏற்கனவே 250 ஐ விஞ்சிவிட்டதைக் காட்டுகிறது.
வாழ்வில் நம்பிக்கையிழந்த அந்த புலம்பெயர்ந்தோரை தரையிறங்க ஒரு துறைமுகம் ஏற்றுக்கொள்ளும் வரை, Sea-Watch 3 மீட்பு கப்பலும் 47 உயிர் பிழைத்தோரும் கடலுக்குள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது ஆளாகியுள்ளனர். இத்தாலியும் மால்டாவும் அவர்களது துறைமுகங்களை அடைத்துக் கொண்டுள்ளன.
ரோமின் பலசாலியான உள்துறை அமைச்சர் மத்தேயு சல்வீனி (லெகா கட்சி), “துறைமுகங்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்து இச்சூழ்நிலைக்கு பதிலிறுத்தார். சல்வீனியின் இக்கூற்று, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் மனிதாபிமானமற்ற அகதிகள் கொள்கைகளை முற்றிலும் சரியாக எடுத்துக் காட்டுகிறது.
மக்கள் கடத்தல்காரர்கள், மருந்து விற்பனையாளர்கள் மற்றும் ஆயுத வர்த்தகர்கள் போன்றவர்களுடன் அவசரகால மீட்பு குழுக்களை அவர் ஒப்பிடுவதோடு, மத்திய தரைக்கடலை ஆபத்துடன் கடக்கும் அபாயத்தில் ஈடுபட மக்களைத் தூண்டுவதற்கும் அவர்களே பொறுப்பாளிகள் என குற்றம்சாட்டினார். மேலும் சல்வீனி, “மக்கள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்காக இந்த கட்சி இனி செயலாற்றாது” என ட்விட்டரில் பலமுறை குறிப்பிட்டார்.
இந்த குற்றம்சாட்டப்பட்ட “கட்சி” உண்மையில் அவர்களுக்காக எப்படி செயலாற்றியது என்பதை ஒவ்வொருவரும் காணமுடியும். mayday அழைப்புக்களை ஆவணப்படுத்திய Alarm-Phone இன் ட்விட்டர் செய்திகளைப் படிப்பதன் மூலம், இந்த கொடூரமான துயரகர சம்பவங்கள் இந்த நேரத்தில் எப்படி நிகழ்ந்தன என்பதை ஒருவரால் காணமுடியும்.
ஞாயிறன்று, 20 பெண்கள் மற்றும் 12 குழந்தைகள் உட்பட 100 பேரை சுமந்து சென்ற ஒரு படகு, மதிய உணவு வேளையில், லிபியாவின், மிஸ்ராட்டா அருகே பிரச்சினைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. பிற்பகல் 12.20 க்கு வந்த ஒரு செய்தி, “நாங்கள் ஒரு புதிய நிலைபாட்டை பெற்றுவிட்டோம்” என தெரிவித்தது. மேலும், “அவர்கள் தற்போது மேலும் கிழக்கில் 12 கடல் மைல்கள் தூரத்தில் நிலைபெற்று, கடல் வழிசெலுத்தல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அப்போது ஒரு குழந்தை மயக்க நிலையிலோ அல்லது இறந்துபோன நிலையிலோ இருந்திருக்கிறது. படகிற்குள் தண்ணீர் புகுந்து கொண்டிருந்திருக்கிறது” என்றும் அச்செய்தி தெரிவித்தது.
இத்தாலிய, மால்டிய மற்றும் லிபிய கடல் ரோந்துப்படையினரிடம் Alarm-Phone அவசர உதவி கோரிய பின்னரும், எதுவும் நடக்கவில்லை. வெலேட்டாவும் மால்டாவும் தான் அதற்கு பொறுப்பு என ரோம் அறிவித்தது. வெலேட்டா திரும்ப அழைப்பதாக உறுதியளித்தது, என்றாலும் எவரும் திரும்ப அழைக்கவில்லை. லிபியாவில், கடல் ரோந்துப்படையினர் தற்போது எட்டு தொலைபேசி எண்களை கொண்டுள்ள போதும், நாள் முழுவதும் எவரும் பதிலளிக்கவில்லை. அத்துடன், கடல் ரோந்துப்படை மில்லியன் கணக்கில் ஐரோப்பிய ஒன்றிய நிதியை பெறுகின்ற போதிலும், mayday அழைப்பிற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு கூட அது தயாராக இல்லை.
பிற்பகல் 4 மணிக்கு சற்று முன்னதாக வந்த ஒரு ட்விட்டர் செய்தி இவ்வாறு குறிப்பிட்டது, “படகுடன் தொடர்பில் இருக்க நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ‘விரைவில், உங்களுடன் நான் பேச முடியாது போய்விடும், நான் உறைந்து கொண்டிருக்கிறேன்!’ என்று ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். அவர்கள் பயப்படுகிறார்கள், எங்களது குழு அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஒரு மணி நேரமாக, மீண்டும் மீண்டும் மக்கள் கூக்குரலிடுவதை நாங்கள் கேட்கிறோம். நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.”
பிற்பகல் 4.15 க்கு, ரோம், வெலேட்டா மற்றும் லிபியாவிற்கு பலமுறை தெரிவிக்கப்பட்டது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டது. 6 மணியளவில், அனைவரையும் விரக்தி கைப்பற்றிக் கொண்டுவிட்டதை அங்கிருந்து வந்த செய்திகள் சமிக்ஞை செய்தன. 7.40 மணியளவில் அனைத்து தொடர்புகளும் துண்டித்துப் போயின, ஏனென்றால், அநேகமாக அனைத்து கைபேசிகளின் பாட்டரிகளும் செயலிழந்து போயிருக்கலாம்.
கிட்டத்தட்ட இரவு 10 மணியளவில், சியர்ரா லியோன் கொடியின் கீழ் பயணித்த ஒரு கப்பல் படகின் பயணிகளை காப்பாற்றுவதற்காக திசைதிருப்பிவிடப்பட்டது பற்றி பின்னர் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாலை 1 மணியளவில் வர்த்தக கப்பல் அனைவரையும் மீட்டுவிட்டது என்றாலும், அவர்களை லிபியாவிற்கே திருப்பி அழைத்து வருவதாக ஒரு செய்தி சேவை அறிவித்தது.
2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வெறும் 155 புலம்பெயர்வோர் மட்டுமே இத்தாலியை வந்தடைந்துள்ளனர். 2018 இல் அதையொத்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2,730 பேர் இத்தாலிக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேபோல, 2017 இல் கடல் வழியாக ஐரோப்பாவை வந்தடைந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 199,369 என இருந்தது, கடந்த ஆண்டில் 23,371 என அதில் ஐந்தில் ஒரு பாகமாக குறைந்தது.
சென்ற வார இறுதியில் மட்டும் மத்திய தரைக்கடலில் லிபிய கடல் ரோந்துப்படையினர் 393 அகதிகளை இடைமறித்து அவர்களை லிபியாவிற்கு திரும்ப கொண்டு சென்றதாக சல்வீனி தெரிவித்தார். “லிபியாவுடனான ஒத்துழைப்பு வேலை செய்கிறது,” என்றும் சல்வீனி தெரிவித்தார். உண்மையில், லிபிய வரவேற்பு மையங்கள் மிகக் கொடூரமான சித்திரவதை முகாம்களாக அறியப்படுகின்றன. அந்த மையங்களில் தங்குவதைக் காட்டிலும், மத்திய தரைக்கடலைக் கடக்கும் வாழ்வை அச்சுறுத்தும் அபாயகர பயணத்திற்கு அகதிகள் தயாராக இருக்கின்ற அளவிற்கு ஒரு வாழும் நரகம் போன்றதாகவே அவை உள்ளன.
Sea-Watch 3 ஆல் தற்போது மீட்கப்பட்டுள்ள மக்களும் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துடன் தான் போராடுகின்றனர்.
ஜனவரி ஆரம்பத்தில் ஏற்கனவே, மால்டீஸ் தலைநகரம் வெலேட்டாவில் 49 புலம்பெயர்வோரை தரையிறக்க Sea-Watch 3 மற்றும் Sea-Eye மீட்பு கப்பல்கள் அனுமதிக்கப்படாதிருந்த நிலையில், அதற்கு முன்னர் 19 நாட்களாக கடலில் காத்திருக்க அவை நிர்பந்திக்கப்பட்டன. அந்த 49 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதுமான உத்திரவாதங்களைப் பெற மால்டாவின் சமூக ஜனநாயகவாதி பிரதமர் ஜோசப் மஸ்கட்டுக்கு கிட்டத்தட்ட மூன்று வாரகாலம் தேவைப்பட்டது. இந்நிலையில், மீட்கப்பட்டவர்களில் சிலர் அவர்களது அவல நிலை மீது கவனத்தை ஈர்ப்பதற்கு உண்ணாவிரதப் போராட்டம் செய்யத் தொடங்கினர்.
ஜனவரி 9 அன்று புலம்பெயர்ந்தோர் தரையிறங்க இறுதியாக அனுமதிக்கப்பட்ட நிலையில், வெலேட்டாவில் கப்பலை நிறுத்த இடம் தர மஸ்கட் மறுத்ததுடன், அதற்கு மாறாக மால்டிய கப்பல்படைக்கு சொந்தமான கப்பல்களுக்கு நோயுற்ற பயணிகளை மாற்றுவதற்கு நிர்பந்தித்தது. Sea-Watch 3 யும் அதன் தற்போதைய பயணிகளும் மீண்டும் ஒருமுறை ஒவ்வொரு ஐரோப்பியா நாடும் அவர்களை ஏற்க மறுத்து அடைத்துக்கொள்ளும் நிலையை எதிர்கொள்கின்றனர்.