Print Version|Feedback
Political turmoil in Sri Lanka intensifies as opposition takes control of parliament
பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்க் கட்சி எடுத்துக்கொண்ட நிலையில் இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு அதிகரிக்கிறது
By Pani Wijesiriwardena
24 November 2018
பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியபோது, இலங்கையின் அரசியல் நெருக்கடி இன்னுமொரு திருப்பத்தை எடுத்தது. சபாநாயகர், இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கான நிதிகளை வெட்டிக் குறைக்கக் கூடிய ஒரு முக்கிய குழுவில் அவர்களுக்கு பெரும்பான்மை ஒதுக்கீடு செய்ய மறுத்தபோதே அவர்கள் வெளியேறினர்.
இராஜபக்ஷவையும் மற்றும் பதவி பறிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சூழ இருக்கும் கன்னைகள், பாராளுமன்ற தெரிவுக் குழு பாராளுமன்றத்தின் செயல்பாடுகளையும் அதன் நிகழ்ச்சி நிரலையும் தீர்மானிப்பதால், அதன் மீதான கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ள போராடி வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஞாயிற்றுக்கிழமை "அனைத்து கட்சி மாநாட்டில்", ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றாத காரணத்தால், தன்னால் நியமிக்கப்பட்ட மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் ஏற்றுக் கொள்ளவில்லை, என அவர்களிடம் தெரிவித்தார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய, "அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள விதிகளின் படி தான் உறுப்பினர்களை நியமித்திருந்த, பாராளுமன்ற தேர்வுக் குழுவின் உள்ளடக்கத்துடன் கட்சித் தலைவர்கள் உடன்படவில்லை என குறிப்பிட்டார்.
ஜயசூரிய, இராஜபக்ஷவின் கன்னைக்கும் ஐ.தே.க. கன்னைக்கும் தலா ஐந்து ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் ஒவ்வொரு ஆசனங்களையும் ஒதுக்கியிருந்தார். ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐ.தே.க.வுக்கு ஆதரவளிப்பதால், எதிர்க்கட்சியே இப்போது குழுவை கட்டுப்படுத்துகிறது, அதேவேளை சபாநாயகர் பதவியை கொண்டுள்ள ஜயசூரியவும் ஒரு ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.
இராஜபக்ஷ ஆதரவாளரான அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் "அரசியலமைப்புக்கு முரணான உறுப்பினர் அமைவை எதிர்த்து" தனது கன்னை வெளியேறப்போவதாக அறிவித்தார். அவர், ஜெயசூரிய அரசியல் ரீதியில் செயற்படுவதாக குற்றம் சாட்டினார்.
அரசாங்கத் தரப்பினர் சபையை விட்டு வெளியேறியிருந்த பின்னர், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைப் படி, மீதமிருந்த 121 பாராளுமன்ற உறுப்பினர்களும், மின்னியல் முறையைப் பயன்படுத்தி குழுவின் உறுப்பினர் தெரிவுக்கு வாக்களித்தனர். பாராளுமன்ற ஜனநாயகத்தின் வீரனாக காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி., மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஐ.தே.க.வின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றது.
ஐ.தே.க. தலைவர்கள், சிறிசேன சட்ட விரோதமாக நியமித்ததாக அவர்கள் கூறும் இராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் எதிர்த்துள்ளனர் என்று உத்வேகத்துடன் அறிவித்தனர்.
விக்கிரமசிங்கவுக்கு பதிலாக சிறிசேன பிரதமர் பதவியில் இராஜபக்ஷவை நியமித்ததை விமர்சிப்பதற்காக மாலை வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதத்தை தொடர்ந்தனர். அவர்களது உரைகளை அடுத்து, எதிர்வரும் செவ்வாய் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு ஊடக மாநாட்டில், பின்னர் அவைத் தலைவர் குணவர்தன, அரசாங்கம் பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பதாகவும் அடுத்த நிகழ்ச்சி நிரலை பரிசீலித்த பின்னர் பங்கேற்கலாமா என்பதை பற்றி முடிவு செய்வதாகவும் அறிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதன் மூலம், ஐ.தே.க. தலைமையிலான எதிர்க்கட்சி, இராஜபக்ஷ நிர்வாகத்தை முடக்குவதற்கு முற்படுகிறது. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், அது பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடை நிறுத்துவதற்கான ஒரு பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. அது நவம்பர் 29 அன்று நிறைவேற்றப்படலாம்.
பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன முயற்சித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் மீண்டும் மனுக்களை விசாரிக்கத் தொடங்கவுள்ள டிசம்பர் 4ம் திகதிக்கு முன்னதாக, பாராளுமன்றத்தில் மற்றொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நவம்பர் 12 அன்று, பாராளுமன்றத்தை கலைக்கும் சிறிசேனவின் அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2015 இல், இராஜபக்ஷவை சீனாவிற்கு நெருக்கமானவராக கருதியதால், அமெரிக்கா மற்றும் ஏனைய உலக சக்திகள், ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை தோற்கடிக்க சிறிசேனவை ஆதரித்தன. இந்து-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்காக, இந்தியாவின் ஆதரவுடனான வாஷிங்டனின் உந்துதலில் இலங்கை ஒரு மூலோபாய இடமாக உள்ளது.
அவர்கள் பாசாங்கு செய்வது போல், ஒரு பக்கம் சிறிசேன மற்றும் இராஜபக்ஷவைச் சூழவும் மறுபக்கம் விக்கிரமசிங்கவைச் சூழவும் உள்ள இரண்டு போட்டியிடும் கன்னைகளுக்கு இடையேயான கசப்பான போராட்டத்துக்கும், மக்களுடைய ஜனநாயக அல்லது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்ட அனைவருமே உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாத்த நிர்வாகங்களை நடத்தி வந்துள்ளனர். இரு கன்னைகளுமே, தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு விரோதமாக, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டங்களை திணிப்பதன் பேரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன.
வியாழன் அன்று, தெற்கு நகரமான பெலியத்தவில் நடந்த ஒரு கூட்டத்தில், இராஜபக்ஷ ஒரு தேர்தலுக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் உட்பட மக்களுக்கு சலுகைகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அவர், "இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும், இந்த நெருக்கடியை தீர்க்க சிறந்த வழி மக்கள் முன் செல்லவதே என்கின்றனர்," என கூறினார்.
இது வஞ்சத்தனமான ஒரு தோரணையாகும். 2005 முதல் 2015 வரையில் அதிகாரத்தில் இருந்த இராஜபக்ஷ, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்கினார்.
பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை சபைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வெற்றி பெற்றதில் இருந்தே, இராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலை நடந்த பிரச்சாரம் செய்து வருகின்றார். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.. சுரண்டிக்கொள்ளக் கூடும் என்று கணக்கிட்ட அவர், ஒரு "வலுவான அரசாங்கத்தை" ஸ்தாபிப்பதாகவும் "அராஜக சூழலில்" இருந்து நாட்டை காப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
எந்தப் பிரிவு அதிகாரத்தை கைப்பற்றினாலும், அது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை தொடுக்கும். நாட்டின் மோசமடைந்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகள் அரசியல் நெருக்கடியை அதிகரிக்கச் செய்து, தற்போது விக்கிரமசிங்கவை ஆதரித்து வரும் உலக வல்லரசுகளின் அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்த வாரம், மூடிஸ் தரமதிப்பீட்டு நிறுவனம் இலங்கையை தரங்குறைத்ததுடன், சர்வதேச நாணய நிதியமானது "அரசியல் சூழ்நிலையில் தெளிவின்மை தொடர்வதால்" அதன் அடுத்த கடன் திட்ட கலந்துரையாடல்களை தாமதப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 17.2 பில்லியன் ரூபாக்கள் பத்திரச் சந்தையில் இருந்து வெளியேறியதாக ராய்ட்டர்ஸ் செயதி வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் இருந்து 7.8 பில்லியன் ரூபாயும் இழக்கப்பட்டுள்ளது. நேற்று, இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு 180 ரூபாய்க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 15 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் கீழ் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, தங்களது அரசாங்கம் “பொருளாதாரத்தை மிகவும் கவனமாக நிர்வகித்து, முடிந்தவரை மக்கள் மீது சுமையை குறைந்தளவிலேயே தினிக்க முயன்றது, ஏனெனில் நாங்கள் நிறைய கடன்களை வாங்கியுள்ளோம்" என ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இது ஒரு பொய்யாகும். சமரவீர சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதில் முன்னிலையில் நின்றதுடன், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மீது சுமையை திணித்ததால், தொடச்சியான போராட்டங்கள் வெடித்தன.
அடுத்த ஆட்சி, விக்கிரமசிங்க, சிறிசேன அல்லது இராஜபக்ஷ தலைமையிலானதாக இருந்தாலும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்துவதையும், சர்வாதிகார ஆட்சி வடிவத்தை நாடுவதையும் தவிர அதற்கு வேறு வழி இருக்காது என்பதையே கடந்த காலக் கொள்கைகள் பற்றிய சமரவீரவின் கருத்துக்கள் எச்சரிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஏனைய சக்திகள், தற்போதைய நெருக்கடிக்கு தங்கள் தேர்வுகளை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. செவ்வாயன்று அமெரிக்க, இங்கிலாந்து, கனடா, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கொழும்புத் தூதர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.
சந்திப்பின் பின்னர், சம்பந்தன் ஊடகங்களுக்கு கூறியதாவது: "அரசாங்கமோ அல்லது பிரதமரோ இல்லாத நிலையில் முயற்சிகள் எல்லாம் முடங்கிக் கிடப்பதை ஏற்க முடியாது. நெருக்கடியைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." "தங்களால் முடிந்ததை செய்வோம் என தூதர்கள் கூறினர்," என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க. மற்றும் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுகின்றது. வாஷிங்டனுடனான நெருக்கமான உறவுகளுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் உயரடுக்கிற்கான சலுகைகளை தக்க வைக்க மட்டுமன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள அரசியல் நலன்களுக்கு சேவை செய்வதற்காக இலங்கையை நிலைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றது.
இந்த அழுத்தத்தின் கீழ், "பிற நிதி நிறுவனங்களுடன் சேர்த்து நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய எதிர்பார்க்கிறோம்", என இராஜபக்ஷ தனது அமைச்சரவையில் புதனன்று கூறினார். பொருளாதாரத்தின் நிலை பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை அவர் முன்மொழிந்தாதர்.
உலக நிதி நெருக்கடியும் தமிழர் விரோதப் போரும் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த பின்னர், 2009ல் சர்வதேச நாணய நிதியத்திடம் பிணை எடுப்புக் கடன் ஒன்றை இராஜபக்ஷ வாங்கினார். மானியங்களை குறைத்தல் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதுமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு ஆதரவளித்தன, ஆனால் அவர் சீனாவிடமிருந்து நிதி மற்றும் முதலீட்டை ஈர்த்தபோது அவை அவருக்கு எதிராக திரும்பின.
ஆளும் உயரடுக்கின் இந்த போட்டியிடும் கன்னைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு தெரிவையும் வழங்கவில்லை. பாராளுமன்ற ஜனநாயகம் பற்றிய பாசாங்கின் பின்னணியில், அவர்கள் சர்வாதிகார ஆட்சி வடிவத்தையே தயார் செய்கின்றனர்.
தொழிலாளர்கள், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு போராடும் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும்.