Print Version|Feedback
French government threatens bloody crackdown on “yellow vest” protest
"மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தினை மூர்க்கத்தனமாக ஒடுக்க பிரெஞ்சு அரசாங்கம் அச்சுறுத்துகிறது
By Alex Lantier and Francis Dubois
8 December 2018
பாரிஸில் இன்று ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கு எதிராய் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தவிருப்பதையொட்டி, தலைநகரில் குருதிகொட்டும் ஒரு ஒடுக்குமுறைக்கான முன்கண்டிராத மிரட்டல்களை பிரெஞ்சு அரசாங்கம் விடுத்திருக்கிறது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு அதிகரிப்பது, மக்ரோன் மீது வெகுஜனங்களின் கோபம் அதிகரிப்பது ஆகியவற்றின் மத்தியில், உயர் அதிகாரிகள், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும், தாங்கள் எவ்வகையிலும் தயங்கி நிற்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இன்று சுமார் 89,000 கலகத் தடுப்பு போலிசும் ஆயுதமேந்திய வாகனங்களும் நிறுத்தப்படவிருக்கின்றன.
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத் தூண்டலாக இருந்திருந்த எரிபொருள் வரியேற்றங்களை முதலில் தள்ளிவைத்தும் அதன்பின் முற்றிலுமாய் இரத்து செய்தும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதற்கு மக்ரோன் செய்த முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. மாறாக, இந்த இயக்கம் பிரான்சிலும் மற்றும் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து தொடங்கி ஈராக் வரை சர்வதேச அளவிலும் தொடர்ந்து பரவியிருக்கிறது. ஊதிய அதிகரிப்புகள், செல்வந்தர்கள் மீது வரிவிதிப்புகள் மற்றும் கூடுதலான சமத்துவ நிலை ஆகியவறுக்கான “மஞ்சள் சீருடையாளர்களின்” பெருகும் கோரிக்கைகளை பூர்த்தி செய்கின்ற எந்த எண்ணமும் மக்ரோனின் அரசாங்கத்திற்கு இல்லை, அது ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.
நேற்று, அதிகாரிகள் பாரிஸ் எங்கிலும் நினைவுச்சின்னங்களை மூடியதும் கடைகள் கலவரத்திற்கு தயாரிப்பு செய்துகொள்ளும் விதத்தில் முன்பக்க கண்ணாடி சன்னல்களை மூடி விட்டிருந்ததுமான நிலையில், Le Parisien பத்திரிகையிடம் அரசாங்க செய்தித்தொடர்பாளரான Benjamin Griveaux ”மஞ்சள் சீருடை”யாளர்களை போலிஸைக் கொல்பவர்கள் என்று அவதூறு செய்தார். “அவர்கள் பொது ஒழுங்கின் பிரதிநிதிகளைக் கொல்லும் நோக்கத்துடன் உடைத்து நொருக்குவதற்கும், எரிப்பதற்கும், சூறையாடுவதற்கும், மற்றும் தாக்குதவற்கும் வருகிறார்கள்” என்றார் Griveaux. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிசுக்கு வர வேண்டாம் என்று சொல்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, அவரளித்த பதில்: “அதுவே நான் கொடுக்கும் அறிவுரையாக இருக்கும்.”
“மஞ்சள் சீருடை”யாளர்கள் போலிசைக் கொல்ல நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு முகாந்திரமான எந்த ஆதாரத்தையும் Griveaux வழங்கவில்லை. மூன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் வன்முறையான போலிஸ் தாக்குதல்கள் நான்கு மரணங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது, நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியிருக்கிறது, ஒரேயொரு போலிஸ்காரரும் இறக்கவில்லை. அவரது அரசாங்கம் “தவறுகள்” செய்துவிட்டிருந்தது என்றும், “பிரான்சின் சில பகுதிகளை அரசாங்கம் கைவிடுகிறது என்பதான உணர்வினை” புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். தனது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மற்றும் செல்வந்தர்களுக்கான வரி வெட்டுக்களை எதிர்த்த தொழிலாளர்களை “சோம்பேறிகள்” என்று கண்டனம் செய்த மக்ரோன் “ஆணவக்காரராக பார்க்கப்படுகிறார்” என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்: “நாங்கள் கூறிய சில விடயங்கள் காயப்படுத்தின. அதை நாங்கள் நன்கு அறிவோம்.”
இருப்பினும் Griveaux “மிகக்கவனமாக எச்சரிக்கையளிக்கின்ற” தொனி என்று Le Parisien அழைத்த ஒன்றை ஏற்றிருந்தார், பாரிஸில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்ற தனது உத்தரவை மீறும் எவரொருவருக்கும் எதிராய் கொலைக்கு தயங்காத படையைப் பயன்படுத்தியதான ஒரு ஒடுக்குமுறை கட்டாயம் இருக்கிறது என்று சூசகமாக தெரிவித்தார். “ஆர்ப்பாட்டங்களில் இருப்பவர்கள் பாதுகாப்புப் படையினரை கைதுகளைச் செய்ய முன்னேற அனுமதிப்பதில்லை” என்று அவர் புகாரிட்டார். “சிரத்தையான மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதக் கவசங்களாக செயல்படக் கூடாது”.
“இந்த இயக்கத்தை சுரண்டிக் கொள்ள முயல்கின்ற” மற்றும் “அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்புகின்ற” “அரசியல்மயமான மற்றும் தீவிரப்பட்ட கூறுகளை” கண்டனம் செய்த அவர், ஊடகங்கள் ஒடுக்குமுறை குறித்த நேரலைச் செய்திகளை வழங்கக் கூடாது என்றும் திகிலூட்டும் விதத்தில் எச்சரித்தார். அவர் கூறினார், “தொலைக்காட்சிகள் பொறுப்பாக நடந்து கொள்வதற்கும், பாதுகாப்புப் படைகளின் நிலைகளை காட்டிக்கொடுத்து விடுகின்ற விதத்தில் நேரலையான காட்சிகளை ஒளிபரப்பாமல் இருப்பதற்கும் அழைக்கிறேன்” என்றார்.
“1961 இல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு தளபதிகளின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இதுபோன்றதொரு மொழியை” பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து கேட்டிருக்கவில்லை என்று சுவிஸ் தினசரியான Le Temps கருத்திட்டது. 1961 ஆட்சி கவிழ்ப்பானது, பிரெஞ்சு மக்களின் மீது ஒரு மக்கள் விரோத ஏகாதிபத்தியப் போரை நிர்ப்பந்திப்பதன் மூலமாக அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியைப் பராமரிக்க பிரயத்தனம் செய்த அதி-வலது அதிகாரிகளால் தலைமை கொடுக்கப்பட்டது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு பீறிட்டு வருவதில் திகைத்துப் போயிருக்கும் அரசாங்கம் கல்நெஞ்சத்துடன் ஒடுக்குமுறையைப் பாதுகாக்கிறது. Mantes-la-Jolie இல் ஆயுதமேந்திய கலகத் தடுப்பு போலிஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை முழங்காலிடச் செய்து, ஏதோ அவர்களை சுடவிருப்பதைப் போல, அவர்களின் தலைகளுக்குப் பின்னால் கைகளை வைத்து அவற்றில் பிளாஸ்டிக் கைவிலங்குகளை மாட்டுவதைக் காட்டுகின்ற ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியை, உள்துறை அமைச்சரான கிறிஸ்தோஃப் காஸ்டனேர், நேற்று பாதுகாத்துப் பேசினார். அந்த போலிஸ்காரர்கள் அந்த இளைஞர்களை சீண்டும் விதமாய் “இது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வகுப்பு” என்று கூறுகின்றனர்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான முறைகள் பார்க்கப்பட்டிருக்கிறது, அதிர்ச்சியையும் திகிலையும் தூண்டியிருக்கிறது. அதற்குப் பின்னரும் கஸ்டானேர் கல்நெஞ்சத்துடன் போலிஸ் படைகளைப் பாதுகாத்துப் பேசினார்: “இது ஒருவரை சோதனையிடுவதற்கு முன்பாக இருக்கும் வழக்கமான நடைமுறை சம்பந்தப்பட்டது”. அந்தக் காணொளியை எடுத்தவரின் மீது வழக்குப் பதிவதற்காக அவர் யாரென கண்டுபிடிக்க போலிஸ் இப்போது விசாரணை செய்து கொண்டிருக்கிறது.
மக்ரோன் அரசாங்கம் நேற்று செய்த வெறித்தனமான மிரட்டல்களின் படி இன்று நடந்து கொள்ளுமாயின், அது பிரான்சில் தொழிலாள வர்க்கத்துடன், சோர்போன் மாணவர்களைப் பாதுகாத்து நின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இரத்தக்களரியான போலிஸ் தாக்குதல்களால் தூண்டப்பட்ட 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய மிக வன்முறையான மோதலுக்கு இட்டுச்செல்லும்.
ஆர்ப்பாட்டங்களின் கீழமைந்த தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் தீவிரத்தன்மையானது கிழக்கு பிரான்சின் Commercy என்னும் இடத்தில் உள்ள “மஞ்சள் சீருடை” கூட்டில் தெளிவாக வெளிப்பட்டது, அது “பிரான்ஸ் எங்கிலும் மக்கள் சட்டமன்றங்களை உருவாக்க அழைப்பு” என்ற ஒரு காணொளியை விடுத்தது.
மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்று அரசாங்கம் விடுத்த அழைப்பை அது நிராகரித்தது. “அரசாங்கம் பிரதிநிதிகளுடன் பேச விரும்புவது நமது கோபத்தையும் நமது கோரிக்கைகளையும் புரிந்து கொள்வதற்காக அல்ல. அது நம்மைக் கட்டுப்படுத்துவதற்கும் இல்லாமல் செய்வதற்குமாகுமேயாகும். தொழிற்சங்க தலைமைகளைப் போன்ற பேச்சுவார்த்தை நடாத்த, கிளர்ச்சியை நிறுத்துவதற்கு அழுத்தமளிக்கத்தக்க, பின் அவர்களை ஊழல்படுத்தி இயக்கத்தின் குரல்வளையை நெரிக்கும் விதத்தில் அதனைப் பிளவுபடுத்துவதற்கு அவர்களை நம்பவைக்க இடைத்தரகர்களை தேடுகின்றனர்.”
“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள், ஆட்சியாளர்களிடம் இருந்தும் பணத்தின் அதிகாரங்களில் இருந்தும் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்கின்ற அனைவரிடமிருந்தும் “ஒன்றுமில்லாதவர்களாக, அலட்சியத்துடன் பேசப்படுபவர்களாக இருப்பவர்கள் அதிகாரத்தை மீண்டும் பெறும் ஒரு புதிய ஒழுங்கு”க்கு அழைப்புவிடுவதாகவும் அது சேர்த்துக் கொண்டது.
மக்ரோன் தொடர்ந்தும் கருத்துக்கணிப்புகளில் வீழ்ச்சிகண்டு வரும் வேளையில், பிரான்ஸ் எங்கிலும், வேலைநிறுத்தங்கள், ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மாணவர் மறியல்கள் பெருகுகின்றன. பாரிஸின் பிராந்திய இரயில்கள், Rennes மற்றும் Le Havre பொதுஜனப் போக்குவரத்து மற்றும் தொழில்பயிற்சி உயர்நிலைப் பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றநிலையில், தேசிய இரயில்வே (SNCF) தொழிலாளர்கள் நாளை பாரிஸில் நடைபெறவிருக்கும் “மஞ்சள் சீருடை” பேரணிகளில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைநிறுத்தங்களாலும் எரிபொருள் கிடங்குகளின் முன்பாக “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்துகின்ற மறியல் போராட்டங்களினாலும் பிரான்ஸ் எங்கிலும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பல் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து கொண்டிருக்கிறது.
இருந்தும், ஸ்ராலினிச CGT தொழிற்சங்கம், வார இறுதியில் தொடங்குவதற்கு அது அழைப்பு விடுத்திருந்த தேசிய அளவிலான டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் ஒன்றினை கடைசி நிமிடத்தில் கைவிட்டு விட்டது. CGT அதிகாரத்துவம் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுமையான குரோதத்தைக் கொண்டுள்ளது, இந்த ஆர்ப்பாட்டங்களில் நவ-பாசிஸ்டுகள் ஊடுருவியிருப்பதாக முன்னர் கூறியிருந்த CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினஸ், Le Monde இல் அளித்த இன்னொரு நேர்காணலிலும் அவர்களைக் கண்டனம் செய்தார். “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களில் “நீங்கள் நட்புபேண முடியாதவர்கள்” இருப்பதாகக் கூறி, அவர்களுடன் CGT “கரம் கோர்க்காது” என்பதை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
பாரிஸ், Bordeaux, Nantes, Toulouse, Tours, Montpellier, Lille, Lyon மற்றும் பிற பல நகரங்கள் உள்ளிட பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் மறியல் போராட்டத்தைத் தொடர்கின்றனர். பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Censier மற்றும் Tolbiac வளாகங்களில், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டண அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். Lyon பல்கலைக்கழகம்-III இல் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை போலிஸ் வன்முறையாக துரத்தினர். பிரெஞ்சு மாணவர்களது தேசிய சங்கம் (UNEF) டிசம்பர் 13 அன்று கல்விக்கட்டணங்களுக்கு எதிரான ஒருநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்புப் படைகளின் முன்கண்டிராத அணிதிரட்டல்களுக்கு முகம்கொடுத்தபடி, பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மார்சையில், அதன் வலது-சாரி பிராந்தியத் தலைவரான Renaud Muselier, “குடியரசு, கிளர்ச்சியின் அபாயத்தினால் சூழப்பட்டுள்ளது” என எச்சரிக்கின்ற “மார்சைய் பிரகடனம்” ஒன்றை நேற்று வெளியிட்ட நிலையில், பல்வேறு ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு எதிராய் ஒரு மிகப்பெரும் போலிஸ் தயாரிப்பிற்கு மார்சையின் அதிகாரிகள் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர். Lille இல் இரண்டு இரயில் நிலையங்களையும் ஆக்கிரமிப்பு செய்வதற்கும் ஒட்டுமொத்த நகரத்தையும் முடக்குவதற்கும் அழைப்புகள் பரவும் நிலையில், வடக்கு பிரான்சில் போலிஸ் நிர்வாகமானது “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தடைசெய்வது என்ற முன்கண்டிராத ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
Lyon இல், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அரசாங்கத்தின் பிராந்தியத் தலைமையகங்களை ஆக்கிரமித்த நிலையில், அவர்கள் இன்று கூடவிருக்கும் Bellecour சதுக்கத்திற்கு அணுகலைத் துண்டிப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்கண்டிராத அளவிலான போலிஸ் தயாரிப்பினை முகம்கொடுப்பார்கள், பயங்கரவாத குண்டுவைப்பாளர்களை சுடுவதற்கும் கொல்வதற்கும் பயிற்சியளிக்கப்பட்ட சிறப்பு போலிஸ் தாக்குதல் படைகளின் உறுப்பினர்களும் அதில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.