Print Version|Feedback
While Modi touts India’s growth rate,
Four jobless youths commit suicide
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து மோடி பெருமைபீற்றிக் கொள்ளும் அதே வேளையில்,
நான்கு வேலையற்ற இளைஞர்கள் தற்கொலை
By Kranti Kumara
4 December 2018
சென்ற மாதம் இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இராஜஸ்தானில், 17 முதல் 24 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் கூட்டுத் தற்கொலை செய்யும் முயற்சியில் ஓடும் இரயிலில் பாய்ந்தனர்.
வேலையில்லாத சூழ்நிலையில் எப்படி வாழ்வது என்று மிகவும் மனம் நொந்து போன நிலையில்தான் கல்லூரியில் பட்டம் பெற்ற அவ்விளைஞர்கள் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நான்கு பேரில், 24 வயதான மனோஜ் மீனா, 22 வயதான சத்யநாராயண் மீனா மற்றும் வெறும் 17 வயதேயான ரிதுராஜ் மீனா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும், 18 வயதான அபிஷேக் மீனா மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அவரடைந்த பலத்த காயங்களினால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த நான்கு பேரும் ஒரே கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், அவர்களது உயிரை மாய்த்துக் கொண்ட இரயில் பாதை அருகேயிருந்த ஒரு குடியிருப்பில் தான் அவர்கள் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். வேலையின்மையும் வறுமையும் வாட்டும் மிக கொடிய எதிர்காலத்தில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி இந்த நால்வரும் இருந்தனர் என்பது அவர்களது தோழர்களான 18 வயது ராகுலும் 19 வயது சந்தோஷூம் கூறியதில் இருந்து தெரிவதாக ஊடகங்கள் தெரிவித்தன. வேலையில்லாத நிலையில், அவர்களது பின்தங்கிய கிராமத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாக்கப்படுவர் என்பதுடன், இந்தியாவின் மிக வறண்ட மற்றும் வறிய பகுதிகளில் ஒன்றான அங்கு சென்று விவசாயிகளாக வாழ்வதற்கும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
இந்த இளம் பட்டதாரிகளின் துயரகரமான கூட்டுத் தற்கொலை, இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அப்பட்டமான யதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறது.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கு மத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியா கொண்டிருப்பதாக, இந்திய ஆளும் உயரடுக்கு, அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கமும் ஓயாது பெருமையடித்துக் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், யதார்த்தத்தில், மில்லியன் கணக்கான இளைஞர்களால், நல்ல வருமானத்துடன் கூடிய ஒரு பாதுகாப்பான வேலையைக் கண்டறிய முடியாத ஒரு பேரழிவுகர வேலை நெருக்கடியையே இந்தியா தற்போது எதிர்கொள்கிறது.
இந்திய தொழில்துறை அமைச்சகத்தின் படி, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 1 மில்லியன் புதிய தொழிலாளர்கள் இந்தியாவின் வேலை சந்தைக்குள் நுழைகின்றனர். இன்னும் கூட, Business Standard பத்திரிகை மே 2018 இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization-ILO) கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மே 2014 இல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்டோபர் 2017 வரையிலான காலத்தில், வெறும் 823,000 கூடுதல் வேலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன —அவற்றில் பெரும்பாலானவை “பாதிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்புக்களாக” வகைப்படுத்தப்பட்டவை— என்று தெரிவித்தது.
உலகிலேயே இந்திய இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை மிக உயர்ந்ததாக உள்ளது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப்பதிவு பணியகம் (Indian Home Ministry’s National Crime Records Bureau-NCRB), 2015 இல், 9,000 க்கும் அதிகமாக, அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு அதிகமாக இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தது. இன்னும் கூட பல வல்லுநர்கள் இந்த நிகழ்வுகள் பற்றிய புள்ளி விபரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவே நம்புகின்றனர்.
உலகம் முழுவதும், முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக இளைஞர்கள் அதிகரித்தளவில் கடினமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். என்றாலும் இந்தியாவில், இந்த அழுத்தங்கள் குறிப்பாக இன்னும் கடுமையாக உள்ளன. அதற்கான காரணம், சுகாதார பராமரிப்பு மற்றும் ஏனைய பொது சேவைகள், மற்றும் ஓய்வூதியங்கள் மற்றும் பிற சமூக ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை அல்லது சீரழிந்த தன்மை, பெரும்பான்மையான பெற்றோர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அல்லது அவர்கள் நோயுற்ற அல்லது காயமடைந்த நிலையில் அதற்கு முன்பே கூட தங்களது குழந்தைகளைச் சார்ந்திருத்தல் போன்றவையேயாகும்.
டிசம்பர் 6 அன்று நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் இப்போது உச்சபட்சமாக முடுக்கிவிடப்பட்டுள்ள இராஜஸ்தானில், வேலையின்மை என்பது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். என்றாலும் வழக்கம்போல, பல்வேறு முதலாளித்துவக் கட்சியினர் இளைஞர்கள் மீது இரக்கப்படுபவர்களாக தங்களை கம்பீரமாக காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேலைகளை வழங்கவிருப்பதாக முற்றிலும் சலிப்பான வாக்குறுதிகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கின்றனர்.
குவாலியரின் முன்னாள் அரச குடும்பமான சிந்தியா இனக்குழுவின் ஒரு உறுப்பினரான முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் கீழ் பிஜேபி தலைமையில் இராஜஸ்தான் தற்போது ஆளப்படுகிறது. “அபிவிருத்தியை” கொண்டுவரவும், புதிய வேலைகளை உருவாக்கவும் முதலீட்டாளர்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வது மட்டுமே ஒரே வழி என்று பிஜேபி கூறி, பெருவணிகத்திற்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றுவதுடன் பித்துப்பிடித்த இந்து வகுப்புவாதத்தையும் அதனுடன் ஒருங்கிணைக்கிறது.
இராஜஸ்தான் இளைஞர்கள் முகம்கொடுத்து வரும் இருண்ட யதார்த்தத்தில் இருந்து அவரது அரசாங்கத்தைப் பிரித்துக் காட்டும் ஒரு பரந்த இடைவெளி அம்பலப்படுகின்ற நிலையில், “மாநிலத்தில் மக்களின் மனநிலை நன்றாக உள்ளது” என்று ராஜே மகிழ்ச்சியுடன் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்தார்.
இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்ததன் படி, மார்ச் 2018 இல் 857,316 வேலை தேடுவோருக்கு அனைத்து துறைகளிலுமாக வெறும் 12,854 வேலை வாய்ப்புகளையே இராஜஸ்தான் கொண்டிருந்தது. மேலும், 2016 இல், 20 முதல் 29 வயதுகுட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 30 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்ததாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
2013 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பிஜேபி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது – அதே வருடத்தில் முன்பு அப்போதைய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த வேலையற்ற இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலை சுட்டிக்காட்டி — “நான் வேலை கொடுப்பேன், பொலிஸ் ஒடுக்குமுறையை அல்ல” (“Lathi nahi, naukriya doongi – I will provide jobs, not police truncheons”) என்று தற்போது அடிக்கடி வழங்கிவரும் வாக்குறுதியையே இராஜஸ்தான் இளைஞர்களுக்கு ராஜே வழங்கினார். என்றாலும் சமீபத்தில், வேலைவாய்ப்பு கோரி ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்க 200 க்கு மேற்பட்ட இளைஞர்கள் பிஜேபி தலைமையிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, பொலிஸ் அவர்களை அதேபோல தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 தேர்தல் பிரச்சாரத்தின் போது, 2018 க்குள் 1.5 மில்லியன் வேலைகளை உருவாக்குவதற்கு ராஜே உறுதியளித்தார். ஆனால், இந்திய செலவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கை தலைவரின் (Comptroller and Auditor General of India-CAG) கருத்தின் படி, 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில், மாநிலத்தில் தொழில் பயிற்சி பெற்ற 127,817 பேரில் வெறும் 9,904 பேர் மட்டுமே வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில், பொது மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்கள் குறைந்து வருவதை நிரூபிப்பதாகவே அடுத்தடுத்துவரும் ஏனைய புள்ளி விபரங்களின் வெளிப்பாடு உள்ளது.
2017 இல், மாநில சட்டமன்ற செயலகம் அலுவலக ஊழியர்களுக்கான 18 பணியிடங்கள் காலியாக இருப்பதாக விளம்பரப்படுத்திய போது, 129 பொறியாளர்கள், 23 வழக்கறிஞர்கள், ஒரு பட்டய கணக்காளர் மற்றும் 393 முதுநிலை பட்டதாரிகள் உட்பட 13,000 க்கும் மேற்பட்டோர் அதற்கு விண்ணப்பத்திருந்தனர். அதேபோல, சமீபத்தில் ஐந்து ஏவல்பணியாளர்களுக்கு அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்த போதும், 23,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் பெரும்பாலானவை மேம்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் இருந்து வந்திருந்தன.
ராஜஸ்தான் பிஜேபி அரசாங்கத்தின் முக்கிய “வேலை உருவாக்க முன்முயற்சி” மாநிலத்தின் உள்நோக்கத்துடனான “கடுமையான உழைப்புச் சட்டங்களை” “சீர்திருத்தம் செய்ய” உள்ளது. அனைத்து இந்தியாவிற்குமான ஒரு மாதிரியாக மோடி அரசாங்கம் முன்வைத்ததும் மற்றும் ஏனைய பிஜேபி ஆளும் மாநிலங்கள் பின்பற்றியதுமான இந்த மாற்றங்கள், கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேலும் தடைகளை ஏற்படுத்தும் அதேவேளையில், ராஜஸ்தானிலும் விருப்பப்பட்டால் தொழிலாளர்களை வாடகைக்கு பணியமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் தொழில்களை அனுமதிக்கிறது.
தேசிய அளவில், இளைஞர்களுக்கான நிலைமை இதேபோல ஆற்றவொண்ணா துயரமாக உள்ளது. பரந்த அளவில் அதிருப்தியை எதிர்கொள்கையில், ஏப்ரல்-மே 2019 பொதுத் தேர்தலுக்கான முனைப்பில் மோடியும் அவரது பிஜேபியும் இனவாதத்தை தூண்டி வருகின்றனர். முந்தைய 2014 பாராளுமன்றத் தேர்தல்களில், மோடி, “நல்ல நாட்களை” (“Acche Din – Good Days”) கொண்டு வந்து, 2022 க்குள் தனது “இந்தியாவில் உருவாக்குவோம்” திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வேலைகளை உருவாக்கவிருப்பதாக உரக்க பிரகடனம் செய்தார்.
“இந்தியாவில் உருவாக்குவோம்” பிரச்சாரம், மிகுதியான மலிவு உழைப்பு, விரைவாக நிலம் கையகப்படுத்துதல், மற்றும் ஏராளமான வரி மானியங்கள் ஆகியவற்றை வழங்க உறுதியளிக்கும் ஒரு அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு உந்துதல் அளிக்க, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியா எங்கிலுமாக மோடியை பயணிக்கச் செய்தது. இந்தியாவின் தொழில்துறை ஊதியங்கள் சீனாவின் ஊதிய விகிதத்தில் வெறும் கால் பங்கு தான் என்பது மோடியின் மிகப்பெரிய பெருமையடிப்புகளில் ஒன்றாக உள்ளது.
மோடி அரசாங்கம், அதன் வணிக சார்பு திட்ட நிரலைக் கொண்டு வேலைவாய்ப்புக்களை வாரி வழங்கவிருப்பதாக அது விடுத்த போலியான வாக்குறுதி பரந்தளவிலான வெறுப்பையும் ஏமாற்றத்தையும் தூண்டியுள்ளது என்பதை நன்கு அறிந்துள்ளது. அதனால் தான் இப்போது அது செயலிழந்துவிட்டது, எனவே “வேலை உருவாக்கம்” மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2018 இல், 1.3 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய வேலை வழங்குநரான அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய ரயில்வே, 90,000 ரயில்வே வேலைகளுக்கு விளம்பரம் செய்திருந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அப்பணியிடங்களுக்கு 28 மில்லியன் பேர் விண்ணப்பித்தனர். இது இரயில்வேக்கு ஒரு அளவை ரீதியான பேயுருத் தோற்றத்தை உருவாக்கிய நிலையில், பின்னர், 21.1 மில்லியனுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக இறுதி எண்ணிக்கைக்கு தற்போது மாறியுள்ளது. இந்திய இரயில்வேயின் மோசமான பாதுகாப்புப் பதிவின் படி, புதிய பணியாளர்கள் போதிய பயிற்சியின்றி அவசர அவசரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவதற்கான பயத்திற்கு அனைத்து காரணங்களும் உள்ளன.
படித்த இளைஞர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் துயரமாக அவர்கள் தற்கொலை செய்ய முற்பட்டாலும், தொழிலாள வர்க்க இளைஞர்களும் ஏழைகளும் எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளன. இந்நிலையில், ஏழைகளில் பெரும்பாலானோர், தற்காலிக அல்லது பகுதிநேர தொழிலாளர்களாக எந்தவொரு நன்மையும் இல்லாத மற்றும் நிரந்தர வருமானமும் இல்லாத தொழிலில் ஈடுபடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர்.
மோடி அரசாங்கமும் அவர்களது ஆதரவாளர்களும், அவர்களது கொள்கைகள் எவ்வாறு 7 சதவிகிதத்திற்கும் மேலான “உலகமயமாதல்” பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன என்பது பற்றி எப்போதும் பெருமைபீற்றுகின்றனர். மோடி அரசாங்கத்தால் கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை சந்தேகிப்பதற்கு நல்ல காரணம் உள்ளது. ஏனென்றால், 100 மில்லியன் டாலர்கள் அளவிற்கு அல்லது அதற்கு கூடுதலாக சொத்து மதிப்புள்ள இந்தியாவின் 1500 செல்வந்தர்களுக்கு ஏற்பட்ட வளர்ச்சியின் பெரும் நன்மைகளை குறிப்பதாக அவை இருக்கலாம்.
Credit Suisse - இன் “2018 உலகளாவிய சொத்து அறிக்கை” வயதுவந்த 10 இந்தியர்களுக்கு ஒரேயொருவர் மட்டுமே 10,000 டாலருக்கு அதிகமான சொத்துக்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. மற்றொரு வகையில், டாலர் மில்லியனர்களின் எண்ணிக்கை, 2000 இல் வெறும் 39,000 என இருந்தது, 2018 ஆம் ஆண்டின் மத்திக்குள் 343,000 என கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் சுமார் 130 பில்லியனர்கள் உள்ளடங்குவர்.