Print Version|Feedback
European powers condemn Trump’s withdrawal from Syria
ட்ரம்ப் சிரியாவிலிருந்து படைகளை மீளப்பெறுவதை ஐரோப்பிய சக்திகள் கண்டிக்கின்றன
By Johannes Stern
24 December 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை மீளப்பெற்றது, அதனைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறைச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் இராஜினாமா செய்தது போன்றவை ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து கடுமையான பதிலிறுப்புக்களைத் தூண்டியுள்ளன. இது குறித்து, ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்து, பின்னர் பெரும்பான்மையாக இன்னும் கூடுதலான சுயாதீனமான ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அழைப்புடன் தமது பிரதிபலிப்பை காட்டின. குறிப்பாக ஜேர்மனியில், முன்னணி அரசியல்வாதிகளும் ஊடகங்களும், ஒருவரையொருவர் விஞ்சிக்கொண்டு, ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) இன்னும் விரைவான மறுஇராணுவமயமாக்கத்திற்கும், ஒரு ஐரோப்பிய இராணுவப் படையை கட்டியெழுப்புவதற்கும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஐரோப்பிய அரசாங்கங்களை முற்றிலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்வகையிலேயே ட்ரம்பின் இந்த முடிவு வெளியாகியது. அவர்களது உத்தியோகபூர்வ அறிக்கைகளில், இந்த முடிவை அவர்கள் கடுமையாகக் கண்டித்து, சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) என அழைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போரிட வலியுறுத்துகின்றனர். “வெள்ளை மாளிகையின் இந்த முடிவு கவலையளிப்பதாக உள்ளது,” என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. IS என்பது “பிராந்திய அளவில் கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் எந்த வகையிலும் தோற்கடிக்கப்படவில்லை.” “அமெரிக்கர்கள், ஒரு அதீத அவசரமான முறையில் அதை திரும்பப் பெறமாட்டார்கள், மாறாக அவர்களது சொந்த மற்றும் ஏனைய துருப்புக்களின் பொறுப்புக்களை அவர்கள் நன்கறிவர்” என்று ஒருவர் நம்பலாம்.
கடந்த வாரம், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயக கட்சி) ஈராக்கிற்கு விஜயம் செய்து, அராபிய நாடுகளில் ஜேர்மனியின் பெரும் இராணுவ மற்றும் பொருளாதார தலையீட்டுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த சமயத்தில், அவரிடமிருந்தும் அதையொத்த பதில் தான் வந்தது. ஜேர்மனிக்கு மட்டுமல்லாது இந்த “திடீர் மாற்றம் அமெரிக்க பக்கத்திற்கும் அதிர்ச்சியூட்டுவதாகவே இருந்தது.” “இந்த முடிவின் விளைவு IS க்கு எதிரான போராட்டத்திற்கு தீங்கிழைக்கும் என்பதுடன், ஏற்கனவே எட்டியிருந்த சாதனைகளையும் சீர்குலைக்கும் எனும் ஆபத்து” உள்ளது. IS க்கு எதிரான போராட்டம் என்பது, “இராணுவரீதியாகவும் மற்றும் சிவில் வழிமுறையாகவும் கூட நீண்டகாலத்திற்கானது: ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கு எதிர்காலத்திலும் பின்பற்றக்கூடியதான பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒழுங்கு தேவைப்படுகிறது.” என்றார்.
லண்டன் மற்றும் பாரிஸ் அரசாங்கங்களும் கூட ட்ரம்பின் திட்டங்களை கண்டித்து, சிரியாவில் அவர்களது இராணுவத் தலையீடு கட்டாயம் தொடர வேண்டும் என்று அறிவித்தன. வியாழனன்று, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பின்வருமாறு தெரிவித்தார்: “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது பிரான்சுக்கு ஒரு முன்னுரிமை வாய்ந்ததாக உள்ளது. டேயிஸ் (IS) இன் பூகோள அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்த ஒரு நீண்ட கால கடமையாகவுள்ளது.” பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் டோபியாஸ் எல்வுட், ட்ரம்பின் இந்த முடிவுடன் தனது “கடுமையாக உடன்பாடின்மை.” தெரிவித்தார் அத்துடன் தனது டுவிட்டுரையில், IS ஆனது “ஏனைய வடிவங்களிலான தீவிரவாதத்திற்கு மாறியுள்ளதேயன்றி, அது குறித்த அச்சுறுத்தல் இன்னும் மிகுந்த உயிர்ப்புடன் தான் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த மீளப்பெறும் ஆணை குறித்து கடுமையான ஐரோப்பிய எதிர்வினைக்கு பல காரணங்கள் உள்ளன. சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் மீளப்பெற்றமை குறித்து, ஐரோப்பிய சக்திகள், முதலாவதாக அவர்களது சொந்த போர் திட்டங்களும் அதனால் ஆபத்திற்கு உள்ளாகுமே என்றுதான் கோபமடைகின்றன. 2003 ல் ஈராக்கிய படையெடுப்பு மற்றும் 2011இல் லிபியப் போர் ஆகியவற்றை போலல்லாமல், சிரியாவிற்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலைப் பொறுத்தவரையில், அனைத்து முக்கிய ஐரோப்பிய சக்திகளும் ஆரம்பத்தில் இருந்தே அதில் பங்கெடுத்துள்ளன. மேலும், பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை தூக்கியெறிந்து அதற்கு பதிலாக ஒரு மேற்கத்திய சார்பு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு அதை பதிலீடு செய்வதற்கான நோக்கத்திற்கும் அவர்கள் ஆதரவளித்தனர். 2012 ல், ஜேர்மன் SWP சிந்தனைக் குழாமுடன் இணைந்து ஜேர்மன் வெளியுறவு அலுவலகம், சிரிய எதிர்ப்பின் ஒரு பகுதியுடன் இணைந்து, “அந்த நாளுக்குப் பின்னர் (The Day After)” என்ற திட்டத்தை தொடங்கியதுடன், “அசாத்துக்குப் பிந்தைய ஒழுங்குமுறை குறித்த பார்வை” (“Vision for post-Assad order”) என்ற ஒன்றையும் வெளியிட்டது.
ஐரோப்பிய சக்திகள், அசாத்தின் வெற்றி தொடர்பாகவும், அதனை தொடர்ந்து அவரது கூட்டாளி நாடுகளான மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் பற்றியும் தற்போது அஞ்சுகின்றன. “குர்திஷ் இராணுவக்குழுக்கள் அல்லது சிரிய ஜனநாயக சக்திகள் என்றழைக்கப்படுபவை, […] சக்கரங்களுக்கு இடையில் சிக்கியுள்ளன என்ற யதார்த்தமான நிலையில், அசாத்தும் அவரது அரசாங்கமும் பலப்படுத்தப்பட்டு வருகின்றனர்,” என்று SWP இன் இயக்குநர் வொல்கர் பெர்த்தேஸ் Deutschlandfunk வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில் எச்சரித்தார். வடக்கு சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கில் உள்ள குர்திஷ் மற்றும் அரேபியர்களின் கூட்டாளிகள் “அதிகளவில் டமாஸ்கஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, சிரிய அரசின் டமாஸ்கஸின் கொடி, கிழக்கில் குர்திஷ் மாகாணங்களில் விரைவில் மீண்டும் பறக்கும்” என்பதாகும்.
ஐரோப்பிய சக்திகளின் கோபத்திற்கான மற்றொரு காரணம் உள்நாட்டு அரசியல் கவலைகளில் இருந்து எழுகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தை ஒத்ததாக, ஐரோப்பிய அரசாங்கங்களும் கூட, ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து வெளிப்படையான பொலிஸ் அரசுகளை ஸ்தாபிக்க “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போர்வையை பயன்படுத்தியுள்ளன. சிரியாவில் ஏகாதிபத்தியத் தலையீடு, இறுதியில் பயங்கரவாத வலைபின்னலை முன்கொண்டுவந்துள்ளதுடன், அது ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால விளைவுகளைக் கொண்ட தாக்குதல்கள் குறித்த ஒரு போலிச்சாட்டிற்கு சேவை செய்தது. ஐரோப்பா எங்கிலும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலைமைகளின் கீழ், பாரிஸ், லண்டன் மற்றும் பேர்லின் போன்றவை இந்த பிற்போக்குத்தன பிரச்சாரத்தை தீவிரப்படுத்த விரும்புகின்றன. சிரியாவில் IS “தோற்கடிக்கப்பட்டுவிட்டது” என்ற ட்ரம்பின் கூற்று இந்த திட்டங்களை கீழறுக்கிறது.
மிக அடிப்படையான மட்டத்தில், வாஷிங்டனின் சமீபத்திய அபிவிருத்திகள் மீதான ஐரோப்பிய பதிலிறுப்பானது அட்லாண்டிக் கடலுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள ஒரு ஆழ்ந்த பிளவை அம்பலப்படுத்தியுள்ளது. “சிரியாவிற்கு அப்பாலும் சேதம் தொடர்கிறது,” என்று பாரம்பரிய அமெரிக்க சார்பு தினசரி நாளிதழ் Die Welt குறிப்பிடுகிறது. “குர்திஷ் போன்ற நீண்டகால கூட்டாளிகள் ஒரே இரவில் தியாகம் செய்யப்படுகிறார்கள் என்றால், அமெரிக்காவை யார் நம்ப முடியும்? எந்தவித அமைதிக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க முடியும்? மேலும், எந்த ஆக்கிரமிப்பாளரை அது தடுக்க முடியும்?”
மேலும், Suddeutsche Zeitung பத்திரிகை பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறது: “அமெரிக்க ஜனாதிபதி, சிரியாவில் இருந்து துருப்புக்களை மீளப்பெற்றதுடன் சேர்த்து, உலகெங்கிலுமான அவரது கூட்டாளிகளையும் காட்டிக்கொடுத்துள்ளார்.” மேலும், “அசாதாரண ஆற்றலுடன் கூடிய கூட்டாளிகளைக் கொண்டு தற்போது ஐரோப்பிய தூண் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அத்துடன் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையின் திறனை செயல்படுத்தும் வகையிலான மேம்பாடுகளையும் உருவாக்க வேண்டும். அதற்கு பெரும் தொகையான பணமும் இன்னும் கூடுதலான அரசியல் உறுதியும் தேவைப்படும். அங்கு “அவை இரண்டுமே மிகக் குறைவாக இருக்கின்றன”. என்று குறிப்பிட்டது.
ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் இரண்டின் முன்னணி வெளியுறவுக் கொள்கை அரசியல்வாதிகளும் மேலதிக மறுஆயுதமயமாக்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர். ஒன்றியத்தின் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம்) வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளரான, ஜூர்கன் ஹார்ட், “மாட்டிஸின் இராஜினாமா” “வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு திருப்பமாக” உள்ளது என்று விவரித்தார். தற்போது, “Bundeswehr இல் முதலீடு செய்ய” வேண்டும் என்பதுடன், “2024 இல் இரண்டு சதவிகித இலக்கு எட்டப்பட வேண்டும்” என்பதை —அதாவது வருடத்திற்கு குறைந்தபட்சம் 75 பில்லியன் யூரோக்கள் என்ற அளவிற்கு இராணுவ செலவினங்களை அதிகரிப்பது— “தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.” மேலும், “இது ஏன் அவசியமானது என்று பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்” என்றும் அச்சுறுத்தும் வகையில் அவர் சேர்த்து கூறினார்.
பசுமைக் கட்சிக்கான பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் அமர்ந்துள்ள Agnieszka Brugger கூட, மத்திய கிழக்கில் அதிகரிக்கப்பட்ட ஐரோப்பிய தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார். “மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை குழப்பத்தை ஏற்படுத்துகின்ற” “ஒரு இழிவான ஆச்சரியமாக” ட்ரம்பின் பின்வாங்கல் உள்ளது. “ஐரோப்பாவால் என்ன முடியும், அல்லது அது என்ன செய்ய வேண்டும்? ஐரோப்பாவிற்கு அதற்கான ஒரு வாய்ப்பு உள்ளதா? ஜேர்மனிக்கு அதற்கான ஒரு வாய்ப்பு உள்ளதா?” என்றெல்லாம் நிருபர் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலிறுத்தார்: “ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக அதன் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்து, சிரியாவில் இன்னும் செயலூக்கமிக்க ஒரு பாத்திரமேற்க வேண்டும்.” எவரும் “இந்த கடினமான விவாதத்தில் இருந்து தப்பிவிட முடியாது.”
பேர்லினில் உள்ள அமெரிக்காவின் ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் ஐரோப்பிய வேலைத் திட்டத்தின் தலைவரான Jan Techau எழுதிய ஒரு சமீபத்திய கட்டுரை, ஆளும் வர்க்கத்தின் பேராசை கொண்ட பெரும் திட்டங்கள் பற்றி பொதுமக்களின் முதுகுக்கு பின்னால் விவாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது. “மூலோபாயத் திறன் மற்றும் உலக வலி. 2030ம் ஆண்டு வரை ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை” என்ற தலைப்பிட்ட கட்டுரையில், ஜேர்மன் “அதன் அளவு, ஆற்றல் மற்றும் ஐரோப்பாவிற்கான அதன் முக்கியத்துவம் போன்றவற்றை அடையாளம் கண்டு தாழ்மையுடன் அவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரு முன்னணிப் பாத்திரத்தை அது ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
மேலும் இதையும் தெரிவிக்கிறது: “ஒழுங்கை பராமரிப்பதற்கு அதிகபட்ச முயற்சியையும், மற்றும் பெரும் செலவினங்களையும் இன்றியமையாததாக்கும்.” இவையனைத்தும், “அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு ஆபத்தானவை என்றாலும் கூட, அவர்களால் பொதுமக்களுக்கு அவை மீண்டும் மீண்டும் விவரிக்கப்பட வேண்டும். அதற்கு மக்கள் செல்வாக்குள்ளதாக இல்லை என்றாலும், முன்னணி அரசு பிரமுகர்கள் தங்கள் அரசியல் வாழ்க்கையை அதற்காக பணயம் வைக்க வேண்டும். இதுவே ஜேர்மன் இராணுவத்தின் நிதி மற்றும் மனித வளங்களுக்கும் பொருந்தும். இரண்டு சதவிகித பாதுகாப்புச் செலவுகள் என்பது ட்ரம்பிற்காக தேவையில்லை, மாறாக அவருக்கு எதிரானது, ஏனென்றால், இப்படியான முதலீடுகள், அவர் ஒழிக்க விரும்பும் பல்முனைப்பட்ட அமைப்பு அடிப்படையிலான ஒழுங்கை திட்டவட்டமாக பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.”
ட்ரம்பிற்கு சில வகைகளிலான ஒரு முற்போக்கு பதிலாக ஜேர்மன் இராணுவவாதத்தின் மலர்ச்சியை சித்தரிக்க Techau முயற்சிப்பது என்பது முற்றிலும் பாசாங்குத்தனமானது. இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களிலும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான குற்றங்களைப் பற்றி அனைவரும் அறிவர். கடந்த இரண்டு தசாப்த காலங்களின் போக்கில், அமெரிக்காவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புப் போர்களில் ஜேர்மன் ஆளும் வர்க்கம் செயலூக்கத்துடன் ஈடுபட்டு வந்துள்ளது, என்றாலும் வெள்ளை மாளிகையில் தீவிர வலது பில்லியனரின் சிரிய கொள்கையை முக்கியமாக தற்போது வலதில் இருந்து விமர்சித்து வருகிறது. இந்த அபாயகரமான அபிவிருத்தியை தடுத்து நிறுத்த ஒரேயொரு வழி தான் உள்ளது: அது என்னவென்றால், தொழிலாள வர்க்க அடித்தளத்திலான ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதும், மற்றும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்காக போராடுவதும் ஆகும். இதற்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிரான, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் புரட்சிகர ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.