Print Version|Feedback
Following state election defeats
Germany’s grand coalition closes ranks and steps up right-wing offensive
மாநில தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து
ஜேர்மனியின் மகா கூட்டணி வேறுபாடுகளைக் களைந்து, வலதுசாரி எதிர்ப்பினை அதிகரிக்கிறது
By Johannes Stern
13 November 2018
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஆகியவற்றை உள்ளடக்கிய ஜேர்மனியின் மகா கூட்டணி அரசாங்கம் சமீபத்திய மாநில தேர்தல்களின் மிகப் பெரிய தோல்விகள் மற்றும் அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு அதன் வலதுசாரி கொள்கைகளை அதிகரிப்பதன் மூலமாக விடையிறுக்கிறது.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு நினைவுதினம் மற்றும் ஜேர்மனியின் படுகொலை இரவின் (Reichspogromnacht) 80 ஆம் நினைவாண்டு தினத்தை நவம்பர் 9 இல் கொண்டாடுவது குறித்த உத்தியோகபூர்வ கூட்டத்திற்கு முன்னதாக, அது வெள்ளியன்று காலை அறிவிக்கையில் அந்நாட்டின் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு நிஜத்தில் திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது. 2018 இல், இந்த வரவுசெலவு திட்டக்கணக்கு மொத்தத்தில் 38.5 பில்லியன் யூரோவாக இருந்தது. இப்போது அது 2019 இல் 43 பில்லியன் யூரோவை விட அதிகமாக அதிகரிக்கப்பட உள்ளது. 12 சதவீத உயர்வைக் குறிக்கும் இது முன்னர் திட்டமிடப்பட்ட மொத்த தொகையை விட 323 மில்லியன் யூரோ அதிகமாகும்.
அண்மித்து 16 மணி நேர "சீரமைப்பு" அமர்வில், சமூக ஜனநாயக கட்சியின் நிதி அமைச்சர் ஓலாவ் ஷோல்ஸ் இன் வரைவு வரவு-செலவு திட்டக்கணக்கில் மேற்கொண்டு மாற்றங்களைச் செய்த மந்திரிசபை, துரிதமான இராணுவ மீள்ஆயுதமயப்படுத்துவதற்கு பாதை வகுத்தது. ஊடக செய்திகளின்படி, பில்லியன் கணக்கான விலையில் ஆயுத திட்டங்களை அனுமதிக்கும் “நிதி ஒதுக்கீட்டிற்கான கடமைப்பாடு" என்றழைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது.
கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர் ஒன்று மிகப்பெரிய தனியொரு பொருள் கொள்முதலாக இருக்கும், 2031 க்குள் சுமார் 5.6 பில்லியன் யூரோ முதலீடு இதில் சம்பந்தப்பட்டிருக்கும். இது இராணுவ வலைத் தளமான Augen geradeaus! இல் அறிவிக்கப்பட்டது. இதற்கும் கூடுதலாக, 2028 க்குள் சுமார் 5 பில்லியன் யூரோவாக மதிப்பிடப்பட்ட ஒரு புதிய பன்முக போர்க்கப்பலும் (MKS180 ரகம்) வாங்கப்படுகிறது.
அந்த வலைப் பதிவின் தகவல்படி, “மிகவும் செலவுமிக்க திட்டங்களில் ஒன்று,” Tactical Air Defence System (TLVS), “புதிய வரவு-செலவு திட்டத்தில் வெறும் அடையாளத்திற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.” ஆனால் "அவசியமானால், வரவு-செலவு திட்டத்தின் பிற கொள்முதல்களின் நிதிகளை இதற்கு மாற்றுவதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.”
ஏற்கனவே அதன் கூட்டணி உடன்படிக்கையில், இந்த பழமைவாத "ஒன்றிய கட்சிகள்" (CDU மற்றும் CSU) மற்றும் SPD, பாதுகாப்பு செலவுகளை 2024 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிக்க சூளுரைத்திருந்தன, இது வருடாந்தர இராணுவ வரவு-செலவு திட்டத்தை 75 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக கொண்டு செல்லும். இப்போது அவை இந்த இலக்கை எட்டுவதற்குத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
“Eurofighter போர் விமானம் வாங்குவதற்காக, வரவிருக்கும் காலத்தில் மத்திய இராணுவ படைகளுக்குள் பாயவிருக்கும் பில்லியன் குறித்து மக்களுக்குக் குறைவாகவே தெரியும்,” என்று Augen geradeaus! குறிப்பிடுகிறது. நிதி ஒதுக்கீட்டு கடமைப்பாட்டில் சுமார் 2.5 பில்லியன் யூரோ புதிய யூரோபைட்டர்களைக் கொண்டு பழைய போர் விமானங்களைப் பிரதியீடு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இவை "தரைப்படை இலக்குகளுக்கு எதிராக சண்டையிடுவது போன்ற கூடுதல் பணிகளுக்காக மேம்படுத்தப்படும்.” கூடுதல் நிதி ஒதுக்கீடு புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதையும், சுமார் 140,000 நவீன போர்ப்படை சீருடைகள் வாங்குவதையும் இலக்கில் வைத்துள்ளது.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மற்றும் ஜேர்மனியின் படுகொலை இரவின் 80 வது நினைவாண்டில் அரசாங்கத்தின் பல முன்னணி அரசியல்வாதிகள் உரையாற்றினர், “ஜனநாயகம்" மற்றும் "வரலாற்றின் படிப்பினைகள்" குறித்த இவர்களின் பிசுபிசுத்த வார்த்தைகள், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதையும், அதில் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அதன் கூட்டாளிகளும் உள்ளடங்குவர் என்ற உண்மையையும் மறைத்து விடவில்லை.
அமெரிக்க இடைக்கால தேர்தல்களைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அரச செயலாளர் நில்ஸ் அன்னென் (SPD), டொனால்ட் ட்ரம்புக்கு விடையிறுப்பதில் ஒரு பலமான ஜேர்மன்-ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையைக் கோரினார். “நாம் ஐரோப்பாவில் நமது உள்நாட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் மற்றும் குறிப்பாக வர்த்தக பிரச்சினை விவகாரத்தில் ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்” என்றார். “நமக்குள் உடன்பாடு இல்லாத பிரச்சினைகளில், அமெரிக்கர்கள் பலமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். 'அமெரிக்கா முதலில்' என்பதற்கு 'ஐக்கிய ஐரோப்பா' என்பதைக் கொண்டு மட்டுமே நம்மால் பதிலளிக்க முடியும்.”
இந்த மகா கூட்டணியின் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கை, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரப்படுத்தப்பட்ட தாகுத்தல்களுடன் கை கோர்த்து செல்கிறது. வியாழனன்று ஜேர்மன் அரசாங்கம் நிறைவேற்றிய ஓய்வூதியங்கள் பொதியானது, ஓய்வூதியங்கள் ஏற்கனவே முதியவர்களை கடும் வறுமைக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில், அற்ப ஓய்வூதிய தொகைகளை வலுப்படுத்துவதற்கு மட்டுமே சேவையாற்றுகிறது, அதேவேளையில் எதிர்காலத்தில் அரசு ஓய்வூதியங்கள் மீதான கூடுதல் தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்கிறது. அதேநாளில், அரசாங்கம், அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் ஆதரவுடன், அந்நாட்டின் தஞ்சம் கோருவோர் சட்டத்தை இறுக்கியதுடன் அகதிகள் மீது கூடுதல் தடைகளைத் திணித்தது.
அந்நாட்டின் கடுமையான வரலாற்று அனுபவங்களைத் தொடர்ந்து, மக்களில் அதிக பெரும்பான்மையினர் போர் மற்றும் பாசிசவாதத்தை நிராகரிக்கின்றனர், ஆனால் ஆளும் வர்க்கமோ அதன் ஜனநாயக-விரோத, இராணுவவாத மற்றும் எதேச்சதிகார பாரம்பரியங்களை மீட்டுயிர்ப்பிக்க உத்தேசிக்கிறது.
இது ஐ.நா. சபையின் உலகளாவிய புலம்பெயர்வு உடன்படிக்கை குறித்து ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) நடந்த நவம்பர் 8 விவாதங்களில் மீண்டும் தெளிவானது. ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட், “நமது நாட்டை ஒரு தேசிய-அரசு என்பதிலிருந்து ஒரு குடியேற்றும் பகுதியாக இரகசியமாக மாற்றுவதற்கு விரும்பும்,” “இடதுசாரி கற்பனையாளர்கள் மற்றும் உலகளாவிய உயரடுக்குகளுக்கு" எதிராக கோபங்களைக் கொட்டுவதற்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்.
கௌலாண்டின் பிதற்றல்களுக்கும் ஹிட்லர் மற்றும் கோயபல்ஸின் கொள்கைகளுக்கும் இடையிலான வெளிப்படையான சமாந்தரங்களை வரைவதற்குப் பதிலாக, ஏனைய நாடாளுமன்ற கட்சிகள் "ஜேர்மனியின் தேசிய நலன்களுக்கு எதிராக" நடந்து கொள்வதாக அவரைக் குற்றஞ்சாட்டினர்.
ஐ.நா. புலம்பெயர்வு உடன்படிக்கையானது, ஜேர்மனியில் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கை என்று அவர்கள் வலியுறுத்தினர். “மற்ற நாடுகளில் அடிப்படை சேவைகள் எதுவும் கிடைக்காததால் புலம்பெயர்வோர் ஜேர்மனிக்கு மிகக் குறைவாகவே வருவார்கள் என்று உண்மையாக நம்பும் தெளிவான மனம் படைத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று ஒன்றிய கட்சி அரசியல்வாதி ஸ்டீபன் ஹர்பார்த் அறிவித்தார், இது CDU, CSU, SPD, நவ-தாராளவாத FDP, பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சியிடம் இருந்து கைத்தட்டல்களைப் பெற்றது. “யாரும் கிடையாது" என்றவர் தொடர்ந்து கூறினார். “உலகளாவிய புலம்பெயர்வு உடன்படிக்கையை ஆதரிக்கும் யாரொருவரும் ஜேர்மனிக்கு வருவதற்கான உந்துதலை குறைப்பதற்கு எதிரான நிலைமைகளை உருவாக்குகிறார்கள்.”
அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு எதிராக அரசாங்கத்தின் வலதுசாரி மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளை ஊக்குவிப்பதில் சமூக ஜனநாயக கட்சி (SPD) முக்கிய பாத்திரம் வகிக்கிறது. சமூக ஜனநாயக கட்சி கருத்துக்கணிப்புகளில் வீழ்ச்சி அடைந்து, இப்போது வெறும் 13 சதவீதத்தில் பட்டியலிடப்பட்டுள்ள போதும், அது ஒன்றிய கட்சிகளுடன் சேர்ந்து அதன் ஆழ்ந்த மக்கள் விரோத கூட்டணியைத் தொடர்வதில் தீர்மானகரமாக உள்ளது.
“நாங்கள் கரம் கோர்த்து, நல்லிணக்க சக்தியைச் சார்ந்துள்ளோம்,” என்று SPD தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ் கடந்த வாரம் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்தார். மகா கூட்டணியில் தொடர்வது குறித்து விவாதிக்க அங்கே கட்சியின் எந்த சிறப்பு கூட்டமும் இருக்கப் போவதில்லை. அதுபோன்ற எந்த கருத்தும் நிர்வாகக் குழுவின் பெரும் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நஹ்லெஸ் தெரிவித்தார்.
இந்த மகா கூட்டணியைப் பேணுவதற்கு SPD தீர்மானகரமாக இருப்பதற்குப் பின்னால் இரண்டு பிரதானமான அரசியல் பரிசீலனைகள் உள்ளன. ஒருபுறம், அது ஜேர்மன் இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டுவதை முன்னுக்குத் தள்ளவும், இரண்டு உலக போர்களில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பின்னர் ஜேர்மனியை ஒரு பிரதான இராணுவ சக்தியாக மீள்ஸ்தாபிதம் செய்வதற்கும் அது தீர்மானகரமாக உள்ளது. 2014 முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய கூட்டாட்சி ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) அறிவிக்கையில், ஜேர்மனி "உலக அரசியலின் ஒரு அவதானியாக இருந்து கருத்துரைப்பதை விட பொருளாதாரரீதியில் மிகவும் பலமானதும் மிகவும் பெரியதும்" ஆகும் என்றார்.
இரண்டாவது, சமூக ஜனநாயக கட்சி அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரள்வதைக் குறித்து அஞ்சி, அனைத்து எதிர்ப்பையும் பலவந்தமாக ஒடுக்க தயாரிப்பு செய்து வருகிறது. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நவம்பர் புரட்சியின் நினைவுதின கொண்டாட்டத்தின் போது, ஸ்ரைன்மையர் தொழிலாளர்களின் புரட்சிகர மேலெழுச்சியை இரத்தத்தில் மூழ்கடித்த ஜேர்மன் இராணுவத்திற்கும் (Reichswehr) சமூக ஜனநாயக கட்சி தலைவர்களுக்கும் இடையிலான எதிர்புரட்சிகர கூட்டணியை நியாயப்படுத்தினார்.
நவம்பர் 9, 1918 இல் ஜேர்மன் அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்ற SPD தலைவர் பிரீட்ரிக் ஏபேர்ட், “வெற்றி பெற்ற சக்திகளது இராணுவ தலையீட்டையும், குழப்பங்கள் மற்றும் உள்நாட்டு போரையும் ஆரம்பத்தில் தடுக்க விரும்பியதாகவும், மக்களுக்கு வேலையும் உணவும் வழங்குவதற்கான விருப்பத்தால் அவர் உந்தப்பட்டு இருந்ததாகவும்,” ஸ்ரைன்மையர் வாதிட்டார்.
"தேசியவாத Freikorps இன் காட்டுமிராண்டித்தனம் எதற்காக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தாலும் அதற்கு எந்த நியாயப்படுத்தலும் இல்லை" என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அதேநேரத்தில் "பிரீட்ரிக் ஏபேர்ட்டைச் சுற்றியிருந்த, மக்கள் பிரதிநிதிகள், தேசிய சட்டசபைக்கு தேர்தல்கள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான தீவிர இடதின் முயற்சிக்கு எதிராக தங்களைப் பலாத்காரத்தால் பாதுகாக்க வேண்டியிருந்தது.”
வலதுசாரி தீவிரவாத AfD இல் இருந்து ஆளும் கட்சிகள் வரையில் இடது கட்சி மற்றும் பசுமை கட்சியினர் வரையில் அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் ஸ்ரைன்மையரைப் பாராட்டின. இது, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் வரவிருக்கின்ற புரட்சிகர வர்க்க போராட்டங்களுக்குத் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள அதன் வலதுசாரி கொள்கைகளைக் கொண்டு கடுமையாக அழுத்தமளிப்பதிலும், அதேவேளையில் அதுபற்றி கருத்து வேறுபாடின்றி உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இடது கட்சியும் பசுமை கட்சியினரும் இந்த மகா கூட்டணி உடன் நெருக்கமான கூட்டுறவை ஸ்தாபிக்க ஒருவரை விட ஒருவர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதோடு, இரண்டு கட்சிகளுமே இன்னும் அதிக ஆக்ரோஷமான அரசு கொள்கையைக் கோருகின்றன. கடந்த வியாழனன்று "சமமான வாழ்க்கை நிலைமைகள்" குறித்து ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag) விவாதித்த போது, இடது கட்சி தலைவர் டீட்மார் பார்ட்ஷ் அரசின் எதிர்கால பணிகளில் இணைத்துக் கொள்ளுமாறு மன்றாடினார். “குறைந்தபட்சம் மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களையாவது அல்லது நகர சபைகளில் பொறுப்புக்களைக் கொண்டிருப்பவர்களையாவது" இதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றவர் அறிவித்தார்.
பசுமைக் கட்சியினரைப் பொறுத்த வரையில், கட்சி தலைவர் அனலீனா பெயாபொக் ஒரு பேட்டியில் Der Spiegel க்கு கூறுகையில், “SPD [கூட்டணியில்] தொடர்ந்து இருக்கப் போவதை அது அறிவித்துவிட்டது. ஒன்றியமும் அது தொடர்ந்து இருக்கப் போவதை அறிவித்துவிட்டது. சான்சிலர் அவர் தொடர்ந்து பதவியில் இருக்கப் போவதை அறிவித்து விட்டார். ஆகவே நமக்கு அரசாங்கம் இருக்கிறது, அது, இந்த நாட்டை ஆளுகின்ற மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கின்ற அதன் வேலையைச் செய்ய வேண்டும்.”
பெயாபொக் இன்னும் அதிக ஆக்ரோஷமான வல்லரசு கொள்கைக்கு அழைப்புவிடுத்தார்: “மிக வேகமாக மாறிவிட்ட நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியம் உலக அரசியலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்,” என்றார்.