Print Version|Feedback
Under US pressure, Maldives president accepts election defeat
அமெரிக்க அழுத்தத்தின் கீழ், மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்
By Rohantha De Silva
29 October 2018
அக்டோபர் 17ம் தேதிய தொலைக்காட்சி உரையில், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன், செப்டம்பர் 23ல் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொண்டார். நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய வைப்பதற்கு அவர் முயற்சித்தாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த அச்சுறுத்தும் தண்டணைக்குரிய பதிலிறுப்புகளினால் பின்வாங்குவதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இதன் விளைவு, தென்மேற்கு இந்தியாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் மூலோபாய ரீதியாகவும் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கிழக்கு ஆசியா வரையிலான உலகின் பரபரப்பான கடல் பாதைகளுக்கு மிக நெருக்கமாகவும் அமைந்துள்ளதான இந்த சிறு தீவில் பெய்ஜிங்கின் நலன்களை நேரடியாக வெட்டுகிறது.
செப்டம்பர் தேர்தலில், யாமீன் 42 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த அதேவேளையில், 58 சதவிகித வாக்குகளை அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் மொஹமத் சோலிஹ் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்னதாக, அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், அவரவர் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக, யாமீனின் ஜனநாயக விரோத ஆட்சி பற்றிய விமர்சனங்களை தீவிரப்படுத்தின. தேர்தல்கள் “சுதந்திரமானவையாகவும் நியாயமானவையாகவும்” இல்லை என்றால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தியதுடன், அகற்றப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பதவியமர்த்தவும் அவை கோரின.
தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக யாமீன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் என்றாலும், பின்னர், தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அம்முடிவுகளை இரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளார். யாமீனின் முறையீட்டை விசாரிக்க உச்சநீதிமன்றம் தீரமானித்ததையடுத்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றொரு சுற்று எச்சரிக்கைகளை வெளியிட்டன.
அக்டோபர் 13 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ராபர்ட் பல்லாடினோ தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார்: “மாலைதீவு மக்களின் விருப்பத்தை கீழறுக்க அச்சுறுத்தும் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகள் பற்றித்தான் அமெரிக்கா கவலையடைந்துள்ளது என்பதுடன், மாலைதீவில் ஒரு அமைதியான ஆட்சி மாற்றம் ஏற்படுவதைக் கீழறுக்க முயலும் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் அது பரிசீலிக்கும்.”
இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், வாக்கு மோசடி குற்றம் பற்றிய யாமீனின் “இரகசிய சாட்சியங்களை” விசாரிக்கக் கூடாதென நீதிபதிகள் தீர்மானித்தனர். பின்னர், ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு உச்சநீதிமன்ற அமர்வு ஜனாதிபதி அவரது கூற்றை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்பதாக ஒருமனதாக தீர்ப்பளித்தது.
நாட்டின் நீதித்துறை மிகவும் அரசியல்மயமானதாக உள்ளது. பெப்ரவரியில், தலைமை நீதிபதி அப்துல்லா சாயீத்தும் மற்றும் மற்றொரு நீதிபதியும், ஜோடிப்பு வழக்குகளின் பேரில் முன்னர் குற்றம்சாட்டப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை விடுவிக்க ஆணையிட்டதன் பின்னர் சிறையிலிடப்பட்டனர். அந்த நேரத்தில், யாமீன் அவசரகாலநிலையை பிரகடனம் செய்து, எஞ்சியிருந்த நீதிபதிகளின் உதவியுடன் அவ்விரண்டு நீதிபதிகளையும் சிறையிலிட்டார். இப்போது அதே நீதிபதிகள் யாமீனின் வழக்கைத் தூக்கி எறிந்தனர்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர், இலங்கையில் அமெரிக்க தூதரகத்தின் வெளியுறவு பொறுப்பில் இருக்கும் ராபர்ட் ஹில்ட், “நவம்பரில் ஜனாதிபதியாக தேர்வான இப்ராஹிம் மொஹமத் சோலிஹ் பதவியேற்ற பின்னர் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கி” வாஷிங்டன் இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். மேலும் அவர், “இது, மாலைதீவுக்கான ஒரு புதிய மற்றும் சாதகமான சகாப்தமாகும்” என்றும் தெரிவித்தார்.
அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும், “மாலத்தீவின் வரவிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற” காத்திருப்பதாகவும், மேலும் அங்கு, “ஜனநாயக அமைப்புகளிலான முழுமையான மீட்சியை” எதிர்நோக்குவதாகவும் கூறியது.
இருப்பினும், மேற்கத்திய சக்திகள் மாலைதீவு மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், அவர்களது புவிசார் மூலோபாய நலன்களில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காகவே ஆழ்ந்த அழுத்தம் கொடுத்ததாக அவர்களது அறிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நஷீத் தலைமையில் 2012ல் ஒரு தூதரகம் திறந்த பின்னர், சீனா அந்நாட்டின் பிரதான முதலீட்டாளராக உருவெடுத்து, தற்போது அதன் வெளிநாட்டு கடனில் 70 சதவிகிதத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது, அதன் பிராந்திய போட்டியாளரும் அமெரிக்காவின் நட்பு நாடாகவும் உள்ள இந்தியாவின் செலவில் ஒரு முக்கிய துறைமுக கட்டமைப்பை மேற்கொள்வது உட்பட, பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் சாலை இணைப்பு முன்முயற்சி (Belt and Road Initiative-BRI) எனும் பெய்ஜிங்கின் முக்கிய திட்டத்தில் ஒரு பங்காளியாவதற்கு யாமீன் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும், மற்றும் சீனாவிற்கு எதிரான அதன் மிகத் தீவிரமான இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ நகர்வுகளின் ஒரு பகுதியாக அதன் கட்டுப்பாட்டிற்குள் மாலைதீவை உறுதியாகக் கொண்டுவரவும் வாஷிங்டன் முடிவு செய்துள்ளது. தனது பிராந்திய மற்றும் உலகளாவிய பெரும் சக்தியாக உருவெடுப்பதற்கான அபிலாஷைகளுக்கு சவாலாக சீனா இருப்பதை தடுக்க புது தில்லியும் விரும்புகின்ற நிலையில், அமெரிக்கா உடனான நெருக்கமான மூலோபாய உறவுகளை இந்திய முதலாளித்துவ உயரடுக்கு மேலும் அபிவிருத்தி செய்து வருகிறது.
இதற்கு பதிலிறுப்பாக, மாலத்தீவில் தனது முதலீடுகளை பராமரிக்க சீனா முனைந்து வருகிறது. மாலத்தீவின் புதிய அரசாங்கத்துடன் அதன் உறவுகள் தொடரும் என பெய்ஜிங் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் படி, நவம்பர் 17 அன்று யாமீன் பதவி விலக வேண்டும். “மாலைதீவு மக்கள் இறுதியில் தேர்தலின் விளைவுகள் பற்றி தெளிவடைய முடியும்” என்று ஜனாதிபதியாக தேந்தெடுக்கப்பட்ட சோலிஹ் கூறினார். சோலிஹ் இன் கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், மாலைதீவு மக்கள் ஜனநாயக உரிமைகளின் ஒரு தழைத்தோங்குதலை அனுபவிக்க மாட்டார்கள்.
மொஹமத் நஷீத் தலைமையிலான எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் (Maldives Democratic Party-MDP) நாடாளுமன்ற தலைவராக சோலிஹ் இருந்தார்.
யாமீனின் அரசாங்கம் நஷீத்தை சிறையிலிட்டாலும் கூட, அமெரிக்காவும் இங்கிலாந்தும் அவரை லண்டனுக்கு செல்ல அனுமதிக்குமாறு அழுத்தம் கொடுத்தன. அவர், அமெரிக்க சார்புடைய மற்றும் சீன விரோத பிரச்சாரத்தை வெளிநாடுகளில் நடத்தினார். ஜனவரி 2015ல், இதேபோன்ற அமெரிக்க சார்பு ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த கொழும்பில் இருந்து செயற்படுகிறார். நவம்பர் 1 அன்று, மாலைதீவிற்கு திரும்பவிருப்பதாக நஷீத் அறிவித்துள்ளார்.
யாமீனின் செல்வாக்கை நசுக்குவதற்கு ஒரு பிரச்சாரத்தை MDP யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தொடங்கியுள்ளன. “நாட்டை விட்டு தப்பிவிடாமல்” அவரை தடுக்குமாறு பொலீசைக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வதுடன், அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்த அவர்கள் தயாரிப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து அவரது அரசாங்கத்தை விலக்கி வைத்துக்கொள்ளப் போவதாகவும், இந்தியா மற்றும் குறிப்பாக அமெரிக்கா உடனான உறவுகளை வலுப்படுத்தப் போவதாகவும் சோலிஹ் உடனடியாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க மற்றும் இந்திய மூலோபாய நலன்களுக்கு தனது ஆதரவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார், இது சீனாவுடனான இராணுவ மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அமெரிக்க சார்பு திருப்பம் என்பது, தீவில் அரசியல் நிலையற்ற தன்மையையும், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான புவிசார் அரசியல் பதட்டங்களையும் ஆழப்படுத்த மட்டுமே செய்யும்.