Print Version|Feedback
Sri Lankan political crisis deepens: Prime minister splits from president
இலங்கை அரசியல் நெருக்கடி ஆழமடைகிறது: பிரதமர் ஜனாதிபதியை விட்டுப்பிரிகிறார்
By W.A. Sunil
13 November 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்டோபர் 26 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதிவி நீக்கி அந்த இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அமர்த்தியதன் பின்னர், கடந்த வெள்ளியன்று அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கத் தீர்மானித்தமை, கொழும்பில் அரசியல் நெருக்கடியை மட்டுமே உக்கிரமாக்கியுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 36 மணி நேரத்திற்குள், இராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் இராஜபக்ஷ தலைமையிலான ஒப்பீட்டளவில் புதிய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் (ஸ்ரீ.ல.பொ.மு.) இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக, சிறிசேன தலைவராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) இருந்து விலகிச் சென்றார்.
ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் சமூக அதிருப்தி மற்றும் உக்கிரமடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களின் அழுத்தங்களின் கீழ், கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனம் பிளவுபடுகின்றது. 2015 ஜனாதிபதித் தேர்தலில், சிறிசேன, இராஜபக்ஷவிடம் இருந்து பிரிந்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடன், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
அதையடுத்து அமைக்கப்பட்ட சிறிசேன மற்றும் ஐ.தே.க. தலைவர் விக்கிரமசிங்கவினதும் "தேசிய ஐக்கிய" அரசாங்கம், அக்டோபர் 26 அன்று கவிழ்ந்தது. இப்போது இராஜபக்ஷவுடனான சிறிசேனவின் சந்தர்ப்பவாத மறு ஐக்கியமும் பிளவுபட்டு, ஜனாதிபதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையின் இரு நீண்டகால முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ.ல.சு.க. பொறிந்து போகும் சாத்தியத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஸ்ரீ.ல.சு.க. இல் தனது கன்னையை அடித்தளமாகக் கொண்டு இராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை (ஸ்ரீ.ல.பொ.மு.) ஸ்தாபித்தார். "ஐக்கிய" அரசாங்கத்தின் மீதான வெகுஜன விரோதத்தை சுரண்டிக்கொண்டு, அவர்கள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. இல் சிறிசேனவின் கன்னைக்கும் எதிராக ஒரு உறுதியான வெற்றியைப் பெற்றனர். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த பரந்த எதிர்ப்பு, அரசியல் நெருக்கடியில் ஒரு முக்கிய காரணியாகும்.
இராஜபக்ஷவின் தீர்மானத்தால் சிறிசேன அரசியல் ரீதியாக பலவீனமடைந்த நிலையில், கடந்த இரு வாரங்களில் அவர் ஜனாதிபதி என்ற வகையில் குறிப்பிடத்தக்க அரச அதிகாரங்களை தன் கைக்குள் குவித்துகொண்டுள்ளார். அவர் இராணுவம், பொலிஸ் மற்றும் அரச ஊடகங்களையும் ஏனைய அமைச்சுகளையும் கட்டுப்படுத்துகிறார். ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பை வெளிப்படையாக புறக்கணித்து செயற்பட்ட சிறிசேன, பதவியில் நிலைத்திருப்பதற்காக அவநம்பிக்கையான இன்னொரு முயற்சியில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை பயன்படுத்த மீண்டும் முயற்சிக்க கூடும்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் எச்சரிக்கப்பட வேண்டும்: ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவும் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப் போவதில்லை. அவை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மற்றும் பெருவணிகத்தின் சிக்கனக் கட்டளைகளை இரக்கமின்றி சுமத்த உள்ளன. தாம் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பெருவணிக அரசியல்வாதிகளின் வெட்கக் கேடான கூற்றை நிராகரிக்க வேண்டும்.
சனிக்கிழமையன்று ஒரு டுவீட் செய்தியில், மஹிந்த இராஜபக்ஷ, "ஒரு பொதுத் தேர்தல் மக்களின் விருப்பத்தை உண்மையாக ஸ்தாபிப்பதோடு ஒரு உறுதியான நாட்டிற்கு வழிவகுக்கும்" என்று அறிவித்தார். அவரது இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, அதே நாளில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். "நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த இதை விட வலுவான ஒரு நடவடிக்கை கிடையாது", என அவர் கூறினார்.
எனினும், ஆட்சியில் இருக்கும்போது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்ததில் மஹிந்த இராஜபக்ஷவும் அவரது சகோதரரும் பேர் போனவர்களாவர். 2009ல் அரசாங்கத்தின் இறுதி தாக்குதலில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராஜபக்ஷ அரசாங்கமானது அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல தமிழ் இளைஞர்களின் படுகொலைக்கு அல்லது "காணாமல் ஆக்கப்பட்டதற்கு" பொறுப்பான ஒரு பொலிஸ்-அரச ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.
மேலும், விக்கிரமசிங்கவை பதவி விலக்கி, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததோடு, சலுகை மற்றும் இலஞ்சம் கொடுத்தும் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற முடியாத பட்சத்தில் புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை இராஜபக்ஷ ஆதரித்தார். ஜனவரி 5 அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன், புதிய பாராளுமன்றம் ஜனவரி கூடவுள்ளது. இதன் மூலம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மைக்கு வெற்றி பெறாவிட்டால், மூடிய கதவுகளுக்குள் பேரம்பேசலுக்கு போதுமான நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஆதரவுடன், ஐ.தே.க., பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவால் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்திருக்கிறது. இருப்பினும், பிரதம நீதியரசரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்களாவர் மற்றும் அவர் அரசியலமைப்பை வெளிப்படையாக மீறிய போதிலும், அவருக்கு ஆதரவாகவும் தீர்ப்பு கூறக் கூடும்.
ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர, சனிக்கிழமையன்று ஊடகவியலாளர்களுக்கு உரையாற்றுகையில், "கொடுங்கோன்மை" ஜனாதிபதி சிறிசேன "அதிர்ச்சியூட்டும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு" எதிராக தனது கட்சி போராடும், என்று அறிவித்தார். "ஜனநாயகவாதியாக" காட்டிக்கொண்ட சமரவீர, “நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம், பாராளுமன்றத்தில் போராடுவோம், தேர்தலில் போராடுவோம்," என பிரகடனம் செய்தார்.
இராஜபக்ஷ மற்றும் சிறிசேனவைப் போலவே, தனக்கு பொருந்தும் போது ஐ.தே.க. அரசியலமைப்பை பயன்படுத்திக்கொள்கிறது, பொருந்தாதபோது ஜனநாயக மற்றும் சட்ட வடிவங்களைக் காட்டி தூர நின்றுகொள்கின்றது. ஐ.தே.க., 1948 இல் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை பறித்தது, கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தியது மற்றும் 1978 இல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்தாபித்தது உட்பட ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு பேர் போன கட்சியாகும்.
2015 தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷவை தோற்கடித்து சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ஐ.தே.க. தலைவர் விக்கிரமசிங்க பிரதான புள்ளியாக செயற்பட்டார். புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த, இராணுவத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் இருந்த அமெரிக்கா, அவரது அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கு எதிராக இருந்தது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இப்போது ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் கூட்டாளிகள், ஐ.தே.க மற்றும் விக்கிரமசிங்கவுடன் அணிசேர்ந்திருப்பது புதுமையான விடயம் அல்ல. சனிக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை "இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தையும் சர்வதேச புகழையும் பாதிக்கும்" என்று எச்சரித்துள்ளதோடு ஜனாதிபதி "தனது நாட்டின் ஜனநாயக மரபுகள் மற்றும் சட்ட விதிமுறைகளை மதிக்க வேண்டும்" என்றும் "நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற அடிப்படைகளிலேயே அவரும் அவரது அரசாங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதற்கான அர்ப்பணிப்பை” நிறைவேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
என்ன பாசாங்குத்தனம்! போலி இடது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன், வாஷிங்டன், "நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தின்" பாதுகாப்பிற்காக இராஜபக்ஷவை அகற்றுவதற்கான அதன் திரைமறைவிலான சதிகளை 2015 இல் அரங்கேற்றியது. தனக்கேற்ற வழி கிடைக்காவிட்டால், கொழும்பு தனது பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துவற்கு மற்றொரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை முன்னெடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தயங்காது.
பெரும் வல்லரசுகளின் தலையீடு, ஆளும் வர்க்கம் பிளவுபட்டு, குழம்பிப் போய் மற்றும் பீதியடைவதற்கு வழிவகுத்துள்ள கொழும்பில் நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை இன்னும் தீவிரமாக்கும். இந்த வார இறுதியில் ஞாயிறு வெளியான சண்டே ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் தெரிவித்ததாவது: "இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படுபவதன் ஜனாதிபதி, நாட்டை சட்டியில் இருந்து அடுப்புக்குள் தள்ளியுள்ளார்... இப்போது நாடு குழப்பத்தில் உள்ளதுடன் ஸ்திரப்பட்டுக்கு திரும்புவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்." ஆனால், அதை எப்படிச் செய்வது என்பதை கூறாமல் ஐலண்ட் நிறுத்திக்கொண்டது.
போலி-இடது நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.), 2015 இல் போலவே, ஐ.தே.க. மற்றும் விக்கிரமசிங்கவுடன் அணி சேர்ந்துள்ளது. அதேவேளை முன்நிலை சோசலிஸ்ட் கட்சி (மு.சோ.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) போன்ற ஏனையவை, மீண்டும் "இடது கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பரந்த முன்னணி ஒன்றுக்கான” பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியுடன் பிணைத்து வைத்திருக்கவும், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ முறையை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தை தடுக்கவும் செயல்படுகின்றன.
தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் விலங்குகளில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும். ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடைமுறை மற்றும் அரசியல் தயாரிப்புகளை அது தள்ளிப்போட முடியாது. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, விவகாரங்களைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுக்கத் தொடங்க வேண்டும். சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களை அணிதிரட்டுவதற்காக சகல முதலாளித்துவ பிரிவுகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டம் அவசியம். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்குக்காகப் போராடுகின்றது.