Print Version|Feedback
Bitter US-European tensions mark centenary of World War I armistice in Paris
கடும் அமெரிக்க-ஐரோப்பிய பதட்டங்களின் மத்தியில் பாரிஸில் முதலாம் உலகப் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டதன் நூற்றாண்டு அனுசரிப்பு
By Alex Lantier
12 November 2018
பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்துச் செல்வதன் மத்தியிலும் வெகுஜன கோபம் பெருகிச் செல்வதன் மத்தியிலும், இந்த வார இறுதியில், முதலாம் உலகப் போர் முடிந்ததன் நூறாண்டு நிறைவை அனுசரிப்பதற்காக 70 நாடுகளின் தலைவர்கள் பாரிஸில் சந்தித்தனர். சம்பிரதாயமாக தேசியவாதங்கள் மீதான விமர்சனங்களும் அமைதிக்கான அழைப்புகளும் இருந்ததைத் தாண்டி, பாரிஸில் இருந்த “உலகத் தலைவர்கள்” எவரொருவரிடமும், பெரும் சக்திகளுக்கு இடையிலான சர்வதேச உறவுகள் உருக்குலைவது துரிதமடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவதற்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை.
குடியரசு சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோரின் ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்து பாரிஸ் வந்துசேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்டு ஒரு இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களைக் கண்டனம் செய்து ஒரு ட்வீட் போட்டார். ட்ரம்ப் எழுதினார், “அமெரிக்கா, சீனா, மற்றும் ரஷ்யாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஐரோப்பா அதன் சொந்த இராணுவத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாக பிரான்சின் ஜனாதிபதி மக்ரோன் இப்போது ஆலோசனை கூறியிருக்கிறார். மிக அவமதிக்கக் கூடியதாய் இருக்கிறது, ஆயினும் முதலில் அமெரிக்கா பெருமளவில் மானியமளித்துக் கொண்டிருக்கும் நேட்டோவிற்கான அதன் நியாயமான பங்கை ஐரோப்பா முதலில் செலுத்தட்டும்!”
ஐரோப்பியர்கள் “தம்மை சீனா, ரஷ்யா, இன்னும் அமெரிக்காவிடம் இருந்தும் கூட காப்பாற்றிக் கொள்ள” இயலும் பொருட்டு “ஒரு உண்மையான ஐரோப்பிய இராணுவ”த்திற்கு சென்ற வாரத்தில் மக்ரோன் விடுத்த அழைப்பு அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உறவுகளிலான ஒரு ஆழமான முறிவை பிரதிபலித்தது. நேட்டோவுக்கான அமெரிக்க தூதரான கே பேய்லி ஹட்சின்சன் ரஷ்யாவின் ஏவுகணைகள் ஐரோப்பாவில் “தீர்ந்து போகும்படி” செய்ய மிரட்டியதற்கும், மத்திய-தூர அணு சக்தி உடன்படிக்கையை (INF) இரத்துசெய்வதற்கான ட்ரம்ப்பின் அழைப்பிற்கும் பின்னர், இடைத்தேர்தலில் அமெரிக்க செனட்டை தக்கவைத்துக் கொள்ள அவரால் இயன்றிருப்பது ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்கு அதிர்ச்சியூட்டியது.
ரஷ்யாவைக் குறிவைத்த அமெரிக்காவின் பெரும் அணு ஆயுதப் பெருக்கத்திற்கும், அத்துடன் நூறு பில்லியன் டாலர் கணக்கான ஐரோப்பிய மற்றும் சீனப் பொருட்களுக்கு எதிராய் வெள்ளை மாளிகையில் இருந்து அதிகமான போர் மிரட்டல்களுக்குமான சாத்தியத்திற்கு முகம்கொடுக்கின்ற நிலையில், அவை ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவமயமாக்குவதற்கான அழைப்புகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சனிக்கிழமையன்று பாரிஸில் இருந்து 50 மைல்கள் தூரத்தில் உள்ள Bois Belleau இல் உள்ள இராணுவ கல்லறைக்கு போரில் இறந்த அமெரிக்கர்களுக்கான நினைவஞ்சலி சடங்குகளில் கலந்து கொள்ள மறுத்ததின் மூலம் ட்ரம்ப் பதிலடி கொடுத்தார். பாரிஸ் பெருநகரப் பகுதியெங்கிலும் இலேசான மழை பெய்து கொண்டிருந்ததால், நகைப்பூட்டும் விதமாய், “காலநிலையின் காரணத்தால் உண்டான கால அட்டவணை மற்றும் போக்குவரத்து சிக்கல்களை” மேற்கோள்காட்டி இந்த முடிவை வெள்ளை மாளிகை நியாயப்படுத்தியது.
நேற்று, ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட பல நாடுகளின் தலைவர்கள் மக்ரோனின் ஒரு உரையைக் கேட்பதற்காக பாரிஸில் உள்ள வெற்றி வளைவுக்கு (l’Arc de Triomphe) ஒன்றுசேர வந்திருந்தனர். சர்வதேச ஊடகங்கள் மக்ரோனின் உரையை தேசியவாதத்தின் மீதான -ஆகவே மறைமுகமாய், ட்ரம்ப்பின் “அமெரிக்கா முதலில்” தேசியவாதத்தின் மீதான- ஒரு விமர்சனமாக சித்தரித்தன.
உண்மையில், மக்ரோனின் உரையே போருக்கான ஒரு அறியாமையுடனான மற்றும் தேசியவாத போற்றிப் பாடலாக இருந்தது. உயிரிழந்த 10 மில்லியன் பேர், ஊனமுற்ற 6 மில்லியன் பேர், 3 மில்லியன் விதவைகள், 6 மில்லியன் அனாதைகள், மற்றும் அப்பாவி மக்களில் பாதிப்படைந்த மில்லியன் கணக்கிலான பேரை சிறுமைப்படுத்தி, மக்ரோன் பிரான்சின் வர்க்கப் பிளவுகளை தேசப்பற்று வெல்வதற்கு அனுமதித்ததாகக் கூறி போரைப் போற்றினார். அது “கிராமப்புறத்தினதும், நகர்ப்புறத்தினதும்; முதலாளித்துவத்தினதும், பிரபுத்துவத்தினதும், மக்களினதும்; ஒவ்வொரு நிறத்தினதுமான ஒரே ஐக்கியப்பட்ட பிரான்சை கட்டியெழுப்பியது, அங்கே மதகுருக்களும் மதகுரு-எதிர்ப்பாளர்களும் அருகருகே பாதிப்படைந்தனர்; அவர்களின் தீரமும் வலியுமே நம்மை உருவாக்கியது” என்றார்.
தான் ஒரு தேசியவாதி என்ற ட்ரம்ப்பின் சமீபத்திய பெருமைபீற்றலை மறைமுகமாக கண்டனம் செய்த மக்ரோன், போரை அவர் முன்னிழுத்துக் கூறியவை தேசியவாதமல்ல, மாறாக தேசப்பற்று என்று தட்டுத்தடுமாறி வாதிட முயன்றார். தேசப்பற்றுவாதம் “தேசியவாதத்திற்கு நேரெதிரானது: தேசியவாதம் தேசப்பற்றுவாதத்தை காட்டிக்கொடுக்கிறது. ‘எங்களது நலன்கள் தான் முதலில், மற்றவர்களுக்குக் காது கொடுக்க மாட்டோம்’ என்று கூறுவதன் மூலமாக ஒருவர், ஒரு தேசத்தின் மிக விலைமதிப்பில்லாத, அதனை உயிர்த்துடிப்புடையதாக்குகிறதும் மகத்தானதாக ஆக்க ஊக்குவிக்கிறதுமான, மிக முக்கியமான அறநெறி விழுமியங்கள் என்ற விடயத்தை அழித்து விடுகிறது” என்று அவர் கூறினார்.
மக்ரோனின் அறநெறியாக்கம் உதாசீனத்திற்கே தகுதியானதாகும். தேசியவாதத்தை அவர் இழுத்ததில் இருந்த பிற்போக்கு உள்ளடக்கம் சென்ற வாரத்தில், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பாசிச சர்வாதிகாரியான பிலிப் பெத்தானை ஒரு மாபெரும் தளபதி என்று கவுரவிப்பது நியாயமானதே என்று வலியுறுத்தியதின் மூலம் பிரான்செங்கிலும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் தூண்டிய போதே, அம்பலப்பட்டு விட்டிருந்தது.
ஞாயிறன்று மக்ரோன் கூறிய கருத்துக்கள் பெத்தானுக்கு ஆதரவான அவரது அறிக்கை தற்செயலானது அல்ல, மாறாக அவரது அரசியலில் ஆழமாய் வேரூன்றியதாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சொல்லப் போனால், போரை தேசிய ஐக்கியத்தின் சிமெண்ட்டாக அவர் போற்றுவதென்பது, உலகப் போர்களுக்கு இடையில் பெத்தானை ஆதரித்த, அதன்பின் விச்சியின் சமூக அடித்தளமாக ஆன பாசிசக் குழுக்களின் கண்ணோட்டங்களை எதிரொலிக்கிறது.
உண்மையில், ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலும், உலகப் போரானது வர்க்கப் பதட்டங்களை புரட்சியின் மட்டத்திற்கு உயர்த்திய சர்வதேச முதலாளித்துவத்தின் ஒரு நெருக்கடியாக இருந்தது. விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ், தொழிலாள வர்க்கம் 1917 அக்டோபரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது, ரஷ்யாவை போரில் இருந்து வெளியில் கொண்டுவந்தது. இது ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களை கவிழ்த்த ஐரோப்பாவெங்கிலுமான புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு அலைக்கும், பிரான்ஸ் உள்ளிட உலகெங்கிலுமான நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றுவதற்கும் இட்டுச்சென்றது.
ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், போருக்கும் சமூகப் புரட்சிக்கும் இட்டுச் சென்றிருந்த முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் —எல்லாவற்றையும் விட, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு— எதுவுமே தீர்க்கப்பட்டிருக்கவில்லை. பெரும் சக்திகளுக்கு இடையில் வர்த்தகப் போர்களும் ஆயுதப் போட்டிகளும் பரவுகின்ற நிலையில், இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களை உருவாக்கிய இலாபத்திற்கும் மூலோபாய அனுகூலத்திற்குமான அதே ஏகாதிபத்தியங்கள்-இடையிலான முரண்பாடுகள் துரிதமாக தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. முக்கிய நேட்டோ சக்திகள் மற்றும் அவற்றுடன் ஜப்பான் கலந்து கொண்ட ஜி-7 உச்சிமாநாடு ஜூன் மாதத்தில் உருக்குலைந்ததன் பின்னர், ஐரோப்பா-அமெரிக்கா உறவுகள் சிதறலின் விளிம்பில் இருக்கின்றன.
நேற்று மாலையில், மக்ரோனும் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலும் நடத்திய “அமைதிக்கான மன்ற”த்தில் கலந்துகொள்ளாத ட்ரம்ப் அதற்கு பதிலாக Suresnes இல் உள்ள அமெரிக்க கல்லறையில் பேசச் சென்று விட்டார். “அந்த வலிமையான போராட்டத்திற்கு தமது இறுதி மூச்சை வழங்கிய தீரமிக்க அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த வெறுமையான ஓய்விடத்தில் நாம் ஒன்றுகூடியிருக்கிறோம்” என்றார் அவர். “ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அவர்கள் பாதுகாத்த நாகரிகத்தையும் அவர்கள் தமது இன்னுயிரை ஈந்து கொண்டுவந்த அமைதியையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.”
அமைதியைப் பாதுகாக்க ட்ரம்ப் விடும் அழைப்பு பொய்யானதும் அபத்தமானதுமாகும். மத்திய கிழக்கு எங்கிலுமான இடைவிடாத நவகாலனித்துவ போர்கள் தான் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டது முதலான கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில், அடுத்தடுத்து வந்த குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் கீழான அமெரிக்கக் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஆசியாவில் சீனாவுக்கு எதிராகவுமான அணுஆயுத மிரட்டல்களை அதிகரிக்கும் பொருட்டு அத்தனை அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களையும் மறுதலிக்க வாஷிங்டனை இது இப்போது இட்டுச் சென்றிருக்கிறது என்ற உண்மையானது தொழிலாள வர்க்கத்திற்கு, உண்மையில் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும், ஏகாதிபத்தியத்தால் முன்நிறுத்தப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அபாயங்களைக் குறித்த ஒரு எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.
மேர்க்கெலும் மக்ரோனும் பங்குபெற்ற “அமைதிக்கான மன்றம்” திவால்நிலையில் இதற்கு சளைத்ததல்ல. மேர்க்கெல் —பேர்லினில் இவரது மாபெரும் கூட்டணி அரசாங்கம் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை இராணுவமயமாக்குவதற்கும் போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் தொடர்ந்து நெருக்குவதன் மூலம் தேசியவாதத்தையும் அதி-வலது அரசியலையும் பற்றவைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வந்திருக்கிறது— முதலாம் உலகப் போரின் படிப்பினைகள் குறித்து ஒரு எச்சரிக்கையை வழங்கினார். “நூறு ஆண்டுகள் கழித்து, இந்தப் போரை நாம் திரும்பிப் பார்க்கும்போது, போதுமான தகவல் பரிவர்த்தனைகள் இன்மையும் அரசியலிலும் தூதரக உறவுகளிலும் விட்டுக்கொடுக்க விருப்பமற்று இருப்பதும் என்னவிதமான அழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்க முடியும் என்பது குறித்து நம்மை விழிப்பூட்டுகிறது” என்று அவர் கூறினார்.
ஆயினும், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மோதல்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதில் ஒரு ஏற்புடைய சமரசத்தை எட்டுவதற்கு தொடர்ந்து தவறும் நிலையை வெல்வதற்கு என்ன யோசனை வைத்திருக்கிறார் என்பதை மேர்க்கெல் கூறவில்லை.
உண்மையில், தேசியவாதம், புலம்பெயர்ந்தோர்-விரோத வெளிநாட்டினர்வெறுப்பு மற்றும் இராணுவவாதத்தை ஐரோப்பிய அரசாங்கங்கள் இடைவிடாது தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதானது ஐரோப்பாவெங்கிலுமான வன்முறை கொண்ட அதி-வலது தீவிரவாதிகளை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு தயாரிப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறது.
அகதிகள் மீது பழிபோடும் நோக்கத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்த ஒரு அதி-வலது தீவிரவாதியான பிராங்கோ.A என்பவரை விசாரணை செய்கையில் ஜேர்மன் போலிசார் இன்னும் விரிந்த, ஒரு அதி-வலது சதியை வெளிக்கொணர்ந்தனர் என்ற செய்தி நேற்று வெளியானது. சிறப்புப் படைகள் தலைமையகம் (KSK) உடன் தொடர்புடைய சுமார் 200 படையினர்கள் இடது-சாரி அரசியல்வாதிகளைக் கொலை செய்வதற்கான “X தின” திட்டம் ஒன்றுக்கு தயாரித்துள்ளனர். அவர்களது இலக்குகளில் இடது கட்சி அரசியல்வாதியான Dietmar Bartsch, பசுமைக் கட்சி தலைவரான கிளாடியா ரோத், வெளியுறவு அமைச்சரான ஹேய்கோ மாஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் ஆகியோரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பிராங்கே. A கூட சென்ற ஆண்டில் விடுதலையாகி விட்டிருந்தார்.
இத்தகைய சதிகள் ஐரோப்பாவெங்கிலும் பரவிக் கொண்டிருக்கின்றன. நவம்பர் 6 அன்று, மக்ரோனுக்கு எதிரான “வன்முறை நடவடிக்கை”க்கு சதிசெய்ததற்காக ஆறு அதி-வலது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல, ஸ்பெயினில், சமூக-ஜனநாயக பிரதமர் பெட்ரோ சான்சஸை தாக்குவதற்கு சதி செய்த காரணத்திற்காக 16 துப்பாக்கிஆயுதங்களுடன் 63 வயது முன்னாள் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.