Print Version|Feedback
The armistice of November 11, 1918 and the lessons for today
நவம்பர் 11, 1918 போர் நிறுத்த உடன்படிக்கையும், இன்றைய காலகட்டத்திற்கு அதன் படிப்பினைகளும்
Nick Beams
12 November 2018
நேற்றைய தினம், முடிவாக முதலாம் உலக போரை முடிவுக்குக் கொண்டு வந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் 100 வது ஆண்டு நினைவுதினத்தை குறித்தது. அதுபோன்றவொரு போரை மனிதயின வரலாற்றில் ஒருபோதும் பார்த்திருக்க முடியாது. பத்து மில்லியனுக்கும் அதிகமான சிப்பாய்கள் மற்றும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்களை விலையாக கொண்ட, அத்துடன் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, காயப்படுத்தப்பட்ட ஓர் இரத்தக்களரியான கோர நிகழ்வாக அது இருந்தது.
ஆனால் அந்த துப்பாக்கிகளின் சத்தம் ஓய்ந்ததோடு, பின்னர் "அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்" என்று அது பொய்யாக முத்திரைக் குத்தப்பட்ட போதினும், இரத்தஆறு மற்றும் மனிதயினப் படுகொலை முடிந்துவிடவில்லை. அது, உலகில் தங்களின் கட்டுப்பாடு மற்றும் மேலாதிக்கத்திற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அவற்றின் கூட்டாளிகள் என பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான எது ஒன்று ஒரு முப்பது ஆண்டுகால சர்வதேச போராக மாற இருந்ததோ, 1945 இல் ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசுவதில் போய் முடிந்த பின்னர் மட்டுமே முடிவுக்கு வந்த ஒரு போரின், முதல் கட்டம் ஒன்று முடிந்திருந்ததாக மட்டுமே அது இருந்தது.
போரில், உண்மை தான் முதலில் பலி என்று பொதுவாக கூறுவார்கள். இங்கேயும் அதே தான் நடந்தது. 1914-18 போரானது, உலகம் முன்னொருபோதும் பார்த்திராத மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கு தலைமை அளித்து வந்த பிரிட்டன் ஏகாதிபத்தியம் வாதிட்டதைப் போல, ஜேர்மனியின் சூறையாடல்களுக்கு எதிராக சிறிய நாடுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சண்டையிடப்படவில்லை. அல்லது ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகள் கூறியதைப் போல, ஜாரிச ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்வதற்காக சண்டையிடப்படவில்லை. அல்லது ஜாரிச ஆட்சியுடன் இணைந்திருந்த பிரான்ஸ் வாதிட்டதைப் போல, பிரஷ்ய பிரபுத்துவத்திற்கு எதிராக குடியரசு கருத்துருக்களைப் பாதுகாப்பதற்காக போரிடப்படவில்லை. அனைத்தையும் விட குறைந்தபட்சமாக, ஏப்ரல் 1917 இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் மோதலுக்குள் நுழைந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்டவற்றைப் பங்கு பிரிப்பதில் வளர்ச்சியடைந்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி வூட்ரோ வில்சன் முன்னெடுத்த மோசடியான வாதமான, "ஜனநாயகத்திற்காக உலகைப் பாதுகாப்பாக ஆக்குவதற்கான" போராக கூட அது இருக்கவில்லை.
அப்போரானது சந்தைகள், இலாபங்கள், ஆதாரவளங்கள் மற்றும் செல்வாக்கு பிராந்தியங்களுக்காக நடத்தப்பட்டது. ஆனால் இந்த மோதலே கூட வெறுமனே வெவ்வேறு ஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து எழுந்ததில்லை. அது இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அபிவிருத்தியிலேயே அதன் ஆழ்ந்த வேர்களைக் கொண்டிருந்தது. இன்றைய பூகோளமயப்பட்ட உற்பத்தி சகாப்தத்தில் முன்பினும் அதிக சக்தி வாய்ந்து ஒலிக்கும் வார்த்தைகளில், லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, போருக்கான அடித்தளங்களை உலக பொருளாதார அபிவிருத்திக்கும் மற்றும் உலகம் எதிர்விரோத முதலாளித்துவ தேசிய-அரசுகள் மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகளாக பிளவுபட்டு இருப்பதற்கும் இடையிலான புறநிலை முரண்பாடுகளில் காணப்பட வேண்டும்.
ஏகாதிபத்திய சக்திகள் ஒவ்வொன்றும் தங்களில் யார் மேலாதிக்க உலக சக்தியாக ஆவது என்று முடிவெடுக்க, ஓர் இரத்தந்தோய்ந்த போராட்டத்தின் மூலமாக இந்த முரண்பாட்டைத் தீர்க்க முனைந்தன. பொருளாதார சீரழிவு, பாசிசவாதம், ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலை, இரண்டாம் உலக போரில் பெருந்திரளான மக்கள் கொல்லப்பட்டமை உட்பட மூன்று தசாப்த கால காட்டுமிராண்டித்தனத்திற்குப் பின்னர், அந்த மோதல் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தில் சென்று முடிந்தது.
ஆனால் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை தற்காலிகமாக அமெரிக்க அரசுகளின் மேலாதிக்கத்திற்கு கீழ்ப்படுத்தப்பட்டன. பூகோளமயப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையை பிடித்துள்ள இந்த நோயைக் குணப்படுத்த முடியாது, அது ஒரு காலக்கட்டம் வரையில் தள்ளிப் போடப்பட்டிருந்தது. அந்த காலகட்டமும் இப்போது முடிந்துவிட்டது.
1945 க்குப் பின்னர் அதே பூகோளமயப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தி, ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் கேள்விக்கிடமற்ற வீழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் அதன் பழைய எதிர்விரோதிகளின் மீள்எழுச்சியையும் மற்றும் சீனாவின் வடிவில் புதிய எதிர்போட்டியாளராக இருக்கக்கூடிய ஒரு நாடு மேலெழுந்திருப்பதையும் முகங்கொடுக்கின்ற அது, இப்போது உலக போர் தொடுக்க தயாராகிறது. ஏனைய அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் அதே பாதையில் உள்ளன.
ஜேர்மனி அதன் இரண்டு உலக போர்களின் எதிர்ப்பாளருடன், அதாவது அமெரிக்காவுடன், மீண்டுமொருமுறை மோதலுக்கு முன்நகர்ந்து வருகையில், அது அதன் தலைமையின் கீழ் "ஐரோப்பாவை ஒழுங்கமைக்க" முனைகிறது. இராணுவரீதியில் ஒரு வல்லரசாக மீள்ஆயுதமேந்துவதற்கான அதன் முனைவில், ஜேர்மன் ஆளும் உயரடுக்கு நாஜி ஆட்சியின் குற்றங்கள் உட்பட ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைச் மூடிமறைக்க முனைந்து வருகிறது. அக்கண்டம் எங்கிலும், ஆளும் வர்க்கங்கள் அவற்றின் இராணுவவாதம் மற்றும் சமூக செலவின வெட்டு கொள்கைகளுக்கு ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்க முனைந்துள்ளதால், அவை தீவிர வலதுசாரி மற்றும் பாசிசவாத இயக்கங்களை ஊக்குவித்து வருகின்றன.
அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் இரண்டு அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவை "மூலோபாய போட்டியாளர்களாக" முத்திரை குத்தியுள்ளதுடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான ஒருங்குவிப்பு பயங்கரவாதம் அல்ல "வல்லரசு போட்டி" என்று அறிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்வதற்காக அது மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் (INF) மீதான உடன்படிக்கையை முறித்துள்ளது, அதேவேளையில் பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமல்ல அவசியமானால் அமெரிக்காவையும் எதிர்கொள்ள ஓர் ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவையும் மற்றும் ஏனைய பல எச்சரிக்கை அறிகுறிகளும் —அதுவாவது, மத்தியக் கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, தென் சீனக் கடலில் இருந்து வடகிழக்கு-கிழக்கு ஆசியா வரையில் குறைவின்றி எண்ணற்ற வெடிப்புப்புள்ளிகளின் தோற்றுவிப்பானது— மூன்றாம் உலக போர் வெடிப்பதற்கான நிச்சயமான அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன, இது அதன் தொடக்கத்திலிருந்தே ஓர் அணுஆயுத பரிமாணத்தை எடுக்கக்கூடும்.
வெளிப்படையான மற்றும் தற்போதைய இந்த அபாயமானது மனிதயினம் இப்போது எதிர்கொண்டிருக்கும் அடிப்படை பிரச்சினையில் வேரூன்றி உள்ளது: அதாவது, உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமை மற்றும் உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாகவும் ஏகாதிபத்திய வல்லரசுகளாகவும் பிளவுபட்டிருப்பதை அடிப்படையாக கொண்டுள்ள முதலாளித்துவ சமூக உறவுகளின் பேரழிவுகரமான பிடியிலிருந்து, தனது உழைப்பால் உருவாக்கிய பரந்த உற்பத்தி சக்திகளை எவ்வாறு விடுவிப்பது என்பதாகும்.
ஆனால் மார்க்ஸ் ஒருமுறை விவரித்ததைப் போல, எந்தவொரு மிகப்பெரிய வரலாற்று பிரச்சினையும், அதேநேரத்தில் அதற்கான தீர்வை முன்கொண்டு வரும் சடரீதியிலான நிலைமைகள் இல்லாமல் ஒருபோதும் எழுவதில்லை. முதலாம் உலக போரின் சீரழிவு கட்டவிழ்த்து விடப்பட்டபோது, தொழிலாள வர்க்கத்தால் முதன்முதலாக வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றிய அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியின் வடிவில் தீர்வு வந்தது. ரஷ்யாவில் ஜாரிசத்தைக் கவிழ்ப்பது உலக சோசலிச புரட்சிக்கான முதல் தொடக்க அடி என்பதே அப்புரட்சியின் தலைவர்களான லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி உயிரூட்டிய முன்னோக்காக இருந்தது.
அவர்கள் வலியுறுத்தியவாறு, முதலாளித்துவ முறிவிலிருந்து எழுந்த அப்போரானது மனிதயின வரலாற்று அபிவிருத்தியினது ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறித்தது: அதாவது, போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு சகாப்தம். “நிரந்தர புரட்சியா, நிரந்த மனிதயினப் படுகொலையா: இது தான் போராட்டம், இதில் தான் மனிதனின் எதிர்காலம் தங்கியுள்ளது,” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார்.
உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டம் உடனடி அவசியமாக நாளாந்த நிகழ்ச்சிநிரலில் இருத்தப்பட வேண்டும் என்ற போல்ஷிவிக்குகளின் முன்னோக்கு, அதற்குப் பின்னர் வரலாற்றாளர்களால் கைவிடப்பட்டது. இதில் "இடது" நிலைப்பாட்டிலிருந்து ரஷ்ய புரட்சி மீது அனுதாபம் கொண்டவர்கள், இதை ஏதோவகையில் கற்பனாவாதமும், நிஜமான சம்பவங்களின் போக்குடன் தொடர்புமற்றது என்று நிராகரித்தனர்.
அனைத்துக்கும் மேலாக மிகப்பெரிய மற்றும் அரசியல்ரீதியில் மிகவும் தீர்க்கமான தொழிலாள வர்க்கத்தைக் கொண்ட நாடான ஜேர்மனியில் போரின் சூறையாடல்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் மீதான படுகொலைகளுக்கு எதிரான எதிர்ப்பு புரட்சிகர பரிமாணங்களை ஏற்றதும், பிரதான ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் நிலைமையைக் குறித்த ஒரு புறநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் உண்மையில் அது முற்றிலுமாக யதார்த்தமாக இருந்தது.
ஜேர்மன் ஆளும் உயரடுக்கு கட்டளையகம், வில்சன் முன்னெடுத்த 14 புள்ளி வேலைத்திட்டத்தின் கீழ், சமாதானத்திற்கான நடைமுறைகளை மேற்கொண்டது, இது தான் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இட்டுச் சென்றது—இந்த ஆவணமே கூட, ஜனவரி 2018 இல் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முந்தைய ரஷ்ய புரட்சிக்கு விடையிறுப்பாக மற்றும் சோசலிச புரட்சி மூலமாக போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு புதிய சோவியத் அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு விடையிறுப்பாக, தூக்கிவீசப்படுவோமோ என்ற அச்சத்தில், அபிவிருத்தி செய்யப்பட்டது.
ஜாரிச ஆட்சியின் ஆவணக் கிடங்கிலிருந்து இரகசிய உடன்படிக்கைகளைப் பிரசுரித்து, போல்ஷிவிக் அரசாங்கம் போருக்கு அடித்தளமாக இருந்த பொய்களைக் தோலுரித்துக் காட்டி, அப்போரானது இலாபங்கள் மற்றும் ஏகாதிபத்திய சூறையாடல்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டியது. ரஷ்ய புரட்சியின் தாக்கம் இல்லையென்றால், ஐரோப்பிய அதிகாரங்களின் தலைவர்கள் அக்கண்டத்தை தொடர்ந்து இரத்தம் சிந்த செய்யவும் தயாராக இருந்ததுடன், போர் நிறுத்த உடன்படிக்கைக்கும் அவர்கள் உடன்பட்டிருக்க மாட்டார்கள்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பாரீசில் அழைக்கப்பட்டிருந்த சமாதான கலந்துரையாடல் என்றழைக்கப்பட்டது தொடங்கிய போது, பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் ஃபாபியன் தலைவர் Beatrice Webb ஐரோப்பிய அதிகாரங்களின் தலைவர்கள் எதிர்கொண்ட பிரச்சினையைத் தொகுத்தளித்தார். “கட்டுக்கடங்கா புரட்சியில் உள்ள ஒரு கண்டத்தில்—நாம் ஆஸ்திரியாவில் மற்றொரு ரஷ்யாவை, ஒருவேளை, ஜேர்மனியிலும் கூட எதிர்கொண்டு இருக்கிறோமோ,” என்று அப்பெண்மணி எழுதினார்.
வில்சன் பரிவாரங்களுடன் நெருக்கமாக இணைந்திருந்த அமெரிக்க பத்திரிகையாளர் Ray Stannard Baker குறிப்பிடுகையில், நெப்போலியன் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த 1815 வியன்னா மாநாட்டில் பங்கெடுத்தவர்களைப் பொறுத்த வரையில், புரட்சி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தது அதேவேளையில் "பாரீசில் அது எப்போதும் அவர்களூடே இருந்தது.”
இச்சம்பவத்தில், புரட்சியின் அச்சுறுத்தல் பின்னோக்கி தள்ளப்பட்டதுடன் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்க கட்சிகளது தலைவர்கள் புரட்சிகர எழுச்சியைக் காட்டிக்கொடுத்தனர் என்ற உண்மையின் காரணமாக முதலாளித்துவத்திடமே பொறுப்பு தக்க வைக்கப்பட்டது. ஜேர்மனியில், சமூக ஜனநாயக கட்சி நவம்பர் 9, 1918 புரட்சியின் தலையைத் துண்டிக்க, இராணுவ உயர்மட்ட தளபதிகள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் ஒரு எதிர்-புரட்சிகர கூட்டணியை உருவாக்கினர்.
முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்தில் தங்கின. ஆனால் போல்ஷிவிக்குகள் எச்சரித்திருந்ததைப் போல அவர்கள் சமாதானத்தையோ ஜனநாயகத்தையோ கொண்டு வரவில்லை. மாறாக அந்த போர் நிறுத்த உடன்படிக்கையானது உடனடியாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் எதிர்புரட்சி தொடங்கப்பட்டதைக் கண்டது. இத்தாலியில் முசோலினியின் பாசிசவாத இயக்கமும் மற்றும் ஜேர்மனியில் நாஜி இயக்கமும் இரண்டினது தோற்றுவாய்களும் இங்கே காணலாம். போரால் உண்டாக்கப்பட்ட மிகப் பெரியளவிலான இடப்பெயர்வு, இது ஜூன் 1919 இல் ஜனநாயகமற்ற வேர்சாய் சமாதான உடன்படிக்கையால் கூடுதலாக தீவிரப்படுத்தப்பட்டதால், பொருளாதார உடைவை மேற்கொண்டும் அதிகரிப்பதில் முக்கிய காரணியாக இருந்து, 1929 இல் பெருமந்தநிலை ஏற்படுவதற்குக் களம் அமைத்து, ஒரு தசாப்தகால பொருளாதார பேரழிவை உருவாக்கி, 1939 இல் இரண்டாம் உலக போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்றது.
சமகாலத்திய புவிசார்அரசியல் நிலைமை குறித்த அதன் பகுப்பாய்வில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு "முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு" மீதான கருத்துருவை முன்னெடுத்துள்ளது. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய போதிருந்த போராட்டங்கள் இன்னமும் போராடப்பட்டு வருகின்றன, அவை முன்பினும் அதிக கூர்மையான வடிவங்களை எடுத்து வருகின்றன. இந்த சகாப்தம் போர் மற்றும் புரட்சியின் ஒரு சகாப்தமாகும்.
முதலாளித்துவ தலைவர்கள், அவர்களின் அரிசுவடிகள் மற்றும் பண்டிதர்களுடன் சேர்ந்து, முதலாம் உலக போர் சம்பவங்களைத் திரும்பி பார்த்து, அதிலிருந்து படிப்பினைகளை எடுக்க அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு புறநிலையான மதிப்பீட்டை முன்வைக்க இயல்பாகவே தகைமையற்றுள்ளனர் ஏனென்றால் வரலாற்றைக் குறித்த அவர்களின் மதிப்பீடு பிரித்தெடுக்க முடியாதவாறு அவர்களின் தற்போதைய சடரீதியிலான நலன்கள் மற்றும் கவலைகளுடன் பிணைந்துள்ளன.
இவ்விதத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலுடன் ஆழமடைந்து வரும் மோதலில் சிக்கியுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், ட்ரம்பின் "தேசியவாதத்தை" ஒரு மூச்சில் விமர்சிக்கிறார், மறுபுறம் பிரான்சில் நாஜி ஆதரவிலான போர்க்கால விச்சி ஆட்சியின் தலைவர் தளபதி பெத்தனைப் புகழ்கிறார்.
பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் குரலான பைனான்சியல் டைம்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் மீதான நிபந்தனைகள் குறித்து ஜேர்மனியுடன் ஒரு மோதலில் சிக்கி கொண்டு, ஐரோப்பிய கண்டத்தில் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான ஜேர்மனியின் முயற்சி தான் முதலாம் உலக போருக்குக் காரணம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பரந்த சாம்ராஜ்ஜியத்தை பேணுவதற்கான அதன் தத்தளிப்புக்கும் அப்போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல பழைய பொய்யைத் திரும்ப கூறுகிறது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் புரட்சிகர சோசலிச இயக்கத்திலிருந்து பெறப்பட்ட படிப்பினைகள் தான் பெறப்பட வேண்டிய படிப்பினைகளாகும், மேலும் அவை தான் சோசலிச புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) அடித்தளங்களை இன்று உருவாக்குகின்றன. தேசிய வேலைத்திட்டங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதுடன், மனிதயினத்தை மீண்டுமொருமுறை பேரழிவுகரமான போர் சுழலில் சிக்க வைக்க முதலாளித்துவம் அச்சுறுத்திக் கொண்டிருக்கையில் அதை தடுப்பதற்கான ஒரே வழி உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கில் தான் உள்ளது என்பதே இந்த படிப்பினைகள். இந்த வேலைத்திட்டம் ஏதோ தொலைதூர இலட்சியமாக அல்ல மாறாக நாளாந்த ஒரே நம்பகமான மற்றும் யதார்த்தமான வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு, செயலூக்கத்துடன் போராடப்பட வேண்டும்.