Print Version|Feedback
Third “yellow vest” protest in France defies government crackdown
பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுடன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் இணைகின்றனர்
By Alex Lantier
4 December 2018
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிற்போக்குத்தனமான வரிகளுக்கு எதிராக தொடர்ந்து நான்காவது சனிக்கிழமையாக இந்த வார இறுதியில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், பிரான்ஸ் முழுமையிலும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாயிரக்கணக்கான மாணவர்கள் தத்தமது பள்ளி வளாகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.
திங்களன்று நாடெங்கிலுமான 200 பள்ளிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர், இது வெள்ளிக்கிழமை 50 ஆக இருந்ததில் இருந்து இந்த அதிகரிப்பைக் கண்டிருந்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவையும், மக்ரோனின் பெருநிறுவன-ஆதரவு பல்கலைக்கழக அனுமதி மறுசீரமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அவரது பெருந்தொகை ஆட்குறைப்புகள், மற்றும் கட்டாய இராணுவ சேர்ப்பை மீண்டும் திணிப்பதற்கான அவரது திட்டங்கள் ஆகியவற்றுக்கான தமது எதிர்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
அதேநாளில், பல டஜன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தமது வேலை நிலைமைகளிலான மாறுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நாடாளுமன்றத்திற்குச் செல்லும் ஒரு பாலத்தை முடக்கினர். ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாய் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிலாளர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக முகநூலில் தகவல்கள் சுற்றிவருகின்றன.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாரிஸில் ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர்
மஞ்சள் சீருடை அணிந்த போராட்டக்காரர்கள் பிரான்சில் மட்டுமல்லாது, பெல்ஜியம் மற்றும் பல்கேரியாவிலும் -இங்கு அவர்கள் முக்கிய சாலைகளில் தடையரண்களை அமைத்திருக்கின்றனர்- மற்றும் நெதர்லாந்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். மக்ரோனுக்கும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்புக்கும் எதிர்ப்பு ஐரோப்பாவெங்கிலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் மத்தியில் பெருகி வந்திருந்த கோபமானது, சமத்துவமின்மை, இராணுவவாத அரசியல் அத்தோடு மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டிருக்கும் போலிஸ் படைகளின் கொடூரத்திற்கு எதிராகவும் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையில் மோதல்கள் நடந்ததன் பின்னர், பாரிஸின் கிழக்கு புறநகர் பகுதியில் இருக்கும் 20 உயர்நிலைப் பள்ளிகளிலும், பாரிஸில் இன்னுமொரு ஏழு பள்ளிகளிலும், Bordeaux இல் 17 பள்ளிகளிலும், Montpellier இல் ஐந்து பள்ளிகளிலும், Lyon இல் பல பள்ளிகளிலும், Dunkerque இல் பல பள்ளிகளிலும், Toulouse இல் ஏராளமான பள்ளிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆயிரக்கணக்கான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் Toulouse, Dijon, Nice, Pau மற்றும் Limoges இல் -இங்கு விவசாயிகள் போலிஸ் நிர்வாக அலுவலகத்தின் முன்பாக சாணத்தைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்- ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
ோராட்டக்காரர்களை முன்னேறவிடாது தடுக்கும் போலிஸ் படையின் ஒரு பகுதியினர்
உயர்நிலைப் பள்ளியின் முதுநிலை மாணவரில் ஒருவரான லியா “உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலான சீர்திருத்தங்களுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்” என்றார். “நாங்களும் ‘மஞ்சள் சீருடை’ இயக்கத்தின் பகுதியாகவே இருக்கிறோம்; நாங்கள் எமது வருங்காலம் குறித்து கவலை கொண்டிருப்பதால் இந்த மஞ்சள் சீருடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம்.”
“வகுப்பறைகள் நிரம்பி வழிகின்றன, ஆனாலும் நாங்கள் ‘மஞ்சள் சீருடை”களை ஆதரிக்கிறோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நாங்களும் எரிபொருளுக்கும் பணம் செலவிட வேண்டியிருக்கும். படித்து நாங்கள் எதையும் சம்பாதிக்கப் போவதில்லை” என்றார் இன்னொரு மாணவர்.
ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களுடன் போலிஸ் படைகள் வன்மையாக மோதி வருகின்றன, பல நகரங்களில் கைகலப்புகள் வெடித்திருக்கின்றன. பாரிஸில் Aubervilliers இல் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் போலிசுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பேருந்து நிறுத்துமிடங்களும் கார்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, Chelles மற்றும் Gagny யிலும் வன்முறை ஏற்பட்டது. Dijon இல் ஆசிரியர்கள் மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவை அறிவித்தனர்.
Aubervilliers இல் Jean Pierre Timbaud பாடசாலை வீதியை தடுக்கும் போலிஸ் படையின் ஒரு பகுதியினர்
துலூஸில், Arenes பகுதியில் மாணவர்களுக்கும் போலிசுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதில் எட்டு பேர் காயமடைந்தனர், போலிஸ் 11 உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கைது செய்தது. துலூஸ் மேயரான Jean-Luc Moudenc நகரில் பல இரயில் நிலையங்களை மூடினார், ஆர்ப்பாட்டங்களுக்கு “தீவிர இடது”களே காரணம் என்று கண்டனம் செய்தார், ஒரு அவசரகால சட்டத்தை மீண்டும் திணிப்பதை பரிசீலனை செய்ய அரசுக்கு அழைப்புவிடுத்தார்.
இதனிடையே, வங்கியாளர்-ஜனாதிபதி மக்ரோனுக்கு பெருவாரியான மக்களின் மறுதலிப்பு ஆழமடைந்து மட்டுமே செல்கிறது. முந்தைய நாளின் நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தை சோதிக்க ஞாயிற்றுக்கிழமையன்று Champs Élyséesக்கு மக்ரோன் வந்தபோது, அந்த வழியே சென்றவர்கள் பரிகசிப்புக் குரல் எழுப்பியதோடு “மக்ரோனே, இராஜினாமா செய்!” என்று முழக்கமிட்டனர்.
Brigitte Bardot மற்றும் Pamela Anderson போன்ற கலாச்சார ஆளுமைகளும் “மஞ்சள் சீருடை”களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பாமீலா ஆண்டர்சன் ட்விட்டரில் எழுதினார், “வன்முறையை நான் வெறுக்கிறேன்...ஆனால் பிரெஞ்சு -மற்றும் உலக- உயரடுக்கினரின் கட்டமைப்புசார்ந்த வன்முறையுடன் ஒப்பிடுகையில் இந்த மக்களின் வன்முறையும் ஆடம்பரக் கார்களை எரித்ததும் எல்லாம் எம்மாத்திரம்?”. ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆற்றல் “சமமான மற்றும் சமத்துவமான சமூகங்களை” கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
போலிஸ் கட்டவிழ்த்து விட்ட அதீத வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் குறித்து பார்த்தவர்களிடம் இருந்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மார்சையில் 80வயது மூதாட்டி ஒருவர் கண்ணீர் புகையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சன்னல் கதவுகளை மூடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் நேரடியாக அவரது முகத்தில் கண்ணீர் புகை குடுவை தாக்கியதில் காயமுற்று மருத்துவமனையில் மரணமடைந்தார். துலிஸில் ஸ்தம்பிக்கச் செய்யும் எறிகுண்டு போன்றதொரு பொருள் தலையில் தாக்கியதில் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இன்னும் கோமா நிலையில் இருந்து வருகிறார்.
Yannick Krommenacker என்ற ஒரு மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர், போராட்டத்தில் தனது அனுபவத்தை கூறுகின்ற ஒரு காணொளியை, “புரட்சியை நோக்கி நடைபோட்டு” (Marching for the revolution) என்ற தலைப்பில் பதிந்துள்ளார். அவர் கூறினார், “திட்டமிட்டு நான் அலைபேசி வைத்திருந்த எனது வலது கையில் பீன்-பேக்கினால் சுட்டார்கள். நான் கீழே விழுந்து விட்டேன். [போலிஸ்] என் முகத்தில் உதைத்தனர். ஒரு சில விநாடிகளுக்கு எனக்கு சுய உணர்வில்லை, அதன்பின் நான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். போலிஸ் என்னை 35 மணி நேரம் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது, ஆயினும் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதியப்படவில்லை, ஏனென்றால் நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்பது போலிசுக்கு நன்றாகவே தெரியும்.”
Krommenacker தன்னை கைது செய்து வைத்திருந்த போலிசாருக்கு எதிராக “ஆயுத வன்முறை” குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
போலிஸ் முகவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஊடுருவுவதை போலிஸ் சங்க நிர்வாகிகள் ஊர்ஜிதம் செய்தனர். “அதிவலது மற்றும் அதிஇடது இயக்கங்களில், ஊடுருவல்கள் மூலமாக நாங்கள் செயலூக்கத்துடன் தகவல்களை சேகரிக்கிறோம். ஆயினும் மஞ்சள் சீருடையாளர்கள் ஒரு புதிய மற்றும் கட்டமைப்பு குறைந்த இயக்கமாய் இருக்கின்றனர்” என்றார் போலிஸ் சங்க அதிகாரியான Guillaume Ryckwaert - ஆகவே இன்னும் அதிகமான மற்றும் அதிக தீவிரமான ஊடுருவல் தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும்.
மக்கள் கருத்தை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகத் திருப்புவதற்கும் பெருவாரியாக அமைதியான முறையில் நடந்து கொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்களை மதிப்பிழக்கச் செய்வதற்குமான நோக்கத்துடன் போலிஸ் ஆத்திரமூட்டலாளர்கள் வன்முறையைத் தூண்டுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்வினையானது, ஆளும் உயரடுக்கிடம் சிக்கன நடவடிக்கையையும் ஒடுக்குமுறையையும் தவிர பரந்த மக்களுக்கு கொடுப்பதற்கு வேறெதுவுமில்லை என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்களில் 80 சதவீதம் பேரால் நிராகரிக்கப்பட்டிருக்கிற ஒரு சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு உறுதியெடுத்துக் கொண்டிருக்கும் நிதிப் பிரபுத்துவத்தின் பிரதிநிதிகளிடம் ஒரு அவசரநிலையை மீண்டும் திணிப்பதற்கும் மக்களுக்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கும் அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த பதிலிறுப்பும் இருக்கவில்லை. இது விடயத்தில் ஜனநாயக உரிமைகள் நிறுத்தி வைக்கப்படுவதானது தொழிலாளர்கள் மீது வங்கிகளது கட்டளைகளைத் திணிப்பதற்கான மக்ரோனின் முயற்சிகளுடன் வெளிப்படையாகப் பிணைந்ததாக இருக்கும்.
ஒரு அவசரகால நிலையைத் திணிப்பதையும் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்வதையும் பரிசீலித்துக் கொண்டிருப்பதை ஏற்கனவே மக்ரோனின் அரசாங்கம் தெரியப்படுத்தி விட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் கிறிஸ்தோஃப் கஸ்டானேர் “ஒரு அவசரகாலநிலை குறித்து விவாதித்திருக்கிறார்” என்று அரசாங்க செய்தித்தொடர்பாளரான பெஞ்சமின் கிரிவோ ஞாயிறன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறினார், “குடியரசின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நேற்றைய நிகழ்வுகள் குறித்த ஒரு மதிப்பீட்டை முதலில் மேற்கொள்வர், அதன்பின் என்ன நடவடிக்கைகள் நாங்கள் எடுக்கலாம் என்பதைக் காண்பர்.”
Le Monde இல் Jérôme Fenoglio எழுதியிருக்கும் தலையங்கத்தில் போலிசுக்கு எதிராய் “மஞ்சள் சீருடையாளர்கள்” நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் “தயக்கமின்றி கண்டனம் செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியதோடு “கொந்தளிப்பும் வெறுப்பும் வெளிப்பாய்ந்து, தலைநகரின் வசதியானவர்கள் வாழும் பகுதிகளில், பல மணி நேரங்களுக்கு, சிந்திப் பரவியதை” கண்டனம் செய்தார். இயக்கத்தை தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கோரிய அவர், “இதுமாதிரியான ஒரு இயக்கத்தை உரியபாதையில் நடத்திச் செல்வதற்கு அவை இன்றியமையாதவை” என்று அறிவித்தார்.
உண்மையில், ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், “உரிய பாதையில் நடத்திச்செல்ல வேண்டும்” என்பதான கோரிக்கையே புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளது கோரிக்கையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், மக்ரோனின் சிக்கன நடவடிக்கைக்கான சமூக எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் குரல்வளை நெரிப்பதற்கும் ஒடுக்குவதற்குமே தொழிற்சங்கங்கள் முனைந்து வந்திருக்கின்றன, இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியில் எழுந்திருப்பது முற்றிலும் தர்க்கரீதியானதாகும்.
உண்மையில், பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் சில பிரிவுகள் “மஞ்சள் சீருடையாளர்கள்” வன்மையாக ஒடுக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நவ-பாசிஸ்டுகளுடன் நெருக்கமான தொடர்புடைய Police-Alliance விடயத்தில் இதுவே நடக்கிறது, இந்த சங்கம் “கிளர்ச்சித்தன்மையுடைய” ஆர்ப்பாட்டங்களைக் கண்டனம் செய்தது. ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு “இராணுவப் பிரிவுகளை” கொண்டுவர அது அழைப்பு விடுத்தது.