Print Version|Feedback
Theresa May’s Conservative government survives no-confidence vote
தெரேசா மேயின் பழமைவாத அரசாங்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பித்தது
By Robert Stevens and Chris Marsden
17 January 2019
தெரேசா மேயின் அரசாங்கம் புதன்கிழமை இரவு தொழிற்கட்சி தலைவர் ஜேர்மி கோர்பின் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பித்தது. 306 க்கு 325 என்ற எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவரது பிளவுபட்ட பழமைவாத கட்சியின் அனைத்து 314 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை பதவியில் வைத்திருக்க வாக்களித்ததுடன், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (Democratic Unionist Party) 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சை ஒன்றியவாதியும் அவர்களுடன் இணைந்திருந்தனர்.
தொழிற் கட்சி, ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினர் என எல்லா எதிர் கட்சிகளும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் தங்களின் சொந்த தலைவர் மீதான பிளேயரிசவாதிகளின் அப்பட்டமான விரோதத்தையும், மற்றும் ஒரு பொதுத் தேர்தலுக்கான எதிர்ப்பு அரிதாகவே மூடி மறைக்கப்பட்டிருந்ததையும் மே மற்றும் கடுமையான பிரெக்ஸிட் (hard-Brexit) சார்பான சுற்றுசூழல் அமைச்சரான மைக்கெல் கோவ்வும் இதர டோரிக்களும் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும், அந்த விவாதத்தை கோர்பின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பாக எவ்வாறு அவர்களால் ஜோடிக்க முடிந்தது என்பதுமே அன்றைய மாலையில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான மேயின் பிரெக்ஸிட் உடன்படிக்கை 230 வாக்குகள் பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரலாற்றில் ஒரு பிரதம மந்திரியின் மிகப்பெரிய நாடாளுமன்ற தோல்வியால் மே பாதிக்கப்பட்ட பின்னர் உடனடியாக, கோர்பின் செவ்வாயன்று மாலை இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.
கோர்பின் பல மாதங்கள் தெளிவின்றி இருந்த பின்னர், பிரெக்ஸிட் இற்குத் திட்டமிடப்பட்ட தேதி நெருங்குவதற்கு வெறும் 80 நாட்களே உள்ள நிலையில் தான் இந்த வாக்கெடுப்பை மேசைக்குக் கொண்டு வந்தார், முன்னர் அவர் பிரித்தானிய ஏகாதிபத்தியம் திசைதெரியா பகுதிக்குள் நகர்ந்த போது அதை நிலைகுலைக்க எதுவும் செய்யமாட்டேன் என்பதை எடுத்துக்காட்டியிருந்தார்.
ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிதும் ஜெயித்துவிடும் என்ற ஒரு தருணம் வரும் போதுதான் அவர் அதை வாக்கெடுப்புக்குக் கொண்டு வரவிருப்பதாக கோர்பின் கூறியிருந்தார். ஆனால் கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் டோரி கன்னையும் மற்றும் ஆட்சியில் பங்கெடுத்துள்ள மேயின் பங்காளிகளான ஜனநாயக ஒன்றிய கட்சியும் மேயின் உடன்படிக்கையைப் பயனற்றதாக ஆக்குவதற்கு எதிர்த்தரப்பில் இணைய மறுத்ததும், கோர்பினை 10 ஆம் எண்ணுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு பொதுத் தேர்தலை அவர்கள் ஏற்படுத்துவதற்கான எந்த சாத்தியக்கூறும் அங்கே ஒருபோதும் இருக்கவில்லை.
புதனன்று காலை பிபிசி இன் இன்றைய நிகழ்ச்சியில் அவரது நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல்லிடம், இந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், தொழிற் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தைத் "தொந்தரவுக்கு" உள்ளாக்குமா என்று கேட்கப்பட்ட போது, “இல்லை நாங்கள் அதை செய்ய மாட்டோம்,” என்றவர் பதிலளிக்கும் அளவுக்கு, கோர்பின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு சம்பிரதாய பூர்வமானதாக இருந்தது.
மே மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் தோல்வி பிரிட்டன் வெளியேறுவதைத் பின்வாங்க செய்யும் விதத்தில் இரண்டாவது பொதுவாக்கெடுப்பாக "மக்கள் வாக்கெடுப்புக்கான" அவர்களின் கோரிக்கையைப் பகிரங்கமாக ஆதரிக்க கோர்பினுக்கு அழுத்தமளிப்பதற்கு வழி வகுக்கும் என்ற பிளேயரிசவாதிகள் மட்டுமே எப்போதும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு ஆதரவாகவே இருந்தனர்.
மேயை பதவியில் வைத்திருக்க அவர்கள் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக ஜனநாயக ஒன்றியவாத கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நைஜெல் டோட்ஸ் கூறியது ஒளிபரப்பப்பட்டது, அப்போது அவர் நாடாளுமன்றத்தில் கூறினார், “நேற்று மாலையிலிருந்து மரியாதைக்குரிய எத்தனை உறுப்பினர்கள் நானும் எனது மரியாதைக்குரிய நண்பர்களும் இந்த விவாதத்தில் பேசுவதற்காகவும் பின்னர் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக, ஒரு பொது தேர்தலைத் தடுக்க சபைகளில் வாக்களிப்பதற்கும் பங்கு கொள்ள வேண்டுமென நிஜமாகவே விடாப்பிடியாக இருந்தார்கள் என்பது குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்... உண்மையில், இந்த முறையீடுகளில் சில சபையில் அரசாங்கத்தின் தரப்பிலிருந்தும் கூட வந்துள்ளன!”
வாக்கெடுப்பு நாளன்று காலை, 71 தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் 26 நபர்களின் ஆதரவை மேற்கோளிட்டு, மக்களின் வாக்கெடுப்பை தொழிற் கட்சி ஆதரிக்க வேண்டுமெனக் கோரி ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். டஜன் கணக்கானவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே "மக்கள் தான் இறுதி வார்த்தை கூற வேண்டும்,” என்று எழுதிய ஒரு பதாகையின் பின்நின்று புகைப்படம் எடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் மே அவரின் உரையில், கோர்பினை தேசிய பாதுகாப்புக்கான ஓர் அச்சுறுத்தல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கையாள், சிரியப் போர் மற்றும் இராணுவத்தின் ஓர் எதிரி, இன்னும் பிறவாறாக குறைகூறுவதில் ஒருமுகப்பட்டிருந்தார்.
மேயின் உரை நாடாளுமன்றம் எங்கிலும் கேட்க்கப்பட்டிருந்த போதினும் கோர்பின் பரிதாபகரமாக குறைகூறியதன் மூலமாக இவ்வாறு பதிலளித்தார், “அங்கே அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு இல்லை, அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து எந்த தகவலும் இல்லை — மொத்தத்தில் பிரதம மந்திரி கூறியதெல்லாம் அவர் சபையின் சில உறுப்பினர்களுடன் பேசுவார் என்பது தான்... அதை ஏற்க முடியாது, அது அதைக் குறித்து விவாதிப்பதாகாது, அது நேற்றிரவு அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியின் அளவை அங்கீகரிப்பதாகாது,” என்றார்.
எது மே க்கு கணக்கு தீர்ப்பதற்கான ஒரு நாளாக இருக்கவேண்டியதோ அது, செப்டம்பர் 2015 இல் கோர்பின் தலைவர் ஆனதில் இருந்து அவர் கட்சியின் வலதுசாரிக்கு அவர் ஒவ்வொரு முறையும் மண்டியிட்டதன் மீதான அவமானகரமான தீர்ப்பாக மாறியிருந்தது.
அரசாங்கத்தைக் குறித்து தொகுத்தளிக்கையில், கோவ் எதிர் கட்சி தரப்பிலிருந்து பேசியவர்களைப் புகழ்ந்துரைத்ததுடன், கடந்த ஆண்டு சுயேட்சையாக அமர தொழிற் கட்சியிலிருந்து வெளியேறியவரும், மேயின் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை ஆதரிக்காதவருமான பிளேயரிசவாதி ஜோன் வுட்காக்கைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார், மற்றும் சிரியாவுக்கு எதிரான போரை ஆதரித்ததற்காக ஹிலாரி பென்னைப் புகழ்ந்துரைத்தார். வுட்காக் அவரின் உரையில் கூறுகையில், கோர்பின் மற்றும் மெக்டொன்னெல் "உயர்பதவி வகிக்க பொருத்தமானவர்கள் கிடையாது" என்றும், தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் "பலரும்" கோர்பினைத் தாக்க அவரைப் பிரத்யேகமாக ஊக்குவிதிருந்ததாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் துணை தலைவர் டொம் வாட்சன் அவரின் உரையில் கோர்பினைக் குறிப்பிட தவறியதாகவும், ஏனென்றால் "தொழிற் கட்சிக்குத் தலைமை கொடுக்க —இன்னும் கூடுதலாக அவருக்கே கூட தலைமை கொடுப்பதில்— கோர்பின் மிகவும் மோசமான நபராக இருப்பார்... என்று நாங்கள் இருவரும் உணர்கிறோம்,” என்று கோவ் குறிப்பிட்டார்.
பிரிட்டன் வெளியேறுவது மீது என்ன மாதிரியான உடன்படிக்கையை சபையில் பெரும்பான்மை பெறும் என்பது குறித்து தம்முடன் விவாதிக்குமாறு மே அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் ஒரு முறையீடு செய்து அந்த விவாதத்தை நிறைவு செய்தார். அப்பெண்மணி எதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை கூற கோர்பினுக்கு தைரியம் இல்லை. உடன்படிக்கை இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்று மட்டும் கோர்பின் பதிலளித்தார். இந்த உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் அவர் மேயைச் சந்திக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்தார். ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் அவரின் கன்னைக்கும் மே முன்பினும் கூடுதலாக கடமைப்பட்டுள்ள நிலையில், கோர்பினினின் கோரிக்கைகள், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு, பலவீனமாக தெரிகின்றன. அந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் மே தேசத்திற்கு ஆற்றிய ஒரு தொலைக்காட்சி உரையில், மற்ற தரப்பினருடன், அனைத்திற்கும் மேலாக "நமது நம்பிக்கைக்குரிய வினியோக பங்காளிகளுடன்,” பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் பிரெக்ஸிட் குறித்து பேசுவதே அவரின் நோக்கம் என்று வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே சந்தையைச் சுங்கவரியின்றி அணுகுவதை உத்தரவாதப்படுத்தும் ஒரு பிரெக்ஸிட் உடன்படிக்கையைப் பேரம்பேசுவதன் மூலமாகவோ அல்லது இரண்டாவது சர்வஜன கருத்து வாக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலமாகவோ, “பிரெக்ஸிட் முட்டுக்கட்டையில்" இருந்து வெளியேறுவதற்கு தொழிற் கட்சி ஒரு வழிவகை வழங்குகிறது என்று கோர்பினும் மெக்டொன்னெல்லும் பெருவணிகங்களைச் சமாதானப்படுத்த பல மாதங்கள் செலவிட்டுள்ளனர். மெக்டொன்னெல் மொத்த பிரெக்ஸிட் விவாதத்திற்கு முன்னதாக, வரி செலுத்துவோர்கள் அல்லது வணிகங்களுக்கு "ஆச்சரியங்கள் இருக்காது", வரவு-செலவு திட்டக்கணக்குகளில் "உறுதியான நெறிமுறை" இருக்கும் மற்றும் நகரத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வெளிப்படைத் தன்மையின் மட்டம் "முன்னொருபோதும் இல்லாதளவில்" இருக்கும் என்று உத்தரவாதமளிக்கும் தொழிற் கட்சியின் பொருளாதார கொள்கையினது ஒரு முன்நகலை முன்கூட்டியே வெளியிட்டிருந்தார்.
ஆனால் கோர்பின் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்கவில்லை, அவர்களில் பலரும் ஏற்கனவே மே உடனான, டோரிக்களின் ஏனைய பிரிவுகளுடனான, அல்லது ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளுடனான விவாதங்களில் கலந்து கொண்டிருந்தனர் என்பதுடன், இது தொழிற் கட்சியின் ஓர் உடைவு உட்பட அரசியல் மறுஅணிதிரள்வுக்கே கூட இட்டுச் செல்லக்கூடும்.
அவருக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவும் இருக்கவில்லை, இவை ஒரு பொது தேர்தலுக்கான அவரின் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதுடன், பிரெக்ஸிட் குறித்து அரசாங்கத்துடன் நேரடியாக பேசுவதற்கு அவை விருப்பம் காட்டியுள்ளன.
ஜோன் மன் மற்றும் கரோலின் ஃபிளிண்ட் உட்பட தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குழுவினது பரிசீலனை சம்பந்தமாக ஒருங்கிணைந்த பொதுச் செயலாளர் லென் மெக்கிளஸ்கி மற்றும் GMB பொது செயலர் டிம் ரோச்சி ஆகியோரை மே கடந்த வாரம் நேடியாக தொடர்பு கொண்டு பேசியிருந்தார். ஒரு கடினமாக பிரிட்டன் வெளியேறுவதைத் தடுக்க அவர்கள் அவரை ஆதரிக்க பரிசீலித்து வருவதாக அப்போது அக்குழு தெரிவித்திருந்தது. எந்த தொழிற் சங்க தலைவரும் மேயின் இப்போதைய உடன்படிக்கையை ஆதரிக்கவில்லை என்றபோதும், ரோச்சி கூறுகையில் "இறுதியில் பிரதம மந்திரி தொலைபேசி எடுத்தார் என்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்தார், அதேவேளையில் “அவர் டவுனிங் வீதியுடனான பாதையைத் திறந்து வைத்திருக்க ஆர்வமாக இருப்பதாக" மெக்கிளஸ்கியின் கூட்டாளிகள் தெரிவித்ததாக Independent பத்திரிகை குறிப்பிட்டது.
தொழிற் கட்சியின் நிஜமான கொள்கையும் வேலைத்திட்டமும் ஆளும் வர்க்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப இருப்பதாக பிளேயரிசவாதிகள் புனைந்துரைக்கையில், அவர்களுக்கு முன்னால் கோர்பின் தொடர்ந்து பின்வாங்கி வருவதன் முழுமையான உள்நோக்கங்கள் அனைவரும் பார்க்கும் விதத்தில் தெளிவாகி வருகின்றன.
கோர்பினின் போலி-இடது அனுதாபிகள் அனைவரும், டோரிக்களின் தொல்லையை ஒழிக்க இப்போது தொழிற் கட்சியையும் தொழிற் சங்கங்களையும் அணித்திரட்ட வந்துள்ள தனியொரு வீரராக அவரை சித்தரிக்கின்றனர் — சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி இரண்டுமே கொடுமையான வணிக-சார்பு அதிகாரத்துவவாதிகளை "போர்-முனையில்" நிற்பதாக பேசி வருகின்றன. ஆனால் சமூக செலவினக் குறைப்புக்கு எதிரான மற்றும் போருக்கு எதிரான அரசாங்கத்திற்கு அவர் வழங்கிய உறுதிமொழிகளின் அடிப்படையில் கோர்பினை ஆதரித்த தொழிலாளர்களும் இளைஞர்களும், வர்க்க போராட்டத்தை அவர் நசுக்குவது டோரிக்கள் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு முக்கியமான உதவியாக இருக்கின்றது என்ற யதார்த்தத்தைக் கண்டு வருகிறார்கள்.
இது வேறு யாராலும் அல்ல வயதான தாட்சரிசவாதி சர் மால்கம் ரிஃப்கைண்ட் ஆல் ஒப்புக் கொள்ளப்பட்டது, இவர் மேயின் பிரெக்ஸிட் உடன்படிக்கை மீதான செவ்வாய்கிழமை வாக்கெடுப்பானது, "நாடாளுமன்றம் கட்டுப்பாட்டை எடுக்கிறது. கலகங்கள் இல்லை, மஞ்சள் சீருடையாளர்கள் இல்லை, நீர்பீய்ச்சி வாகனங்கள் இல்லை,'இராணுவத்தை அழைப்பதற்கான அழைப்பு' இல்லை ... நீங்கள் கடந்த ஓரிரு வாரங்களில் பாரீசுடன் ஒப்பிடுங்கள்,” இதுவொரு முன்னுதாரணம் என்று புகழ்ந்திருந்தார்.