Print Version|Feedback
Egypt bans yellow vest sales as French protesters reject Macron’s concessions
மக்ரோனின் சலுகைகளை பிரெஞ்சு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரிக்கும் வேளையில் எகிப்து மஞ்சள் சீருடை விற்பனைக்கு தடைவிதிக்கிறது
By Alex Lantier
11 December 2018
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவாக சர்வதேச அளவில் போராட்டங்கள் பரவுகின்ற நிலையில், எகிப்தின் இரத்தவெறி தளபதி அப்துல் ஃபத்தா அல் சிசியின் சர்வாதிகாரம் மஞ்சள் சீருடைகள் விற்பனைக்கு தடை விதித்துக் கொண்டிருக்கிறது. பிரான்சில் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தணிக்கின்றதொரு முயற்சியில் மக்ரோன் வழங்க முன்வருகின்ற சலுகைகளை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்த வேளையில் இது வந்திருக்கிறது.
பிரான்சில் போலவே எகிப்து மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும், பெருகிவரும் தொழிலாள வர்க்கக் கோபமானது “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களைச் சூழ்ந்து வெடிக்கக் கூடும் என்று சிசியின் சர்வாதிகாரம் மிரட்சி கண்டிருக்கிறது. வெறுக்கப்பட்ட சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்த 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினமான அடுத்த ஆண்டு ஜனவரி 25 இன் போராட்டங்கள் நடந்து முடிகின்ற வரையில் மஞ்சள் சீருடைகளை விற்கக் கூடாது என போலிஸ் உத்தரவிட்டிருப்பதாக AP செய்தி நிறுவனத்தால் தொடர்பு கொள்ளப்பட்ட கெய்ரோவின் சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர். சிசியின் ஆட்சியானது ஒரு குருதிகொட்டும் இராணுவக் கவிழ்ப்பின் மூலமாக 2013 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இத்தகைய போராட்டங்களை தடைசெய்து வந்திருப்பதோடு தடையை மீறும் எவரையும் அடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு கலகத் தடுப்பு போலிசாரை அனுப்பி வந்திருக்கிறது.
“சில நாட்களுக்கு முன்னால் போலிஸ் இங்கே வந்து அவற்றை விற்பதை நிறுத்தும்படி எங்களிடம் தெரிவித்தது. ஏன் என்று நாங்கள் கேட்டபோது, எங்களுக்கு வந்த உத்தரவின் படி நாங்கள் நடந்து கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்” என்று ஒரு சில்லறை வியாபாரி APயிடம் தெரிவித்தார். “பிரான்சில் செய்வது போல யாரும் இங்கு செய்து விடக் கூடாது என அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது” என்றார் இன்னொருவர்.
தொழிற்துறை பாதுகாப்பு சாதன விநியோகஸ்தர்கள், முகம் தெரியாத வாடிக்கையாளர்களுக்கு மஞ்சள் சீருடைகளை விற்கக் கூடாது எனவும், போலிஸ் அனுமதி கொண்ட சரிபார்க்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மஞ்சள் சீருடைக்கான தடை குறித்து கருத்து கூற விடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு எகிப்தின் உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை என பல செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
சிசி முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் ஒரு நெருக்கமான நண்பர் எனக் கூறப்படுகிறது, அத்துடன் எகிப்தின் மக்கள் கண்காணிக்கப்படுவதிலும் கைது செய்வதற்கும் சித்திரவதை செய்யப்படுவதற்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தனிமனிதர்கள் அடையாளம் காணப்படுவதிலும் பிரான்சின் இணைய வேவு நிறுவனங்கள் ஆழ்ந்த சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், அவர்களது ஆகக்கூடிய முயற்சிகளைத் தாண்டியும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரொட்டிக் கலகங்கள், ஆடை தயாரிப்புத் துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் சிசியின் தனியார்மயமாக்கங்களுக்கும் உணவு மானிய வெட்டுக்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை எகிப்தை அடுத்தடுத்து உலுக்கி வந்திருக்கின்றன.
எகிப்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அவை நடைபெறுவதற்கு முன்கூட்டியே தாக்குவதற்கு சிசி செய்திருக்கும் முயற்சியானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலில் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அடைந்துள்ள பீதியை சுட்டிக்காட்டுகிறது. சமூக சமத்துவம், ஊதிய அதிகரிப்புகள், இராணுவவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டுவது மற்றும் மக்கள்விரோத அரசாங்கங்களை அகற்றுவது ஆகிய பிரான்சில் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்களை செலுத்துகின்ற கோரிக்கைகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற கோரிக்கைகளாய் இருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் எகிப்துக்கு பரவி விடாமல் தடுக்க சிசி பெரும்பிரயத்தனத்துடன் முயலுகின்ற வேளையில், அடுத்தடுத்து பல நாடுகளில் பல்வேறு சக்திகளும் இத்தகைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவில், வெள்ளிக்கிழமையன்று புரூசெல்ஸில் நடந்த “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தை பெல்ஜிய போலிஸ் வன்முறையாக ஒடுக்கியது, நெதர்லாந்து, பல்கேரியா மற்றும் ஈராக்கிலும் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்ரா நகரில் நேட்டோ ஆதரவு நவ-காலனித்துவ ஆட்சியின் அசுத்தமான குடிநீர் மற்றும் மோசமான நகர சேவைகளுக்கு எதிராக ஒரு “மஞ்சள் சீருடை” போராட்டம் நடைபெற்றதற்குப் பின்னர், டிசம்பர் 7 அன்று பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாஸ்ரா ஆர்ப்பாட்டங்களுடன் ஐக்கியத்தைக் காட்டுகின்ற விதத்தில் மஞ்சள் சீருடைகள் அணிந்திருந்தனர்.
குறிப்பாக புரூசெல்ஸிலும் பாரிஸில் சனிக்கிழமையன்றும் நடந்த போலிஸ் ஒடுக்குமுறைகளுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டங்கள் ஆபிரிக்கா எங்கிலும் பரவிக் கொண்டிருக்கின்றன. Burkina Faso இல், டிசம்பர் 13 அன்று இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முகநூல் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தெரிவிக்கிறது: “ஆகவே, டிசம்பர் 13, 2018 அன்று Burkina Faso எங்கிலும், நாடு முழுக்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் நமது குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெரு முனைகள் மற்றும் சந்திகளிலும் வன்முறையின்றி அமைதியாகத் திரண்டு கூறுவோம்: எரிபொருள் விலையேற்றம் கூடாது; அநீதி எந்த வடிவத்திலும் கூடாது”.
துனிசியாவில், “சிவப்பு சீருடைகள்” என்ற சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு டிசம்பர் 7 அன்று அதன் முதல் அறிக்கையை விடுத்தது. துனிசிய அரசியல் அமைப்புமுறையின் “தோல்வி மற்றும் ஊழல்நிலை”யையும் மக்களை “கொஞ்சம் கொஞ்சமாக வறுமைக்குள் தள்ளும்” அரசாங்கத்தின் கொள்கையையும் கண்டனம் செய்தது. ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக துனிசிய ஆசிரியர்கள் சென்ற வாரத்தில் வேலைநிறுத்தங்கள் நடத்தியதைப் பின்தொடர்ந்து இது வந்திருக்கிறது.
எகிப்தில் போலவே, துனிசியாவிலும், ஐரோப்பிய-ஆதரவு சர்வாதிகாரி ஸைன் எல் அபீதின் பென் அலியை விரட்டிய 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினமான வரும் ஜனவரி 14 அன்று கோபம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென் அலி சர்வாதிகாரத்தின் ஒரு நெருங்கிய ஆதரவாளராய் இருந்திருந்த துனிசிய பொதுத் தொழிலாளர் சங்கம் (UGTT), சென்ற மாதத்தில், பொதுத்துறையில் இரண்டு ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விட நிர்ப்பந்திக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் துனிசியாவில் ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்புகள் சுற்றிவருகின்றன.
அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடைகள் அணிந்து நேற்று Béjaïa இல் ஒரு பேரணியில் பங்கேற்றது, முதலாளித்துவ ஊடகங்களில் கவலையைத் தூண்டியிருந்தது. “அல்ஜீரிய மக்களின் வாங்கும் சக்தியிலான ஒரேயடியான வீழ்ச்சியின் காரணத்திலான மகிழ்ச்சியற்ற சமூக சூழலை” குறிப்பிட்டு, Mondafrique, “ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் ஒரு முழுவீச்சிலான நெருக்கடிக்கு காரணமாகியுள்ளன. அது ஒரு சாத்தியமான பெரும்பாலும் உண்மையாக தொற்றும் நிலையில் இருந்து, அல்ஜீரியா பாதுகாப்புடன் இருக்கிறதா?”
ஆபிரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு பெருகும் ஐக்கியமும், சர்வதேசத் தொழிலாள வர்க்கமே பிரான்சில் மக்ரோனுக்கு எதிராக அணிதிரளுகின்ற தொழிலாளர்களது மிகப்பெரும் கூட்டாளியாகும் என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இருபதியொன்றாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் முதல் மிகப்பெரும் புரட்சிகர அணிதிரள்வு வட ஆபிரிக்காவில் இரண்டு சர்வாதிகாரிகளை வீழ்த்தி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகின்றன. இப்போது, பிரான்ஸ், துனிசியா மற்றும் பிராந்தியமெங்கிலும் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் பெருகுகின்ற நிலையில், வர்க்கப் போராட்டமானது புறநிலையாக ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தம் வெடிப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அத்தகைய ஒரு போராட்டத்திற்கு தயாரிப்பு செய்கின்ற மற்றும் ஒழுங்கமைக்கின்ற பணி தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் விடப்பட முடியாது. அவை பிற்போக்கான தேசிய அரசாங்கங்களை ஆதரிக்கின்றன, தொழிலாள வர்க்கத்தை தேசியரீதியாய் பிளவுபடுத்துகின்றன, அத்துடன் பிரான்சில் ஆரம்பத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு கடும் குரோதம் காட்டின. தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து விடுவிப்பதோடு, தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் 2011 புரட்சிகளைத் தொடர்ந்துவந்த காலத்தில் லிபியா, சிரியா மற்றும் மாலியில் இரத்தம்தோய்ந்த ஏகாதிபத்தியப் போர்களை வழிமொழிந்த அவற்றுடன் தொடர்புடைய நடுத்தர வர்க்கக் கட்சிகளுக்கும் எதிராய் தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகரத் தலைமையை வழங்க அதில் ஒரு மார்க்சிச அரசியல் முன்னணிப்படையை கட்டியெழுப்புவதே இதற்கு முதலாகவும் முதன்மையாகவும் அவசியமானதாய் உள்ளது.
வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது பிரான்சில் பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற நடுத்தர வர்க்க சக்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. பின்தொடர்ந்து ஆபிரிக்கா மீதான நேட்டோ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற 2011 லிபியப் போரை ”மனிதாபிமான” முயற்சி என வழிமொழிந்திருந்த அவை, சென்ற ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது இறுதிச் சுற்றில் மக்ரோனுக்கு எதிரான எந்த முன்னோக்கையும் வழங்குவதற்கு மறுத்து விட்டன. இப்போது, அவை “மஞ்சள் சீருடை” இயக்கத்தின் பரந்த அடுக்குகளால் நிராகரிக்கப்படுகின்றன, இயக்கத்தின் சில உறுப்பினர்கள் மெலோன்சோன் நீட்டிய உதவிக்கரத்தை, போய் “அவரது நண்பர் மக்ரோனை” பார்க்குமாறு கூறி நிராகரித்தனர்.
பிரான்சின் ஆர்ப்பாட்டக்காரர்களை சில வகையான தொழிற்சங்க பேச்சுவார்த்தைகள் மற்றும் மக்ரோனுடனான உடன்பாடுகளின் முன்னோக்குடன் —இந்த முன்னோக்கு ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது— கட்டிப்போடுகின்ற அவர்களது நோக்கமானது தொழிலாளர்களுக்கான ஒரு சிக்குபொறியாகும். மக்ரோன் நேற்று இரவு, ஆர்ப்பாட்டக்காரர்களை போராட்டத்தை கைவிடச் செய்ய முயற்சி செய்து வழங்கிய பயனற்ற ஒரு 13-நிமிட உரையை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரித்ததில் இது முன்னுக்கு வந்தது.
செல்வந்தர்களுக்கான வரிவெட்டுகளை திரும்பப் பெறப் போவதில்லை, வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களிலான ஆழமான வெட்டுக்களுக்கான திட்டங்களை கைவிடப் போவதில்லை, அல்லது ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒரு ஒடுக்குமுறைக்கு தான் பிறப்பித்திருக்கும் உத்தரவையும் தளர்த்தப் போவதில்லை என்பதை மக்ரோன் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னர் அவர், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் மாதம் 100 யூரோக்கள் (6.7 சதவீதம்) அதிகரிக்கவும், ஓய்வூதியதாரர்கள் மீதான வரி அதிகரிப்புகளை பகுதியாக திரும்பிப் பெறவும், மேலதிக வேலைநேர ஊதியங்களில் வரி வெட்டுகளை வழங்கவும் முன்வந்தார். இறுதியாக, புலம்பெயர்ந்தோர்-விரோத இனவாதத்திற்கும் அவர் விண்ணப்பித்தார், தேசிய அடையாளம் மற்றும் “மதச்சார்பின்மை” —இப்போது முஸ்லீம் பர்தாக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு குறியீட்டு வார்த்தையாக பயன்படுத்தப்படுகின்றது— ஆகியவை மீது ஒரு “முன்கண்டிராத” பொது விவாதத்திற்கு அவர் அழைப்புவிடுத்தார்.
முஸ்லீம்-விரோத இனவெறியை தூண்டும் ஒரு உத்தியோகபூர்வ கொள்கைக்கான இந்த ஆலோசனை பிரதானமாக போலிஸ் மற்றும் இராணுவரீதியான பரிசீலனைகளில் இருந்து உத்தரவிடப்படுகிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கம், அதன் போர்களுக்குக் குறுக்கே வரக் கூடிய விதமாய் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க தொழிலாளர்களது ஒரு கூட்டுப் போராட்டத்தையோ, அல்லது சொந்த நாட்டில் அதன் போலிஸ் ஒடுக்குமுறைக்கு இடைஞ்சலாய் அமையும் விதத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஐக்கியப்படுவதையோ விரும்பவில்லை. மக்ரோனின் நவ-பாசிச விவாதத்தை உதாசீனம் செய்து நிராகரித்து விட்டு, அத்தனை இன மற்றும் மதங்களையும் சேர்ந்த தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்திற்கு விழைவதே தொழிலாளர்களுக்கு இருக்கின்ற முன்னோக்கிய பாதையாகும்.
“yellow vest” முகநூல் பக்கங்களில் கருத்துரைத்தவர்கள் பெரும்பாலும் மக்ரோனின் ஆலோசனையை நிராகரித்தனர், ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தபட்ச ஊதிய வேலைகளில் இருக்கிறார்களா, ஓய்வூதியதாரர்களா மற்றும் இன்னபிறவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களைப் பிளவுபடுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினர். மக்ரோனின் உரைக்கு பெருவாரியான எதிர்ப்பு காட்டும் France en colère பக்கத்திலான ஒரு பதிவு, “பொறியில் சிக்க வேண்டாம்! இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர நம்மை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்துவதே அவரின் நோக்கமாய் இருக்கிறது! ஆகவே நம்மில் ஒவ்வொருவருக்கும் வெற்றி கிட்டும் வகையில் ஒன்றாய் நிற்போம் ஒன்றாய் தொடர்வோம்” என்று தெரிவித்தது.
பாரிஸ் நகர்மையப் பகுதியில் அடுத்த சனிக்கிழமையன்று ஒரு புதிய “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருக்கிறது.