Print Version|Feedback
What is to be done about the plutocrats?
இந்த அதீதசெல்வந்த ஆட்சியாளர்களை என்ன செய்வது?
Patrick Martin
2 November 2018
செவ்வாயன்று வெளியிடப்பட கொள்கை ஆய்வுகளுக்கான பயிலகத்தின் ஒரு புதிய அறிக்கை, அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியில் பரம்பரை சொத்துக்கள் வகிக்கும் பாத்திரத்தை அடிக்கோடிடுகிறது. “பில்லியனர்களுக்கான வெகுமதி: 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பூர்வீக சொத்து பரம்பரைகள்" என்று தலைப்பிட்ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் 400 செல்வந்தர்களின் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலை ஆய்வு செய்து, அவர்களில் மூன்றில் ஒருவர் அவரது செல்வவளத்தை பிரதானமாக அவர்களின் பெற்றோர்களிடமிருந்தோ அல்லது முந்தைய மிகப் பெரிய செல்வந்த தலைமுறையிலிருந்தோ வாரிசுரிமையாக பெற்றிருந்தனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
வால்டன்கள், கோச் சகோதரர்கள் மற்றும் மார்ஸ் குடும்பத்தினர் ஆகிய மூன்று செல்வந்த பரம்பரைகள் 1982 க்குப் பின்னர் இருந்து அவர்களின் மொத்த சொத்து அதிகரிப்பில் அண்மித்து 6,000 சதவீத அதிகரிப்பைக் கண்டது, அதேவேளையில் அமெரிக்காவில் சராசரி குடும்ப செல்வவளம் உண்மையில் சற்று வீழ்ச்சி அடைந்திருந்தது. முறையே சில்லறை வியாபாரம், எண்ணெய் உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று குடும்பங்களும், 2018 இல் டாலர் மதிப்புக்கேற்ப சரிசெய்யப்பட்ட அடிப்படையில், 1982 இல் 5.84 பில்லியன் டாலர் செல்வவளத்திலிருந்து உயர்ந்து, 2018 இல் 348.7 பில்லியன் டாலர் மொத்த செல்வவளத்தைக் கொண்டிருந்தன.
ஏழு வால்டன்கள், இரண்டு கோச் சகோதரர்கள் மற்றும் ஆறு மார்ஸ் நபர்களுக்கு அப்பாற்பட்டு, ஃபோர்ப்ஸ் 400 பட்டியலின் ஒன்பது கார்கில் (Cargill) வாரிசுகளும், அத்துடன் ஐந்து ஜோன்சன்களும் (Fidelity Investments), ஒன்பது பிரிட்ஸ்கெர்கள் (Pritzkers - Hyatt Hotels), Cox ஊடக சொத்துக்களின் ஐந்து வாரிசுகள், டன்கன் (Duncan) எண்ணெய் சொத்துக்களின் ஐந்து வாரிசுகள், நான்கு லாண்டெர்கள் (Lauders - நறுமணப் பொருள் வியாபாரம்), ஜோன்சன்&ஜோன்சன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து ஐந்து பில்லியனர்கள், பாஸ் (Bass) சகோதரர்கள் நான்கு பேர் (எண்ணெய்), ஸ்ட்ரைகெர்ஸ் (Strykers) மூன்று பேர் (மருத்துவ சாதனங்கள்) இன்னும் பலரையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முதலிடத்தில் உள்ள 15 பில்லியனிய பரம்பரைகள் மொத்தமாக 618 பில்லியன் டாலர் செல்வவளத்தைக் கொண்டிருந்தன.
அமெரிக்காவின் முதல் "செல்வவளம் கொழித்த காலத்திற்கு" (Gilded Age) பிந்தைய 100 ஆண்டுகளில், ரோக்கிஃபெல்லெர்கள் (Rockefellers), மெல்லொன்கள் (Mellons), கார்னீஜிக்கள் (Carnegies) மற்றும் டுபோன்கள் (Duponts) போன்ற ஆரம்பகால பரம்பரை குடும்பங்களின் பெரும் செல்வவளம் அதிக எண்ணிக்கையிலான சந்ததிகளிடையே பகிர்ந்து கொடுக்கப்பட்டது, அத்துடன் (1980 க்கு முந்தைய) முற்போக்கான வரிவிதிப்புகளால், ஒரு சிலரின் விடயங்களில், நிறுவனங்களைப் பரிவர்த்தனை செய்தும் கரைக்கப்பட்டது. ஆரம்பகால "கொள்ளைக்கார பெருமுதலாளிகளின்" ஒருசில வாரிசுகள் இப்போதும் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, “இரண்டாவது செல்வவளம் கொழித்த காலத்தின் இப்போதைய பல தசாப்தங்களில், பரம்பரை செல்வந்த குடும்பங்கள் மீண்டுமொருமுற்றை ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் பலமாக தென்படுகின்றன. முந்தைய பரம்பரைகளைப் போலவே, இந்த குடும்பங்களின் ஒரு பிரிவு அவர்களின் கணிசமான செல்வவளத்தையும் அதிகாரத்தையும் அவர்களின் செல்வவளம் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் மற்றும் விரிவாக்குவதற்காகவும் பொருளாதார விதிகளைச் சீர்குலைப்பதற்காகப் பயன்படுத்துகின்றது.”
இந்த செல்வச்செழிப்பான குடும்பங்கள், நடைமுறையளவில் எந்த சிக்கலும் இல்லாமல் அவர்களின் செல்வவளத்தை அவர்களின் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்ற அனுமதிக்கும் வாரிசுரிமை சட்டங்கள் மற்றும் வரிவிதிப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்ய அழுத்தமளிக்கின்றன—இந்த மாற்றங்கள், ஜெஃப் பெஸோஸ், வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் ஆகிய மூன்று முகங்களால் எடுத்துக்காட்டப்படுவதைப் போல, பெரும் செல்வந்தர்களின் புதிய அடுக்கிற்கு ஆதாயமாகி உள்ளன, இம்மூவரின் ஒட்டுமொத்த செல்வவளம் அமெரிக்க மக்கள்தொகையில் அடிமட்ட பாதி பேரின் மொத்த செல்வவளத்தை விட அதிகமாகும்.
ஆனால் அமெரிக்க சமூக மற்றும் அரசியல் வாழ்வில் அவர்களின் தாக்கமானது, வேகமான செல்வதிரட்சி மற்றும் குடும்ப சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் அப்பாற்பட்டு செல்கிறது. அந்த அறிக்கையானது, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பொதுக்குழுவின் முன்னாள் தலைவராக இருந்து இந்த அடுக்கின் அரசியல் மற்றும் சமூக மனப்போக்குடன் நன்கு பரிச்சயமானவரான பௌல் வோல்க்கரது ஓர் எச்சரிக்கையை மேற்கோளிட்டு, செல்வம் கொழித்த பணக்காரர்களின் ஒரு சிறிய உயரடுக்கு சமூகம் மீது நடத்தும் ஆட்சியின் அபாயங்களைக் குறித்து எச்சரித்து தொடங்குகிறது.
“நாம் செல்வந்தர் ஆட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் மத்தியப் பிரச்சினை,” என்று வோல்க்கர் குறிப்பிட்டிருந்தார். “திறமைசாலிகளாக மற்றும் ஆக்கப்பூர்வமானவர்களாக இருப்பதால் அவர்கள் பணக்காரர்களாக இருப்பதாக தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் நிறைய எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்தை விரும்புவதில்லை, இவர்கள் வரிகள் செலுத்த விரும்புவதில்லை.” இருந்தபோதினும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள், ஒன்று போலவே, வரி வெட்டுக்கள் மற்றும் நெறிமுறை தளர்த்தல்களின் திட்டநிரலை நடைமுறைப்படுத்தின.
கடந்த 40 ஆண்டுகள், ஒரு செல்வந்த உயரடுக்கு ஆட்சி ஸ்திரப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டுள்ளன, இந்த உயரடுக்கு ஒரேயொரு இலட்சியத்திற்காக, அதாவது தனிநபர் செல்வவளத்தை இன்னும் அதிகமாக மிகப்பெரியளவில் குவித்துக் கொள்வதற்காக, அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அடிபணிய செய்துள்ளது. உயர்மட்ட ஒரு சதவீதத்தினர் கடந்த இரண்டு தசாப்தங்களாக தேசிய வருவாய் அதிகரிப்பில் அனைத்தையும், மற்றும் 2008 பொறிவுக்குப் பிந்தைய தேசிய செல்வவளத்தின் அதிகரிப்பில் அனைத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
இக்காலக்கட்டத்தில், அமெரிக்க அரசியல் முடிவின்றி துரிதமாக வலதுக்கு திரும்புவதாக தெரிவதற்கான அடிப்படை வர்க்க காரணம் இது தான். நல்ல சம்பளத்தில் வேலைகள், நீண்டகால வேலை பாதுகாப்பு, கண்ணியமான பொதுக் கல்விக்கூடங்கள், போக்குவரத்துக்கான சமூக உள்கட்டமைப்பு, மருத்துவக் கவனிப்பு, வீட்டுவசதி, சொல்லப்போனால் தண்ணீரும் கழிவுகள் வெளியேற்றும் அமைப்புமுறைகளும் கூட, இவை அனைத்தும், செல்வந்த ஆட்சியாளர்களின் ஒருபோதும் முடிவில்லா வெறித்தனமான சுய-செல்வ கொழிப்புக்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன.
வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் சமூக நலன்களின் அழிப்பானது, தொடர்ந்தும் வித்தியாசமின்றியும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவினால் "நிதியில்லை" என்ற அறிவிப்புடன் நியாயப்படுத்தப்படுகின்றன. மிகப்பெரும் செல்வந்தர்களின் சொத்து வளங்கள் முன்னர் சிந்தித்திருக்க இயலாத பரிமாணங்களுக்கு அதிகரித்து கொண்டிருக்கின்ற போதும் கூட இந்த மந்திரம் தான் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. “உங்களுக்கு பணமில்லை, ஏனென்றால் அது அனைத்தும் எங்களுக்கு வேண்டும்,” என்பது தான் இதன் நிஜமான அர்த்தம். மனித உடலில் ஒரு புற்றுநோய் கட்டி என்ன செய்யுமோ இந்த செல்வந்த ஆட்சியாளர்கள் நவீன சமூகத்துடன் அதே உறவைத்தான் தாங்கி நிற்கிறார்கள்.
இமானுவெல் சேஸ் (Emmanuel Saez), தோமஸ் பிகெட்டி (Thomas Piketty) மற்றும் காப்ரியல் சுக்மன் (Gabriel Zucman) போன்ற பொருளாதார நிபுணர்களின் கண்டுபிடிப்புகளுடன் சரியாக பொருந்தி உள்ள இந்த புள்ளிவிபரங்களைப் வெளியிட்டு, கொள்கை ஆய்வுக்கான பயிலகம் (IPS) ஒரு பொதுச்சேவை ஆற்றியுள்ளது. ஆனால் IPS முன்னெடுக்கும் கொள்கைகள், அதாவது பூர்வீக சொத்து மீதான வரியை மீளமைப்பது மற்றும் 1 சதவீத ஆண்டு சொத்து வரி போன்ற பலவீனமான தாராளவாத சீர்திருத்தங்கள், தற்போதைய சமூக அமைப்புமுறைக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் நரகத்தில் ஒரு பனிப்பந்து போன்ற மாற்றத்தையே ஏற்படுத்தும். அவை ஜனநாயகக் கட்சி மீதான பிரமைகளைப் பலப்படுத்த, அதுவும் குறிப்பாக பேர்ணி சாண்டர்ஸ் அணியின் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதற்காக பரிந்துரைக்கப்படுகின்றன.
ஜனநாயகக் கட்சியானது பில்லியனர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது என்பதுடன், குடியரசுக் கட்சியைப் போலவே முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துள்ளது என்பதே யதார்த்தமாகும். காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதியின் இயங்குமுறைகளை அடியிலிருந்து நுனி வரையில் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நிதியியல் பிரபுத்துவம், அவ்விதத்தில் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்காது. அதற்கு எதிர்விதமாக, இன்று அமெரிக்காவில் நிலவும் இந்தளவிலான பொருளாதார சமத்துவமின்மை ஜனநாயகத்துடன் பொருந்தாது என்பதால், பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இவ்விரு கட்சிகளும் எதேச்சதிகாரத்திற்குப் பகிரங்கமாக திருப்புவதற்கான ஒரு மிகவும் பலமாக எடுத்துக்காட்டாக இருக்கும்.
பில்லியனர்களின் சர்வாதிகாரத்திற்கு ஒரே யதார்த்தமான மாற்றீடு, ஒரு சோசலிச வேலைத்திட்டதின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதாகும். தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கையை "பெரும் செல்வந்தர்கள் மீதான மிதமான வரிவிதிப்பைக் கொண்டு மீளமைத்து" விட முடியாது. அது, “பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களைப் பறிமுதல்" செய்ய வேண்டும். பொதுமக்களின் நன்மைக்குத் தேவைப்படும் ஆதாரவளங்களை வழங்க—முதலிடத்திலிருந்து தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட—பில்லியனர்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதே தொழிலாள வர்க்கத்தின் இலட்சியமாக அமைக்கப்பட வேண்டும். இலாபங்களுக்காக அல்ல மனிதயின தேவைகளுக்குச் சேவையாற்றும் வகையில், இது தான், பொருளாதார வாழ்வை சோசலிச பாணியில் மறுஒழுங்கமைப்பதில் முதலும் முக்கியமுமான தீர்க்கமான படியாக இருக்க வேண்டும்.