Print Version|Feedback
The resignation of General Mattis and America’s crisis of class rule
ஜெனரல் மாட்டீஸ் இராஜினாமாவும், அமெரிக்காவினது வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்
Bill Van Auken
22 December 2018
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் வியாழக்கிழமை இராஜினாமா செய்தமை இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் முன்னணி அங்கத்தவர்கள், ஊடகங்கள் மற்றும் முன்னாள் உயர்மட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து பீதியான மற்றும் அண்மித்து உணர்ச்சிகரமான ஒரு எதிர்வினையைத் தூண்டியுள்ளது.
நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படையின் முன்னாள் தளபதியான மாட்டீஸ், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை, குறிப்பாக இரண்டாம் உலக போருக்குப் பின்னர் வாஷிங்டன் ஸ்தாபித்த அமெரிக்க கூட்டணிகளை ஆதரிக்க தவறியதற்காக அல்லது "தீங்கு விளைவிப்பவர்கள் மற்றும் மூலோபாய போட்டியாளர்களை" அதாவது சீனா மற்றும் ரஷ்யாவைப் போதுமானளவுக்கு எதிர்க்க தவறியதற்காக அவரைக் குறைகூறி, அவரது கொள்கைகள் மீதான ஒரு பகிரங்கமான கண்டனத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கடிதம் ஒன்றில் அவர் இராஜினாமாவை அறிவித்தார்.
அக்கடிதத்தைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்னதாக, மாட்டீஸ் 50 நகல்கள் அச்சடித்து பென்டகனின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்ததாக செய்திகள் தெரிவித்தன.
சிரியாவில் இருந்து 2,000 க்கு கூடுதலான மொத்த அமெரிக்க துருப்புகளையும் திரும்பப் பெறுவதற்கு புதன்கிழமை பகிரங்கமாக வெளியிட்ட ட்ரம்பின் உத்தரவும், மற்றும் ஆப்கானிஸ்தானில் 17 க்கும் அதிகமான ஆண்டுகளாக இன்னமும் போரில் உள்ள அமெரிக்க படைகளில் குறைந்தபட்சம் பாதியை —அண்மித்து 7,000 சிப்பாய்களை— திரும்பப் பெறுவதென அவர் முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்திகளுமே அந்த இராஜினாமாவுக்கான உடனடி தூண்டுதலாக இருந்தது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் நீடித்த அமெரிக்க போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுத்தான், ட்ரம்ப் 2016 இல் அவரின் "அமெரிக்கா முதலில்" வேலைத்திட்டத்தைப் பிரச்சாரம் செய்தார். இந்த வனப்புரை அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவரும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் விருப்பத்திற்குரிய வேட்பாளராக இருந்த ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அந்த பில்லியனிய ரியல் எஸ்டேட் ஊகவணிகருக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தது, ஹிலாரி கிளிண்டனின் தொழில் வாழ்க்கை கடந்த கால அமெரிக்க போர்களுடனும் மற்றும் சிரிய தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கும் அத்துடன் ரஷ்யாவுடன் நேரடியான மோதலுக்குமான முன்னேறிய தயாரிப்புகளுடனும் பிணைந்திருந்தது.
இந்த பிரச்சார வாக்குறுதிகள் மீது நடவடிக்கை எடுப்பதென்ற ட்ரம்பின் முடிவு இப்போது அவர் ஜனாதிபதி பதவியைச் சுற்றி ஆழமடைந்து வரும் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது, அவரின் ஜனாதிபதி பதவி பல்வேறு மோசடிகள் மற்றும் விசாரணைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதுடன், அவையே கூட, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள், குறிப்பாக வெளியுறவு கொள்கை மீதான கடுமையான முரண்பாடுகளால் உந்தப்பட்டுள்ளன.
இந்த துருப்புச்சீட்டை ட்ரம்ப் பயன்படுத்துகிறார் என்றால், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து துருப்புகளைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவது பரந்த ஆதரவை வழங்கும் என்பதுடன், அதற்கு அங்காலும், புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதம் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி சுவர் எழுப்புவதற்கான அவரின் இடைவிடாத முறையீட்டை அவர் வளர்க்க முயற்சித்துள்ள அதிவலதிடம் இருந்து ஆதரவைப் பெறும் என்பதையும் அவர் அறிந்துள்ளார் என்பதால் ஆகும்.
ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த முடிவில்லா போர்களுக்கு அமெரிக்க உழைக்கும் மக்களிடையே ஆழ்ந்த விரோதம் உள்ளது. “பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களுக்கு" எதிராக பாதுகாத்துக் கொள்வதற்காக என்று நியாயப்படுத்தப்பட்ட மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" என்று கூறி தொடுக்கப்பட்ட, “மனித உரிமைகளைத்" தாங்கிப் பிடிப்பதற்காக என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்ட, இத்தகைய போர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, ஒட்டுமொத்த சமூகங்களும் சீரழிக்கப்பட்டதுடன், ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டன.
அதற்கெல்லாம் வாஷிங்டன் எதை எடுத்துக்காட்ட வேண்டியிருக்கும்? ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகள் சண்டையிட்ட பின்னர், தாலிபான் 2001 க்குப் பிந்தைய எந்தவொரு காலத்திலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததை விட அதிகமான பகுதிகளை இப்போது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அமெரிக்க துருப்புகள் மற்றும் பிற வெளிநாட்டு துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்ப பெறுவது உள்ளடங்கலாக, அமெரிக்கா தாலிபான் பிரதிநிதிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
ஈராக் நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், சதாம் ஹூசைனைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா 2003 இல் தொடங்கிய போரின் விளைவாக அது பிரிவினைவாத போக்குகளால் ஆழமாக பிளவுபட்டுள்ளது. மௌம்மர் கடாபி கொல்லப்படுவதில் போய் முடிந்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போர் நடத்தப்பட்ட லிபியா, குழப்பநிலையில் சிக்கி, எதிர்விரோத ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான தொடர்ச்சியான சண்டையால் சீரழிந்துள்ளது. அடுத்து சிரியாவில், அல்-கொய்தா தொடர்புபட்ட கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கியதன் மூலமாக பஷார் அல்-அசாத்தைத் தூக்கிவீசுவதற்கான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளது என்றாலும், அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.
2004 இல் ஈராக் நகரமான பல்லூஜாவை மீளப்பெறுவதற்காக இரத்தக்களரியான அமெரிக்க நடவடிக்கைகளை வழிநடத்தியதற்காகவும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு உத்தரவிட்ட போது அவர் துருப்புகளுக்கு ஆப்கானியர்களைக் "கொல்வது இந்த நரகத்தில் மிகவும் குதூகலமானது" என்று ஊக்குவித்ததற்காகவும் "வெறி நாய்" என்று புனைபெயர் பெற்ற ஜெரனல் மாட்டீஸ், இப்போது அமெரிக்காவின் மாவீரர், ஸ்திரப்பாடு மற்றும் சீரிய சிந்தனையில் உறுதியாக இருப்பவர், இவரின் துறைதான் அரசு கப்பலை மூழ்காமல் காப்பாற்றி வைத்துள்ளது என்று புகழப்படுகிறார்.
“மாட்டீஸ் வெளியேறுவதுடன், மிரண்டுவிட்டார்,” என்று தலைப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட் வெள்ளியன்று ஒரு தலையங்கம் வெளியிட்டது. பாதுகாப்புச் செயலர் வெளியேறுவது "ஜனாதிபதி ட்ரம்பின் பொறுப்பற்ற ஒரு ஜோடி திடீர் முடிவுகளைத் தொடர்ந்து" வந்ததாக அது குறிப்பிட்டது: "சிரியாவிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் வெளியேற்றுவது மற்றும் ஆப்கானிஸ்தானில் படைகளை 50 சதவீதமாக குறைப்பது,” “திரு. ட்ரம்ப் இன்றியமையா நலன்களுக்கு அவரால் ஆனமட்டும் பைத்தியக்காரத்தனமாகவும் அக்கறையற்றும் சேதங்களைச் செய்வதாக தெரிகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
இதேபோல, நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் “ஜிம் மாட்டீஸ் சரியாக இருந்தார்: இனி அமெரிக்காவை யார் காப்பாற்றுவார்?” என்று பீதியூட்டும் தலைப்பை ஏந்தியிருந்தது. ட்ரம்ப் “சிரியாவிலிருந்து ஒட்டுமொத்த 2,000 அமெரிக்க தரைப்படை துருப்புகளையும் விரைவாக திரும்ப பெறுவதற்கு உத்தரவிட்டு" மாட்டீஸ் மற்றும் ஏனைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை "உதாசீனப்படுத்தியதற்காக" ட்ரம்புக்கு அது கண்டனம் வெளியிட்டது.
ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தோற்றப்பாட்டளவில் மாட்டீஸின் இராஜினாமா குறித்து உள்ளுக்குள் குமுறியவாறு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் அமெரிக்க போர்களை எந்த விதத்திலும் நிறுத்துவதைத் தீவிரமாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தனர்.
கடந்த ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களது அங்கத்தவர்கள் மாட்டீஸிற்கான அவர்களின் ஆதரவையும், துருப்புகளை ட்ரம்ப் திரும்ப பெறுவது மீதான எதிர்ப்பை இன்னும் அதிகமாகவே ஒலித்திருந்தார்கள். முன்னாள் சிஐஏ இயக்குனரும், பாதுகாப்பு செயலரும் மற்றும் வெள்ளை மாளிகையின் இராணுவத் தலைமை தளபதியாக இருந்தவருமான லியோன் பானெட்டா, “இந்நாட்டில் இப்போது நாம் தொடர்ந்து குழப்ப நிலையில் இருந்து வருகிறோம். இது ட்ரம்பின் கவனத்தை ஈர்ப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்கிறது என்றாலும், இது நாட்டை நரகமாக்கி வருகிறது,” என்று கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டது.
ஒபாமா நிர்வாகத்தின் போது துணை வெளியுறவுத்துறை செயலராக இருந்தவரும், பாசிசவாத தலைமையிலான ரஷ்ய-விரோத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஊக்குவிக்க உக்ரேனில் அவர் செய்த தலையீட்டால் இழிபெயர் பெற்றவருமான விக்டோரியா நூலாந்து பின்வருமாறு அறிவித்தார்: “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியாவிலிருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் திரும்ப பெறுவதென்ற அவரின் முடிவைக் கொண்டு, ஜனாதிபதி பஷார் அசாத், இஸ்லாமிய அரசு, கிரெம்ளின் மற்றும் தெஹ்ரானுக்கு மிகப் பெரிய புத்தாண்டு பரிசு வழங்கியுள்ளார்.”
இந்த ஜனநாயக கட்சியினரும் முன்னாள்-அரசு அதிகாரிகளும் யாருக்காக பேசுகிறார்கள்? நிச்சயமாக அமெரிக்க மக்களுக்காக இல்லை, மிகப் பெரும்பான்மையான மக்கள் நடத்தப்பட்டு வரும் அமெரிக்க போர்களை எதிர்க்கின்றனர்.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் முன்னாள்-அரசு அதிகாரிகள் யாருமே இத்தகைய இராணுவ தலையீடுகளின் குற்றகரமான தன்மையைக் குறித்து எதுவும் கூறுவதில்லை. சிரியாவில் அமெரிக்க துருப்புகள் ஒரு “ஸ்திரப்படுத்தும் படையாக” இருப்பதாக இவர்கள் வாதிடும் நிலையில், அங்கே, நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல், ஐ.நா. உத்தரவு இல்லாமல் அல்லது சிரிய அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த சட்டவிரோத தலையீடு ஒட்டுமொத்த நகரங்களையும் சீரழித்து, பிரிவினைவாத பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.
அதன் நோக்கம் ISIS ஐ தோற்கடிப்பதாக இருக்கவில்லை, மாறாக மூன்றில் ஒரு பங்கு சிரியா எல்லையுடன், மிக முக்கியமாக அந்நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை உள்ளடக்கி, ஓர் அமெரிக்க காபந்து அரசை துண்டாக உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறிய முடியாத நிலையில், அமெரிக்கா தொடர்ந்து சிரியாவைச் சூறையாடி உள்ள அதேவேளையில் டமாஸ்கஸ் அரசாங்கம் ஆதரித்துள்ள ஈரானிய-ஆதரவிலான படைகள் மற்றும் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.
ட்ரம்புக்கு எதிராக செயல்படுமாறு ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் பகிரங்கமாக இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு முறையீடு செய்து வருகின்றனர். ட்ரம்பின் முடிவால் அமெரிக்க இராணுவ தளபதிகள் "சீற்றமடைந்திருப்பதாக" வெள்ளிக்கிழமை NBC செய்திகள் குறிப்பிட்டது, அதேவேளையில் வாஷிங்டன் போஸ்ட் பெயர் வெளியிட விரும்பாத "நிர்வாகத்தின் முன்னாள் மூத்த அதிகாரி" கூறியதாக மேற்கோளிட்டு, “அங்கே ஒரு தலையீடு இருக்கப் போகிறது. ஜிம் மாட்டீஸ் ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்,” என்று குறிப்பிட்டது. இவை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கான மொழியாகும்.
சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்பான ட்ரம்பின் முடிவுகள் மத்திய கிழக்கில் அல்லது பூமியின் பிற இடங்களில் ஒரு புதிய சமாதானத்திற்கான சகாப்தத்திற்கு அறிகுறி என்று நம்பும் எவரொருவரும் கடுமையான அதிர்ச்சிகளை சந்திக்க நேரிடும்.
அனைத்திற்கும் முதலாவதாக, தசாப்தங்களாக இடைவிடாது அது பின்பற்றி வந்துள்ள ஒரு கொள்கையான, மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியா மீதான அதன் கட்டுப்பாடுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமான பொறுப்புறுதி, ஜனாதிபதி உத்தரவால் மாறிவிடும் என்பதெல்லாம் மிக தொலைதூரத்தில் உள்ளது.
செனட் உளவுத்துறை குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது முக்கிய நபர் செனட்டர் மார்க் வார்னர் ட்வீட் செய்தார், “சிரியா சம்பந்தமாக ஜனாதிபதியின் குழப்பம்நிறைந்த அணுகுமுறையை நாம் பார்க்கிறோம், நமது தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது அது ஜனாதிபதியின் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களுக்கு உள்ளாக்கப்படுகிறது.”
எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்ப் —அவர் மீது தொடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினையாற்றி— ஒவ்வொரு நாளும் கொள்கைகள் மற்றும் தந்திரோபாயங்களை மாற்றி வருகிறார். இன்று அவர் என்ன அறிவிக்கிறாரோ, அது நாளை மறுத்தளிக்கப்படலாம்.
ஆனால் ட்ரம்பின் வெளியுறவு கொள்கையில் உறுதியாக காணக்கூடியதாக இருப்பதைக் கொண்டு பார்க்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்க நிலைப்பாட்டைப் பேணுவதற்கு அத்தியாவசியமானதாக கருதுகின்ற ஆசிய பசிபிக் பிரதேசத்தின் மேலாதிக்கத்தை, அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பிரதான முன்னுரிமையாக நம்புகின்ற, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளது பாரம்பரிய "அமெரிக்கா முதலில்" நோக்குநிலையை மீளவலியுறுத்துவதாக உள்ளது. இரண்டாவது, கூட்டணிகளின் வலையமைப்பை —முக்கியமாக அமெரிக்காவை ஐரோப்பாவுடன் பிணைத்து வைப்பனவற்றை— அமெரிக்க நிதியியல் மற்றும் வர்த்தக நலன்களையும் சேர்த்து, அமெரிக்க கொள்கைகள் மீது ஏற்றுக் கொள்ளவியலாத கட்டுப்பாடுகளைத் திணிப்பதாக பார்க்கிறது.
ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவு கொள்கையை அடிப்படையில் முற்றிலும் பரிமாற்றத்திற்குரிய ஒன்றாக அணுகுகிறார். அவர் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இராணுவ தலையீடுகளை செலவுகளின் அடிப்படையில் ஆதாயமற்றதாக பார்க்கிறார். ஆனால் தென் சீனக் கடல் மற்றும் தாய்வான் ஜலசந்தி ஒரு பிரதான புதிய போர் வெடிக்க செய்வதற்கான மிகவும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளாக உள்ள நிலையில், சீனாவுக்கு எதிரான அவரின் வர்த்தக போர் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் அமெரிக்க போர் எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு அவர் முழுமையாக தயாராக உள்ளார்.
அமெரிக்க போர்கள் "தலைமுறை தலைமுறையாக, அமெரிக்க இரத்தத்தைச் சிந்தி" நடத்தப்பட்டதென எரிச்சலூட்டும் விதத்தில் CNN இல் தோன்றி கண்டித்த ட்ரம்பின் பாசிசவாத புலம்பெயர்ந்தோர்-விரோத ஆலோசகர் ஸ்டீபன் மில்லரும் மற்றும் ட்ரம்பும், அவர்களின் பிற்போக்குத்தனமான, தொழிலாள வர்க்க விரோத திட்டநிரலுக்கு ஆதரவை வென்றெடுக்க போர்-எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்ள முடிகிறது என்றால் அதற்கு ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது தான் காரணம்.
அதுபோன்றவொரு இயக்கம் இல்லாமல் இருப்பதற்கான காரணம், இதில் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளில் இருந்து குறிப்பாக சிரியாவில் அமெரிக்க இராணுவவாதத்தை ஆதரித்துள்ள சர்வதேச சோசலிச அமைப்பு, சோசலிச மாற்றீடு மற்றும் ஏனையவை வரையில் பல்வேறு போலி-இடது அமைப்புகள் சிறியளவிலான பாத்திரம் வகித்திருக்கவில்லை. இந்த குழுக்கள் சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களை ஒரு "ஜனநாயக புரட்சியை" முன்னெடுப்பதாகவும், அதேவேளையில் "மனித உரிமைகளைக்" காப்பாற்றுவதற்காக என்றும் "ரஷ்ய ஏகாதிபத்தியத்தை" எதிர்ப்பதற்காக என்றும் அவற்றை ஊக்குவித்துள்ளன.
மாட்டீஸின் இராஜினாமா இத்தகைய கூறுபாடுகளைச் சிக்கலில் கொண்டு வருகிறது. உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை வாய்ந்த அடுக்கின் சமூக நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில், இவற்றின் வருவாய் பங்குச்சந்தை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வச்செழிப்புடன் பிணைந்து அதிகரிக்கிறது என்கின்ற நிலையில், இவை குர்திஸ்டுகளின் தலைவிதி என்றும் மற்றும் பிற சாக்குபோக்குகளையும் காரணங்காட்டி, அவர்கள் அமெரிக்க போர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்கவியலாமல் முன்னெடுப்பார்கள்.
வரவிருப்பதற்கான ஒரு அறிகுறியாக, வலதுசாரி #MeToo இயக்கத்தின் ஞானத்தாயாக விளங்கும் மியா ஃபர்ரொவ் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “ட்ரம்ப் சிரியாவிலிருந்து துருப்புகளைத் திரும்ப எடுப்பதால், ஒரு மனிதநேய பேரழிவை நிறுத்துவதற்கு மிகப்பெரியளவில் உலகம் தவறி வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அமெரிக்கா வெளியேறுவது ரஷ்யாவுக்கும், இப்போதும் செயலூக்கத்துடன் உள்ள ISIS, ஈரான் & அசாத்திற்கும் சாதகமாகிறது.” “ட்ரம்ப் நிர்வாகத்தில் ஒரு நியாயபூர்வமான நபர் இருந்தார் என்பதற்கு ஜெனரல் மாட்டீஸ் நமது சௌகரியத்திற்கான கடைசி ஆதாரநபராக இருந்தார்,” என்பதையும் அப்பெண்மணி சேர்த்துக் கொண்டார்.
போலி-இடதுகள், ஆளும் வர்க்கத்தினது எந்தவொரு கன்னையிடம் இருந்தும் அரசியல் சுயாதீனம் கொண்டவை இல்லை. அது ஜனநாயக கட்சியிடம் செல்வாக்கு பெற முயன்று வருவதுடன், தவிர்க்கவியலாமல் ஏகாதிபத்திய போருக்குப் பின்னால் அணிதிரள்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP), வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கை மீது கன்னைகளுக்கு இடையிலான இந்த கடுமையான சண்டையில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளையும் முற்றிலுமாக எதிர்க்கிறது. ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும், சர்வாதிகாரத்தையா அல்லது போரையா எந்த இலக்கை தேர்ந்தெடுப்பது என்பதன் மீது சண்டையிட்டு வருகின்றன. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைப் பீடித்து வருகின்ற இந்த ஆழ்ந்த பிளவுகள் மற்றும் நெருக்கடியின் முன்னால், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த போக்கை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளதைப் போல, ஒரு சமரசமற்ற, போர்-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், வர்க்க போராட்டத்தை அபிவிருத்தி செய்து விரிவாக்குவதே, ஆளும் வர்க்கத்தின் இந்த மோதல்களுக்கு விடையிப்பாக இருக்க வேண்டும்.