Print Version|Feedback
Fight the Ford layoffs! Build rank-and-file committees to unite autoworkers across Europe!
ஃபோர்ட் வேலைநீக்கத்திற்கு எதிராக போராடுவோம்! ஐரோப்பா எங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களை ஒருங்கிணைக்க சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்போம்!
By Sozialistische Gleichheitspartei, Socialist Equality Party and Parti de l’égalité socialiste
15 January 2019
ஃபோர்ட் மோட்டார் நிறுவனம் ஆலைகளை மூடி ஐரோப்பா எங்கிலும் ஆயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவிருப்பதாக அந்நிறுவனம் வியாழனன்று வெளியிட்ட அறிவிப்பானது, வேலைகள், சம்பளங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளுக்கு எதிராக வாகனத்துறை நிறுவனங்களின் ஓர் உலகளாவிய தாக்குதலில் சமீபத்திய கட்டமாகும்.
ஃபோர்ட் நிறுவன ஐரோப்பிய பிரிவு தலைவர் ஸ்டீபன் ஆர்ம்ஸ்ட்ராங் வியாழனன்று பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், சர்வதேச அளவில் 14 பில்லியன் டாலர் வெட்டுவதற்கான திட்டத்தின் பாகமாக இந்த வேலைநீக்கங்கள் அக்கண்டத்தில் 19 ஃபோர்ட் ஆலைகளில் இருந்து 53,000 தொழிலாளர்களில் "கணிசமான" பகுதியைப் பாதிக்குமென தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், ஃபோர்ட் ஐரோப்பாவில் தற்போதைக்கு செயல்பாடுகளைப் பேணத் திட்டமிட்டுள்ள போதிலும், “எங்களால் மீளமைவு செய்ய முடியாது போனால், ஒவ்வொன்றும் சாத்தியமாகலாம்,” என்றார். இவ்விதமாக கூடுதல் வெட்டுக்களுக்கான அச்சுறுத்தல்கள், 2019 இல் அதிக விட்டுக்கொடுப்புகளுக்காக தொழிலாளர்களை மிரட்டுவதற்குப் கையாளப்படவிருக்கின்றன.
“அனைத்து செயல்பாடுகளிலும் உபரி தொழிலாளர்களின் குறைப்பு" என்று ஃபோர்ட் அதன் ஜனவரி 10 அறிக்கையில் எதை குறிப்பிடுகிறதோ, அதன் மூலமாக, பல ஆண்டுகளாக தங்களின் வாழ்வை அர்பணித்துள்ள பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் வீண் குப்பைகளென தூக்கி வீசப்பட இருக்கிறார்கள். பிரான்சில் உள்ள ஒரே ஃபோர்ட் உற்பத்தி ஆலையான Blanquefort இன் ஃபோர்ட் அக்கிட்டன் தொழில்துறை ஆலையில் 900 வேலைகள் மற்றும் 3,000 மறைமுக வேலைகளை அழிக்கும் வகையில் அதை 2019 ஆகஸ்டில் மூடுவது, மற்றும் ஜேர்மனியில் சி-மாக்ஸ் ரக உற்பத்தி நிறுத்தப்பட உள்ள சார்லூயிஸ் (Saarlouis) உற்பத்தி ஆலையில் மிகப் பெரியளவிலான வேலை வெட்டுக்கள் ஆகியவையும் அதில் உள்ளடக்கப்பட உள்ளன.
பிபிசி செய்திகளின்படி, குறைந்தபட்சம் 370 தொழிலாளர்கள் தெற்கு வேல்ஸ் இன் பிரிட்ஜென்ட் உற்பத்தி ஆலையிலிருந்து நீக்கப்பட இருக்கிறார்கள், இத்துடன் பிரிட்டனில் 13,000 க்கும் அதிகமான ஃபோர்ட் பணியாளர்களிடையே கூடுதல் வேலைநீக்கங்களும் எதிர்க்கப்படுகிறது. ரஷ்ய ஊடகம் அறிவிக்கையில் அந்நாட்டின் ஃபோர்ட் ஆலைகளின் கதி "முடிவடைவதாக" அறிவித்தது, அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு அருகில் Vsevolozhsk (2,700 தொழிலாளர்கள்) மற்றும் Naberezhyne Chelny (1,000 தொழிலாளர்கள்) ஆலைகளும் மூடப்படலாமென எதிர்நோக்கப்படுகிறது.
ஆலைகளை மூடி, ஒட்டுமொத்த சமூகங்களில் பெரும்பகுதியைச் சீரழிப்பதற்கான மற்றும் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழிப்பதற்கான பெருநிறுவனங்களின் "உரிமையை" தொழிலாள வர்க்கத்தால் ஏற்க முடியாது! ஃபோர்ட்டின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள், முன்பினும் கூடுதலாக மிகப் பெரிய செல்வ வளத்தை அதன் பில்லியனிய பங்குதாரர்கள் மற்றும் நிதியியல் ஊகவணிகர்களின் பைகளில் நிரப்புவதற்கான ஒருமனதான விருப்பத்தால் உந்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஃபோர்ட் நிறுவனம் 2.3 பில்லியன் டாலரைப் பங்கு இலாபங்களாக கொடுத்தது. இது, ஒவ்வொரு ஐரோப்பிய வாகனத்துறை தொழிலாளருக்கும் 43,000 டாலர் வழங்குவதற்கு ஒப்பான தொகையாகும்.
ஆலைமூடல்கள், வேலைநீக்கங்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் என அனைத்திற்கும் எதிராக தொழிலாளர்கள், சர்வதேச அளவிலான ஆலை தொழிலாளர்களுடன் தகவல்தொடர்பு வழிகளை ஸ்தாபிக்கவும் ஓர் ஒருங்கிணைந்த எதிர்தாக்குதலை ஒழுங்கமைக்கவும் ஐரோப்பா எங்கிலுமான ஆலைகளில் சாமானிய வேலையிட தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலமாக ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கக் கூடாது, அவை எதையும் எதிர்க்காது. அது பிரான்சில் CGT ஆகட்டும், இங்கிலாந்தில் ஒருங்கிணைந்த சங்கம் (Unite union) ஆகட்டும், ஜேர்மனியில் IG Metall ஆகட்டும், அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் ஆகட்டும் அவை தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்தின் அங்கங்களாக செயலாற்றுகின்றன. ஃபோர்ட்டின் ஜனவரி 10 பத்திரிகை அறிக்கையில் ஒரேயொரு நேர்மையான கருத்து இத்தகைய அமைப்புகளை அது அதன் "தொழிற்சங்க பங்காளிகளாக" முத்திரை குத்தியமை தான், இவற்றுடன் சேர்ந்து அந்நிறுவனம் அதன் "விரிவான மாற்றத்திற்கான மூலோபாயத்தைப்" பின்தொடர செயலாற்றும்.
ஃபோர்ட்டுக்கு உதவுவதற்காகவும் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்பு அணிதிரள்வதைத் தடுப்பதற்காகவும் "தானே முன்வந்து" மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வதை இங்கிலாந்தில் ஒருங்கிணைந்த சங்கம் (Unite union) ஊக்குவிக்கும் என்பதை ஏற்கனவே அது தெளிவுபடுத்தி உள்ளது. பிரிட்டிஷ் உற்பத்தித்துறையை "வெற்றிகரமாக" ஆக்குவதற்கான "சூழலைத் தக்க வைப்பதே" “அரசுக்கும், கார் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இருக்கும் சவால்" என்பதை அதிகாரி Des Quinn அறிவித்திருந்தார் — இதன் அர்த்தம், குறைவூதியங்கள் மற்றும் அதிக சுரண்டல் நிலைமைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர இங்கிலாந்து தொழிலாளர்களுக்கு வேறெதுவும் அதிகப்படியாக கிடைக்கப் போவதில்லை என்பதாகும்.
IG Metall சங்கத்தைப் பொறுத்த வரையில், அதன் நிலைப்பாடு ஃபோர்ட்டின் கூட்டு தொழில் குழுவின் தலைவர் மார்டீன் ஹென்னிங் ஆல் கடந்த ஆகஸ்டில் மிகவும் அப்பட்டமாக அறிவிக்கப்பட்டது, அப்போது அவர் ஃபோர்ட் "சிறப்பாக செயல்பட்டு வருகிறது, அவர்களைக் கொண்டு நாங்கள் நிறைய பணம் ஈட்டி வருகிறோம்,” என்று பெருமைப்பீற்றுவதற்கு முன்னதாக, “நாம் செலவுகளையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும். அது தான் நிர்வாகத்தின் மிகவும் முக்கிய பணி,” என்பதைச் சேர்த்துக் கொண்டார். ஹென்னிங், 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் குறித்து குறைபட்டுக் கொண்டார். “இந்த வயதில்,” “ஏற்கனவே தொழிலாளர்கள் உடல் நலிந்து இருப்பார்கள்,” என்றவர் கூறினார்.
ஐரோப்பா எங்கிலுமான சங்கங்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை, ஏனென்றால் அவை ஃபோர்ட்டிலும் மற்றும் அந்த ஒட்டுமொத்த தொழில்துறையிலும் வெட்டுக்களைத் திணிக்க செயலாற்றி வருகின்றன. ஜெனரல் மோட்டார்ஸ் கடந்த நவம்பரில் கனடா மற்றும் அமெரிக்காவில் ஐந்து ஆலைகளையும், வட அமெரிக்காவிற்கு வெளியே இன்னும் முடிவு செய்யப்படாத வேறு இரண்டு ஆலைகளையும் மூடவிருப்பதாக அறிவித்தது.
ஐரோப்பாவில் ஃபோர்ட் பாரிய வேலைநீக்கங்களை அறிவித்தது, ஜாகுவார் லேண்ட் ரோவர் அடுத்த ஆண்டில் 4,500 வேலை வெட்டுக்களை உறுதிப்படுத்தியது. பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனம் PSA இப்போது ஐரோப்பா எங்கிலும் ஆலைகளை மூடி, ஜேர்மனியில் உள்ள அதன் துணை நிறுவனமான ஓப்பெல்லில் (Opel) 3,700 க்கும் அதிகமான வேலையிடங்களையும், இங்கிலாந்தில் Vauxhall இல் நூற்றுக்கும் அதிகமான வேலையிடங்களையும் அழித்து கொண்டிருக்கிறது. ஜேர்மனியிலோ வோல்ஸ்வாகன் நிறுவனம் ஹனோவர் மற்றும் எம்டென் நகர்களில் 7,000 வேலைகளைக் குறைக்க திட்டமிடுகிறது.
தொழிற்சங்கங்கள் இந்த தாக்குதலுக்கு உதவுகின்ற அதேவேளையில், அவை வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு நிறுவனங்களின் வாகனத்துறை தொழிலாளர்களை ஒருவரிடம் இருந்து ஒருவரைப் பிரித்து வைக்க நோக்கம் கொண்டுள்ளன. அவை கீழ்நோக்கிய ஓர் உலகளாவிய போட்டியில் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர்நிறுத்தி, “சர்வதேச அளவில் போட்டித்தன்மையை" தக்க வைப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் குறைவூதியங்கள் மற்றும் நிலைமைகளை ஏற்குமாறு செய்ய தொழிலாளர்களுக்கு அழுத்தமளிக்கின்றன.
தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் பாதை, தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியிலான இடுக்கிப்பிடியிலிருந்து உடைத்துக் கொண்டு, ஒரு சுயாதீனமான சர்வதேச போராட்டத்தைத் தொடுப்பதாகும். வேலைக்கான சமூக உரிமையைப் பாதுகாப்பதில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி அணித்திரட்ட, தொழிலாளர்களுக்குப் புதிய அமைப்புகள் அவசியமாகின்றன — அதாவது தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர்களின் வேலையிட குழுக்கள் அவசியமாகும்.
வாகனத்துறை தொழிலாளர்களின் அதுபோன்றவொரு போராட்டம், சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம், சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசாங்கங்களின் பெருவணிக கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு இடையே தொழிலாள வர்க்கத்தில் அளப்பரிய ஆதரவை வென்றெடுக்கும். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஆரம்ப வெடிப்புக்கு 2018 ஆம் ஆண்டு சான்றுரைத்தது, அமெரிக்காவில் பெருந்திரளான ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களும் அதில் உள்ளடங்கும், பிரான்சில் நடந்து வரும் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்களுடன் அந்தாண்டு நிறைவடைந்தது, அவை சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் வணிக-சார்பு கொள்கைகள் மீதான ஆழ்ந்த கோபத்தால் உயிரூட்டப்பட்டிருந்தன.
கனடாவின் ஓசாவாவில் ஜிஎம் ஆலையை 2019 இன் இறுதியில் மூடுவதற்கு திட்டமிட்டிருப்பதை ஜிஎம் உறுதிப்படுத்தியதும், கடந்த செவ்வாயன்று அந்த ஆலையின் தொழிலாளர்கள் ஒரு திடீர் மறியல் போராட்டத்தில் தொழில் கருவிகளைக் கைவிட்டனர்—ஆரம்பத்தில் இப்போராட்டம் யூனிஃபோர் சங்கத்திலிருந்து சுயாதீனமாக தொடங்கப்பட்டது. டிசம்பர் 9 இல், அனைத்து மூன்று அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்களும் மற்றும் ஏனைய வாகனத்துறை தொழிலாளர்களும் இளைஞர்களும் மிச்சிகனின் டெட்ராய்டில் WSWS வாகனத் தொழிலாளர் சிற்றிதழ் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஒழுங்கமைத்த ஒரு கூட்டத்தில் பங்கெடுத்து, ஜெனரல் மோட்டார்ஸின் திட்டமிட்ட வேலைநீக்கங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்க சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிக்க ஒருமனதாக வாக்களித்தனர்.
தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கிய பணி, முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்ற அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிர்ப்பாக ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இன்று ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கங்களும் சமூக செலவினக் குறைப்பு, வர்த்தகப் போர்கள் மற்றும் "வல்லரசு" இராணுவ மோதல்கள், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, மக்கள் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதையுமே மக்களுக்கான எதிர்காலமாக வழங்குகின்றன.
இதற்கான பதில் என்னவென்றால் பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைக்காக பூர்த்தி செய்ய அதை தொழிலாள வர்க்கமே மறுஒழுங்கு செய்வதற்காக, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மிகப்பெரிய வாகனத்துறை பெருநிறுவனங்களைத் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை பயன்பாடுகளாக மாற்றுவதும் இதில் உள்ளடங்கும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஐரோப்பிய பிரிவுகள் இந்த முன்னோக்கிற்காக போராட ஐரோப்பிய தேர்தல்களில் தலையீடு செய்து வருகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் வாகனத்துறை வேலைநீக்கங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் சமதரப்பினருடன் அவற்றை இணைக்கவும் விரும்புகின்ற தொழிலாளர்களுக்கு எல்லா உதவியும் வழங்கும், தொழிலாளர்கள் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.