Print Version|Feedback
Davos overshadowed by crisis and social upheaval
நெருக்கடிகளாலும் சமூக மேலெழுச்சிகளினாலும் டாவோஸ் மூழ்கடிக்கப்பட்டிருந்தது
By Nick Beams
25 January 2019
உலக பொருளாதார பேரவையின் இந்தாண்டு வருடாந்தர கூட்டத்திற்காக சுவிட்சர்லாந்து டாவோஸில் உலகளாவிய உயரடுக்குகளின் ஒன்றுகூடலை, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியம் ஒருவேளை சிறப்பாக தொகுத்தளிப்பதாக உள்ளது.
உலக செல்வந்தர்களின் கரங்களுக்குள் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைப் பாய்ச்சி உள்ளதும், வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்குப் பரந்தளவில் சமூக சமத்துவமின்மை ஏற்படுவதற்கு இட்டுச் சென்றுள்ளதுமான சுதந்திர சந்தை கொள்கைகளை ஊக்குவிப்பதன் மையமாக ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக, உலக பொருளாதார பேரவை இருந்துள்ளது — இந்த அமைப்புரீதியிலான நிகழ்வுபோக்கு 2008 உருகுதலுக்குப் பின்னர் புதிய மட்டங்களுக்குத் தீவிரமடைந்தது.
ஜனவரி 2009 இல், நிதியியல் நெருக்கடி அப்போதும் கட்டவிழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த வருடாந்தர டாவோஸ் கூட்டத்தில் செல்வச்செழிப்புகள் முடிவுக்கு வரவிருக்கின்றன என்ற பரந்த அச்சம் இருந்தது. ஆனால் ஓர் உடனடி சமூக எதிர்விளைவு குறித்த கவலைகள் சற்றே குறைந்து, சமூகத்தின் உச்சத்தில் செல்வவளத்தின் பாரிய திரட்சி தொடர்ந்த போது, இதற்காக அமெரிக்க பெடரல் வங்கி மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளால் பாரியளவிலான வட்டி குறைந்த பணம் பாய்ச்சப்பட்டதற்கு தான் நன்றி கூற வேண்டும் என்ற நிலையில், உலகில் சாத்தியமான எல்லா நல்ல இடங்களிலும் அனைத்தும் இன்னும் சரியாகவே இருக்கின்றன என்பதாக தென்பட்டது.
ஆனால் இனி அவ்வாறிருக்காது. சமூக கோபமும் வர்க்க போராட்டமும் உலகெங்கிலும் தீவிரமடைந்து வருகின்றன. கார்டியன் கட்டுரையாளர் ஆதித்யா சக்ரபோர்த்தியின் கருத்துரை குறிப்பிட்டவாறு, டாவோஸ் பில்லியனர்கள் இப்போது, அச்சம் என்ற ஒரு புதிய மற்றும் முடிவில்லாத உணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்முன்னால் உலக ஒழுங்கமைப்பு நொருங்கி வருவதை அவர்கள் கண்டு வருகையில், டாவோஸ் சீமான்கள் "பீதியடைந்து" இருப்பதுடன், “தொலைக்காட்சி கேமராக்களின் முன்னாள் அவர்கள் என்ன தான் மழுங்கிய வெற்றுரைகளை மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், மிகவும் அடிமட்டத்திலிருந்து வரும் பேரழிவு அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.”
டாவோஸ் கூட்டத்தைச் சுற்றி, திசையை திருத்திக் கொள்வதை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் இருந்தன. அக்கூட்டத்திற்காக வழங்கப்பட்ட ஒரு கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்டின் வொஃப் வெகுஜனவாத ஏதேச்சதிகார அரசியல் தலைவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய உயரடுக்குகளின் பொறுப்பைச் சுட்டிக்காட்டியதுடன், சட்டத்தால் ஆளப்படும் ஜனநாயகங்களை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டியிருப்பதை வலியுறுத்தினார். “டாவோஸில் ஒன்றுகூடுபவர்களே,” “தயவுசெய்து கவனியுங்கள்: தெளிவாக இது உங்கள் பொறுப்பு தான்,” என்று நிறைவு செய்தார்.
உலக மக்கள்தொகையில் அடிமட்ட 50 சதவீதத்தினர், சுமார் 3.8 ட்ரில்லியன் மக்கள், கொண்டிருக்கும் அந்தளவிலான செல்வவளத்தை 26 பில்லியனர்கள் வைத்திருப்பதையும், உயர்மட்டத்தில் செல்வத்திரட்சி நாளொன்று 2.5 பில்லியன் டாலர் வீதத்தில் அதிகரித்து கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சர்வதேச அறக்கட்டளை ஆக்ஸ்ஃபோம், செல்வவள வரிகளை அதிகரிப்பதன் மூலமாக ஒரு புதிய "மனிதகுல பொருளாதாரத்திற்கு" நிதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது அல்லது அழைப்பு விடுத்தது.
இந்த சீர்திருத்தத்திற்கான பதிலை “டாவோஸில் ஒன்றுகூடியவர்கள்" வழங்கினார், அவர்கள் பிரேசிலின் தீவிர வலதுசாரி பாசிசவாத ஜனாதிபதியாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜயர் போல்சொனாரோவுக்கு முதன்மை உரை வழங்குவதற்கான களம் அமைத்து கொடுத்த போது அவர்களால் இந்த பதில் வழங்கப்பட்டது, இதற்கு முன்னர் முந்தைய ஆண்டு மற்றொரு வலதுசாரி ஏதேச்சதிகாரவாதி டொனால்ட் ட்ரம்புக்கு அந்த முன்னுரிமையை வழங்கி இருந்தார்கள்.
பிரேசிலில் புதிய சந்தைக்கான வாய்ப்புகள், வணிகங்களுக்கான வரி குறைப்புகள் மற்றும் அந்நாட்டின் ஓய்வூதிய முறையில் "பெரிதும்-தேவைப்படும் செப்பனிடுதல்" ஆகியவற்றை உருவாக்கியதன் மூலமாக போல்சொனாரோ "புதிய பிரேசிலுக்கான" அவரின் திட்டநிரலை அமைத்துக் கொடுத்திருந்ததால், அவரின் கருத்துக்கள் அவர்களின் காதுகளில் இனிமையாக ஒலித்தன. இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கான ஒரு பொறுப்புறுதியுடன் வருகிறது என்பதில் அவர்கள் கவனத்துடன் இருந்திருப்பார்கள்.
டாவோஸ் உச்சிமாநாடு தொடங்கப்பட்ட போதே WSWS குறிப்பிட்டது, உலகளாவிய பில்லியனர்கள் மற்றும் அவர்களின் நிதியியல் சந்தைகளால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் மேலாதிக்கம் செலுத்தப்படும் உலக முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் தற்போதைய ஆட்சிமுறை 1789 க்கு முந்தைய பிரான்ஸ் அல்லது 1917 க்கு முந்தைய ரஷ்யாவின் ஜாரிச பிரபுத்துவம் ஆகிய இரண்டையும் போலவே எந்தவித சீர்திருத்தத்திற்கும் தகைமையற்றது, அவை சமூக எதிர்ப்பிற்கு அதிகரித்த ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்தன என்று குறிப்பிட்டது. போல்சொனாரோவுக்கு சிவப்பு-கம்பள வரவேற்பானது, உங்களின் கோரிக்கைகள் இவ்வாறு தான் எதிர்கொள்ளவிருக்கின்றன என்ற சேதியை உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்திற்கு அனுப்பியது.
இந்தாண்டின் வருடாந்தர கூட்டம் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளாததால் குறிக்கப்பட்டது, இதுவே கூட முதலாளித்துவ அரசியலுக்குள் அதிகரித்து வரும் அரசியல் குழப்பத்திற்கும் மேலெழுந்து வரும் வர்க்க போராட்ட அலைக்கும் ஒரு வெளிப்பாடாகும். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே பிரெக்ஸிட் கொந்தளிப்பின் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரே பின்வாங்கியிருந்தார் என்பதுடன் அரசு முடக்கம் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த ஏனைய அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை; பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் "மஞ்சள் சீருடை" இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்கொண்டிருப்பதால் அவரும் பிரான்சிலேயே இருந்துவிட்டார்.
அங்கே வராத மற்றொருவரைச் சுற்றிய சூழல்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அக்கூட்டத்திற்கு முன்னதாக, சிம்பாவே தலைவர் எமர்சன் நான்காக்குவாவின் அரசாங்கம் எரிபொருள் விலைகளை இரண்டு மடங்காக உயர்த்தியதற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதை வழிநடத்துவதற்காக அவர் டாவோஸ் கூட்டத்தைத் தவிர்க்க முடிவெடுத்தார், செய்திகளின்படி, அந்த அந்நடவடிக்கைகளில் கடந்த வாரயிறுதியில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மோசமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார கண்ணோட்டம், ஆழமடைந்து வரும் வர்த்தக மோதல் நிலைமைகளின் கீழ் ஒரு சிறிய வீழ்ச்சியால் ஏற்படக்கூடிய விளைவுகள், அனைத்திற்கும் மேலாக சீனாவுக்கு எதிரான அமெரிக்க வர்த்தகப் போர், நீண்ட காலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புகள் கண்முன்னே உடைவது, அதிகரித்து வரும் சமூக கோபம் மற்றும் வர்க்க போராட்ட அலை ஆகியவை இந்த ஒட்டுமொத்த ஒன்றுகூடலின் மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர், அக்கூட்டத்திற்கு முன்னதாக, “கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஏதோவொரு இடத்தில்" ஒரு பொருளாதார வீழ்ச்சியை "வரலாறு எடுத்துரைக்கிறது" என்ற எச்சரிக்கையை வெளியிட்டார். ஆனால் அரசு அமைப்புகளில் ஆழமடைந்து வரும் அவநம்பிக்கை நிலைமைகளின் கீழ், நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட நெறிமுறை நடவடிக்கைகள் "முழுமையாக வெடித்துச் சிதறும் மற்றொரு அமைப்புரீதியிலான நெருக்கடியாக மாறுவதில் இருந்து 'சாமானிய' பின்னடைவைத் தவிர்க்க போதுமானதாக இருக்கும்" என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
பில்லியனர் முதலீட்டாளர் செத் க்ளர்மன் எழுதிய ஒரு கடிதத்தின் வடிவில் மற்றொரு எச்சரிக்கை வந்தது, நியூ யோர்க் டைம்ஸ் அறிவிக்கையில், டாவோஸில் கலந்து கொண்டவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட அக்கடிதம், அதிகரித்து வரும் ஆளும் வர்க்க போராட்டங்களின் பாதிப்பு மீது ஒருமுனைப்பட்டிருந்தது.
“நிரந்தர போராட்டங்கள், கலகங்கள், ஆலைமூடல்கள் மற்றும் தீவிரமடைந்து வரும் சமூக பதட்டங்களுக்கு மத்தியில் வழக்கம் போல வியாபாரம் செய்யவியலாது,” என்றவர் எழுதினார். பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தை மேற்கோளிட்டு, அவர் தொடர்ந்து இந்த கருத்துருவை எழுதினார்: “மூலதனம் வைத்திருப்பவர்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் அதற்கு சமூக நல்லிணக்கம் இன்றியமையாதது.”
நிதியியல் நெருக்கடியின் பாதிப்புகளை எதிர்க்க கடந்த தசாப்தத்தில் நிதியியல் ஆணையங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கடன் மட்டங்கள் அதிகரிக்கையில், புதிய ஒன்றை உருவாக்குவதில் பங்களிப்பு செய்து வருகின்றன என்பது குறித்து அறிந்துள்ளவர்களில் க்ளர்மனும் ஒருவராக உள்ளார்.
“அடுத்த பிரதான நிதியியல் நெருக்கடியின் விதைகளை ... வெகு நன்றாக இன்றைய தேசிய அரசுகளின் கடன் மட்டங்களில் காணலாம்,” என்றவர் எழுதினார். “எந்தளவிற்கான கடன் மிக அதிகமானது என்பதை அறிய எந்த வழியும் இல்லை, ஆனால் அதிகளவில் ஊகவணிகமான சந்தை நமக்கு இயலுமளவிலான விகிதங்களில் திடீரென நமக்கு தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் ஒரு திரும்புமுனையை அமெரிக்கா தவிர்க்கவியலாமல் எட்டும்.”
க்ளர்மனும் பிறரும் உணர்ந்துள்ளவாறு, அத்தகையவொரு நெருக்கடி உடனடியான அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கும். “ஒரு தலைமுறைக்கு இடையே மோசமடைந்து வரும் சமூக கிளர்ச்சியைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமில்லை,” என்று எழுதிய அவர், “பொருளாதாரரீதியில் அது பின்நோக்கி சென்று கொண்டிருப்பதுடன், வெளிப்படையாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் ஒரு பாரிய தேசிய கடனால் காட்டிக்கொடுக்கப்பட்டிருப்பதாக உணரப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.
ஆனால் ஆக்ஸ்ஃபோம் குறிப்பிடுவதைப் போல, 2017 இல் தோற்றுவிக்கப்பட்ட மொத்த செல்வவளத்தில் 82 சதவீதத்ததை உலகளாவிய உயர்மட்ட 1 சதவீதத்தினருக்குக் கொண்டு சேர்த்துள்ள இந்தவொரு சமூக ஒழுங்கமைப்பு, ஆழமடைந்து வரும் எதிர்ப்புக்கு ஒடுக்குமுறையைத் தவிர வேறெதையும் கொண்டு விடையிறுக்க அமைப்புரீதியில் இலாயக்கற்று உள்ளது, அனைத்திற்கும் மேலாக இது தற்போதைய அரசியல் நிலைமையானது மொத்தத்தில் புரட்சியா அல்லது எதிர்-புரட்சியா என்பதால் குணாம்சப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றது.