Print Version|Feedback
Significant vote for SEP candidate Niles Niemuth in Michigan’s 12th district
மிச்சிகன் 12 ஆம் மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நைல்ஸ் நிமூத் குறிப்பிடத்தக்க வாக்குகள் வென்றார்
By our reporters
8 November 2018
செவ்வாயன்று நடந்த 2018 இடைக்கால தேர்தல்களில் மிச்சிகனின் 12 வது காங்கிரஸ் மாவட்டத்தின் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வேட்பாளர் நைல்ஸ் நிமூத் 2,198 வாக்குகள் வென்றார். நிமூத், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் நலன்களுக்காக போர்-எதிர்ப்பு, புலம்பெயர்ந்தோர்-ஆதரவு, சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்துடன் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் ஆவார்.
நைல்ஸிற்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் வர்க்க-நனவான நடவடிக்கை என்பதுடன், அது கடந்த ஆறு மாதங்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பிரச்சாரத்தினூடாக தொடர்புபட்ட ஒரு தொழிலாளரோ அல்லது இளைஞரோ சோசலிசத்திற்காக அளித்த வாக்காகும்.
ஜனநாயக-விரோத தேர்தல் கட்டுப்பாடுகளின் காரணமாக, நைல்ஸின் கட்சி பெயர் வாக்குச்சீட்டில் அவர் பெயருக்கு அருகில் பட்டியலிடப்படவில்லை. இதன் அர்த்தம், அவர் பிரச்சாரத்தைச் செவிமடுத்திருக்கவில்லை என்றாலும் ஒரு சோசலிச வேட்பாளரை ஆதரிக்க விரும்பியவர்களின் வாக்குகள் நைல்ஸ் க்கு கிடைக்கவில்லை. வாக்குச்சீட்டில் பட்டியலிடப்பட்டிருந்த ஒரேயொரு மூன்றாவது கட்சி தொழிலாள வர்க்க கட்சி, அதன் வேட்பாளர் Gary Walkowicz, இவர் 6,684 வாக்குகள் பெற்றார்.
நிமூத்தின் தேர்தல் பிரச்சாரத்தை ஊடகங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஒளிபரப்பின, அதுவும் உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் WDIV ஆரம்பத்தில் அதை விளம்பரப்படுத்த முற்றிலுமாக மறுத்திருந்தது. உலக சோசலிச வலைத் தளம் அதன் தணிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கோரி அந்த செய்தி நிலையத்திற்கு ஒரு பகிரங்க கடிதம் பிரசுரித்த பின்னர் தான், அது நைல்ஸ் பிரச்சாரத்தின் ஒரு இணைய தொடுப்பைப் பிரசுரித்தது.
நிமூத் மற்றும் அவர் ஆதரவாளர்கள் அந்த மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர், அமெரிக்காவில் அரபு அமெரிக்கர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மிகப் பெரியளவில் குவிந்துள்ள டீர்போர்ன், மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்குத் தாய்வீடாக திகழும் அன் ஆர்பர், தொழில்துறை சிதைக்கப்பட்ட நகரங்களான Ypsilanti மற்றும் Downriver பகுதி ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.
நிமூத்தின் தேர்தல் பிரச்சாரக்குழு வேலைநிறுத்தம் செய்து வரும் உணவக தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அமசன் மற்றும் UPS தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் வேறு அனைத்து பின்புலங்கள் கொண்ட தொழிலாளர்களுடன் உரையாற்றியதுடன், அவர்களுக்காக குரல் கொடுத்தது. அது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பிரதான அரசியல் பிரச்சினைகள் மீது டஜன் கணக்கான கட்டுரைகள், காணொளிகள் மற்றும் அறிக்கைகளைப் பிரசுரித்தது. ஜூலியன் அசான்ஜ், விக்கிலீக்ஸ் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, விக்கிலீக்ஸின் முன்னாள் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜின் அன்னை கிறிஸ்டின் அசான்ஜ், நிமூத்தின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மிச்சிகனிலும் சர்வதேச அளவிலும் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நைல்ஸின் பிரச்சார குழுவால் சோசலிசம் அறிமுகப்படுத்தப்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதல்முறையாக வாக்களித்தவருமான ஈதன், இந்த கல்வி பருவக்காலத்தில் வளாகத்தின் ஒரு சுவரொட்டியைப் பார்த்து நைல்ஸின் பிரச்சாரத்தில் இணைந்தார். அவர் தேர்தலுக்கு அடுத்த நாள் WSWS உடன் அவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்:
“பெரும்பாலான அமெரிக்கர்களைப் பொறுத்த வரையில் இன்றைய தேர்தல்கள் வழக்கம் போல ஒரு நிகழ்வு தான்: அதாவது போர்நாடும் ஒரு முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கோ அல்லது முரண்பட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவக் கட்சியான குடியரசு கட்சிக்கோ வாக்களிப்பதற்கான விருப்பத்தெரிவு தான் அவர்களுக்கு இருந்தது,” என்றார். “ஆனால் மிச்சிகனின் 12 வது மாவட்டத்தில் நானும், இன்னும் ஆயிரக் கணக்கானவர்களும், அமெரிக்காவில் உண்மையான சோசலிசத்தை ஊக்குவிக்கும் ஒரே வேட்பாளரான நைல்ஸ் நிமூத்திற்கு வாக்களித்ததன் மூலமாக, தொழிலாள வர்க்கத்திற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றோம்,” என்றார்.
“மூன்றாம் கட்சிக்கு வாக்களிப்பது வாக்கை வீணடிப்பது என்று எங்களுக்கு கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் சிந்தித்த வரையில் எங்களின் வாக்குகளைப் பெறும் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் முக்கியத்துவமற்ற அடையாள அரசியல் பிரச்சினைகள் அடிப்படையில் எங்களைப் பிளவுபடுத்தியும் மற்றும் ஏகாதிபத்தியத்தை நடைமுறைப்படுத்தி, ஏழைகளைத் தொடர்ந்து சுரண்டுவார்கள். இத்தகைய பிரச்சினைகளில் மக்களைக் கல்வியூட்ட நைல்ஸ் பிரச்சாரக் குழுவுடன் இணைந்து செயல்படுவதற்காக நான் பெருமைப்படுகிறேன். இன்று எனது முதல் வாக்கை சோசலிசத்திற்காக வாக்களித்ததற்காக முடிவாக நான் மிகவும் பெருமைப்பபடுகிறேன்.”
காட்
லிங்கன் பூங்காவில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே, நைல்ஸிற்கு வாக்களித்த ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவரான காட் உடனும் WSWS உரையாற்றியது. அப்பெண்மணி ஹென்றி ஃபோர்ட் சமூக கல்லூரியில் மேல் வேதியியல் படிப்புடன் சுற்றுச்சூழல் கல்விகளைக் கற்று வருகிறார், அத்துடன் உள்ளூர் Sushi உணவுவிடுதியில் ஒரு மணி நேரத்திற்கு, இரவு நேரத்தைப் பொறுத்து, 8 டாலரில் இருந்து 12 டாலருக்கும் சம்பளத்தை பெறும் உணவு பரிமாறுபவராகவும் வேலை செய்து வருகிறார். அவர் ஹென்றி ஃபோர்ட் கல்லூரியில் நைல்ஸ் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், “நான் ஒரு நிமிடம் தான் நைல்ஸ் உடன் பேசியிருந்தேன்,” “அவர் கூறியதில் பெரும்பாலான விடயங்களில் நான் உடன்பட்டேன். மற்ற எந்த வேட்பாளர்களும் சரியில்லை. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே மொத்தத்தில் மோசடியானவர்கள் என்று கருதுகிறேன். அவர்கள் மற்ற கட்சிகளுக்கு இடமளிப்பதில்லை. அங்கே வெறும் இரண்டு கட்சிகள் தான் என்றால், நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா?” என்றார்.
காட் க்கு வயது 20, 2008 இல் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் 10 வயதில் இருந்தார். தனக்கு அந்த தேர்தல் ஞாபகம் இல்லை என்றும், ஆனால் "அது குறித்து ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை என்னால் நினைவுகூர முடிகிறது. ஆனால் அவரோ மொத்தத்தில் கொடூரமான பல விடயங்களைச் செய்தார். அவை அனைத்தும் இலாபத்திற்காக. நாடுகளின் ஆதாரவளங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தி, அவை நாகரீகமடையாத நாடுகள், அவற்றை நாம் தான் சரி செய்ய வேண்டும் என்பதைப் போல நடித்து, எண்ணெய்க்காக அந்த போர்கள் நடத்தப்பட்டன.”
தேர்தல் பிரச்சாரத்தின் போது உதவிய மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டப்படிப்பு மாணவர் ஜிம் இன்று அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்: “நான் நைல்ஸ் க்கு வாக்களித்தேன் ஏனென்றால் அவர் மட்டுமே வாக்குச்சீட்டில் ஒரே உண்மையான மார்க்சிஸ்டாக இருந்தார்.” “நைல்ஸ் மற்றும் SEP/IYSSE உடன் தொடர்பில் வந்த பின்னர், நான் பாசிசம் குறித்து லியோன் ட்ரொட்ஸ்கியின் ஒரு துண்டறிக்கை வாசித்தேன், நான் வாக்களித்த போது ட்ரொட்ஸ்கியின் சில எச்சரிக்கைகள் என் மூளையில் இருந்தன. நான் நைல்ஸ் க்கு வாக்களித்தேன் ஏனென்றால் நான் வர்க்க-நனவுடன் வாக்களிக்க விரும்பினேன்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறினார்: “நான் அந்த பிரச்சாரத்திற்கு உதவத் தொடங்கினேன் ஏனென்றால் அதற்கு முன்னர், இந்த ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலை குறித்து நான் நிராதரவாக இருப்பதாக உணர்ந்தேன். வெறுமனே வாக்களித்தது மட்டும் போதாது என்றே உணர்கிறேன். நடைமுறையில் இருப்பதைச் சவால் விடுக்கும் ஏதோவொன்றின் பாகமாக நான் இருக்க விரும்புகிறேன்.”
“அமெரிக்காவில் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியைக் குறித்து நிறைய தெரிந்து கொள்வார்கள் என்பதே இந்த தேர்தலுக்கு அடுத்து எனது முன்னோக்கிய நம்பிக்கையாக உள்ளது. முடிவு என்னவாக இருந்தாலும், அவர்கள் 'நாகரீகம்' குறித்தும், 'நடைமுறைக்கு மிகவும் ஒவ்வாத வகையில்' இருக்க வேண்டாமென்றும் அதுபோன்றவற்றையும் தான் உபதேசிக்க போகிறார்கள். இதுவொரு முழுமையான பொறி. என்னைப் பொறுத்த வரையில் 2016 இல் தான், நான் மாற்றீடுகளைக் குறித்து பார்க்க தொடங்கினேன். நான் பேர்ணி சாண்டர்ஸை ஆதரித்தேன், அவரோ அனைத்தையும் ஹிலாரி கிளிண்டன் போன்ற ஒரு பொய்யர் மற்றும் வலதுசாரி அரசியல் பிரமுகரின் பின்னால் கொண்டுசென்றுவிட்டார்,” என்றார்.
ஜிம் பின்வருமாறு கூறி நிறைவு செய்தார்: “தாராளவாதமும் ஜனநாயகக் கட்சியும் வலதை நோக்கிய இந்த திருப்பத்தை எதிர்க்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொள்ள, இந்த தேர்தலும் வரவிருக்கின்ற காலகட்டமும் இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மற்றொரு வாய்ப்பாக இருக்கும். மார்க்சிசம் குறித்து கற்றுக் கொண்டு ஒரு மாற்றீட்டிற்காக போராட தொடங்குவதற்கு இதுவே சரியான நேரம். நைல்ஸின் பிரச்சாரம், உன்னிப்பாக கவனிக்கும் மக்களுக்கு ஒரே நியாயபூர்வமான மாற்றீடாக பார்க்கப்படும் என்று கருதுகின்றேன்.”