Print Version|Feedback
French “Yellow Vest” protesters prepare road blockades against fuel tax hike
எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல்களுக்கு தயாரிப்பு செய்கின்றனர்
By Anthony Torres
16 November 2018
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எல்லையைக் கடந்து வளர்ச்சியடைந்து வருகின்ற, எரிபொருள் விலை அதிகரிப்புகளுக்கு எதிரான “மஞ்சள் சீருடை” இயக்கமானது ஒரு கட்டுப்படுத்த முடியாத சமூக கோபம் வெடிப்பது குறித்த அச்சங்களை ஊடகங்களிலும் அரசாங்க வட்டாரங்களிலும் தூண்டிக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 10 அன்று சமூக ஊடகங்களில் பாரிஸை சேர்ந்த இரண்டு ட்ரக் ஓட்டுநர்கள் “எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான தேசிய அளவிலான மறியல்” செய்வது என ஒரு நிகழ்வுக்கு ஆலோசனை வைத்ததில் இருந்து இந்த இயக்கம் தோன்றியிருந்தது. அதன்பின் சமூக ஊடகங்களில் துரிதமாக இந்த இயக்கம் பரவியது, நாளை நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் தாங்கள் பங்கேற்கவிருப்பதாக சுமார் 200,000 பேர் இப்போது கூறுகின்றனர்.
“மஞ்சள் சீருடை” இயக்கமானது, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எரிபொருள் வரி அதிகரிப்புகளுக்கு எதிரான சிறு வணிகர்கள் மற்றும் டிரக் முதலாளிகள்-ஓட்டுநர்கள் அத்துடன் தொழிலாளர்கள் கொண்ட பலகூறுத்தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த வரி அதிகரிப்பானது சூழலியல் மேம்பாட்டிற்கு நிதியாதாரம் அளிப்பதற்காக என்று மக்ரோன் அரசு கூறியிருக்கிறது, ஆனால் அது நுகர்வோருக்கும் எரிபொருள்நிலைய வணிகங்களுக்கும் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்கிறது.
பிரெஞ்சு பெட்ரோலிய தொழிற்சாலைகள் சங்கத்தின் புள்ளிவிவரப்படி, அக்டோபர் இறுதிவாக்கில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.54 யூரோவாகவும் (1.73 அமெரிக்க டாலர்கள்), ஒரு லிட்டர் டீசல் விலை 1.51 யூரோவாகவும் (1.69 அமெரிக்க டாலர்) இருந்தது, இது ஒருவருடத்தில் முறையே 14 சதவீத மற்றும் 22 சதவீத அதிகரிப்பாகும். புதிய ஆண்டில், ஒரு லிட்டர் டீசலுக்கு 6.5 சென்டுகள் வரி அதிகரிக்கவும் பெட்ரோலுக்கு 2.9 சென்டுகள் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கிலான ஏகாதிபத்தியப் போர் கொள்கையின் விளைவாகவும் குறிப்பாக, சவுதி அரேபியா போன்ற அமெரிக்கக் கூட்டாளிகளது அதிகரித்த எண்ணெய் உற்பத்தி மூலமாக இது இதுவரை ஈடுசெய்யப்படாத ஈரான் மீதான தடையின் பின்விளைவாகவும் இது இருக்கிறது.
அந்த இரண்டு டிரக் ஓட்டுநர்கள் முன்மொழிந்திருக்கும் நிகழ்வுகள் தவிர, மற்றவர்களும் நாளை சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் முற்றுகைகளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தமாய் பிரான்ஸ் எங்கிலும் 500 அணிதிரள்வுகளுக்கு தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில வெள்ளோட்டங்களும் நடந்திருக்கின்றன, ஒரு வாரத்திற்கு முன்பாக Jura பிராந்தியத்தில் சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு குழுவினால் அழைப்பு விடப்பட்டிருந்த ஒரு நிகழ்வு இதில் குறிப்பிடத்தக்கதாகும். Dole இல் தனி மனிதர்கள், தொழில்முறை ஓட்டுநர்கள் அல்லது விவசாயிகளின் சுமார் 500 வாகனங்கள் ஒன்றுதிரண்டன.
இது எரிபொருள் விலையேற்றங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் நடந்து வருகின்ற ஆர்ப்பாட்டங்களது அலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. சமீபத்தில் பல்கேரியாவில், எரிபொருள் விலையேற்றங்கள், பழைய அல்லது அதிக சூழல்மாசுபடுத்தும் கார்களுக்கு அபராத வரிகள் அதிகரிப்பு, மற்றும் கார் காப்பீட்டு செலுத்துமதித் தொகைகளின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டின் பிரதான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர்.
பிரான்சில் அரசு மற்றும் வர்த்தகக் கூட்டமைப்புகளால் நிதியாதாரம் வழங்கப்படுகின்ற மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏற்பாடு செய்யாத எந்த இயக்கத்தைக் கண்டும் மக்ரோன் அரசாங்கம் மிரட்சியடைகிறது. “எங்கும் முழுக்க மறிப்பது” இருக்கக் கூடாது என்று கோரிய உள்துறை அமைச்சரான கிறிஸ்தோஃப் காஸ்டனேர் ஆர்ப்பாட்டக்காரர்களை போலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு அச்சுறுத்தினார். “எங்கேனும் மறியலால் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கோ அல்லது சுதந்திர நடமாட்டத்திற்கோ ஆபத்து இருக்குமானால், நாங்கள் தலையிடுவோம்.”
காஸ்டனேர் மேலும் சேர்த்துக் கொண்டார், “என்ன கஷ்டமென்றால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் வழக்கம் கொண்ட எந்த தொழிற்சங்கமும் இதனை ஒழுங்கமைக்கவில்லை. உதாரணமாக, ஒரு ஆர்ப்பாட்டம் என்றால், நீங்கள் போலிஸ் அலுவலகத்தில் அதைக் குறித்து தெரிவிக்க வேண்டும். ஆனால் இப்போது, மிகவும் வெகு சிலரே அவற்றை அறிவிக்கின்றனர். இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் எங்கே ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
அதிகரித்துச் செல்லும் வெகுஜன கோபத்தை தணிப்பதற்கு முயலும் அரசாங்கம் புதனன்று வரிசையான சில அறிவிப்புகளை செய்தது. பிரதமர் எட்வர்ட் பிலிப், கார்களை மாற்றுவதிலும் கூடுதல் சுற்றுசூழல் பாதிப்புகுறைந்த வாகனங்களை பெறுவதிலும் ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக, பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதற்கு வழிசெய்கின்ற திட்டங்களையும், அத்துடன் எரிபொருள் மானியங்களின் அதிகரிப்பையும் அறிவித்தார்.
மக்ரோன், கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான Charles de Gaulle இல் இருந்தபடி, தன்மீதான மக்கள்வெறுப்பை சொல்லிப் புலம்பும் சில வசனங்களை கபடமாக உச்சரித்தார். “அங்கே பொறுமையின்மை இருக்கிறது, கோபம் இருக்கிறது. நான் இந்தக் கோபத்தை பகிர்ந்து கொள்கிறேன், ஏனென்றால் என்னால் வெற்றிகரமாக செய்ய முடியாத ஒரு விடயமாக இருப்பது என்னவென்றால், பிரான்சின் மக்களை அதன் ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கம் செய்வதிலாகும். ஒருவர் இந்த மனக்கசப்பை ஒவ்வொரு மேற்கத்திய ஜனநாய நாட்டிலும் காண முடியும். இது எனக்குக் கவலையளிக்கிறது.”
எரிபொருள் வரி அதிகரிப்புகளுக்கு எதிராக வாகன ஓட்டுநர்கள் மத்தியில் பெருகிச் செல்லும் கோபமானது மக்ரோனின் ஒடுக்குமுறையான கொள்கைகளுக்கு எதிரான மிகப் பரந்த எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடு ஆகும். பெரும் செல்வந்தர்களுக்கு அவர் வழங்குகின்ற வரி-வெட்டுக்கள், அத்துடன் இராணுவப் பெருக்கத்திற்கு நூறு பில்லியன் கணக்கில் செலவிட அவர் கொண்டிருக்கும் திட்டங்கள் இவற்றுக்கான செலவுகளை மொத்தமாய் உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றிவிடுவதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்கிறார். நவம்பர் 11 அன்று பிரெஞ்சு பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தானை நினைவுகூருவது தனக்கு விருப்பமானதாக இருந்திருக்கும் என்று மக்ரோன் அறிவித்தமை தொழிலாள வர்க்கத்திற்கு அவர் கொண்டிருக்கும் வன்மையான குரோதத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சமூகம் செயல்படுவதற்கு அவசியமான பணம் தேடியெடுக்கப்பட வேண்டியது அவர்களது பெட்ரோல் தாங்கிகளை நிரப்பும் மக்களின் பைகளில் இருந்து அல்ல, மாறாக நிதிப் பிரபுத்துவத்தின் அவலட்சணமான செல்வங்களில் இருந்து ஆகும்.
2018 தொடங்கியது முதலாக, பிரான்சின் மிகவும் வசதியான 13 பில்லியனர்கள் தமது செல்வத்தில் 23.67 பில்லியன் யூரோக்களை சேர்த்துள்ளனர், இதன்மூலம் பிரான்ஸ் உலகிலேயே அதிகவேகத்தில் பில்லியனர்கள் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் நாடாக ஆகியிருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரும் செல்வந்தரான பேர்னார்ட் ஆர்னோ, 65.5 பில்லியன் யூரோ செல்வத்தைக் கொண்டிருக்கிறார், பிரான்சுவா பினோ 30.43 பில்லியன் யூரோ கொண்டிருக்கிறார். தோமஸ் பிகெட்டியின் 2010 அறிக்கையின் படி, பிரான்சின் உச்சத்தில் இருக்கும் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 62 சதவீதத்தை கொண்டிருக்கின்றனர்.
மக்ரோன் மற்றும் நிதி பிரபுத்துவத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை அபிவிருத்தி செய்வதென்பது மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டத்தில் தலையிட முயலும் பிரதானமாக வலதில் இருந்தான அரசியல்சக்திகளையும், இந்த இயக்கத்தை எதிர்க்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கோழைத்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் எதிர்த்துநிற்பதை அவசியமாக்கியிருக்கிறது.
வலது-சாரி குடியரசுக் கட்சியின் (LR) தலைவரான Laurent Wauquiez உம், அதி-வலது Debout la France (DLF) கட்சியின் Nicolas Dupont-Aignan உம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ள முயற்சி செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்.
நவ-பாசிச தலைவரான மரின் லு பென் Le Parisien பத்திரிகையிடம் பின்வருமாறு கூறினார், “அரசியல் தன்மையற்றது தான் என்றாலும், எங்களின் பல வாக்காளர்களுக்கும் பிடித்தமாய் இருக்கின்ற இந்த இயக்கத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய முதல் கட்சி நாங்களே.” ஆயினும் இந்த மறியல்களில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். “அசாதாரணமான சூழ்நிலைகளில் தவிர்த்து, ஒரு அரசியல் தலைவரின் பாத்திரமென்பது, வீதிகளில் அல்ல, மாறாக வாக்குப் பெட்டிகளின் மூலமாக பிரெஞ்சு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தெரிவுகளை வழங்குவதில் தான் துல்லியமாக அமைந்திருக்கிறது.”
தொழிற்சங்கங்களும் அவற்றுடன் இணைந்த அரசியல்கட்சிகளும் மஞ்சள் சீருடை இயக்கத்திற்கு தமது குரோதத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டனர். ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) இயக்கத்தின் நிர்வாகிகள், தமது அமைப்பு இந்த இயக்கத்தை ஆதரிக்கும் என்று கூறினர், ஆனால் LFI இன் “சூழல்சமூகவியல்” பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நோக்கில் எரிபொருள் வரிகளைக் குறைப்பதை எதிர்ப்பதாக கூறியது.
தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, தேசிய இரயில்வேயை மக்ரோன் தனியார்மயமாக்குவதை எதிர்த்த போராட்டங்களை கழுத்துநெரித்த அவை, மஞ்சள் சீருடை இயக்கத்தை கண்டனம் செய்வதுடன் தொழிலாளர்கள் தமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கக் கோருகின்றன. மஞ்சள் சீருடை இயக்கம் தொடர்பாக ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) ஆல் விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கை ”குடிமக்கள் மற்றும் தொழிலாளர்களது கோபத்தை அதி-வலதுகளும் சாலைப் போக்குவரத்து நலன்களும் கையாடுவது” என்று கண்டனம் செய்கிறது. அதற்குப் பதிலாக, “நமது சங்கத்தைத் தவிர வேறெவராலும் ஒழுங்கமைப்படாத”, அதாவது ஸ்ராலினிஸ்டுகள் தோல்விக்காய் சபித்திருக்கின்ற என்று சொல்லலாம், “தொழிற்சாலைகள் இடையிலான போராட்டங்களை” ஒழுங்கமைக்க CGT ஆலோசனையளித்தது.
இப்போதைக்கு, மஞ்சள் சீருடை இயக்க ஆர்ப்பாட்டம் கணிசமான ஆதரவைப் பெறும் என்பதாகவே தோன்றுகிறது. மக்ரோன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியை எதிர்நோக்கியிருப்பவர்களைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட விதத்தில் ஒழுங்கமைப்பதுமே இன்றியமையாத பிரச்சினையாகும். 1917 அக்டோபர் புரட்சியிலும் 1936 மற்றும் 1968 பிரென்சு பொது வேலைநிறுத்தங்களிலும் போல, தொழிலாள வர்க்கம் மட்டுமே நிதிப் பிரபுத்துவத்துடன் கணக்குத் தீர்க்கத்தக்க ஒரேயொரு சக்தியாகும்.
ஏகாதிபத்திய முற்றுகைகள் மற்றும் போர்களுக்கு எதிராகவும் மக்ரோனின் சிக்கன நடவடிக்கை கொள்கைக்கு எதிராகவுமான ஒரு அரசியல் மற்றும் சர்வதேசப் போராட்டமே முன்னோக்கியிருக்கும் பாதையாகும். அத்தகையதொரு போராட்டத்தின் அபிவிருத்தியானது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்பு மற்றும் அரசு அதிகாரம் பிரான்சு மற்றும் ஐரோப்பாவெங்குமிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் கரங்களுக்கு மாற்றப்படுவது ஆகிய பிரச்சினைகளை தவிர்க்கவியலாது எழுப்பும்.