Print Version|Feedback
A call to action to fight the GM plant closings and mass layoffs
GM ஆலை மூடல்களுக்கும் பெருந்தொகை ஆட்குறைப்புகளுக்கும் எதிராய் போராடுவதற்கான ஒரு நடவடிக்கைக்கு அழைப்பு
Jerry White
28 November 2018
2019 இன் ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐந்து ஆலைகளை மூடுவதாகவும் சுமார் 15,000 உற்பத்தி மற்றும் பிறதுறைகளை சேர்ந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகவும் ஜெனரல் மோட்டார்ஸ் திங்களன்று அறிவித்தது. வேலைகளை இவ்வாறாக மொத்தமாக அழிப்பானது, பூகோள வாகன தொழில் துறையில் ஒரு புதிய சீரமைப்புக்கான தொடக்கமாக இருக்கிறது, இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான வேலைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, உலகளாவிய நிதி நெருக்கடியை அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், மிகப்பெரும் செல்வத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டன. ஆளும் வர்க்கத்தின் இந்தத் தாக்குதலில் GM மற்றும் கிறைஸ்லரின் 2009 திவால்நிலை ஒரு முக்கிய அத்தியாயமாக இருந்தது. இவற்றின் மறுசீரமைப்பு ஒபாமாவின் வாகன உற்பத்தி செயல் படையால் (Auto Task Force) மேற்பார்வை செய்யப்பட்டது, வோல் ஸ்ட்ரீட் நிதியதிபர்களின் ஒரு கும்பலாக அமைந்திருந்த இந்த அமைப்பு பத்தாயிரக்கணக்கில் வேலைகளை வெட்டியதோடு வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் வருவாயையும் வேலையிடப் பாதுகாப்பையும் அழித்தது.
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருந்த ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் நல உதவிகளுக்கு எதிராகவும் இதேபோன்றதொரு பிரச்சாரம் நடத்தப்படுவதற்கான சமிக்கையாக இது இருந்தது. சென்ற ஆண்டில், உலகளாவிய சம்பள வளர்ச்சி விகிதம் 2008 க்குப் பிந்தைய மிகக்குறைந்த மட்டத்திற்கு, நிதிப் பொறிவுக்கு முந்தைய மட்டங்களுக்கும் வெகு கீழே, சரிந்திருந்ததாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
நான்காண்டு ஒப்பந்த காலம் அடுத்த கோடையில் காலாவதியாகின்ற சமயத்தில் கணிசமான ஈட்டங்களைப் பெற்றுவிட வேண்டும் என்று அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் தீர்க்கமான உறுதி கொண்டிருப்பது உள்ளிட்ட உலகெங்கிலும் தொழிலாளர்களிடம் அதிகரிக்கும் போர்க்குணத்திற்கு முகம்கொடுக்கும் நிலையில், ஆளும் வர்க்கத்திற்கு தொழிலாளர்களின் கழுத்தில் இருந்து தனது சப்பாத்து காலை அகற்றுகின்ற எந்த எண்ணமும் இல்லை என்பதையே இந்த வேலை வெட்டுக்கள் தெளிவாக்குகின்றன. GM இன் வேலை குறைப்புகள் தொடர்பாக ட்ரம்ப்பின் போலியான ஆட்சேபங்கள் இருந்த போதிலும், அவரது நிர்வாகமானது, ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு மேலதிக பெரும் தாக்குதலை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறது. புதிய பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் பெருகி வருவதன் மத்தியில், முன்னெப்போதினும் அதிகமான தொகைகளை நிதிச் சந்தைகளுக்குள் பாய்ச்சுவதற்கு பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு தீர்மானத்துடன் உள்ளது.
ஆலை மூடல்களையும் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பராவின் அறிவிப்பையும் வோல் ஸ்ட்ரீட் கொண்டாடியது; நிறுவனம் செலவுகளில் குறைக்கவிருக்கும் 6.5 பில்லியன் டாலர்கள் தவிர்க்கவியலாமல் பங்குகள் திரும்பவாங்கல் மற்றும் ஈவுச் செலுத்தங்களின் வடிவில் செல்வந்த முதலீட்டாளர்களின் பைகளுக்குப் போய்ச் சேரும்.
தொழிலாள வர்க்கத்திற்கு இதன் பின்விளைவுகள் நாசகரமானதாக இருக்கும். நிறுவனத்தின் டெட்ராயிட்-ஹேம்ட்ராம்க், மிச்சிகன்; லார்ட்ஸ்டவுன், ஒஹியோ மற்றும் ஒஷாவா, ஒன்டாரியோ ஆலைகள் மூடப்படுவதானது ஏற்கனவே பல தசாப்த கால தொழிற்துறை அழிப்பினாலும், வறுமையாலும் சமூக வீழ்ச்சியாலும் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற பகுதிகளில் ஒரு அழிவுகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். அதிகமான குடும்பங்கள் நிராதாரவான நிலைக்குள் தள்ளப்படும், அவர்களது வீடுகளை பறிகொடுக்க நேரிடும். குடும்பங்கள் பிரிதல், தற்கொலைகள் மற்றும் ஓபியாயிடு மரணங்கள் அதிகரிக்கும்.
இந்த ஆலைகளை மூடுவதற்கு பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் கொண்டிருக்கும் “உரிமை”யை வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் ஏற்க முடியாது! ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை உள்ளிருப்புப் போராட்டங்கள் உள்ளிட்ட இந்த வேலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முழுவீச்சிலான பிரச்சாரம் தொடக்கப்பட்டாக வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தின் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சுற்றிதழ் (The World Socialist Web Site Autoworker Newsletter) ஆலை மூடல்களை தடுப்பதற்கான ஒரு மூலோபாயம் குறித்து விவாதிப்பதற்கு டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமையன்று டெட்ராயிட்டில் ஒரு அவசர கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் (UAW) சங்கம் மூலமாகவோ, அல்லது அதன் கனடா வகையான, Unifor மூலமாகவோ நடத்தப்பட முடியாது. இந்த அமைப்புகள் தொழிலாளர்களது அமைப்புகளாய் இருப்பதில் இருந்து எப்போதோ இல்லாமல் போய் விட்டன. அவை இப்போது பெருநிறுவன நிர்வாகத்தின் கரங்களாக, அவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்கின்ற தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலைகளை அழிப்பதன் மூலமாக ஆதாயமடையும் சலுகையுடைய நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படுகின்றனவாக உள்ளன.
UAW, “வேலைகளைக் காப்பாற்றுவதற்காக” கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட 1979 கிறைஸ்லர் பிணையெடுப்பு தொடங்கி, அதன் மிகப்பெருமளவிலான விட்டுக்கொடுப்புகள் செய்யும் கொள்கையைத் தொடங்கி 40 ஆண்டுகளாகி விட்டிருக்கிறது. UAW துணைத் தலைவரான மார்க் ஸ்டெப் அந்த சமயத்தில் அறிவித்தார், “நிறுவனம் அதன் செயல்பாடுகளை வெட்டி நேர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டில் நாம் சுதந்திரமான நிறுவன அமைப்பைக் கொண்டிருக்கிறோம். இலாபமீட்டுவதற்கான உரிமை பெருநிறுவனங்களுக்கு உள்ளது.”
40 ஆண்டுகால முடிவற்ற நாசம் தான் விளைவாக இருந்திருக்கிறது. GM, ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 702,000 ஆக இருந்ததில் இருந்து 140,000 ஆக வீழ்ச்சி கண்டிருக்கிறது, அதேநேரத்தில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் ஊதியங்கள், நல உதவிகள் மற்றும் வேலைநிலைமைகளும் வீழ்ச்சியடைந்திருந்தன.
நிறுவனங்களின் இலாபங்களையும் சர்வதேச போட்டித் திறனையும் மேம்படுத்துவதே தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் எனக் கூறி, ஆகவே கூடுதலாய் தியாகங்கள் செய்வதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறுவழியில்லை என்று UAW, மிக சமீபத்தில், 2007, 2009, 2011 மற்றும் 2015 இல், வலியுறுத்தியது. Uniforம் கனடாவின் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் மீது வேலை ஒப்பந்தங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு அழுத்தமளித்து முன்னெடுப்பதற்கு இதே நியாயப்படுத்தலையே முன்வைத்தது.
இந்தக் கூற்றுகள் எல்லாம் இப்போது சுக்குநூறாகிக் கிடக்கின்றன. இந்த முடிவற்ற விட்டுக்கொடுப்புகளின் மூலமாக பயனடைந்திருப்பது பெருநிறுவன நிர்வாகிகளும், வோல் ஸ்ட்ரீட் முதலைகளும், UAW தலைவர்களுமே -இவர்கள் பில்லியன் கணக்கில் பெருநிறுவனப் பங்குகளைக் கொண்டிருப்பதோடு தொழிலாளர்களிடம் இருந்து பறித்த பணத்திலும் தொழிற்சங்க-நிர்வாக கூட்டுப் பயிற்சி மையங்களின் வழியாக மறுசுழற்சி செய்யப்பட்ட பணத்திலும் கோல்ஃப் சுற்றுப்பயணங்கள், ஆடம்பர உல்லாசவிடுதி விடுமுறைக் கழிப்புகள் மற்றும் பிரத்யேக வடிமைப்பு ஆடைகள் கிடைக்கப் பெறுகின்றனர்.
பதில்தாக்குதலுக்கு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய மூலோபாயம் அவசியமாய் உள்ளது:
முதலாவதாய், தொழிலாளர்கள் தமது சொந்த வலிமையைச் சார்ந்திருக்க வேண்டும். UAW மற்றும் Unifor இல் இருந்து சுயாதீனப்பட்ட சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை ஒவ்வொரு ஆலையிலும் உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த கமிட்டிகள் GM தொழிலாளர்களை மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அனைத்து வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிலாளர்களையும் இணைப்பதற்கு செயற்பட வேண்டும். சமூகத்தின் செல்வம் அத்தனையையும் உற்பத்தி செய்கின்ற தொழிலாளர்களுக்கு பெரும் வலிமையும் அனுகூலமும் உள்ளது. ஒரேயொரு பெரிய தொழிற்சாலையில் நடக்கக் கூடிய ஒரு வேலைநிறுத்தம், முறிவற்ற உலகளாவிய விநியோக சங்கிலியையும் உரிய-நேர விநியோகங்களையும் சார்ந்திருக்கின்ற ஒரு தொழிற்துறையை சடுதியில் முடக்கிவிட முடியும்.
இரண்டாவதாக, வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் அத்தனை தேசிய எல்லைகளையும் கடந்து ஐக்கியப்பட வேண்டும். வெகு இயல்பிலேயே, இது ஒரு சர்வதேசப் போராட்டமாகும். ஒரு தொழிலாளிக்கு எதிராய் இன்னொரு தொழிலாளியை நிறுத்தி இருவரையுமே பாதாளத்தை நோக்கி முண்டியடிக்கத் தள்ளும் விதத்தில் அவர்களை பிளவுபடுத்துவற்கு தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்ற தேசியவாத நஞ்சினை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். கொரியாவில் உள்ள GM தொழிலாளர்கள், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் உள்ள Vauxhall மற்றும் Opel (இரண்டுமே முன்பு GM ஆக இருந்தன) தொழிலாளர்கள் ஆகியோரும் ஆலை மூடல்களுக்கும் பெருந்தொகை ஆட்குறைப்புகளுக்கும் முகம்கொடுக்கின்றனர். ஏனைய உலகளாவிய பெருநிறுவனங்களும் GM கொடுத்திருக்கும் குறிப்பைப் பின்பற்றி நடக்கவிருக்கின்றன என்பது நிச்சயம். தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்துவதற்கு நாடுகடந்த வாகன உற்பத்தி பெருநிறுவனங்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தை கொண்டிருக்கிற நிலையில், அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வாகன உற்பத்தித் தொழிலாளர்களும் ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக, இந்த மூடல்களில் பெரும் சமூக நாசமும் சம்பந்தப்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, வாகன உற்பத்தித் தொழிலாளர்கள், போராட்டத்தில் கரம்கோர்க்க அனைத்துத் தொழிலாளர்களையும் நோக்கி கரம்நீட்ட வேண்டும். ஒரு பொதுவான போராட்டத்தில் நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களது ஆதரவை அணிதிரட்ட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமைகளை அழித்திருக்கின்ற அதே ஆளும் வர்க்க எதிர்ப்புரட்சி தான் டெட்ராயிட், லார்ட்ஸ்டவுன் மற்றும் நாடெங்கிலுமான பிற நகரங்களிலான சமூக நாசத்தின் பின்னாலும் இருக்கிறது.
வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை உருவாக்குவதானது அவர்களின் போராட்டங்களை UPS தொழிலாளர்கள், ஆசிரியர்கள், எண்ணெய் தொழிலாளர்கள், உருக்காலை தொழிலாளர்கள் மற்றும் சேவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் மாணவர் இளைஞர்களின் போராட்டங்களுடன் இணைக்கும். வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான இருகட்சித் தாக்குதலை எதிர்த்தான ஒரு பொதுவேலைநிறுத்தத்தை நோக்கியதாக தொழிலாளர்களது போராட்டங்களின் தர்க்கம் அமையும்.
இறுதியாக, இது, தொழிலாள வர்க்கத்தை ஏதேனும் ஒரு முதலாளிக்கு எதிராக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டு கட்சிகளுக்கும் எதிராக நிறுத்துகின்ற ஒரு அரசியல் போராட்டமாகும். தொழிலாளர்கள் அதிகாரத்துக்காகப் போராடுகின்ற ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டால் மட்டுமே சமூக உறவுகளில் ஒரு அடிப்படையான மற்றும் புரட்சிகரமான மாற்றம் நிகழ்வது சாத்தியமாகும்.
தொழிலாளர்கள் முதலாளித்துவ சந்தையை புனிதமானதாக ஒப்புக்கொள்வார்களாயின், அவர்களால் ஆலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்த்துப் போராட முடியாது. தொழிலாளர்களின் ஒரு பதில்தாக்குதலானது வங்கிகள் மற்றும் பெரும் பெருநிறுவனங்களின் பிடியை உடைத்து உலகப் பொருளாதாரத்தை தனியார் இலாபத்துக்காக அல்லாமல் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காய் மறுஒழுங்கமைப்பு செய்கின்ற நோக்கம் கொண்ட ஒரு சோசலிச மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். GM போன்ற பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் பணக்காரர்களின் விளையாட்டுப்பொருட்களாய் இல்லாமல், பொது நிறுவனங்களாக, தொழிலாளர்களின் கூட்டுடமைகளாக அவர்களால் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்படுகின்றவையாக உருமாற்றப்பட வேண்டும்.
WSWS வாகன உற்பத்தித் தொழிலாளர் சுற்றிதழ் (The WSWS Autoworker Newsletter) ஒரு இணையவழி அவசரக் கூட்டத்தை புதனன்று இரவு 8 மணி EST/7 மணி CSTக்கு நடத்துகிறது. GM, Lear மற்றும் ஏனைய பிற வாகன உற்பத்தித் தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான UAWக்கு எதிரான தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தை இந்தக் கூட்டம் விவாதிக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எவ்வாறு பங்குகொள்வது என்பது குறித்த விவரங்களைப் பெற 555888 க்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள், அல்லது இங்கே பதிவுசெய்யுங்கள்.