Print Version|Feedback
Sri Lanka: Second no-confidence motion passed as violent clashes erupt in parliament
இலங்கை: பாராளுமன்றத்தில் வன்முறை மோதல்கள் வெடித்த நிலையிலும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
By W.A. Sunil
17 November 2018
அக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி சிறிசேன முன்னள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்தமைக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நவம்பர் 14 அன்று கொண்டுவரப்பட்டபோது, போட்டிக் குழுக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்காக மோதிக்கொண்ட நிலையில், நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சரீர மோதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்-அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன.
2015 ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் இராஜபக்ஷவை சிறிசேன அகற்றினார். அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) தனது கன்னையையும் எதிர்க கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவினார். பெய்ஜிங் உடனான இராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளுக்கு வாஷிங்டன் எதிராக இருந்தது.
இப்போது தொழிலாளர்களதும் ஏழைகளதும் வளர்ந்து வரும் எதிர்ப்பின் தாக்கத்தின் கீழ், இந்த "தேசிய ஐக்கிய” கூட்டணி சரிந்துவிட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு மறுநாள், இராஜபக்ஷவின் அறிக்கை ஒன்றை கேட்பதற்காக வியாழக்கிழமை பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பொருளாதார "சுமைகளை" மக்கள் மீது சுமத்தி நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை முந்தைய அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் அமுல்படுத்தியதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வளர்ச்சியடையும் உண்மையான சீற்றத்தை சுரண்டிக்கொள்வதற்கு இராஜபக்ஷ கடுமையாக முயன்றார். முன்னாள் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிலைமையில் இருந்து தலை தூக்குவதற்காக சிறிசேனா "அரசாங்கத்தை பொறுப்பேற்க என்னை அழைத்தார்" என்று அவர் தெரிவித்தார்.
மேற்கத்தைய சக்திகள் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றன என்ற தெளிவற்ற சுட்டிக்காட்டலை உள்ளடக்கிய இராஜபக்ஷவின் உரை, ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரிலியல்ல, அறிக்கை சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்த முன்மொழிந்தபோது கசப்பான இடையூறுகள் தோன்றின. இராஜபக்ஷ கன்னை, சபாநாயகர் கரு ஜயசூரியவை கடுமையாக கண்டனம் செய்தது. போட்டிக் கன்னைகள் கோஷம் எழுப்பி, கலவரம் செய்து உரத்த குரலில் கத்திய நிலைமையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
அன்று பிற்பகல், விக்கிரமசிங்க பிரிவை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) மத்திய கொழும்பில் பல ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை நடத்தியது. விக்கிரமசிங்க முகாமின் கோரிக்கைகளுக்கு இணங்க சிறிசேனவை கட்டாயப்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது.
கூட்டத்தில் உரையாற்றிய விக்கிரமசிங்க, சிறிசேன-இராஜபக்ஷ இணைப்பு "பாராளுமன்றத்தின் ஆதரவை இழந்து விட்டது" என்று அறிவித்து, அரச அதிகாரத்தை மீண்டும் பெறும் வரை ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை எனக் குறிப்பிட்டார்.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் விக்ரமசிங்க, "ஒரு தேர்தலை நடத்த நாங்கள் பயப்படவில்லை, ஆனால் அது அரசியலமைப்பு ரீதியாக அழைக்கப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு முரணாக நடத்தப்படும் தேர்தல், நாம் வெற்றிபெற்றால் சட்டபூர்வதன்மை பற்றிய பிரச்சினைகளை (மட்டுமே) எழுப்பும் ... நாம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தேர்தலை நடத்த முடியும்," என அவர் மேலும் கூறினார்.
இலங்கை வரலாற்றில் மிக அடிப்படையான புரிதலைக் கொண்டவர்கள், இந்த கூற்றுக்களின் போலியான மற்றும் இழிந்த தன்மையை கண்டுகொள்வார்கள். விக்கிரமசிங்கவும் ஐ.தே.மு.வின் பிரதான கட்சியான அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.), உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் கிழித்தெறிந்து வந்துள்ளன.
ஐ.தே.க. அரசாங்கங்களின் ஜனநாயக விரோத தாக்குதல்கள் 1948 இல் இலங்கையின் பெயரளவிலான சுதந்திரத்தின் முதல் ஆண்டை நோக்கி திரும்புகின்றன. அப்போதே நாட்டின் பிரதான அந்நிய செலாவணியை கொண்டுவந்த ஒரு மில்லியனுக்கும் மேலான தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்ததும் இதில் அடங்கும். 1982 இல், ஐ.தே.க. தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆறு ஆண்டுகளுக்கு பொதுத் தேர்தல்களை ஒத்திவைக்க வாக்கெடுப்பு ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டார். இதேபோல், 2015 முதல் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதைத் தவிர்ப்பதற்கு பல்வேறு நெறிமுறைகளை பயன்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு பிரதிபலித்த சிறிசேன, விக்கிரமசிங்கவின் ஐ.தே.மு. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவர்களை வியாழனன்று சந்தித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இராஜபக்ஷவை பிரதமராக சிறிசேன நியமித்தது "அரசியலமைப்புக்கு முரணானது" என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அகற்றிவிடுமாறு அவர் பிரேரித்தார்.
இராஜபக்ஷ பிரதமராக இருப்பதிலும் அவரது அரசாங்கத்திலும் "நம்பிக்கை அற்றதாக" புதிய தீர்மானம் இருக்க முடியும் என்று கூறிய அவர், ஆனால் பாராளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் அன்றி, பெயர் கூறி அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அறிவித்தார்.
இலங்கை மக்கள் மத்தியில் பாராளுமன்றம் மேலும் இழிவுபடுத்தப்படும் என பீதியடைந்த ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், சிறிசேனவின் முன்மொழிவுக்கு உடனடியாக உடன்பட்டனர். அரசியலமைப்பு அல்லது மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது பற்றி அவர்கள் கவலைகொள்ளவில்லை என்பதை இது தெளிவாக்கியது. அவர்கள், விக்கிரமசிங்க கன்னையின் அரசியல் சுய-நலனாலும் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் கோரிக்கைகளாலுமே உந்தப்படுகின்றனர்.
சிறிசேன, ஐ.தே.க. தலைவர்களையும் அதன் கூட்டாளிகளையும் சந்தித்தது போலவே, இராஜபக்ஷ கன்னையும் வெள்ளியன்று நடவடிக்கைகளைத் தயாரிப்பதில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டத்தை கூட்டியது.
இராஜபக்ஷ பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருக்காத அதேவேளை, சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இல் இணைந்துகொண்டனர். முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சில அமைச்சுப் பொறுப்புக்களைக் கொண்டவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் முன்னர் சிறிசேனவுக்கு விரோதமாக இருந்தபோதிலும், இப்போது சிறிசேன ஆதரவாளர்களுடன் ஒட்டிக்கொண்டு இராஜபக்ஷவுக்கு அதிகாரத்தை சட்டவிரோதமாக மாற்றியதை நியாயப்படுத்த எவ்வளவு தூரம் செல்லவும் தயாராக உள்ளனர்.
வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இராஜபக்ஷ ஆதரவாளர்கள் முன்கூட்டியே வந்திருந்து, பாராளுமன்றம் மீண்டும் கூடுவதைத் தடுப்பதற்காக சபாநாயகர் ஆசனத்தையும் அதைச் சூழ உள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர்.
அரை மணிநேரத்திற்குப் பின்னர், சபாநாயகர் ஜயசூரிய, பொலிஸ் அதிகாரிகள் புடை சூழ பாராளுமன்றத்தில் நுழைந்தார். பொலிசார், ஐ.தே.க. மற்றும் அதோடு இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நாற்காலிகள், புத்தகங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன.
தனது நாற்காலியை அடைய முடியாமல் இருந்த சபாநாயகர், இடைவழியே நின்று பொலிசார் சூழ நின்ற இடத்தில் இருந்தே கூட்டத்தை நடத்தினார். திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை அவர் புதுப்பித்தார், ஆனால் அவரால் "பெயர் கூறி அழைத்து" வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை, அதனால் அவர் ஒரு குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததுடன், பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள், இராஜபக்ஷ எந்த வகையிலும் அதிகாரத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு தமது எதிர்ப்பை தெளிவாக வெளிப்படுத்தியதோடு விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதையும் தெளிவாக்கியுள்ளன. குறிப்பாக வாஷிங்டன், இராஜபக்ஷ அல்லது வேறு எந்தவொரு இலங்கை அரசியல் தலைவரும், நாட்டை பெய்ஜிங் சார்பாக திருப்பி, சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புக்களுக்கு இடையாறு செய்வதைத் தடுப்பதில் உறுதியாக இருக்கின்றது.
போலியான "ஜனநாயக" கூச்சல்களுக்கு தனது குரலையும் சேர்த்துக்கொண்ட ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்ட், ஊடகங்களுடன் பேசும் போது, "இலங்கையில் ஜனநாயகத்துக்கு அது ஒரு மோசமான நாள்" என்றும், "சபாநாயகர் மீது பொருட்களை வீசி எறிந்து வாக்கெடுப்பைத் தடுப்பதானது ஜனநாயகம் வராது என்பதையே குறிக்கின்றது" என்று கூறினார்.
இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள், தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வாரம் இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம், கூட்டு ஆடை தொழிற்துறை ஒன்றியம் மற்றும் தொழிற்துறை மற்றும் வர்த்தக மகளிர் சங்கமும், "தேசிய நலன்களில் அவசரமான புத்திசாலித்தனமான நடவடிக்கை" எடுக்குமாறு அழைப்பு விடுத்து, இந்தவாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை பற்றி நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம், என அது அறிவித்தது. "கடந்த சில வாரங்களில் நடந்த சம்பவங்கள், இலங்கையால் சாதாரணமாக தாங்கிக்கொள்ள முடியாது. இது அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதோடு, நமது நாட்டில் சமூக மற்றும் பொருளாதார போக்குகளின் மீது குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை."
வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சி, வளர்ச்சி வீதங்கள் வீழ்ச்சி, கடன் சுமை உயர்வு மற்றும் ரூபாய் வீழ்ச்சி ஆகியவற்றால் இலங்கையானது தற்போது தீவிர மற்றும் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
ஃபோகஸ் எகோனமிக்சின் ஒரு சமீபத்திய அறிக்கை 2019ல் வளர்ச்சி வீதம் 4.2 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டது: "தற்போதைய அரசியல் நெருக்கடி, இலங்கையின் பொருளாதார வாய்ப்புக்களை பாதிக்கும், விசேடமாக அதன் தற்போதைய கணக்கு மற்றும் நிதி பற்றாக்குறைகள் ஏற்கனவே அதிர்ச்சியூட்டும் வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது."
திங்களன்று பாராளுமன்றம் மீண்டும் கூட உள்ள போதிலும், எதுவும் தீர்க்கப்படவில்லை.
ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவு அரச அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இலங்கை முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாதவாறான சமூகத் தாக்குதல்களை மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும், என்பதை ஒப்புக்கொள்கின்றன.
ஒரு சோசலிச மற்றும் அனத்துலக வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கமானது கிராமப்புற ஏழைகளையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்துக்கொண்டு, அனைத்து பாராளுமன்றக் கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்செல்லும் ஒரே வழியை முன்வைக்கும் இந்த முன்னோக்கு, சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படும் எதிர்வரும் பொதுக்கூட்டங்களில் விவாதிக்கப்படும்.