ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French teachers mobilize against Macron’s attacks on education

மக்ரோனின் கல்வித்துறை மீதான தாக்குதல்களுக்கு எதிராக பிரெஞ்சு ஆசிரியர்கள் அணிதிரள்கின்றனர்

By Anthony Torres
15 November 2018

இமானுவேல் மக்ரோன் அரசாங்கத்தின் 2019 கல்வி நிதிநிலையறிக்கைக்கு எதிராக நவம்பர் 12 அன்று பிரான்ஸ் எங்கிலும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2011க்கு பின்னர் முதன்முறையாக தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான ஒரு கல்வித்துறை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.

முதல் நடவடிக்கை தினத்தில் கிட்டத்தட்ட இரண்டு இடைநிலைப் பள்ளியாசிரியர்களுக்கு ஒருவரும் நான்கு ஆரம்பப் பள்ளியாசியர்களுக்கு ஒருவருமான விகிதத்தில் பங்குபெற்றிருந்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அமைச்சகம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றதாக தெரிவித்தது. சுமார் 4,000 ஆசிரியர்கள் பாரிஸில் ஆர்ப்பாட்டம் செய்தனர்; மார்சையில் சுமார் 1,000 பேரும், லியோனில் சுமார் 2,500 பேரும், நான்ந்தில் சுமார் 850 பேரும், கோன் இல் சுமார் 800 பேரும் கிளேர்மோன்-ஃபெர்ரோன் இல் சுமார் 700 பேரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றதாக போலிஸ் அலுவலகங்கள் தெரிவித்தன.

பொது நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் (collèges et lycées publics) 2,650 பணியிடங்களும், தனியார் துறையில் இன்னுமொரு 550 பணியிடங்களும், நிர்வாகப் பணியிடங்களில் 400 பதவியிடங்களும் நீக்கப்படுவதை கல்விப் பணியாளர்கள் எதிர்க்கின்றனர். இடைநிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2019க்கும் 2021க்கும் இடையில் ஒவ்வொரு ஆண்டிலும் 40,000 வரை அதிகரிக்க இருப்பதாக கல்வித்துறையின் சொந்த புள்ளிவிவர முகமையே கணித்திருக்கின்ற நிலைமைகளின் கீழ், நேற்று தேசிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 2019 தேசிய கல்வி நிதிநிலை அறிக்கையில் இந்த வெட்டுக்கள் குறித்து கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.


ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

முழு-நேரப் பணியிடங்களை அழிப்பதை ஈடுசெய்யும்விதமாக, தேர்வுகள் மூலமாக கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்துவதற்குப் பதிலாக கூடுதலான ஒப்பந்த ஆசிரியர்களை பயன்படுத்துவதற்கு, நிதிநிலை, பொதுக் கணக்கு மற்றும் குடிமை சேவை அமைச்சரான ஜெரால்ட் டார்மனான் ஆலோசனை வைக்கிறார். இப்போதிருக்கும் தொழிலாளர் பாதுகாப்புகள் அழிக்கப்படும் என்றும் தேசியக் கல்வி முறையில் நிச்சயமற்ற வேலைகளில் ஒரு பாரிய அதிகரிப்பு ஏற்படும் என்றும் அஞ்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இது எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது.

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் கரோலின் என்ற ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியையை சந்தித்து பேசினர், “அடுத்த ஆண்டு, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில், உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற வேலைவெட்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக” அவர் வந்ததாக கூறினார். ஒப்பந்த வேலைகளது கவலைகளை வெளிப்படுத்திய அவர் விளக்கினார்: “இவையெல்லாம் ஏற்கனவே சாதாரணமாகி விட்டிருக்கின்றன. இணை ஆசிரியர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் இடையில் பல பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன. இது சமத்துவமின்மையை உருவாக்கியிருக்கிறது, ஏனென்றால் நாங்கள் ஒரே நிலைமைகளில் ஒரே வேலையை செய்கின்றபோதும் கூட ஒரே ஊதியம் அளிக்கப்படுவதில்லை.”

பணியிடங்களை நீக்குவது வகுப்புகளின் சராசரி மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும் “இது பள்ளிகளுக்கு கூடுதல் சிரமங்களை உருவாக்கும் என்பதுடன் படிப்பை பாதியில் விடும் மாணவர் விகிதங்கள் அதிகரிக்க இட்டுச் செல்லும்” என்பதையும் கரோலின் வலியுறுத்தினார்.

தொழில்முறை உயர்நிலைப் பள்ளி (lycées pros) பாடத்திட்டத்தை வேலைப்பயிற்சி மையங்களுடன் (Centres de formation d’apprentis) இணைக்கும் நோக்குடனான தொழில்முறை பயிற்சி பள்ளிகள் பாடத்திட்டத்திலான சீர்திருத்த திட்டமும் ஆசிரியர்கள் கோபத்திற்குக் காரணமான இன்னொரு விடயமாய் இருக்கிறது. இளைஞர்களின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் சேதப்படுத்தும் விதமாக பிரெஞ்சு மொழிப்பாடம், வரலாறு மற்றும் கணிதம் போன்ற பொதுவான பாடங்களுக்கு மணித்தியாலங்கள் குறைக்கப்படவிருக்கிறது.

இறுதியாக, ஆசிரியர்கள் தமது வேலைநிலைமைகள் வீழ்ச்சி காண்பதையும் கண்டிருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் குறைவான ஊதியமளிக்கப்படும் ஆசிரியர்களில் பிரான்சின் ஆசிரியர்கள் இடம்பெற்றிருக்கின்றனர், அவர்களின் வேலைப்பளு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும், ஊதியங்கள் பல ஆண்டுகளாக முடங்கிப்போய் இருக்கிறது. பொதுவாக ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியர் வாரத்திற்கு 41 மணி நேரங்கள் வேலைசெய்வதாக பிரான்சின் புள்ளிவிவர அமைப்பான INSEE தெரிவிக்கிறது, இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையான 35 மணி நேரங்களுக்கு மிக அதிகமானதாகும்.

பிரான்சில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தமானது, 2018 ஆரம்பத்திலிருந்து ஆசிரியர்கள் அத்தோடு ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் சர்வதேச தீவிரப்படலது ஒரு அலையின் பகுதியாக இருக்கிறது.

மார்ச் மாதத்தில், அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவின் 33,000 ஆசிரியர்கள், கல்விச் சங்கங்களுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பரிதாபகரமான ஊதிய அதிகரிப்புகளை எதிர்த்து, தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கலகத்தில் ஒன்பது நாட்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் புறக்கணிப்புகள் மற்றும் மாநிலமெங்கும் ஆசிரியர்கள் மத்தியில் பெருகிய அமைதியின்மை இவற்றைக் கண்ட தொழிற்சங்கங்கள் ஆரம்பகட்ட இரண்டுநாள் வேலைநிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தனர், இது ஆசிரியர்கள் மத்தியிலான கொதிப்புக்கு வடிகால் கட்டிவிடும், ஆளுநர் மற்றும் சட்டமன்றத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், தொழிற்சங்கங்கள் ஒரு இற்றுப்போன விலை-பேசும் ஒப்பந்தத்துடன் திரும்பி ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரின. மாநிலமெங்கும் அவசர கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தும் வேலைக்குத் திரும்பக் கூறும் உத்தரவை நிராகரித்து வாக்களித்தும் ஆசிரியர்கள் பதிலிறுப்பு செய்தனர்.

மேற்கு வேர்ஜினியாவிலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் பல மாநிலங்களுக்கு விரிவுகண்டது, தொலைத்தொடர்பு மற்றும் வாகன உற்பத்தித் தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களுடன் இணைந்தது. பிரிட்டன், கென்யா மற்றும் அர்ஜென்டினா உள்ளிட ஆசிரியர்களது ஒரு சர்வதேச வேலைநிறுத்த அலையின் பகுதியாக அது இருந்தது.

மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெரும் சமூக கோபம் நிலவுகிறது, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் 6 சதவீதத்தினரிடம் மட்டுமே ஏற்பைப் பெற்றுள்ளதாக Elabeயின் ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் பெருநிறுவனமயமான மற்றும் தொழிலாள வர்க்க-விரோதமான தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஆசிரியர்கள் கலகம் செய்ததையும், தொழிலாள வர்க்கத்தில் ஆசிரியர்களுக்கு ஆதரவு இருப்பதையும் மனதில் கொண்டு, பிரான்சின் கல்விச் சங்கங்கள் ஒருநாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தன. மக்ரோனுடனான “சமூக உரையாடலின்” பகுதியாக தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களையும் இராணுவத்திற்கு நிதியாதாரம் அளிப்பதையும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அதேநேரத்தில் கோபத்தை வடியச் செய்வதற்கும் ஒரு கலகத்தை தவிர்ப்பதற்கும் இத்தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவை நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சியின் அல்லது இமானுவல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை எதிர்க்காத தொழிற்சங்கங்களின் மீது ஆசிரியர்களும் தொழிலாளர்களும் எவ்விதமான நம்பிக்கையும் கொள்ளமுடியாது. அவை கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுடன், சர்வதேச அளவில் ஆசிரியர்களது பெருகும் வேலைநிறுத்த அலையில் இருந்தும், பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தில் இருந்தும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர்களது ஏனைய பிரிவுகளது போராட்டங்களில் இருந்தும் பிரெஞ்சு ஆசிரியர்களை தனிமைப்படுத்தி வந்திருக்கின்றன.

மாறாக தொழிலாளர்கள் தேசிய இரயில்வே (SNCF) தனியார்மயமாக்கப்படுவதற்கும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் (statut) அழிக்கப்படுவதற்கும் எதிரான இரயில்வே தொழிலாளர்களது போராட்டத்தின் —இந்தப் போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது— அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைத் தேற்றம் செய்துகொள்ள வேண்டும்.

வரலாற்றுரீதியாக இரயில்வே தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் மிக போர்க்குணம் கொண்ட பிரிவுகளில் ஒன்றாக இருப்பவர்களாக இருந்தபோதும், மக்ரோன் அவரது தாக்குதல்களை முன்னெடுக்க இயலும்விதமாய், விரக்தியடையச் செய்யும் மட்டுப்படுத்தல்களின் ஒரு வரிசையின் மூலமாக இரயில்வே தொழிலாளர்களை மூச்சுத்திணறடிக்க தொழிற்சங்கங்களை அனுமதிக்கின்ற வகையில், பல மாதங்களுக்கு அவரால் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள  முடிந்தது. அந்த சமயத்தில் எரிசக்தி தொழிலாளர்களும் மாணவர்களும் கூட மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள், மக்ரோனுக்கு எதிரான தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மத்தியில் இருந்த விருப்பை மீறி, புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன்-லூக்-மெலோன்சோனின் ஆதரவுடன்,  பல்வேறு வேலைநிறுத்தங்களையும் தனிமைப்படுத்தின.

மக்ரோனுக்கு எதிராய் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கு ஆசிரியர்கள் போராட்டத்தை தமது சொந்தக் கைகளில் எடுப்பதும், தொழிலாளர்கள் மூலமாக தொழிலாளர்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்ற சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை கட்டியெழுப்புவதன் மூலம் தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமான விதத்தில் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதும் அவசியமாகும். ஆசிரியர்களது போராட்டங்களுக்கு தலைமை கொடுப்பதற்கும், விரிந்தளவில் பார்க்கும்போது பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் பொதுக் கல்வியை வெட்டுவதற்கும் தொழிலாளர்களது வேலைநிலைமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் மூலகாரணமாக இருக்கின்ற இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான தொழிலாளர்களது போராட்டங்களுடன் அவற்றை ஐக்கியப்படுத்துவதற்கும் இந்தக் கமிட்டிகள் அவசியமானவையாகும்.