Print Version|Feedback
French “yellow vest” protesters mount pre-Christmas protest against Macron
பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மக்ரோனுக்கு எதிராக நத்தார் பண்டிகைக்கு-முந்தைய நாளில் போராட்டம் நடத்துகின்றனர்
By Alex Lantier
24 December 2018
சனிக்கிழமை, பத்தாயிரக் கணக்கான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் பிரான்சில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதற்கிடையே அண்டை நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் வேலைநிறுத்த அலை அதிகரித்து வருகிறது, அங்கேயும் போராட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்திருந்தனர். மக்ரோனுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த பிரான்சின் பிரதான நகரங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் போராட்ட அணிவகுப்புகளில் இணைந்திருந்தனர், அல்லது நெடுஞ்சாலை குறுக்கு சந்திப்புகளையும் மற்றும் ஸ்பெயின், இத்தாலி அல்லது ஜேர்மனியை ஒட்டிய பிரான்சின் எல்லைகளையும் முடக்கினர்.
உள்துறை அமைச்சக தகவலின்படி, 2,000 “மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த பாரிஸில், அவர்கள் வேர்சாய் நோக்கி அணிவகுத்து செல்வதாக பொலிஸிற்குச் சாக்குபோக்கு காட்டி விட்டு, போராட்டக்காரர்கள் சாம்ப்ஸ்-எலிசே மற்றும் மொன்ட்மாத்ர் க்கு இடையே தங்களை பிரித்துக் கொண்டார்கள். அதிகாரிகள் முன்னேற்பாடாக வேர்சாய் மாளிகையை மூடியது, அதற்கு அருகாமையில் அவர்கள் நீர்பீய்ச்சி வாகனங்களை நிறுத்தி இருந்தார்கள். அரசு அதிகாரிகளின் தகவல்படி, மாகாண அளவில், போர்தோ, துலூஸ் மற்றும் லீல் இல் ஆயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதேவேளையில் நாந்த், மார்சைய் மற்றும் லியோனில் நூற்றுக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர்.
வழமையாக, பாதுகாப்பு படைகள் வன்முறையான ஒடுக்குமுறையைக் கொண்டு எதிர்வினையாற்றியது. பாரீசில் அவர்கள், பேஸ்புக் மூலமாக "மஞ்சள் சீருடை" போராட்டங்களைத் தொடங்க உதவிய ஒரு ட்ரக் ஒட்டுனர் எரிக் துருவே "ஒருவிதமான போலிஸ் பயன்படுத்தும் குறுந்தடி" வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்தனர். போராட்டக்காரர்கள் மீது ஸ்தம்பிக்க செய்யும் எறிகுண்டுகளைப் பற்ற வைக்காமல் வீசிய பின்னர் ஒரு பொலிஸ்காரர் அவரின் கைத்துப்பாக்கியை எடுத்து போராட்டக்காரர்களை நோக்கி குறிவைப்பதைக் காட்டும் மற்றொரு காணொளி ஒன்று பரவலாக பரவியது.
“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் குறித்து கடந்த வாரம் "இது போதும்,” என்று அறிவித்து, நெடுஞ்சாலை தடையரண்களை நீக்குமாறு பொலிஸிற்கு உத்தரவிட்டிருந்த உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னருக்கு அந்த அணிதிரள்வு ஒரு கண்டனமாக இருந்தது. ஒரு மாதத்திற்கும் அதிகமாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னர், எவ்வாறிருப்பினும், அந்த இயக்கம் இன்னமும் பரந்தளவில் மக்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றுள்ளது. அது பிரெஞ்சு மக்களிடையே 70 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதுடன், பிரெஞ்சு மக்களில் 54 க்கும் 62 சதவீதத்தினருக்கும் இடையிலானோர் அந்த இயக்கம் தொடர வேண்டுமென விரும்புவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
நவம்பர் 17 இன் முதல் போராட்டத்தில் கலந்து கொண்ட 125,000 போராட்டக்காரர்களை விட மிகக் குறைவாக சனிக்கிழமை 40,000 போராட்டக்காரர்கள் இருந்ததைக் காட்டும் உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களை மேற்காளிட்டு, பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்தும் அந்த இயக்கம் விரைவிலேயே முடிந்து, ஒழுங்கிற்குத் திரும்பும் என்று அனுமானித்து வருகின்றன.
பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபர கைப்புரட்டா, போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்காக இடைவேளை எடுத்திருக்கிறார்கள், அல்லது "மஞ்சள் சீருடை" தடைகள் மற்றும் போராட்ட அணிவகுப்புகளிலிருந்து அதிகமாக விலகி சென்று கொண்டிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் என்ன தெளிவாக இருக்கிறது என்றால், ஒட்டுமொத்த மக்ரோன் அரசாங்கத்திற்கும் பிரெஞ்சு அரசு எந்திரத்திற்கும் எதிரான அரசியல் எதிர்ப்பு மற்றும் சமூக கோபம் தொழிலாள வர்க்கத்திற்குள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதாகும்.
அரசியல் நிலைமையோ இன்னும் அதிகமாக வெடிப்பார்ந்து உருவாகி வருகிறது. சமூக சமத்துவம், அதிக கூலி உயர்வுகள், பணக்காரர்கள் மீது வரிகளை அதிகரிப்பது, மக்ரோனின் இராஜினாமா மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறையை நிறுத்துவது என "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு அடியிலுள்ள கோரிக்கைகளில் ஒரே ஒன்றைக் கூட அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த போராட்டங்களால் திகைத்து மலைத்து போன தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளையும் தொழிலாளர்களையும் பிரிக்கும் அதிகரித்து வரும் வர்க்கப் பிளவைக் குறித்து இப்போது, ஒவ்வொருவரும் அறிந்துள்ளார்கள்.
அவரது கொள்கைகளை வெறுக்கும் தொழிலாளர்களை "சோம்பேறிகள்" என்றும், வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்கள் ஒரு வேலை பெறுவதைக் "கவனத்தில் கொள்ளுமாறு" அவமதிக்கும் விதத்திலும் தெரிவித்திருந்த மக்ரோன், இப்போது இராணுவ பொலிஸின் கவச வாகனங்கள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மட்டுமே அவரின் அதிகாரத்தைப் பிடித்து வைத்திருக்க முடியும். போராட்டக்காரர்கள் அவரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை தகர்த்தால், எலிசே மாளிகையிலிருந்து அவரை மீட்டு இட்டுச் செல்ல ஒரு ஹெலிகாப்டர் குழு இப்போது தயாராக நிற்கிறது. Le Monde தகவல்படி, எலிசே இல் இருந்து எந்தவொரு சுற்றுலாவுக்கும், சினிமா அல்லது பேக்கரிக்குக் கூட வெளியே செல்வதிலிருந்து மக்ரோன் தடுக்கப்பட்டுள்ளார், ஏனென்றால் அது "மிகவும் அபாயகரமானதாக" உள்ளது.
அவரின் செல்வாக்கு விகிதம் கூடுதலாக சுமார் 20 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், “எலிசே இப்போது மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆட்சி செய்யப்படுகிறது,” என்பதையும் அந்த நாளிதழ் சேர்த்துக் கொண்டது.
முதலாம் உலக போரின் பிரெஞ்சு போர்க்களங்களுக்கான அவரின் “நினைவேந்தல் பயணத்தின்” போது வழியில் மக்கள் வெறுப்புக் கூச்சல் இட்டதும், நவம்பரில் மக்ரோன் ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனுக்கு வீரவணக்கம் செய்தார் என்றால், பெருந்திரளான மக்கள் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளான பெத்தனை அவர் சக அரசு தலைவராக பார்க்கிறார் என்பதை முன்பினும் அதிகமாக தெளிவுபடுத்துகிறது.
எவ்வாறிருப்பினும் மக்ரோன் வெறுக்கப்படுகிறார் என்ற புரிதல் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கொள்கையை மாற்றிவிடாது, அது இன்னும் வன்முறையாக ஒடுக்குமுறையாக மாறுவதற்காக அவரை காப்பாற்றும். மக்ரோனை இலக்கில் வைத்து போராட்டக்காரர்கள், தொழிலாளர்கள் மீதான வங்கிகள் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் கட்டளைத் திணிக்கின்ற ஓர் ஒட்டுமொத்த ஐரோப்பிய மற்றும் சர்வதேச ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சமூக செலவினக் குறைப்பு கோரிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழி, வங்கிகளைப் பறிமுதல் செய்வதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கும் அக்கண்டம் எங்கிலும் தொழிலாளர்களை அணித்திரட்டுவது மட்டுமே ஆகும்.
பெரும் பெரும்பான்மை பிரெஞ்சு மக்களின் வெளிப்படையான எதிர்ப்பு இருந்தாலும், ஆளும் உயரடுக்கு சமூக செலவினக் குறைப்பு திட்டங்கள் மற்றும் இராணுவவாதத்தைத் தொடர்ந்து கோரி வருகிறது. மக்ரோன் அரசாங்கம் வேலைவாய்ப்பின்மை காப்பீடு, ஓய்வூதியங்கள் மற்றும் பொதுத்துறை கூலிகளில் கடுமையான வெட்டுக்களுக்குத் திட்டமிட்டு வருகிறது. மக்ரோனின் குடியரசு அணிவகுப்பு இயக்கம் (Republic on the March – LRM) கட்சியின் Pierre-Alexandre Anglade மரத்துப் போன வார்த்தைகளில் இவ்வாறு அறிவித்தார்: “இதை செய்யத்தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம், இது எமது திசைகாட்டியாக இருக்கும்.”
நேட்டோவின் நவ-காலனித்துவ போர் மூலோபாயத்தை விவாதித்துக் கொண்டிருந்த சாட் இல் இருந்துதான், மக்ரோன் போராட்டக்காரர்களை நேற்று அச்சுறுத்தினார்: “தெளிவாக, மிகவும் கடுமையான விடையிறுப்புகள் வழங்கப்படும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக இப்போது சட்ட ஒழுங்கு ஆட்சி செய்ய வேண்டும். இதுதான் நம் நாட்டிற்கு தேவையாக உள்ளது.”
மக்ரோன் 2019 க்கான கொள்கைகளுக்கு "ஒத்துழைக்குமாறு" பல மாதங்களாக போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் குறைந்தபட்ச கூலி உயர்வுக்கான வாக்குறுதிகள் அல்லது முதலில் செய்யப்பட்ட எரிபொருள் வரி உயர்வை இரத்து செய்தமை போலவே, இந்த முன்மொழிவும் முற்றிலும் மதிப்பற்றது. மக்ரோன் வெறும் அற்பமான விட்டுக்கொடுப்புகளை மட்டுமே வழங்குகிறார், அதுவும் தீய அபிப்ராயத்துடன், அதேவேளையில் எந்தளவுக்கு சாத்தியமாகுமோ உடனே அந்த அற்ப விட்டுக்கொடுப்புகளையும் பறித்துக் கொள்ள உத்தேசிக்கிறார் என்பது தெளிவாக உள்ளது.
செவ்வாயன்று, பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் "மஞ்சள் சீருடையாளர்களுக்கான" மக்ரோனின் விட்டுக்கொடுப்புகள் மிகவும் செலவு பிடிக்கும் என்று கூறி, அவரது அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் நீக்குவதாக அறிவித்தார். சமூக ஊடகத்தில் கோப அலைக்கு இடையே பின்னர் ஒரு சில மணி நேரங்களில் அவர் மாற்றிக் கொண்டார். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இந்த இரண்டு 180-பாகை திருப்பங்கள், அரசாங்கத்தின் வாக்குறுதிகள் என்னவாக இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த அரசாங்கம் ஜாக்லின் மூரோ (Jacline Mouraud) தலைமையிலான "சுதந்திரமான மஞ்சள் சீருடை" கன்னையை வளர்த்தெடுத்து வருகிறது, அப்பெண்மணி மக்ரோனுடன் பேச்சுவார்த்தையில் அமர விரும்புவதுடன், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், முதலாளிமார்களின் குழுக்கள் மற்றும் அரசுக்கு இடையே "சமூக பேச்சுவார்த்தை" ஐ எதிரொலித்து வருகிறார், அல்லது பிரான்சிஸ் லலான் (Francis Lalanne) ஐ வளர்த்தெடுத்து வருகிறது, இவர் ஐரோப்பிய தேர்தல்களுக்கான "மஞ்சள் சீருடை" பட்டியலை முன்மொழிந்து வருகிறார். லலான் இன் பட்டியல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மக்ரோன் மற்றும் LRM இன் செல்வாக்கை அதிகரிக்குமா என்று ஏற்கனவே Pollsters கணக்கிட்டு வருகிறது.
“மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொறுத்த வரையில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தைப் போலவே, அங்கே மக்ரோன் உடனோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடனோ பேரம்பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் வர்க்க போராட்டங்களும், அத்துடன் பிரான்சுக்கு உள்ளேயே அதிகரித்து வரும் கடுமையான அரசியல் முரண்பாடுகளும், தீவிரமயப்பட்ட தொழிலாளர்களுக்கும் பிற்போக்குத்தனமான மக்ரோன் ஆட்சிக்கும் இடையே ஓர் அரசியல் மோதலை வேகமாக உருவாக்கி தீவிரப்படுத்தும் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.