ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දේශපාලකයෝ අප ව රවට්ටනවා, වෘත්තීය සමිති අප ව පාවා දෙනවා : ශ්‍රී ලංකාවේ වතු කම්කරුවෝ කියති

அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் எம்மை ஏமாற்றுகின்றனர்: இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்

By M. Thevarajah
28 October 2018

ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் 100 சதவிகிதம் சம்பள உயர்வு கோரி முன்னெடுத்து வரும் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது.

திங்களன்று, மத்திய மலையக பிரதேசத்தில் லின்துல, அகரபத்தன மற்றும் நானூ ஓயா தோட்டங்களைச் சேந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சில மணிநேரங்களுக்கு நுவரெலியா-தலவக்கலை பிரதான வீதியை மூடிவைத்திருந்தனர்.

புதன் அன்று, யடியந்தொட பூநாகலை தோட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலையின் முன் ஒரு போராட்டத்தை நடத்தினர். அதே நாளில், தொழிலாளர்கள் சம்பளப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக ஹட்டன் நகரில் கடைகள் பூட்டப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாட்டனில் ஒரு ஊர்வலத்தை நடத்தினர்.


தொழிலாளர்களின் ஊர்வலம் ஹட்டன் நகருக்கு செல்லாமல் பொலிஸ் தடுக்கின்றது.

டிக்கோயா, டன்பார், என்பீல்ட், இன்வெர்ரி மற்றும் ஓட்டரி தோட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் அக்டோபர் 20 அன்று மற்றொரு போராட்டத்தை நடத்தினர். பதுளை மாவட்டத்தில் உள்ள லுனுகல, ரோஸட், எலதலுவ, ரொகதன்ன மற்றும் உடுநுவர உள்ளிட்ட தோட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதே நாளில் போராட்டத்தில் இணைந்தனர்.


டிக்கோயாவில் தோட்டத் தொழிலாளர்களின் ஊர்வலம்.

எவ்வாறாயினும், பெருவணிகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மற்றும் அதன் தாய் அமைப்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் 1,000 ரூபா தினசரி சம்பளத்திற்கான கோரிக்கையை ஒரேயடியாக நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அடிப்படை ஊதியத்தை இப்போதுள்ள 500 ரூபாயில் இருந்து 20 சதவிகிதம் மட்டுமே, அதாவது 100 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட முடியும் என்று தோட்ட உரிமையாளர் சங்கமும் கம்பனிகளும் முன்மொழிந்துள்ளன.

பிரேரிக்கப்பட்டுள்ள இந்த அற்பத் தொகை கூட உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எல்லா கொடுப்பனவுகளையும் சேர்த்து ஒரு தொழிலாளி ஒரு நாளுக்கு 940 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கம்பனிகள் கூறுகின்றன. வருகை மற்றும் வேலைத்திறமை கொடுப்பனவு போன்ற நிபந்தனைகளுடன் இவை பிணைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இந்த சலுகைகளை சம்பாதிக்க முடியாது.

அரசாங்கம் முற்றிலும் கம்பனிகளுக்குப் பின்னால் இருப்பதை வெளிக்காட்டும் வகையில், "1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை கொடுக்க முடியாது, நாம் அவ்வாறு கொடுத்தால் தொழிற்துறை வீழ்ச்சியடைந்து விடும்" என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்னர், பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்தது அமைச்சர் ப. திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கமே ஆகும். இந்த சங்கம் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது தொழிலாளர்கள் மீதான அக்கறையினால் அல்ல, மாறாக அவர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் கோபத்தை திசை திருப்பவும் அவர்களை தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவுமே ஆகும். ஆனால் கடந்த சில நாட்களாக, தொழிலாளர்கள் சுயமாகத் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளனர்.

கம்பனிகளின் பிரேரணைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என பாசாங்குக் காட்டிக்கொள்ளும் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள்களை முன்வைக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதமர் மற்றும் அவரது ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கத்திடம் சம்பளப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் வைத்து கேட்டுக்கொண்டதாக அதன் பேச்சாளர் அருள்சாமி, அதன் சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்த விடயத்தில் தலையிடுமாறு கடந்த வாரம் அவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான திகாம்பரம் மற்றும் மனோ கணேசனும் வேண்டுகோள் விடுத்தனர். தோட்டக் கம்பனிகளுக்கு "ஆலோசனை வழங்குவதாக" அவர்களுக்கு சிறிசேன உறுதியளித்ததாக கூறப்படுகிறது. கணேசன் இதே அரசாங்கத்தின் அமைச்சராவார்.

தான் அரசாங்கத்தில் இருந்து விலகி ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாக திகாம்பரம் வாய்ச்சவடால் விடுத்தார். இந்த வனப்புரை மீது தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையும் வைக்கக்கூடாது. இந்த ஆரவார கருத்துக்களுக்குப் பின்னால், தொழிற்சங்கங்கள் மற்றொரு காட்டிக்கொடுப்பை தயார் செய்கின்றன. அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களின் ஆதரவுடன் முதலாளிகளின் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் இந்த தொழிற்சங்கங்கள் பேர் போனவை ஆகும்.

தொழிலாளர்கள் எதிர்த்தரப்பு தோட்டங்கள் பூராவும் பரவி வரும் நிலையில், தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் அந்த எதிர்ப்பு தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி ஏனைய தொழிலாளர்களையும் ஈர்க்கும் என்று பீதியடைந்துள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பங்கு பற்றிய தொழிலாளரகளின் வெளிப்படையான விமர்சனங்கள், அவர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகின்றன.

"அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் எப்போதும் எங்களை ஏமாற்றி வந்துள்ளன. இம்முறை அவர்கள் எங்களை ஏமாற்ற அனுமதிக்க மாட்டோம். வானளவு உயரும் வாழ்க்கைச் செலவின் மத்தியில், நாங்கள் சகிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என ஹட்டனில் மொன்டிபெயர் தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்களால் விநியோகிக்கப்பட்ட அறிக்கையை சுந்தரலிங்கம் வாசித்ததாக தெரிவித்தார். அந்த அறிக்கை, இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாளர்களுடன் சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதற்காக சுயாதீனமான முன்நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.  

அவர் கூறியதாவது: "தொழிலாளர்களுக்கு ஒரு நேர்மையான தலைமைத்துவம் இல்லாமையால் ஒரு புதிய தலைமையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சோசலிச சமத்துவக் கட்சி கூறுவது போன்ற ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் முன் வரவேண்டும். எங்களுக்கு வீணாக்க நேரம் இல்லை." நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்க தனது தோட்டத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாக அவர் வாக்குறுதியளித்தார்.


யோகாம்பாள்

எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை என்றும் அவை தங்களை ஏமாற்றுவதாகவும் டிக்கோயா, இன்வெறி தோட்டத்தினைச் சேர்ந்த எஸ். யோகாம்பாள் கூறினார்: "நாங்கள் இந்த நல்ல ஆட்சி என்று அழைக்கப்படுவதற்கு வாக்களித்தோம். தொழிற்சங்க தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் ஆடம்பர வாழ்க்கையையும் அனுபவிக்கும் போது, நாங்கள் வறுமையில் வாடுகின்றோம்."

"கம்பனிகளுடன் தொழிற்சங்கங்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி எங்களுக்கு எதுவும் கூறுவது இல்லை. கடந்த முறை எல்லா தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்தன. உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு பிணைக்கப்பட்ட ஒரு கொடுப்பனவை திணித்ததன் மூலம் எங்கள் சம்பளத்தை வெட்ட அவர்கள் ஒப்புக்கொண்டனர். 140 உற்பத்தி திறன் கொடுப்பனவை பெற நாங்கள் 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். வருகைக்கான 60 ரூபா கொடுப்பனவைப் பெற நாங்கள் 21 நாட்கள் வேலைக்கு போக வேண்டும். நாங்கள் 14 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தால் அந்த நாள் அரை நாள் வேலையாக கணக்கிடப்படுகிறது. இந்த முறையை தூக்கி வீச வேண்டும்" என டிகோயா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களில் ஒருவர் கூறினார்.

இ.தொ.கா. கிளை தலைவரான எஸ். தமிழ்செல்வன், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நவின் திஸாநாயக்க நிராகரித்ததை எதிர்த்தார்: "அவருக்கு அப்படி சொல்ல உரிமை கிடையாது. அவர் எங்களுடைய வாக்கினால் தான் பாராளுமன்றத்திற்கு சென்றார். அவர் எங்களை பாதுகாப்பவர் அல்ல, அரசாங்கத்தையும் கம்பனிகளையும் பாதுகாப்பவர். கடந்த பொதுத் தேர்தலின்போது, தலவாக்கலையில் நடந்த ஒரு கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.”

"தோட்டத்தை கம்பனியால் நடத்த முடியாவிட்டால், அதை நாங்கள் நிர்வகிக்கலாம். எங்களது போராட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்," என்று அவர் கூறினார்.