Print Version|Feedback
The JVP’s fraudulent attempt to capitalise on Sri Lanka’s political crisis
இலங்கையின் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஜே.வி.பி. இன் மோசடி முயற்சி
By Wasantha Rupasinghe
2 November 2018
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திடீரென பதவி விலக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் இருத்தியதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் மத்தியில், இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் மீதான பரந்த அதிருப்தியை சுரண்டிக்கொள்ள ஒரு தேசியவாத எதிர்க்கட்சி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), முற்படுகிறது.
ஆளும் உயரடுக்கின் போட்டி கன்னைகளை எதிர்ப்பதாக ஜே.வி.பி. போலியாக தோரணை காட்டுவதன் குறிக்கோள், சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் பரந்த அதிருப்தியை, சிதைந்து போய்க்கொண்டிருக்கும் பாராளுமன்ற முறைக்குப் பின்னால் மீண்டும் திருப்பி விடுவதே ஆகும்.
அக்டோபர் 26 அன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தார். இது, 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் வழங்கப்பட்டதிலிருந்தே இலங்கையை ஆட்சி செய்து வந்த இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளால், 2015ல் ஸ்தாபிக்கப்பட்ட "ஐக்கிய" அரசாங்கத்துக்கு முடிவு கட்டியது.
2015 ஆம் ஆண்டில், சிறிசேன, ஸ்ரீ.ல.சு.க. இல் இருந்த ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் முறித்துக் கொண்டு, விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்து அந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளியேறினார். இந்த நகர்வு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒத்துழைத்து, வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பகுதியாக இருந்தது.
ஆசியா-பசிபிக் முழுவதும் பெய்ஜிங்கோடு அமெரிக்கா மோதலுக்கு நிற்கும் நிலைமையின் மத்தியில், சீனாவுடன் இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட ஆழமான உறவுகளுக்கு வாஷிங்டன் விரோதமாக இருந்தது. இந்த அரசியல் சதிகளையும் சிறிசேனவின் தேர்தலையும், சகல மத்தியதர வர்க்க போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களின் கூட்டணியுடன் ஜனநாயகத்தின் வெற்றியாக பாராட்டின. ஜே.வி.பி. சிறிசேனவை மெளனமாக ஆதரித்தது.
புதிய அரசாங்கம், அது நியமிக்கப்பட்ட உடனேயே ஒரு நிறைவேற்றுக் குழுவை ஸ்தாபித்தன் மூலம், தனது "ஜனநாயக நம்பிக்கைச் சான்றிதழ்களை" நிறுவ முயன்றது. ஐ.தே.க. உடன் இணைந்து இந்த குழுவில் பங்குபற்றிய ஜே.வி.பி., இந்த பாசாங்கை அங்கீகரித்தது.
அதற்கு கைம்மாறாக, ஐ.தே.க. அதிக எண்ணிக்கையிலான ஆசணங்களைப் பெற்ற மற்றும் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட, 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் உத்தியோகபூர்வ அமைப்பாளராக ஜே.வி.பி. முன்னிலைப்படுத்தப்பட்டது.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத குணாம்சத்தைப் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. அந்த அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தியதுடன் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தியது.
கடந்த வார அரசியல் சதிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஜே.வி.பி. இன் தற்போதைய கூற்றுக்கள் பாசாங்குத்தனமானவையாக இருப்பதோடு, தொழிலாள வர்க்கமானது அதன் சொந்த சுயாதீன முன்னோக்கின் அடிப்படையில், இந்த ஆழ்மடைந்து வரும் அரசியல் நெருக்கடியில் தலையிடுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டதாகும்.
இது, அக்டோபர் 29 அன்று பாராளுமன்ற சபாநாயகரருக்கு "பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்" என்று கோரி ஜே.வி.பி அனுப்பிய கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அதில் அது பாராளுமன்றத்தை “மக்களின் உயர்ந்த அதிகாரத்தை” பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் "மிக உயர்ந்த நிறுவனமாக" சித்தரித்தது.
"பாராளுமன்றம் கலந்துரையாடலில் இருந்து தடுத்து வைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல," என்று எச்சரித்த அந்த கடிதம், அது "நாட்டிற்கு விரோதமாக இருக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு மறைமுகமாக உதவுகிறது" என்று மேலும் தெரிவித்துள்ளது.
நெருக்கடி நிறைந்த பாராளுமன்ற அமைப்பை தூக்கி நிறுத்துவதற்கு ஜே.வி.பி. மேற்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சிகளை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது. இந்த கட்டமைப்புக்குள் ஜே.வி.பி. தன் பங்கிற்கு எப்போதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பெருநிறுவன உயரடுக்கின் நலன்களை மேம்படுத்தி வருகிறது. ஆழமடைந்துவரும் நெருக்கடி, முழு அரசியல் ஸ்தாபனத்தையும் மேலும் இழிவுபடுத்தி, அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகள் மீதான வெகுஜன எதிர்ப்பை அதிகரித்து விடும் என ஜே.வி.பி. கவலை கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழைப்பு, விக்கிரமசிங்க மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினதும் நிலைப்பாட்டை எதிரொலித்தது. ஐ.தே.க. தலைவர் பாராளுமன்றத்தை கூட்டுவதையே விரும்புகிறார். அப்போது தனது பிரதமர் பதவிக்கு பெரும்பான்மை ஆதரவை அவரால் நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். வாஷிங்டன் இந்த கோரிக்கைக்கு பின்னால் நிற்கிறது, ஏனெனில் இராஜபக்ஷ மீண்டும் சீனாவை நோக்கித் திருப்புவார் என அது அஞ்சுகிறது. "வெளிநாட்டு சக்திகள்" என்ற குறிப்பு, சமூக கோபத்தை பிற்போக்கு சிங்கள தேசபக்தியின் பக்கம் திசை திருப்புவதற்கான ஜே.வி.பி. இன் முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஜே.வி.பி. 1966ல் ஸ்தாபிக்கப்பட்ட போது, கிராமப்புற இளைஞர் சந்ததியினரை பிழையாக வழிநடத்த, மாவோவாத மற்றும் காஸ்ட்ரோவாத குட்டி முதலாளித்துவ போலி மருந்தை ஜே.வி.பி. பயன்படுத்தியது. இதன் விளைவாக 1971ல் பேரழிவு ஆயுத கிளர்ச்சி இராணுவத்தால் இரத்தத்தால் மூழ்கடித்து நசுக்கப்பட்டது. இந்தக் கட்சி, இப்போது முதலாளித்துவ பாராளுமன்றத்தை "மக்களின் உயர்ந்த சக்தியாக" வணங்குவதானது முன்னாள் குட்டி முதலாளித்துவ தீவிரவாத குழுக்கள் அனைத்தினதும் வலதுசாரி போக்கு பற்றிய ஒரு பரந்த வெளிப்பாடாகும்.
ஜே.வி.பி. நீண்டகாலமாக முதலாளித்துவ ஆட்சியின் வெளிப்படையான பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது. 1980களில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன திறந்த சந்தை கொள்கைக்கு மாறியதற்குகு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தத்தை அடிபணியச் செய்வதில் கட்சி முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய கொடூரமான யுத்தத்தை முன்னணியில் நின்று ஆதரித்தது. 1980களின் பிற்பகுதியில் அது எதிர்க்கட்சி குழுக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், தொழிலாள வர்க்க அமைப்புக்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் எதிராக ஒரு கொடூரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதில் சோ.ச.க. இன் முன்னோடியான, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களின் படுகொலையும் அடங்கும்.
1990 களில், ஜே.வி.பி. சட்டபூர்வமானதாக்கப்பட்ட பின்னர், 1994ல் ஸ்ரீ.ல.சு.க. இன் ஜனாதிபதி வேட்பாளரான சந்திரிகா குமாரதுங்கவை ஆதரிப்பதற்காக தனது வேட்பாளரை அகற்றிக்கொண்டது. அதற்காக அது, ஜயவர்த்தனவின் ஜனநாயக-விரோத 1978 அரசியலமைப்பை மாற்றியமைப்பதாக குமாரதுங்க வழங்கிய உறுதிமொழியை சமூக விடுதலைக்கான முன்நோக்கிய அடியெடுப்பாக அது தூக்கிப் பிடித்தது.
குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் நிலையை எதிர்கொண்டபோது, ஜே.வி.பி. அவரது அரசாங்கத்திற்கு தேவையான வாக்குகளை வழங்கியதோடு அவரது அமைச்சரவைக்குள்ளும் நுழைநது கொண்டது. இதன் மூலம் அவர்கள் அந்த அரசாங்கம் அமுல்படுத்திய உள்நாட்டுப் போர் மற்றும் சந்தை சார்பு நடவடிக்கைகளை நேரடியாக பொறுப்பேற்றனர்.
2005 ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி. இராஜபக்ஷவின் வெற்றியை உத்தரவாதப்படுத்தி அவருடன் ஒரு உடன்படிக்கைக்குச் சென்றது. அதன் மூலம் யுத்தத்தை தீவிரமாக்கவும் ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கவும் வழி அமைத்துக் கொடுத்தது.
இது ஜே.வி.பி. இன் இழிந்த வரலாற்றின் ஒரு பகுதி ஆகும்.
இன்று, 2008 இல் வெடித்த நிதிய நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், முதலாளித்துவ ஜனநாயகம் பொறிந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது. கொழும்பில் காணப்படும் கொந்தளிப்பு நிலைமை, இந்த சர்வதேச போக்கின் ஒரு கூர்மையான வெளிப்பாடு ஆகும். ஆளும் உயரடுக்கிற்குள்ளான தற்போதைய உள்நாட்டு யுத்தம் எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதற்கு அப்பால், அது தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதன் பேரில், மிகவும் எதேச்சதிகார ஆட்சிக்கு திரும்புவதை குறிக்கிறது.
எனவேதான் ஜே.வி.பி. உட்பட அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் பிளவுபடுமாறு தொழிலாள வர்க்கத்துக்கு சோ.ச.க. அழைப்பு விடுகின்றது.
தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத அரசியல் முன்னோக்கிற்காக போராட வேண்டும், அதற்காக அது அனைத்து பின்னணியிலான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். உத்தியோகபூர்வ பாராளுமன்ற வழிமுறைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள், தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒரு ஐக்கியப்பட்ட ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கைக் குழுக்கள் உட்பட தமது சொந்த வர்க்க அமைப்புக்களை கட்டியெழுப்ப வேண்டும்.