Print Version|Feedback
Sri Lanka: UNP demands Facebook protect identity of party supporters
இலங்கை: கட்சி ஆதரவாளர்களின் அடையாளத்தை பாதுகாக்குமாறு பேஸ்புக்கிடம் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
By Wasantha Rupasinghe
21 November 2018
நவம்பர் 16 அன்று, ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) தலைமைத்துவமானது இராட்சத நிறுவனத்தின் சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி வரும் கட்சி ஆதரவாளர்களின் அடையாளத்தை பாதுகாக்குமாறு பேஸ்புக்குக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது பாய்வதற்கு இலங்கையின் "சட்டவிரோத நிர்வாகம்" அந்த விபரங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என அஞ்சுவதாக அந்த கடிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி சிறிசேன புதிய இலங்கை அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவதற்காக பிரதமராக நியமித்ததையே ஐ.தே.க.வின் "சட்டவிரோத நிர்வாகம்" எனப்படுவதில் குறிக்கப்படுகின்றது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதிவியில் இருந்து அக்டோபர் 26 அன்று சிறிசேன அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் அகற்றினார்.
பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க்கிற்கு முகவரியிடப்பட்ட மற்றும் கட்சியின் தலைவர் கபீர் ஹாசிம் கையெழுத்திட்டுள்ள இரு-பக்க கடிதம், பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதி குறிப்பிடுவதாவது: "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, இலங்கையின் தற்போதைய சட்டவிரோத நிர்வாகத்தின் அலுவலர்கள், மிகவும் தனிப்பட்டதாக இருக்க வேண்டிய இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களில் சில தேர்வு செய்யப்பட்டவர்களின் தகவல்களை கேட்டிருப்பது போல் தெரிகிறது. இத்தகைய கோரிக்கைகளில், பெயரிடப்பட்ட தனிநபர்கள், புவி-இருப்பிடங்கள் மற்றும் இந்த பக்கங்களைப் பார்வையிட மற்றும் இடுகையிடும் பயனர்களின் பிற அடையாள விவரங்களும் அடங்கி இருக்கலாம்."
ஐ.தே.க. இந்த தகவலை "பாதுகாப்பதற்காக" பேஸ்புக்கை வலியுறுத்தியதற்கு காரணம், "தற்போதைய சட்டவிரோத நிர்வாகமானது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்ட வழிகளில் பெரும்பாலும் இவற்றைப் பயன்படுத்தக்கூடும்," என்பதாலேய ஆகும்.
ஒரு நாளுக்கு முன்னதாக, நவம்பர் 15 அன்று ஐ.தே.க.வின் சமூக ஊடகப் பக்கத்தை பல மணிநேரங்கள் பேஸ்புக் தடுத்து வைத்திருந்ததையும் கொழும்பில் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தையும் நிருபர்கள் மாநாட்டையும் நேரடி ஒளிபரப்பு செய்வதை தடுத்திருந்ததையும் பற்றி இந்த கடிதம் எதையும் குறிப்பிடவில்லை. நவம்பர் 16 அன்று பேஸ்புக் அதன் தணிக்கைகளை அகற்றிவிட்டதாக ஐ.தே.க. அலவலர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
பேஸ்புக்கின் நடவடிக்கைகளும் ஐ.தே.க. தலைவர் ஹாஸிமின் கடிதமும், விக்கிரமசிங்க அகற்றப்பட்டதில் இருந்து இலங்கையில் தொடரும் அரசியல் மேற்தட்டிற்குள்ளான உள் மோதல்களுக்கு மத்தியிலேயே வெளிவந்துள்ளன. நவம்பர் 15 அன்று நடந்த ஐ.தே.க. ஆர்ப்பாட்டமானது விக்கிரமசிங்கவின் பதவி நீக்கத்தை இரத்து செய்து, அவரது கட்சியும் அதன் கூட்டாளிகளும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர் என்பதை சிறிசேன அங்கீகரிக்க வேண்டும் என கோருவதற்காக கூட்டப்பட்டது.
நவம்பர் 15 அன்று, கொழும்பு டெலிகிராப், பேஸ்புக் சிறிசேனவுடன் முரண்பட்ட ஒரு "பிரத்தியேகமான" கட்டுரையை வெளியிட்டது. “16 அரசியல்வாதிகளால் இயக்கப்படும் பக்கங்களைப் பற்றிய இரகசிய தகவலை” வெளியிடுமாறு பேஸ்புக்கை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருப்பதாக அந்தக் கட்டுரை வலியுறுத்தியது.
10 ஐ.தே.க. தலைவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சிறிசேனவின் பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அதேபோல் இராஜபக்ஷ மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் இராஜபக்ஷவும் இந்த கண்காணிப்பில் அடங்கியுள்ளதாக அந்த செய்திப் பக்கம் அறிவித்துள்ளது.
டெலிகிராப்பின் படி, சிறிசேனவின் அலுவலகமானது குறித்த சமூக ஊடகப் பக்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள், அதேபோல் ஐபி முகவரிகள் மற்றும் இடங்கள், இந்த பக்கங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் தொடர்பான தகவல்கள், அவற்றின் வாசகர் எண்ணிக்கை மற்றும் அந்தரங்க விவரங்களையும் கோரியமைக்கு, “தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அக்கறைகளே" காரணம் என மேற்கோள் காட்டியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பொன்றில், பேஸ்புக்கின் அரசாங்க கொள்கை மற்றும் பொது விவகாரங்கள் (தென் ஆசியா) பிரிவின் "சிரேஷ்ட பிரதிநிதி" இடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என அது தெரிவித்துள்ளது. பேஸ்புக் பிரதிநிதி இந்தக் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக டெலிகிராப் அறிவித்தது. உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு இசைவாக, பேஸ்புக்கானது பேச்சு சுதந்திரத்தை கீழறுக்கும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
பேஸ்புக்குக்கு ஐ.தே.க. எழுதிய கடிதமானது இந்த வலதுசாரி பெருவணிகக் கட்சி, "ஜனநாயகம், நல்லாட்சியைப் பாதுகாப்பதிலும் நமது மக்களுக்கான பொருளாதார வளர்ச்சியை ஸ்தாபிப்பதிலும் ஒரு வலுவான வரலாற்று சாதனையை" கொண்டுள்ளதாக போலியாக கூறிக்கொள்கின்றது.
குறிப்பிடத்தக்க வகையில், பேஸ்புக் பாவனையாளர்கள் பற்றிய தகவல்களை "நாட்டில் நீதிமன்றம் ஒன்றில் முறையாக அனுமதிக்கப்படாவிட்டால்" அரசாங்க அதிகாரிகளுடன் பகிரப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், இலங்கை நீதிமன்றில் அல்லது வேறு அரச நிர்வாகங்களால் தேர்வு செய்யப்பட்ட சமூக ஊடகப் பாவனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஐ.தே.க. எதிர்க்கவில்லை என்பதே ஆகும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறையின் போது, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இலங்கையில் பேஸ்புக் மற்றும் பிற ஒன்லைன் செய்தி தளங்களை மூடியது. வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக அரசாங்கம் பொய்யாக கூறிக்கொண்டது.
சிறிசேனவை போலவே, ஐ.தே.க. தலைவர் விக்கிரமசிங்கவும் "கருத்து வெளியிடும் சுதந்திரத்தின்" பாதுகாவலன் அல்ல. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில், அப்போதைய பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, "உலகளாவிய சீர்குலைக்கும் சக்திகள்" இணையம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை, நாடுகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதோடு "தேசிய நலன்களுக்கு" அச்சுறுத்தலாக இருக்கின்றன என அறிவித்தார். குறிப்பாக 2011ல் துனிசியா மற்றும் எகிப்தில் நடந்த வெகுஜன புரட்சிகர இயக்கங்களின் வெடிப்பு பற்றி அவர் சுட்டிக்காட்டினார். (பார்க்க: "இலங்கை பிரதமர் இணைய மற்றும் சமூக ஊடக தணிக்கையை அதிகரிக்க அச்சுறுத்துகிறார்").
சிறிசேன மற்றும் விக்ரமசிங்க மற்றும் அவர்களின் அரசியல் கூட்டாளிகளுக்கும் இடையிலான கன்னைப் பிளவுகள் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு இடையிலான மோதலின் உண்மையான அரசியல் இலக்குகள், இப்போது இலங்கையின் முதலாளித்துவ உயரடுக்கிற்கு எதிரான போராட்டத்தில் குதித்து வரும் உழைக்கும் மக்களும் இளைஞர்களுமே ஆவர்.
மாபெரும் நிறுவனங்களால் பேஸ்புக் தணிக்கை மற்றும் பேச்சு சுதந்திரம் மீது முன்னெடுக்கப்படும் மற்ற தாக்குதல்கள், முதன்மையாக இடதுசாரி மற்றும் சமூக முற்போக்கு வலைத் தளங்களுக்கு எதிரானதாக இருப்பதோடு, உலக சோசலிச வலைத் தளம் இதன் முக்கிய இலக்காக உள்ளது.
நவம்பர் 12 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் அதிகாரபூர்வமான தமிழ்-மொழி பேஸ்புக் பக்கத்தின் இடப்பட்டிருந்த இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை பேஸ்புக் நீக்கியது. வாஷிங்டனின் ஆதரவைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பது பற்றி அந்த தணிக்கை செய்யப்பட்ட கட்டுரை விளக்கியது. உலக சோசலிச வலைத் தள கட்டுரையானது, சமூக ஊடக தளத்தில் "சமூக வரையறைகளை" மீறுவதாக பேஸ்புக் அதற்கு காரணம் கூறியது.
உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியுள்ளபடி, பேஸ்புக்கும் அது ஒத்துழைக்கும் அரசாங்க முகவரமைப்புகளும் "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நோக்கங்களை மேலும் விரிவுபடுத்த, வளர்ந்து வரும் நாடுகளில் இனப் பிளவுகளை சுரண்டிக்கொள்வதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு, சர்வதேச சோசலிசத்திற்கான வளர்ந்து வரும் வாசகர்களை ஒரு தடையாக காண்கின்றன."