ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Which way forward for France’s “yellow vest” protests?

பிரான்சின் “மஞ்சள் சீருடை” போராட்டங்களுக்கு முன்னோக்கிய பாதை எது?

Alex Lantier
10 December 2018

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக நான்காவது சனிக்கிழமையாக “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பாரிய இயக்கம் எழுவது தெளிவாக புலப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத் தூண்டலாய் இருந்த பிற்போக்கான எரிபொருள் வரியேற்றத்தை மக்ரோன் திரும்பப் பெற்றமையானது எதனையும் தீர்க்க முடியவில்லை. “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்கள் மத்தியில், சமூக சமத்துவத்திற்கு, பெரும் ஊதிய அதிகரிப்புகளுக்கு, மக்ரோன் வெளியேற்றப்படுவதற்கு, பெரும் செல்வந்தர்களுக்கு தனிச்சலுகைகள் அகற்றப்படுவதற்கு, இராணுவவாதத்திற்கு ஒரு முடிவுகட்டுவதற்கு மற்றும் பொது வேலைநிறுத்தங்களுக்கும் ஒரு புரட்சிக்குமான கோரிக்கைகள் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டமையானது வர்க்கப் போராட்டத்தின் முடிவை, முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதியான வெற்றியை அல்லது வரலாற்றின் முடிவைக் குறித்ததாக கூறிய கூற்றுக்கள் எல்லாம் சுக்குநூறாகிக் கிடக்கின்றன. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் முதல் பெல்ஜியம், நெதர்லாந்து, பல்கேரியா மற்றும் பாஸ்ரா நகரத் தொழிலாளர்கள் நேட்டோவின் நவகாலனித்துவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக மஞ்சள் சீருடைகளை அணிந்து கொண்ட ஈராக் வரையிலும் பரவுகின்ற நிலையில், சர்வதேசத் தொழிலாள வர்க்கமானது வங்கிகளின் கட்டளைக்கு எதிரான போராட்டத்தில் மேலெழுந்து கொண்டிருக்கிறது.

சனிக்கிழமையன்றான பாரிய ஒடுக்குமுறையானது முதலாளித்துவ ஜனநாயகத்தின் குணாம்சத்தை எடுத்துக்காட்டும் ஒரு ஆழப்பதிகின்ற படிப்பினையாக இருந்தது: உண்மையான வெகுஜன எதிர்ப்பின் வெளிப்பாடு ஏதேனும் தோன்றி விட்டவுடனேயே, துப்பாக்கிகள் வெளிவருகின்றன. இராணுவ ஆயுதங்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் சகிதமாய் கலகத் தடுப்பு போலிஸ் நாளின் ஆரம்பத்தில் திரளத் தொடங்கியிருந்த அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை அடைத்து நிறுத்தியதற்கும் தாக்குதல் நடத்தியதற்கும் பின்னர், பிரான்சின் பெரிய நகரங்கள் அனைத்திலுமே வன்முறையான மோதல்கள் வெடித்தன. முன்கண்டிராத அளவாக 1,385 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஒரு அதிமுக்கியமான கட்டத்தில் இருக்கின்றன. இந்த இயக்கம் செல்வந்தர்களது ஜனாதிபதியுடன் மட்டுமல்ல,  செல்வந்தர்களின் ஒட்டுமொத்த ஆட்சியுடனும் ஒரு மோதலைத் தூண்டியிருக்கிறது. மக்ரோனின் அடையாள விட்டுக்கொடுப்புகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களது மத்தியஸ்தத்திற்கான வாய்ப்பு, அல்லது ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியிடம் இருந்து ஒரு கூட்டணிக்கான ஆலோசனைகள் என அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்து பேச்சுவார்த்தைகளுக்கு வரும் தூதுகளை “மஞ்சள் சீருடை” இயக்கத்தின் முக்கிய தலைமை ஆளுமைகள் தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகப்பெருவாரியாக மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளனர்.

ஆயினும், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கோ மக்ரோனுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தினை நோக்கிய நோக்குநிலையோ இல்லாதபட்சத்தில், இந்த இயக்கம் பயனற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளாக சிதறிப் போகின்ற, அல்லது ஆளும் உயரடுக்கின் சூழ்ச்சிகளுக்கு கீழ்ப்படியச் செய்யப்படுகின்றதான அபாயம் இருக்கிறது.

அரசியல் தலைமை குறித்த பிரச்சினை மையமானதாகும். Commercy இல் இருப்பதைப் போன்ற சில “மஞ்சள் சீருடை” குழுக்கள், இயக்கத்தின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் மக்கள் குழுக்களை கட்டுவதற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது முக்கியமானதாகும். உருவாகிக் கொண்டிருப்பது, மிகவும் கரு வடிவில், ஒரு இரட்டை அதிகாரமாகும். பெரும் எண்ணிக்கையிலான கலகத் தடுப்பு போலிசின் பாதுகாப்புடன் நின்றுகொண்டிருக்கும் வங்கியாளர்களது’ அரசாங்கத்திற்கு எதிராக, போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் ஒழுங்கமைக்கின்ற தனித்தனியான மற்றும் எதிர்ப்பான ஸ்தாபனங்களின் ஒரு நிழலுரு தோன்றத் தொடங்குகிறது.

1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு சற்றுமுன்பாக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கு லியோன் ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பின் இன்றைய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இத்தகைய அமைப்புகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெவ்வேறு பிரிவுகளது வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஐக்கியப்படுத்த முடியும், அவை தனிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் விலைபேசப்படுவதில் இருந்தும் பாதுகாக்க முடியும், அத்துடன் தொழிலாளர்களது பரந்த எண்ணிக்கையினர் மத்தியிலான விரிந்த எதிர்ப்பு அணிதிரள்வதற்கான ஒரு புள்ளியை வழங்க முடியும். மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை முனைப்பிற்கு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாய் நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான ஒரு அடிப்படையை இது வழங்குகிறது.

இத்தகைய குழுக்கள் மட்டுமே “தொழிற்சங்கம் மற்றும் கட்சி எந்திரத்தின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிவகையாகும்” என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். இது இன்று, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வசதியான நடுத்தர வர்க்கத்து அரசியல் கட்சிளது நச்சுத்தனமான குரோதத்திற்கு தொழிலாளர்கள் முகம்கொடுக்கிற நிலையில், மிக அத்தியாவசியமானதாகும். மக்ரோனுக்கும் அவரது செல்வந்தர்களது அரசாங்கத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்தை முடக்குவதன் மூலமாக தமது தனிச்சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நப்பாசையுடன் இந்த சக்திகள் இருக்கின்றன.

பிரான்சில் இருக்கும் எந்தவொரு ஸ்தாபக அரசியல் போக்கும், புறநிலையாக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு சவாலை முன்நிறுத்தக் கூடிய இந்த “மஞ்சள் சீருடை” இயக்கத்திற்கு ஒரு முற்போக்கான விதத்தில் பதிலிறுக்கவில்லை. 1968 மேயில் நடுத்தர-வர்க்க மாணவர் தலைவராய் இருந்த டானியல் கோன்-பென்டிட் வெட்கமில்லாமல் இதனை பாசிசரீதியான இயக்கம் என்று அவதூறு செய்தார், ஜேர்மனியின் taz செய்தித்தாளிடம் அவர், “மஞ்சள் சீருடை இயக்கத்தின் மிகப்பெரும் பெரும்பான்மை பகுதி தேசிய முன்னணியில் இருந்து, அதிவலதுகளின் களஞ்சியத்தில் இருந்து வருகிறது” என்றார்.

ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் தலைவரான பிலிப் மார்ட்டினேசும் இதே விடயத்தையே மறைமுகமாகத் தெரிவித்தார், அவர் “மஞ்சள் சீருடையாளர்கள், நாங்கள் சகவாசம் கொள்ள முடியாதவர்கள்” என்றார். CGT, டிரக் ஓட்டுநர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை கைவிட்ட பின்னர், இப்போது டிசம்பர் 14 அன்று ஒருநாள் அடையாள இரயில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது.

நடுத்தர வர்க்க புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) "மஞ்சள் சீருடையாளர்களை” தொழிற்சங்கங்களின் பிடிக்குள் செலுத்துவதற்கு இந்த சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியைப் பயன்படுத்த நோக்கம் கொண்டிருக்கிறது. CGT கட்டுப்பாட்டின் கீழான ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்ள “மஞ்சள் சீருடையாளர்கள்” மார்ட்டினேசிடம் கேட்க அது அழைப்புவிடுத்தது: “போர்க்குணமுடைய சங்கங்களும் மஞ்சள் சீருடையாளர்களும் இந்த முன்னோக்கினை தேசிய தொழிற்சங்கத் தலைமைகளிடம் கேட்க வேண்டும் அல்லது இன்னும் திணிக்கவும் கூட செய்யலாம், டிசம்பர் 14 அன்று “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்திற்கான ஒரு உண்மையான பொது வேலைநிறுத்தத்துடன் இதனை ஆரம்பிக்கலாம்.”

ஆளும் வர்க்கம், இத்தகைய உத்திகளின் போர்வையின் கீழ், ஆர்ப்பாட்டக்காரர்களை தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறது. “ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் உலுக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதிய Journal du dimanche, ஆனால் சனிக்கிழமையன்றான போலிஸ் ஒடுக்குமுறை, “அரசாங்கத்திற்கு உத்திகளைக் கையாளுவதற்கான இடத்தை, ஒரு புதிய காற்றின் சுவாசத்தை அளித்திருக்கிறது” என்றது. பிரதமர் எட்வார்ட் பிலிப் சனிக்கிழமை இரவு அன்றான தனது சுருக்கமான உரையை “இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம்!” என்று கூறி நிறைவு செய்தார் என்ற உண்மையை அது பாராட்டியது.

மக்ரோனுடன் பயனற்ற, பிற்போக்கான உடன்பாடுகளை எட்டுவதை நோக்கி தங்களை கட்டிப்போட முயலுகின்றவர்கள் அனைவரின் மீதும் ”மஞ்சள் சீருடையாளர்கள்” கொண்டிருக்கும் முழுமையான அவநம்பிக்கை முழுக்க நியாயமானதாகும். வங்கிகளின் தாட்சண்யமற்ற பிரதிநிதியான மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுமில்லை; அதேபோல தேசிய நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் மக்களுக்காக சேவை செய்யக் கெஞ்சிக் கொண்டிருப்பது வெறும் ஏமாற்றத்தையே கொண்டுவரும்.

மக்ரோன் அரசாங்கத்திற்கும் வங்கிகளின் அதிகாரத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமே இன்றியமையாத பணியாகும். இந்த உலகளாவிய முதலாளித்துவம் மற்றும் சர்வதேச நிதி, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சகாப்தத்தில் இது, நிதிப் பிரபுத்துவத்தின் ஆபாசமான செல்வங்களை பறிமுதல் செய்வது, மற்றும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்ற ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு சர்வதேசப் போராட்டத்தை முக்கியப்படுத்துகிறது.

வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சியால் முன்வைக்கப்படுகின்ற புறநிலைக் கடமைகளில் இருந்து பிறக்கும் வேலைத்திட்டம் இதுதான்: ஐரோப்பாவெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் பெருகும் சமூகக் கோபமும் வேலைநிறுத்த நடவடிக்கையும் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் வெடிப்பை நோக்கி நகர்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், மக்ரோனுக்கும், ஐரோப்பாவெங்கிலுமான இதேபோன்ற அரசாங்கங்களுக்கும் எதிரான ஒரு பொதுவேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் பணி, இத்தகைய இயக்கத்திற்கு குரோதமானதும் அதனை நடத்தி முடிக்கப் போவதில்லை என்னும் திண்ணமுடையவையுமான தொழிற்சங்கங்களின் பொறுப்பில் விடப்பட முடியாது. பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளது சூழ்ச்சிகளுக்கு எதிராய் ஒரு உண்மையான பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தில் அதற்கான அடிப்படையை உருவாக்கித் தருவதற்கும் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதே முன்னோக்கிய பாதை ஆகும்.

தொழிலாளர்களால் உருவாக்கப்படுகின்ற சுயாதீனமான அரசியல் அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதன் அவசியத்திற்காக வாதிடுவதே இந்த இயக்கத்தில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிற ஐரோப்பியப் பிரிவுகளது பாத்திரமாக இருக்கும். இந்த முன்னோக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிற்சாலைகளில், வேலையிடங்களில், பல்கலைக்கழகங்களில் மற்றும் பள்ளிகளில் சாத்தியமான அளவுக்கு விரிவாய் விவாதிக்கப்படுவதை PES ஊக்குவிக்கிறது.