Print Version|Feedback
Sri Lankan plantation companies reject workers’ wage demand
இலங்கை பெருந்தோட்டத் கம்பனிகள் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையை நிராகரிக்கின்றன
By W.A. Sunil
11 December 2018
இலங்கையில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 100 வீத சம்பள அதிகரிப்பைக் கோரி டிசம்பர் 4 அன்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். அவர்கள் நாட்டின் தொழிலாள வர்க்கத்தின் மிக வறிய பகுதியினர் ஆவர். தற்போது அவர்களின் அடிப்படை தினசரி சம்பளம் 500 ரூபாய்கள் (2.80 டாலர்). அவர்கள் 1,000 ரூபா கோரி வருகின்றனர்.
தொழிலாளர்களுடன் நேரடி மோதலை சமிக்ஞை செய்துள்ள பெருந்தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையை மீண்டும் மீண்டும் நிராகரிக்கின்றனர். இந்த கோரிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் வருவாயையும் “மீறியது" என கடந்த வெள்ளியன்று இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்தது. "தோட்டங்களை மட்டுமன்றி, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முழு மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த தொழிற்துறையையும் பாதிக்கும் ஒரு கோரிக்கையை" அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது.
யடியந்தொட்ட சபுமல்கந்த தோட்ட தொழிற்சாலை முன்னால் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்.
தொழிலாளர் செலவினங்கள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், தேயிலை உற்பத்தி செலவினம் அதிகம் எனவும் கூறிக்கொள்ளும், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளும், கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஊதிய மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுச் செலவு மேலும் 20 பில்லியன் ரூபா அதிகரிக்கும் என அறிவிக்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களை கொடூரமான சுரண்டலுக்கு உட்படுத்துவதன் மூலம், தங்கள் இலாபங்களையும் தமது சர்வதேச கொள்வனவாளர்களையும் பாதுகாக்க வேண்டும், என்று தோட்ட உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள், தினசரி அடிப்படை ஊதியத்தை 20 சதவிகிதம் அல்லது 100 ரூபாயாலும், வருகைக்கான கொடுப்பனவை 33 சதவிகிதம், அதாவது 80 ரூபா வரையும் அதிகரித்து, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு மற்றும் விலை பங்கையும் சேர்த்த ஒரு ஊதிய அதிகரிப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
தொழிலாளர்கள் இதன் மூலம் 940 ரூபாவை மொத்தமாக சம்பாதிக்க முடியும் என்று முதலாளிகள் வாதிடுகின்றனர். இருப்பினும், ஊக்கக் கொடுப்பனவுகள் என அழைக்கப்படுபவை ஒரு வித்தை மட்டுமே. உடல்நல குறைவு, மோசமான வானிலை, நோய்கள் போன்ற பிற பிரச்சினைகளால், அந்த தொகையை சம்பாதிப்பது தொழிலாளர்களுக்கு கடினமாக உள்ளது.
முதலாளிகள் உண்மையில் கோரி வருவது என்னவென்றால், தற்போதைய தினசரி ஊதிய முறையை ஒழித்து, தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் நவீன குத்தகை-விவசாயிகளாக மாற்றியமைக்கும் "வருவாய் பங்கீட்டு" முறையை நடைமுறைப்படுத்துவதையே ஆகும்.
அந்த முறையின் கீழ் ஒவ்வொரு தொழிலாளி குடும்பத்துக்கும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகளை பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒரு நிலப்பகுதி ஒதுக்கீடு செய்யப்படும். நிறுவனத்தால் வழங்கப்படும் உரங்கள் மற்றும் வேளாண்-இரசாயனங்களுக்கான செலவினங்களையும் கம்பனியின் இலாபத்தையும் கழித்துக்கொண்ட பின்னர், குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு உட்பட தங்கள் குறைந்தபட்ச சமூக நலன்களையும் தொழிலாளர்கள் இழக்க நேரிடும்.
இந்த புதிய முறையின் கீழ் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு 80,000 ரூபாய்களை சம்பாதிக்கலாம் என்று கம்பனிகள் கூறுகின்றன. இது ஏற்கனவே ஒரு பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ள மாதுரட்டா மற்றும் களனி வெளி போன்ற பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், இந்த கூற்றுக்களை மறுத்துள்ளனர். பிள்ளைகள் உட்பட முழு குடும்பங்களும் கட்டாயத் தொழிலாளர்கள் போல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையிலும், தமது வாழ்க்கை செலவினங்களை சமாளிப்பதற்குப் போதுமான வருமானத்தை தம்மால் சம்பாதிக்க முடியவில்லை என்று அவர்கள் புகார் செய்துள்ளனர்.
உலகளாவிய தேயிலை நிறுவனங்களின் ஒரு சங்கிலிக்கு இலாபத்தை வழங்கும் தேயிலை தொழிற்துறை, உலகில் மிக மோசமாக உழைப்பைச் சுரண்டும் ஒரு தொழிற்துறையாகும். டாட்டா குளோபல் பீவரேஜஸ், யூனிலீவர், ட்வினிங்ஸ், நெஸ்ட்லே, ஐடிஓ இஎன் ஐஎன்சி, பாரி'ஸ் டீ, டில்மா, செலஸ்டியல் சீசனிங்ஸ், ஹார்னிஸ் அன்ட் சன்ஸ், ரிபப்லிக் ஒஃப் டீ ஆகியவை முதல் பத்து நிறுவனங்கள் ஆகும்.
மே மாதம் வெளியிடப்பட்ட ஷெஃபீல்ட் பல்கலைக்கழக ஆய்வுத் தாளின் படி, "உலகளாவிய தேயிலை மற்றும் கொகோ விநியோக சங்கிலிகளின் அடித்தளத்தில், பலாத்கார உழைப்பு உட்பட சுரண்டல் பரவலாகக் காணப்படுகிறது". இந்த ஆய்வின்படி, முதலாளிகள் "குறைவான ஊதியங்கள்" மற்றும் "குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளை வழங்காமல்," இலாபங்களைச் சுரண்டுகின்றன என அந்த கற்கை கூறுகின்றது.
ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜெனீவ் லெபரோன், ஊடகங்களுக்கு கூறியதாவது: "நாங்கள் ஆவணப்படுத்திய சுரண்டல் நிலைமை ஒரு சில ’மோசமான நபர்களால்’ எப்போதாவது நடப்பவை அல்ல. மாறாக, இது உலகளாவிய விவசாய விநியோக சங்கிலிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு இயக்கத்தின் விளைவே ஆகும்.
"இந்த விநியோக சங்கிலிகளின் தலைமையில் உள்ள உச்ச இலாபம் கொண்ட நிறுவனங்கள், விநியோகத்தர்கள் மீது விலைகுறைப்புக்காக அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இது தேயிலை மற்றும் கொக்கோ தயாரிப்பாளர்களுக்கு செலவுகளை குறைக்க தீவிரமாக நெருக்குவதோடு, மலிவான மற்றும் சில நேரங்களில் பலாத்கார உழைப்புக்கான ஒரு வணிக 'கோரிக்கையை' உருவாக்குகிறது."
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது "முழு மதிப்புச் சங்கிலியை" பாதிக்கும் என்று பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை வலியுறுத்துகின்ற போது, தொழிலாளர்களை அதிகபட்ச சுரண்டலுக்கு உள்ளாக்கும் "இந்த விநியோக சங்கிலிகளின் தலைமையில் உள்ள உச்ச இலாபம் பெறும் நிறுவனங்களையே" குறிக்கின்றது.
இலங்கையிலுள்ள தேயிலைத் தொழிற்துறையானது கென்யா, சீனா, இந்தியா மற்றும் பங்களாதேசம் போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்தும் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. உலக தேயிலை உற்பத்தியில் இலங்கையின் பங்கு 2000ல் 10.5 சதவிகிதத்திலிருந்து கடந்த ஆண்டு 5.4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
பொருளாதாரத் தடைகள் அல்லது நாணயப் பிரச்சினைகள் காரணமாக ஈரான், துருக்கி மற்றும் ரஷ்யா உட்பட முக்கிய சந்தைகளின் வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சராசரியாக ஏற்றுமதி விலை 4 சதவிகிதம் சற்றே அதிகரித்திருந்தாலும், கொழும்பில் உள்ள தேயிலை சந்தையில் 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சராசரி விலை 2.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி விலையானது 2014ல் இருந்து 23 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் அறிக்கை, தொழிற்சங்கங்களை "தொழில்துறையின் சிறந்த நலனுக்காக வேலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியது. அதாவது, இலாப நலன்களுக்காக தொழிலாளர்களின் நலன்களை அடிபணியச் செய்வதாகும். தொழிற்சங்கங்கள் தங்கள் உண்மையான நடைமுறை மூலம் அதை செய்ய தங்கள் உறுதிப்பாட்டை காட்டியுள்ளன. ஏனைய துறைகளில் போலவே, தோட்டத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் மீது தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன. உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊதிய முறையை செயல்படுத்த தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
ருவன்வெல்ல தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்.
ஆறுமுகம் தொண்டமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தற்போதைய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதன் நோக்கம், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்து வருவது சம்பந்தமாக நியாயமாக கோபமடைந்துள்ள தொழிலாளர்களின் சீற்றத்தை ஆவியாக்கி விடுவதே ஆகும்.
ரணில் விக்கிரமசிங்கவை அகற்றி விட்டு அக்டோபர் 26 அன்று பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா. தலைவர்கள் அணிசேர்ந்து கொண்டனர். இராஜபக்ஷவின் கீழ் ஒரு முக்கிய அமைச்சுப் பதவியை தொண்டமான் பெற்றார்.
விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் (ஐ.தே.மு), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை பங்காளிகளாக உள்ளன. அந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களான முறையே ப. திகாம்பரம், மோனோ கணேசன் மற்றும் பி. ராதகிருஷ்ணன் ஆகியோர், ஐ.தே.மு. அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். 1,000 ரூபாய் கோரிக்கை சாத்தியமற்றது என்று கூறி, இந்த தொழிற்சங்கங்கள் தற்போதைய வேலைநிறுத்தத்தில் சேர மறுத்துவிட்டன. இருப்பினும், அந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்துகொண்டனர்.
தோட்டத் தொழிலின் நெருக்கடி முதலாளித்துவ நெருக்கடியின் நேரடி விளைவு ஆகும். தொழிலாளர்கள் அது பொறுப்பல்ல. யார் தோட்டங்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும், யாருடைய நலன்களுக்காக தோட்டங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்? போன்றவை வேலைநிறுத்தம் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் முன்னுள்ள முக்கியமான பிரச்சினைகளாகும். பெருந்தோட்டங்கள் அனைத்தும், தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதே இதற்கான ஒரே பதில் ஆகும்.
முக்கிய தொழில்கள், வங்கிகள் மற்றும் பிற பொருளாதார நரம்பு மையங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம், சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் மட்டுமே இதை இட்டு நிரப்ப முடியும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து முறித்துக் கொண்டு, தங்கள் சொந்த சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பதோடு ஏனைய நாடுகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன் தங்கள் போராட்டத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்.