Print Version|Feedback
Corbyn, Brexit and the struggle for the United Socialist States of Europe
கோர்பின், பிரெக்ஸிட் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டம்
By Chris Marsden
17 December 2018
ஐரோப்பிய மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடி நிலைமைகளின் மத்தியில், பிரிட்டன் வெளியேறுவதன் மீதான ஓர் உடன்படிக்கையை அடைவதில் பிரிட்டன் பிரதம மந்திரி தெரேசா மே இன் தோல்வியும் மற்றும் அவரது அரசாங்கம் ஆழமாக முடங்கியிருப்பதும் எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியை குறித்து நிற்கிறது.
இது பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சந்தை-சார்பு தொழில் சீர்திருத்தங்கள் மற்றும் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மஞ்சள் சீருடை போராட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் காண்கின்றது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உடனான பிரிட்டனின் உறவுகளை மையப்படுத்தி, பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கையின் திசை பற்றிய அடிப்படை பிளவுகளால் பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு உடைந்திருக்கும் நிலையில், தொழிற் கட்சி தலைவர் ஜேர்மி கோர்பின் 1930 களுக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சியின் மிக ஆழமான நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான விடையிறுப்பையும் தடுப்பதில் மத்திய பாத்திரம் வகித்து வருகிறார்.
கோர்பினும் நிழல் அமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெலும் "குழப்பங்களைத் தீர்ப்பதற்கு" தெரேசா மே மற்றும் பழமைவாதிகளின் திராணியின்மையை குறைகூறியவாறு, தேசிய ஸ்திரப்பாட்டிற்கான ஒரு சக்தியாக தங்களைச் சித்தரித்துக் கொள்கிறார்கள். அவர்களின் கோரிக்கை தொழிலாள வர்க்கத்தை நோக்கி இல்லை, மாறாக இலண்டன் நிதிய நகரை —அத்தியாவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஐரோப்பிய சந்தையைப் பிரிட்டன் அணுகுவதைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்புக்கான கரங்களாக எதிர்கால தொழிற் கட்சி அரசாங்கத்தை நிலைநிறுத்திக் காட்டி வருகிறார்கள்.
வடக்கு அயர்லாந்து "வெளியேற்ற தடையின்" மீது விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய "நமது உடன்படிக்கையைக்" காப்பாற்றுமாறு புரூசெல்ஸின் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரதம மந்திரி தெரேசா மே செய்த முறையீடு செவிடன் காதில் விழுந்ததைப் போல ஆன பின்னர் தான், அவர் அரசாங்கத்தின் சிதைவு மோசமடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர் முன்மொழிந்த பிரெக்ஸிட் உடன்படிக்கை மீது கடந்த செவ்வாயன்று நடக்கவிருந்த ஒரு வாக்கெடுப்பு சுமார் 100 பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளிகளாலும் மற்றும் 10 ஜனநாயக ஒன்றிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளாலும் கடுமையாக தோற்கடிக்கப்படும் என்று அறிந்து, அந்த வாக்கெடுப்பை மே இரத்து செய்ய நிர்பந்திக்கப்பட்டார். அவரின் ஆளும் டோரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒருவாசி பேர் அவரை நீக்குவதற்கு வாக்களித்திருந்த போதினும், டோரி கட்சியின் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் தப்பி பிழைத்து வெறும் இரண்டு நாட்களில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வலியுறுத்துகையில் உடன்படிக்கையைத் திரும்ப பெறுவதால் "மறுபேச்சுவார்த்தையைத் திறந்துவிடாது" என்று குறிப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
இது டோரி கட்சியில் ஒரு நிரந்தர உடைவுக்கான பேச்சுவார்த்தையைத் தூண்டியது, முன்னாள் மந்திரிசபை அமைச்சர் நிக்கி மோர்கன் பிபிசி க்கு கூறுகையில், “இவர்களில் சிலர் —பிரிட்டன் கடுமையாக வெளியேறுவதை ஆதரிப்பவர்கள்— வெளியேறும் ஒரு தவிர்க்கவியலாத நிலை நிலவுவதாக நான் நினைக்கிறேன்,” என்றார்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், பிரிட்டன் பத்திரிகைகளும் மற்றும் சர்வதேச பத்திரிகைகளும் இந்த அரசாங்கம் முகங்கொடுத்து வரும் நெருக்கடியை தொழிற்கட்சியும் கோர்பினும் ஏன் அனுகூலமாக கைப்பற்ற முடியவில்லை என்று கேள்வி எழுப்பினர். அது தோல்வியடைந்து "மக்களின் வாக்குகளுக்கான" இரண்டாவது கருத்து வாக்கெடுப்புக்கு வழி வகுக்கலாம் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் பிளேயரிச நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் இந்த ஒன்றையே மட்டுமே விரும்புகிறார்கள் என்ற நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றியை எவ்வாறு நன்கு உத்தரவாதப்படுத்துவது என்பதில் அவரின் கணக்கீடுகள் மீதே பெரும்பாலான கருத்துரையாளர்கள் கவனத்தை செலுத்தியிருந்தனர்.
கோர்பின் எப்போது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார் என்று தெளிவாக அங்கே தந்திரோபாயரீதியான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் சமூக செலவினக் குறைப்பை நிறுத்துவதற்கான அவரது வாய்சவடால் வாக்குறுதிகளைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வர்க்க போராட்ட மேலெழுச்சி எழாமல் செய்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கக்கூடிய நிலைமைகளில் தொழிற் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் அவரது சுற்றி வளைத்த அக்கறையாக உள்ளது.
கோர்பின் இப்போது மூன்றாண்டுகளாக கட்சி தலைவராக உள்ளார், பிளேயரிசவாதிகள் மீதும் மற்றும் அவர்களின் பெருவணிக-ஆதரவு, போர்-ஆதரவு திட்டநிரல் மீதுமான பரந்த வெறுப்பின் காரணமாக அவர் இரண்டு முறை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதை கொண்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடதுசாரி மாற்றத்திற்கு ஒரு தலைமை கொடுப்பதற்கு மாறாக, அவர் அவரின் பிளேயரிச எதிர்ப்பாளர்களின் ஒவ்வொரு நடைமுறைவாத கோரிக்கைக்கு முன்னாலும் அடிபணிந்தார் என்பதோடு, அவர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து நகர்வுகளையும் எதிர்த்தார், அதேவேளையில் வர்க்க போராட்டத்தை அடக்குவகுறைப்பதற்கு முனைந்து வருவதோடு, டோரிக்கள் கோரும் வெட்டுக்களைத் திணிக்குமாறு தொழிற் கட்சி கவுன்சில்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இது, ஏதோவொரு வடிவத்தில் தேசிய கூட்டு அரசாங்கம் உருவாக்குவது மீதான விவாதங்கள் உட்பட டோரிக்களுடன் பிளேயரிசவாதிகள் சுதந்திரமாக சூழ்ச்சிகள் செய்வதற்கு விட்டு வைத்துள்ளது, அத்துடன் “சபை முழுவதிலும் தொடர்பு கொண்டு… சம்பந்தப்பட்ட சிலருடன் பேசிய பின்னர், ஓர் உடன்பாடு ஏற்படுமென நினைக்கிறேன்" என்று ரூபேர்ட் முர்டோஹ் இன் டைம்ஸ் இன் பிலிப் கொலின்ஸ் கடந்த வாரம் மே இடம் வலியுறுத்தினார். மேயின் துணை அதிகாரி டேவிட் லின்டிங்டன் வியாழக்கிழமை பிளேயரிச தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகா உமுன்னா, கிறிஸ் லெஸ்லி, பென் பிராட்ஷா, கிறிஸ் ப்ரெயண்ட், அங்கேலா ஸ்மித் மற்றும் ஸ்டீபன் டொக்டி ஆகியோருடன் முன்மொழியப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பு குறித்து பேசியதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.
பிரிட்டன் வெளியேறுவது மீது கோர்பினின் பகிரங்கமான ஒவ்வொரு அறிவித்தலும், தொழிற்கட்சி அரசாங்கம் தேசிய நலனைப் பிரதிநிதித்துவம் செய்யும் என்பதை பிரிட்டனின் ஆளும் உயரடுக்கிற்கு உறுதியளிப்பதற்காகவே வடிவமைக்கப்படுகின்றன. “உடன்பாடு எட்டப்படாமல் போவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் தடுப்பதற்காக" “மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்றவர் கார்டியனுக்குத் தெரிவித்தார். “இப்போதைய விதிமுறைகளின்படி நம்மால் ஒரு தேர்தலைச் சந்திக்க முடிவில்லை என்றால்,” “முட்டுக்கட்டையை உடைப்பதற்கு மக்களின் வாக்கெடுப்புக்காக பிரச்சாரம் செய்யும் சாத்தியக்கூறு" உட்பட "அனைத்து சாத்தியக்கூறுகளும் மேசையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றார்.
பிபிசி வானொலி 4 இன் இன்றைய நிகழ்ச்சிக்குக் மெக்டொன்னெல் கூறுகையில், பிரிட்டன் வெளியேறுவதன் மீது உடன்பாடு எட்டப்படாமல் போவதைத் தவிர்க்க மாற்றீடுகள் மீது அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தொழிற்கட்சி இன்னமும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்: “பழமைவாதிகள் சுய-பலி கொடுத்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலைகளில் உங்கள் கரங்களைச் சூடேற்றுவது தான் எதிர்கட்சிகள் செய்யக்கூடிய சுலபமான விடயம், ஆனால் நம் நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சினைகள் இந்தளவுக்கு மிகப் பெரியளவில் இருக்கையில், நீங்கள் அதை செய்ய முடியாது.”
ஆழமடைந்து வரும் வர்த்தக போரில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனோ அல்லது அமெரிக்காவுடனோ எந்தளவுக்குச் சிறப்பாக இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதில் மட்டுமே கருத்து வேறுபட்டுள்ள மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையாக விரோதமாக உள்ள எதிர்விரோத முதலாளித்துவ கன்னைகளுக்கு இடையிலான மோதலுக்குள், பிரிட்டன் வெளியேறுவது மீதான விவாதம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி வைக்கவே கோர்பின் செயல்பட்டு வருகிறார். இது, வேலைகள், கூலிகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது முன்பினும் அதிக காட்டுமிராண்டித்தன தாக்குதல்களை மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். இந்த வாரம் தான், தொழிற்சங்க காங்கிரஸ் ஓர் அறிக்கை வெளியிட்டது, அதாவது சராசரி பிரிட்டன் தொழிலாளர் உலகளாவிய பொறிவுக்கு முன்னதாக 2008 இல் சம்பாதித்ததை விடவும் மூன்றில் ஒரு பங்கு இப்போது குறைவாக—அதாவது நிஜமான வருமானத்தில் 11,800 பவுண்டுக்கு சமமாக—சம்பாதிக்கிறார் என்று அது குறிப்பிட்டது.
பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தில் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் மற்றும் ஹங்கேரியில் வேலைநாட்களில் கூடுதலாக இரண்டு மணிநேரம் கோருவதற்கு முதலாளிமார்களை அனுமதித்துள்ள "அடிமை சட்டத்திற்கு" எதிரான போராட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களையும் தூண்டிவிட்டுள்ள ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களது இதுபோன்ற சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கையை திணிப்பது சாத்தியமில்லை. இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோர்பின் ஒரேயொரு வார்த்தை கூறியதில்லை. அதற்கு பதிலாக அவர், சமீபத்தில் சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் உடன் செய்ததைப் போலவே, கடந்த வாரம் போர்ச்சுக்கலின் லிஸ்பனில் ஐரோப்பிய சோசலிசவாதிகளின் கட்சி மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொண்டு, சமூக செலவினக் குறைப்புகளைத் திணித்து வரும் "இடது" கட்சிகளுடன் தன்னை அணி சேர்த்துக் கொண்டார்.
கோர்பின் போர்ச்சுக்கலில் அவரது சந்திப்பை "ஒரு தனிச்சிறப்பு அந்தஸ்தாக" விவரித்தார் ஏனென்றால் இது "இடது மற்றும் தொழிற்கட்சி இயக்கத்திற்குள் கட்சிகளையும் இயக்கங்களையும் கொண்டு வருகின்ற ஒரு சோசலிசவாதியின் தலைமையிலான அரசாங்கம், வெற்றிகரமாக சமூக செலவினக் குறைப்பு அலையை திரும்பி, சமீபத்திய தசாப்தங்களின் நவ-தாராளவாத பாரம்பரியங்களை நிராகரிக்கிறது…" என்று கூறிக்கொள்வதற்காக இருந்தது மற்றும் பிரதம மந்திரி "அன்டோனியோ கோஸ்டாவின் அரசாங்கம் எதிர்பார்ப்புகளை நிராகரித்து, ஒரு கடுமையான வழியைக் காட்டியுள்ளது.”
கோஸ்டாவின் அரசாங்கம் போர்ச்சுக்கலின் பொதுச் சேவைகளைச் சீரழித்துள்ளதுடன், தொழிலாளர்களைத் தரந்தாழ்ந்த வறுமையில் மூழ்கடித்துள்ளது. ஒருசில வளரும் தொழில்துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை இருந்தாலும், அந்நாட்டை விட்டு 200,000 பேர் வெளியேறிய பின்னரும் கூட, இப்போது இளைஞர் வேலைவாய்ப்பில் பகுதி-நேர வேலை 22 சதவீதமாக உள்ளது, அதேவேளையில் மொத்த தொழிலாளர்களின் மூன்றில் இரண்டு பங்கினர் முழுமையாக குறுகிய-கால ஒப்பந்தங்களில் உள்ளனர். இது வேலைநிறுத்தங்கள் வெடிப்பதற்கு இட்டுச் செல்கிறது, இந்த மாதம் 50 க்கு நெருக்கமான வேலைநிறுத்த எச்சரிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன, இவற்றில் பெரும்பான்மை உள்துறை சேவை பணியாளர்களது ஆகும். இவற்றுடன் ரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், பெருவணிக அங்காடி பணியாளர்கள் மற்றும் ஏனையவர்களால் நடத்தப்பட்டு வருகின்ற நடவடிக்கை உட்பட டஜன் கணக்கில் தனித்தனியான வேலைநிறுத்தங்களும் சேர்கின்றன, அத்துடன் டிசம்பர் 21 இல் ஒரு மஞ்சள் சீருடை போராட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.
2016 பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பில், சோசலிச சமத்துவக் கட்சி வெளியேறுவது மற்றும் தங்கியிருப்பது ஆகிய இருதரப்பையும் எதிர்த்து, எந்தவொரு வலதுசாரி முகாமையும் ஆதரிக்க மறுத்தது. “இத்தகைய சக்திகளுக்கு எதிராக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான" பாதையைத் தயார் செய்ய நாம் ஒரு செயலூக்கத்துடனான புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தோம். “அதுபோன்றவொரு இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் கண்டந்தழுவிய எதிர்தாக்குதலின் பாகமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், அது கருத்து வாக்கெடுப்பைப் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உயிர்பிழைப்புக்கான ஆழமடைந்து வரும் நெருக்கடியின் ஒரு அத்தியாயம் மட்டுந்தான் என்பதை அம்பலப்படுத்தும்,” என்று குறிப்பிட்டோம். இந்த மதிப்பீடு சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முரணாக போலி-இடது போக்குகள் அனைத்தும், முதலாளித்துவத்தின் ஏதேனுமொரு கன்னையின் பின்னால்—“வெளியேறுவதை ஆதரிக்கும் இடது" வாக்குகளை அறிவுறுத்திய சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்றவைக்குப் பின்னாலும், ஐரோப்பிய ஒன்றியத்தை ஊக்குவித்து ஒன்றிணைந்திருப்பதை ஆதரிக்கும் இடது வாக்குகளை அறிவுறுத்திய சோசலிஸ்ட் எதிர்ப்பு (Socialist Resistance) மற்றும் தொழிலாளர் சுதந்திரத்திற்கான கூட்டணி போன்றவைக்குப் பின்னாலும், வரிசையில் நின்றன. இந்த அனைத்தினது நிலைப்பாடுகளும், வாழ்க்கை தரங்களைச் சீரழிப்பது, ஜனநாயக உரிமைகளை அழிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குண்டாந்தடியாக வலதுசாரி சக்திகளை விதைத்து ஊக்குவிப்பதற்காக அர்பணித்து கொண்ட அரசாங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டணியாக அம்பலமாகின.
பிரான்சில் தொடங்கியுள்ள போராட்டம் இப்போது ஐரோப்பா-தழுவிய தொழிலாள வர்க்கத்தின் எதிர்-தாக்குதலில் தொடக்கப்புள்ளியாக மாறியுள்ளது. தொழிலாள வர்க்கத்தை தேசிய போக்குகளாக பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எதிர்க்கப்படுகின்றன என்பதே இதன் அர்த்தம். ஒடுக்குமுறை, வறுமை, பாரிய வேலைவாய்ப்பின்மை, இராணுவவாதம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சோசலிச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்குத் தலைமையேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டால் மட்டுமே எந்தவொரு நாட்டிலும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் தாக்குதலைத் தோற்கடிப்பது சாத்தியமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையில் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதே, இக்கண்டம் தேசியமாக உடைந்து கிடப்பதன் பொருளாதாரரீதியான மற்றும் அரசியல்ரீதியான பேரழிவுகரமான விளைவுகளுக்கும் மற்றும் பிரிட்டன் வெளியேறுவதற்குமான பதிலாக இருக்கிறது.