Print Version|Feedback
America’s Thanksgivings
அமெரிக்காவின் நன்றி தெரிவிப்பு தினம்
David Walsh
22 November 2018
The 42nd Parallel (1930), 1919 (1932) மற்றும் The Big Money (1936) ஆகிய நாவல்களை எழுதிய ஜோன் டோஸ் பாசோஸ் போன்ற அமெரிக்க நாவலாசிரியர்கள், நவீன வாழ்வைக் குறித்து உயிரோட்டமான மற்றும் அதிக ஆழமான விபரணத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சியில், தலைப்பு செய்திகள், விளம்பரங்கள் மற்றும் பிரபல பாடல்களை உள்ளடக்கிய "செய்திச்சுருளை" (newsreel) அறிமுகப்படுத்தினர். பின்வரும் பகுதிகள், இந்த 2018 நன்றி தெரிவிப்பு தினத்தில் சில அர்த்தமுள்ள அமெரிக்க யதார்த்தத்தை வழங்குமென நாம் நம்புகிறோம்.
* * * * * * *
— “அமெரிக்காவின் ரீங்காரமிடும் பொருளாதாரத்தில் நிறைய எதிர்மறை அம்சங்கள் ஒன்றுமில்லை.” (வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்)
— ஜோர்ஜியாவின் [Ga.] ரிவர்டேலில் உள்ள சிக்கன் ஹட் உணவுவிடுதியில் ஒரு சமையல்காரராக ஒரு மணி நேரத்திற்கு அவரது 7.50 டாலர் வேலையில் உள்ள 23 வயதான ஜூனியர் Laugudria Screven, விடுமுறை நாட்களில், இரத்தத்தை சிவப்பணுக்களை- (plasma) விற்பதற்காக அட்லாண்டாவில் 25 மைல்களுக்கும் அதிகமாக பயணிக்கிறார். ஒரு முறைக்கு 50 டாலர் வீதம் வாரத்திற்கு இரண்டு முறை ஒரு தொழில்நுட்ப நிபுணரின் ஊசிக்கு அவர் கரங்களைக் காட்டுவதன் மூலமாக, அவர் அவரது 360 டாலர் வாடகையைச் செலுத்த போதுமான தொகையைச் சேகரிக்கிறார்.
“உடல் இரத்தச் சிவப்பணுக்களை விற்பதால் Screven இன் உடலில் அதன் எண்ணிக்கை குறைவதால், அவர் சோர்வும், பலவீனமும் அடைகிறார். இந்த கூடுதல் வருவாய் கிடைத்தாலும் கூட, சில நாட்களில் நாளொன்றுக்கு ஒரு வேளைக்கு அதிகமாக சாப்பிடுவதற்கும் கூட அவரிடம் போதுமான பணம் இருப்பதில்லை என்றவர் கூறுகிறார். பெரும்பாலும் அவர் கடுகினால் செய்யப்பட்ட கூட்டு, தக்காளியால் செய்யப்பட்ட கூட்டு மற்றும் நிலக்கடலை வெண்ணெய் தவிர வேறெதுவும் இல்லாத அவர் வீட்டின் அந்த குளிர்சாதனப் பெட்டியிடம் தான் தஞ்சமடைகிறார்.
“ஜோர்ஜியாவின் கிழக்கு முனையில் பேருந்துக்காக காத்திருக்கையில் அவர் தனது கரங்களைத் தடவியவாறு, 'நான் எனது செலவுகளுக்காக எனது இரத்தத்தை விற்கிறேன்,' என்றார். 'இது ஒருவிதத்தில் குழப்பமானதாக இருக்கின்றது தான். எனக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டால், நான் இவ்வாறு இருக்க வேண்டியிருக்காது.'” (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்)
— ரோட் தீவு, நியூபோர்ட்டில் Relais & Châteaux சொத்தான 40 ஏக்கரில் அமைந்துள்ள Castle Hill Inn உணவகம், விருந்தினருக்குப் பழமை வாய்ந்த நியூ இங்கிலாந்து நன்றி தெரிவிப்பு தின விருந்து ஏற்பாடு செய்துள்ளது. NYC இன் மூன்று நட்சத்திர விருது பெற்றுள்ள Chef Lou Rossi, உள்நாட்டு சிப்பி உணவுகள், மாட்னுக் கிராம சிப்பி உணவுகள் மற்றும் குளிர்ந்த வெண்ணிற இறால்கள், அத்துடன் மணம் வீசும் கூட்டு மற்றும் கிரான்பெர்ரி சட்னியுடன் மூலிகையில் வறுத்த ஹெல்ஜர் பண்ணை வான்கோழி, தேர்ந்தெடுக்கப்பட்ட பலகாரங்கள், ரொட்டிகள் மற்றும் கேக் வகைகளுடன் உள்ளூரிலேயே விளைவிக்கப்பட்ட பண்டங்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைப் படைத்தளிக்கிறார். Castle Hill உணவகத்தில் ஆரோக்கியத்திற்காக ஓர் உயர்தர நீரூற்றும், இயற்கை அழகு நிறைந்த ஓர் ஓய்வறையும் உள்ளது, அங்கே கடலுக்கு அருகே துறைமுகத்தை நோக்கிய, அதன் பெயரிலேயே உள்ளவாறு ஒரு குன்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மனதை ஈர்க்கும் நவீன அறைகளும், குடில்களும் உள்ளன. [இந்த ஆடம்பர கடற்கரை விடுதியின் ஓர் அறைக்கு, வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் உள்ளடங்கலாக ஒரு நாள் இரவுக்கு 1,091.45 டாலர் ஆகும்.] (Town & Country சஞ்சிகை)
— "நூற்றுக் கணக்கானவர்கள், தேவையின் காரணமாக, தங்கள் குடும்பத்தாருடன் நன்றி தெரிவிப்பு தின இலவச உணவைப் பெறுவதற்காக [நியூ யோர்க்] நகரின் மையப்பகுதியான Utica வின் ப்ளீக்கர் வீதியில் வரிசையில் நின்றிருந்தனர். ... இந்தாண்டு ஏறக்குறைய 700 பேருக்கு உணவு வழங்கப்பட்டது, இது கடந்த ஆண்டிலிருந்து சுமார் 200 அதிகமாகும். Utica வில் மூன்றில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக DataUSA தெரிவிக்கிறது.” (WKTV)
— “ஒப்பீட்டளவில் நல்லதொரு பொருளாதார நிலை இருந்தாலும் கூட, உள்ளாட்சி இலவச உணவு கூடங்களோ, அங்கே பட்டினியில் வாடுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிகரித்திருப்பதைக் காண்கின்றன. [லோவாவின்] டெஸ் மொய்னெஸ் இலவச உணவு கூடங்கள், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3.5 சதவீதம் அதிகரிக்குமென வழமையாக எதிர்பார்ப்பதுண்டு. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக, அந்த எண்ணிக்கை நகர்புறத்திலேயே மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக Des Moines பகுதி மதக்குழுவின் செயல் இயக்குனர் Rev. Sarai Schnucker Rice தெரிவித்தார், இக்குழு 14 உள்ளாட்சி இலவச உணவு கூடங்களின் வலையமைப்பை மேற்பார்வையிட்டு வருகிறது.” (Des Moines Register)
— “[ஓஹியோ] டெய்டன் போன்ற பிரதான நகரங்களில் பெரும்பாலான குடும்பங்கள் கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டிருப்பதாகவும், சொல்லப்போனால் ஜெம் நகரின் புறநகர் பகுதிகளில் பல இடங்கள் அதை எதிர்த்து போராடி கொண்டிருப்பதாக பொதுவாக கருதப்படுகிறது. மியாமி ஆற்றுப்படுகையைச் சுற்றி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தவிர்க்கவியலாத வறுமையில் இல்லை என்றாலும், பொருளாதாரரீதியில் இப்போதும் போராடிக் கொண்டிருப்பதாக யுனெடெட் வே ரிப்போர்ட் அறிவிக்கிறது.” (Dayton Daily News)
— “பரம்பரையாக செல்வவளத்தில் திளைக்கும் மூன்று குடும்பங்கள் —வால்டன் குடும்பம், கோக்ஸ் குடும்பம் மற்றும் மார்ஸ் குடும்பம்— 1982 க்குப் பின்னர் இருந்து அவற்றின் செல்வவளத்தில் அண்மித்து 6,000 சதவீத உயர்வைக் கண்டுள்ளன. இதற்கிடையே, அதே காலக்கட்டத்தில் நடுத்தர குடும்பங்களின் செல்வவளம் 3 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. ...
“அமெரிக்காவில் நடுத்தர குடும்பத்தின் செல்வவளம் வெறும் 80,000 டாலருக்குச் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது. அமெரிக்காவில் (மற்றும் உலகளவிலும்) மிகப் பணக்காரரான ஜெஃப் பெஸோஸ், அந்த தொகையை விட அண்மித்து 2 மில்லியன் மடங்கு அதிகமாக செல்வத்தைக் குவித்துள்ளார். பெஸோஸின் சொத்து வெறும் கடந்த ஆண்டில் மட்டும் 78.5 பில்லியன் டாலர் அதிகரித்து, 160 பில்லியன் டாலருக்கு விரிவடைந்தது. சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட மணிக்கு 15 டாலர் கூலியின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, ஒரு முழு-நேர அமசன் தொழிலாளர் அந்தளவுக்கு பணத்தை சம்பாதிக்க 2.5 மில்லியன் ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.” (Institute for Policy Studies)
— “உயர்கல்வி இல்லாமலேயே கூட, [இண்டியானாவின் இண்டியானாபொலிஸில்) ஒரு குடும்பத்தை நடுத்தர வர்க்கத்துக்குள் உயர்த்தக்கூடிய ஆதாயமான உற்பத்தித்துறை நிலைமைகள் எல்லாம் போய்விட்டன. அத்தகைய வேலைகள் நகரப்புற பகுதிகளில் இருந்தன. அவை வீட்டு செலவுகளுக்குப் போதுமானளவுக்குச் செலவிடவும், குழந்தைகளைக் கல்லூரிகளுக்கு அனுப்பவும், சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கவும் போதுமானளவில் உயர்மதிப்பு சம்பளங்கள் வழங்கின. மேலும் அவை நிறைய இருந்தன. ஜெனரல் மோட்டார்ஸின் ஸ்டாம்பிங் ஆலை, அதன் வளர்ச்சியில் இருந்தபோது, 5,600 தொழிலாளர்களை நியமித்திருந்தது, அதேபோல வெஸ்டர்ன் எலெக்ட்ரிக் 8,000 தொழிலாளர்களையும், RCA 8,200 பேரையும் நியமித்திருந்தது.
“ஆனால் இன்றோ, நசிந்த தொழிற்சாலைகள் —சில சிதைந்து போன கட்டிடங்களாகவும், சில காலியிட மனைகளாகவும்—ஒருகாலத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவற்றின் எச்சசொச்சங்களாக நிற்கின்றன. ...
“ஸ்டீஃபென் பெல் மற்றும் ஸ்டீவன் பெட்ரஜொலும்—அவர்களின் 8 வயது மகன் சான்ஸ் உடன்—இத்தகைய புதிய யதார்த்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வழமையாக வேலை செல்கின்றனர் என்றாலும், அந்த குடும்பம் வீடற்று உள்ளது. அவர்கள் ஏப்ரலில் இருந்து 1537 சென்ட்ரல் அவின்யூவின் Dayspring Center இல் தங்கி உள்ளனர்.
“ஒரு உணவக சேவகரான (சர்வர்) 37 வயது பெல்லின் கூலிகள் நிச்சயமின்றி உள்ளது ஏனென்றால் ஒரு மணிநேரத்திற்கு 2.13 டாலர் கூலி மற்றும் கிடைக்கும் டிப்ஸைத் (உபசரிப்பு நன்கொடை) தான் அவர் நம்பி உள்ளார், இவை வரிகள் செலுத்துவதற்கே போதுமானதாக இல்லை. நகர மையத்தில் உள்ள Primanti பிரதர்ஸ் விடுதியில் செய்யும் ஒருசில மணி நேர வேலைகளில் ஓரளவுக்குப் பணம் கிடைக்கிறது. மற்ற நேரங்களில், சுற்றித் திரிந்து வேலை செய்தாலும் இன்டிகோ பேருந்து கட்டணத்திற்கான 3.50 டாலர் தொகைக்கு செலுத்தவே போதுமானதாக இது இருப்பதில்லை. IBJ உடனான சந்திப்புக்கு முந்தைய இரவு, மாலை 5 மணியிலிருந்து இரவு உணவகம் மூடப்படும் வரையில் வேலை செய்தும், பெல்லுக்கு நன்கொடை மூலமாக வெறும் 30 டாலர் மட்டுமே கிடைத்தது.” (இண்டியானாபொலிஸ் பிசினஸ் ஜேர்னல்)
— “அனேகமாக நன்றி தெரிவிப்பு தின இரவு விருந்துக்காக மட்டுமல்ல — நீங்கள் 150,000 டாலர் செலவிட நினைப்பதற்கு வாழ்வில் அங்கே பல விடயங்கள் உள்ளன. துல்லியமாக அதைத்தான் நியூ யோர்க் நகர அசைவ உணவகமான Old Homestead, கடந்தாண்டு வழங்கி 76,000 டாலரை விட அதிகமாக சாதனையளவிலான விலையுடன், இந்தாண்டு வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த நன்றி தெரிவிப்பு தின இரவு விருந்தை வழங்குகிறது.
“சராசரி அமெரிக்க குடும்ப வருவாயை விட அண்மித்து மூன்று மடங்கு அதிகமான, மொத்தம் 150,000 டாலர் விலையிலான இந்தாண்டின் இரவு விருந்து, உலகின் மிகச் சிறந்த உணவுப்பொருட்கள் அனைத்துடனும் முழுமையாக வருகிறது, அத்துடன் ஒரு பவுண்டு எடைக்கு 135 டாலர் விலையில் பொன் துகள்கள் பொடிப்பொடியாக தூவப்பட்ட நாட்டு வான்கோழி உணவுடன், பரிசாக, 2018 ரக Maserati Levante காரின் சாவிகள் வைக்கப்படுகின்றன.” (Yahoo Finance)
— “திங்களன்று இரவு [கலிபோர்னியாவின்] Salinas இல் அவர் படுத்திருந்த இடத்திற்கு அருகே, 39 வயதான டேவிட் ரோட்ரிக் வழமையாக Salinas இன் சைனாடவுனில் Dorothy’s Kitchen இல் தான் உணவுகள் வாங்குவார். அவர் இலாப நோக்கமில்லா நன்றி தெரிவிப்பு தின விழாவுக்கு இதற்கு முன்னர் சென்றதில்லை என்றாலும், வியாழனன்று முதல் முறையாக அவர் அங்கே செல்ல திட்டமிட்டுள்ளார்.
“சாலிஸ் ஆற்றுப்படுகையில் பிறந்து வளர்ந்த ரோட்ரிக், அவர் பாட்டியின் நன்றி தெரிவிப்பு தினத்திற்கு செல்ல நேரிட்டது. 2012 இல் இருந்து வீடின்றி இருக்கும் ரோட்ரிக், சைனாடௌனில் உள்ள ஏனைய பலரும் —அண்டைஅயலார்கள்— அவர் குடும்பத்தைப் போலவே பெரும்பாலும் அதேபோன்ற வறுமையில் இருப்பதாக அவர் கருதுகிறார். அவரின் புதிய குடும்பத்துடன் அவரது குழந்தைப் பருவ பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு நிறைய அர்த்தமுள்ளதாக, அவர் தெரிவித்தார்.” (The Californian)
— Business Jet Traveler சஞ்சிகையின் 8 ஆவது வருடாந்தர வாசகர் தேர்வு கருத்துக்கணிப்பானது, மக்கள் ஏன் பிரத்யேக சிறப்பு விமானப் பயணம் மேற்கொள்கிறார்கள், அவர்களின் பிரத்யேக விமானப் பயணம் மூலம் அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் பயணிக்கிறார்கள், அவர்களின் விருப்பமான விமானச் சேவை எது என்றும் இன்னும் பலவற்றைக் குறித்தும் ஒரு சிறப்புப் பார்வையை வழங்குகிறது. ... முதலில் சில நல்ல செய்திகள். பிரத்யேக விமானப் பயணமும் மற்றும் பிரத்யேகமாக விமானத்தில் பறக்க திட்டமிடுவதும் பலமான பொருளாதாரத்தின் அறிகுறிகள் என்றால், வாசகர்கள் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறார்கள். கருத்து தெரிவித்தவர்களில் 45% பேர் முந்தைய ஆண்டின் அதே அளவிலான தொகையைச் செலவிட்டு பயணித்ததாக கூறிய அதேவேளையில், பயணச் செலவைச் சற்று குறைத்துக் கொண்டதாக கூறிய 14% பேர் மற்றும் மிகவும் குறைத்துக் கொண்டதாக கூறிய 12% பேருடன் ஒப்பிடுகையில், 22% பேர் கூடுதலாக செலவிட்டதாகவும், 8% பேர் மிகவும் கூடுதலாக செலவிட்டதாகவும் தெரிவித்தனர். எதிர்காலத்தைக் குறித்து பார்த்தால், அந்த சஞ்சிகையின் வாசகர்களில் 44% பேர் அடுத்த 12 மாதங்களின் போது இதேயளவுக்கு பயணிக்க இருப்பதாக தெரிவித்தனர், பயணத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடும் என்று அனுமானித்த வெறும் 11% பேருடன் உடன் ஒப்பிடுகையில், 34% பேர் சற்று கூடுதலாகவே பறக்க இருப்பதாகவும், 11% பேர் மிகவும் கூடுதலாக பறக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.” (Forbes)
— “போதைமருந்து குற்றச்சாட்டுக்களின் பேரில் இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த ஆகஸ்டில், டெஸ்டினி ஜோன்சன் நடைமுறையளவில் மிகக்குதூகலமாக வெளியே வந்தார். அப்பெண்மணி அவரது புதிய சுதந்திரம் குறித்தும், Muncie, Ind. இல் உள்ள அவர் பெற்றோர்களிடம் வீட்டுக்குத் திரும்புவது குறித்தும் அவரது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். வேலை தேடுவதற்கான அவர் திட்டங்களைக் குறித்தும் கூட பேசினார்.
“எட்டு மாதங்களுக்குப் பின்னர், 27 வயதான ஜோன்சன் நனவின்றி கோமாவில் கிடக்கிறார், அங்கே இயந்திரங்களின் பீப் ஒலியைத் தவிர வேறு ஒலியில்லை. அவர் சமீபத்தில் ஓபியோய்ட் வலிமருந்து (opioid) அதிகம் எடுத்துக் கொண்டதால் டஜன் கணக்கான அல்லது அதற்கும் அதிகமான வலிப்புகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் பெட்ஷீட்கள் மற்றும் சிக்கலான டியூப்களுக்குள் புதையுண்டு, கண்கள் சுருங்கி வெளிறிப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அவர் தாயார், காத்தினா ஜோன்சன், ஒவ்வொரு நாளும் முன்சியில் உள்ள Ball நினைவக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் விழிப்புடன், அவர் மகள் வாழ்வது குறித்து மட்டுமோ, அல்லது அவர் எந்தளவுக்கு மூளையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் குறித்தோ மட்டும் பிதற்றிக் கொண்டிருக்கவில்லை, மாறாக டெஸ்டினியின் ஓபியோய்ட் வலிமருந்து பழக்கத்தின் சமீபத்திய இந்த உள்ளத்தை உருக்கும் அத்தியாயத்திலிருந்து விளைந்துள்ள எண்ணற்ற செலவுகளுக்கு எவ்வாறு செலவு செய்வது என்பதைக் குறித்தும் கதறிக் கொண்டிருக்கிறார். அவர் மகள் மீண்டும் நனவு பெற்று வருவதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் (ICU) இல் இருந்து வந்துவிடுவார் என்றும் காத்தினா ஜோன்சன் தெரிவிக்கிறார்.” (NPR)
— “பாதகமான சூழ்நிலைகளிலும் கூட, ஒவ்வொரு மனிதர் மீதும், ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் இயற்கை மீதும் செலுத்தப்படும் அன்பு தான் தெய்வம் என்பதை நாம் உணர்வதற்கு இந்த நன்றி தெரிவிக்கும் பழக்கம் எவ்வாறு நமக்கு உதவுகிறது என்பது முக்கியமாக நன்றி தெரிவிக்கும் தினத்தில் நினைவூட்டப்படுகிறது. நமது வாழ்வுக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வுக்கும், நமது சமூகங்களுக்கும் நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம். அனைவரையும் கருணையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்துவதற்கும், நம் நாடெங்கிலும் உலகெங்கிலும் நன்றி தெரிவிப்பு தினத்தின் உத்வேகத்தைப் பரப்புவதற்கும் நாம் பொறுப்பேற்போமாக.” (நன்றி தெரிவிப்பு தினத்தன்று டொனால்ட் ஜெ. ட்ரம்பின் ஜனாதிபதி பிரகடனம், நவம்பர் 20, 2018)
— “அமெரிக்காவை மீண்டும் தலைச்சிறந்ததாக ஆக்குவோம்! அமெரிக்கா முதலில்! ...
“அங்கே [புலம்பெயர்வோரின்] நடைபயணத்தில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். நாம் அவர்களைத் தடுப்போம். அவர்களைப் பிடித்து சிறையில் அடைப்போம்! நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து எதுவும் அறிந்திராதவர்களது, நீதி பரிபாலனை, நமது நாட்டை மிகப்பெரிய ஆபத்தில் நிறுத்துகிறது. இது நல்லதுக்கல்ல!” (டொனால்ட் ஜெ. ட்ரம்பின் ட்வீட் செய்தி, நவம்பர் 21)
— “[வடக்கு கலிபோர்னியாவில்] முகாம் நெருப்பு ஏற்பட்ட அன்றைய தினம் உரிய நேரத்தில் சில வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. ஏனையவை நெருப்பு சுவாலைகளுக்கு இரையாகி, வெடிகுண்டுகளாக வெடித்து சிதறின. அதில் மிகவும் மோசமான சம்பவம், சுமார் 26,000 மக்கள்தொகை கொண்ட பாரடைஸ் (Paradise) என்றழைக்கப்படும் ஒரு நகரில் நடந்ததாக இருக்கலாம். 'நான் நியெல் சாலையில் (Neal Road) வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன், குதிரை கொட்டகைகளுக்கு அருகிலிருந்த வீடுகள் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தன—நாங்கள் வண்டி ஓட்டி சென்று கொண்டிருந்தாலும், பாதை நெடுகிலும் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது,” இது முகாம் நெருப்பில் உயிர்பிழைத்து ஒரு கூடார முகாமில் வசிக்கும் பாரடைஸ் நகர குடிவாசி ஒருவரை சீக்கோவின் வால்மார்ட் வண்டி நிறுத்துமிடத்தில் நான் சந்தித்த போது தெரிவித்ததாகும். நியெல் சாலை என்பது பாரடைஸில் இருந்து நெடுஞ்சாலை எண் 99 ஐ அடைவதற்கான மூன்று சாலைகளில் ஒன்று மட்டும் தான். அது ஒருசில பாதைகளில் ஒன்றாக இருந்தது: 'நான் எனது பின்புறம் நோக்கும் கண்ணாடியில் பார்த்தேன், 10 கார்கள் வரை எண்ணினேன், 10 வது அல்லது 15 வது காராக இருக்கும், வெடித்து சிதறியது. அதன் நெருப்பு சுவாலைகள் மற்ற அனைத்து கார்கள் மீதும் மோதியது. இடமிருந்த கார்களில் மக்களைப் பாதுகாவலர்கள் ஏற்றி அனுப்பி கொண்டிருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு கார்களிலும் நான்கில் இருந்து ஐந்து நபர்களைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்,' என்று க்யூன் தெரிவித்தார், இவர் மனைவி மற்றும் இவர் குடும்பத்துடன் தங்கியிருந்த முகாம் மீது நெருப்பு பற்றியதிலிருந்து தப்பி வந்து ஒரு வாரகாலம் ஆகியிருந்தது.” (Slate)
* * * * * * *
ஒருபுறத்திலோ, பரந்த மக்களின் கடுமையான நிலைமை மற்றும் அவதிப்பாடுகள் உள்ளன, மறுபுறத்திலோ, ஏறத்தாழ விவரிக்க இயலாதளவில் செல்வவளமும் சமூக அலட்சியமும் நிலவுகிறது. பெருநிறுவன தன்னலச் செல்வந்த தட்டுக்களின் இரண்டு கட்சிகளும், போர் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த தாங்கொணா பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், விரைவிலோ சற்று தாமதமாகவோ அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பிரமாண்டமான சமூக மேலெழுச்சிகளை உருவாக்கியே தீரும்.