Print Version|Feedback
Macron and Facebook announce joint social media censorship plan in France
மக்ரோனும் பேஸ்புக்கும் பிரான்சில் சமூக ஊடக தணிக்கைக்கான கூட்டுத் திட்டத்தை அறிவிக்கின்றனர்
By Alex Lantier
14 November 2018
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்சின் நவ-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானைப் புகழ்ந்துரைத்ததன் மூலம், பிரான்சிலும் அதற்கு அப்பாலும் உழைக்கும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டிவிட்டு ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களுக்குப் பின்னர், திங்களன்று அவர் பிரான்சில் சமூக ஊடக தணிக்கை குறித்து திட்டமிட பேஸ்புக்குடன் சந்திப்புகள் நடத்தினார்.
பாரிஸில் யுனெஸ்கோவால் (UNESCO) ஏற்பாடு செய்யப்பட்ட இணைய ஆளுமைக்கான உத்தியோகபூர்வ பேரவையில் மக்ரோன் பேசுகையில், இணைய பேச்சு சுதந்திர பயன்பாட்டின் காரணமாக உலகம் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக வாதிட்டார். இணையம் ஆரம்பத்தில் ஒரு "அருமையான வாய்ப்பாக" இருந்தது என்றாலும், இப்போது "அது நமது ஜனநாயக சமூகங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது,” என்றார்.
மக்ரோன் "அநாமதேய" இணைய பயன்பாட்டைக் கண்டித்ததுடன், “இணையம் நம்மை ஸ்திரமின்மைப்படுத்துவதற்காக நமது ஜனநாயகங்களுக்குள் சர்வாதிபத்திய ஆட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்று எச்சரித்தார். நெறிமுறைப்படுத்தப்படாத "கலிபோர்னியா இணையம்" எனப்படுவதற்கும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட "சீன இணையத்திற்கும்" இடையே ஒரு மூன்றாவது வழியைக் கண்டறியுமாறு பிரான்சுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதன் விளைவாக, 2019 இன் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு, "இனவாத, யூத-எதிர்ப்புவாத, ஓரினச் சேர்க்கை அல்லது பாலியல்" பேச்சுக்களைத் தணிக்கை செய்வதற்கு பேஸ்புக் பயன்படுத்தும் கருவிகளைப் பிரெஞ்சு அதிகாரிகளும் அணுகும் வகையில், அவர்கள் பேஸ்புக் உடன் ஒரு கூட்டு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர். “இதுதான் முதல்முறை. இது, நான் ஆதரிக்கும் கூட்டுறவு அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் விதமான மிகவும் புதிய ஆராய்ச்சி முறை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இத்திட்டம் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் அடிப்படை தாக்குதலாகும். மக்ரோனின் இணைய தணிக்கை நடவடிக்கையின் இலக்கில் இருப்பது வெளிநாட்டு சர்வாதிபத்திய எதிரிகள் முன்னிறுத்தும் அச்சுறுத்தலோ அல்லது அதிவலது வெறுப்பு பேச்சுக்களோ இல்லை, மாறாக பொதுவாக கூறுவதானால் உள்நாட்டில் இடதுசாரி அரசியல் எதிர்ப்பும், குறிப்பாக கூறுவதானால் உலக சோசலிச வலைத் தளமும் ஆகும்.
மக்ரோன் முன்நிறுத்திக் காட்டுவது ஆரம்பம் முதலாக இறுதி வரையில் பொய் மூட்டையாக உள்ளதுடன், பொலிஸ்-அரசு தணிக்கை முறையைக் கட்டமைப்பதற்கான போலி-ஜனநாயக மூடிமறைப்பை வழங்க நோக்கம் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிபோக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் வெகுவாக நடந்து வருவதுடன், அங்கே உள்ள பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைய தணிக்கை மேற்கொள்ளும் ஆயிரக் கணக்கான பணியாளர்களைக் கொண்டுள்ளன. பேச்சு சுதந்திரத்தின் ஒரு மட்டுமீறிய முன்மாதிரியாக மக்ரோன் குறிப்பிட்ட "கலிபோர்னியா இணையம்", உண்மையில், பெருந்திரளான மக்கள் மீது தணிக்கை மேற்கொண்டு வரும் விரல்விட்டு எண்ணக்கூடிய சக்தி வாய்ந்த பெருநிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றது.
மக்ரோன் குறிப்பிடுகையில், பேஸ்புக், "வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அத்துமீறிய பேச்சுக்களுக்கு எதிரான போராட்டத்தில் துல்லியமான மற்றும் திடமான கூட்டு பரிந்துரைகளைச் செய்ய, பேஸ்புக் வல்லுனர்களுடன் இணைந்து செயல்பட பணிக்கப்பட்ட பிரெஞ்சு நெறிமுறையாளர்களின் ஒரு குழுவை விரைவில் ஏற்பாடு செய்யும்,” என்றார்.
பேஸ்புக்கிற்காக அல்லது பிரெஞ்சு அரசாங்கத்திற்காக செயல்பட்டு வருகின்ற டஜன் கணக்கான அநாமதேய நபர்கள், சமூக ஊடகங்களில் இருந்து அவர்கள் எந்த தகவல்களை அழிக்கிறார்கள் என்பதை அறிவிக்காமலேயே அல்லது பொது கண்காணிப்பு இல்லாமலேயே, கண்முன்னாலேயே இந்த தணிக்கை திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறார்கள். ஒருவருடைய கருத்துக்கள் “வெறுப்பைத் தூண்டுவதாக, அத்துமீறுவதாக" பொருள்கொள்ளலாம் என்று வாதிட்டு அவற்றை நீக்குவதற்கான அவர்களின் அதிகாரம், நடைமுறையளவில் எந்தவொரு அரசியல் கருத்தையும் அழிப்பதற்கு வழங்கப்பட்ட உரிமத்திற்கு ஒத்திருக்கிறது. இது, கருத்து சுதந்திரத்தின் மீதான ஓர் அப்பட்டமான தாக்குதலை உள்ளடக்கி உள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி கூகுளையும் தொடர்பு கொண்டிருப்பதாகவும், இணைய தேடல் முடிவுகளைத் தணிக்கை செய்ய கூகுள் பயன்படுத்தும் அதேபோன்ற கருவிகளைப் பெறுவதற்கு கோரப்பட்டிருப்பதாகவும் Le Monde அறிவித்தது. பிரெஞ்சு அரசு நிராகரிக்கும் கருத்துக்களை நீக்குவதற்கு "நிறுவனங்கள் நன்னம்பிக்கையோடு செயல்பட்டு அவசியமான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா இல்லையா என்பதை காட்ட" தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இதுவொரு வழியாகும் என்று எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது. கூகுள் இதுவரையில் பிரெஞ்சு அரசு தணிக்கையாளர்களுடன் ஒரு கூட்டுறவை அபிவிருத்தி செய்ய மறுத்துள்ளது.
ஆனால் மக்ரோன் விடாப்பிடியாக இருந்தார். “எதிர்காலத்தில் நிச்சயமாக அதிக நெறிமுறைப்படுத்தல் இருக்கும்,” என்று திங்கட்கிழமை பேரவையில் அறிவித்த அவர், தொடர்ந்து குறிப்பிடுகையில், “வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அல்லது பேச்சு சுதந்திரம் குறித்த கோட்பாடுகளை தீர்மானிப்பது பெரிய நிறுவனங்களின் வேலை இல்லை... ஆனால் (பலமான சட்டபூர்வ பொறுப்புக்களுடன்) கருத்துக்களை எழுதுபவர்களுக்கும் மற்றும் (யூடியூப் அல்லது பேஸ்புக் போன்ற) கருத்துக்களைப் பதிப்பிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே அவை கருப்பு-வெள்ளையாக இருகூறாக பிரிவதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். இந்த பெரிய நிறுவனங்கள் எல்லா பொறுப்புக்களில் இருந்தும் விலகிக் கொள்ளக் கூடாது. இந்த களங்கள் மீளபலப்படுத்தப்பட்ட கடமைப்பாடுகளை ஏற்க வேண்டும், ஏனென்றால் அவை தான் கருத்துக்களைப் பரப்புபவையாக உள்ளன,” என்றார்.
1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தின் போது வேலைநிறுத்தம் செய்த பெருந்திரளான கம்யூனிஸ்ட் தொழிலாளர்களைக் கிரெம்ளினின் கருவிகள் என்று கண்டனம் செய்த சார்லஸ் டு கோலை எதிரொலிக்கும் விதத்தில், வெளிநாட்டு சர்வாதிபத்திய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தணிக்கையைக் கொண்டு செல்லும் முயற்சி என்பது ஓர் அரசியல் மோசடியாகும். இனப்படுகொலை செய்த யூத-எதிர்ப்புவாதி பெத்தானை சமீபத்தில் புகழ்ந்துரைத்திருந்த மக்ரோன், இனவாதத்திற்கு எதிராக போராடுவதன் மீதிருக்கும் ஆழ்ந்த அக்கறையால் அவரது தணிக்கை நடவடிக்கைகள் உந்தப்பட்டு இருப்பதாக சித்தரிக்க முயலும் அளவுக்கு இருக்கிறது அவரது முயற்சிகள்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும், பெருந்திரளான மக்கள் மீது பேஸ்புக் மற்றும் கூகுள் கடந்த ஆண்டு தணிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கின, தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பே இதன் இலக்கில் உள்ளது.
கடந்த ஆண்டு இணைய தணிக்கைக்கு அழைப்புவிடுத்த ஒரு நாடாளுமன்ற காங்கிரஸ் விவாத அமர்வின் போது, முன்னாள் FBI அதிகாரி Clint Watts அறிவித்தார்: “உள்நாட்டு போர்கள் துப்பாக்கிச்சூடுகளுடன் தொடங்குவதில்லை, அவை வார்த்தைகளில் இருந்து தொடங்குகின்றன. அமெரிக்காவில் அதன் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. விரைவில் வன்முறையான மோதல்களுக்கு இட்டுச் சென்று, எளிதில் பிளவுபட்ட அமெரிக்க அரசுகளாக நம்மை மாற்றக்கூடிய தகவல் கிளர்ச்சிகளை அடக்குவற்கு இப்போது நாம் அனைவரும் சமூக ஊடக போர்க்களத்தில் செயல்பட வேண்டும். ... சமூக ஊடக பயனர்கள் மீது பொழியப்படும் பொய் தகவல் குண்டுகளை நிறுத்துவது என்பது, போலிக் கட்டுக்கதைகளை வினியோகிக்கும் அமைப்புகளை வாய்மூடச் செய்யும் போது மட்டுமே செய்யப்பட முடியும்...” என்றார்.
தணிக்கையானது இடதுசாரி எதிர்ப்பை இலக்கு வைத்துள்ளது என்பது பிரான்சின் உத்தியோகபூர்வ வட்டாரங்களுக்குப் பரவலாக தெரியும். ஜனவரி 2018 இல், பிரபல மாதயிதழ் Le Monde diplomatique இல் பியர் ரிம்பேர் எழுதுகையில் தேடல் முடிவுகளில் ரஷ்ய அரசு ஊடகங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்கான கூகுள் தலைமை நிர்வாக செயலதிகாரி எரிக் ஷிமித்தின் சூளுரையைக் குறித்து எழுதினார். போர்-எதிர்ப்பு வலைத் தளங்களின் வாசகர்கள் மீதான இந்த தணிக்கையின் தாக்கம் குறித்த WSWS இன் பகுப்பாய்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், இணைய தணிக்கையானது “மக்களுக்கு இன்னும் சிறப்பாக தகவல் அளிக்கிறோம் என்ற பெயரில் பன்முகத்தன்மையைக் கொன்று" வருகிறதா என வினவினார்.
அவர் எழுதினார்: “சக்கைகளிலிருந்து கோதுமையை எவ்வாறு நீக்குவது? 'கூகுள் அதன் தேடல் பொறியில் செய்த மாற்றங்கள் "அத்துமீறிய" தளங்களை அணுகுவதைத் தடுக்கும், அதேவேளையில் அது இன்னும் கூடுதலாக "அதிகாரபூர்வ கருத்துக்களை" மேற்புறத்திற்குக் கொண்டு வர செயல்படும் என்று அந்நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவர் பென் கோம்ஸ் ஏப்ரல் 25 இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டதை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆண்ட்ரே டேமன் மற்றும் டேவிட் நோர்த் எழுதினர் (wsws.org, ஆகஸ்ட் 2, 2017). ஓர் இணைய ஆய்வு நிறுவனத்தைப் பயன்படுத்தி, அந்த ட்ரொட்ஸ்கிச வலைத் தளம் புதிய மென்பொருள் வழிமுறை அல்காரிதங்களின் பாதிப்பை அளவிட்டது, அந்த மென்பொருள் வழிமுறைகள், உள்ளபடியே, செல்வாக்கான ஊடகங்களை நம்பத்தகுந்தவையாகவும், மாற்று பத்திரிகைகளை சந்தேகத்திற்குரியவையாகவும் பார்க்கின்றன. 'கடந்த மூன்று மாதங்களில் சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களில் பாரியளவிலான வாசகர்கள் இழப்பானது, கூகுள் தேடல்கள் மூலமாக வரும் பயனர்களில் மொத்தமாக 45 சதவீதம் வீழ்ச்சியால் உண்டாக்கப்பட்டது.'”
இந்த தணிக்கை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்செயலாகவோ அல்லது, திங்களன்று மக்ரோன் அவர் பேஸ்புக் தணிக்கை திட்டத்தில் அறிவித்தவாறு, வேறுவிதத்திலோ, “சமூக தரமுறைகளை" மீறியதாக கூறி பேஸ்புக் சமூக ஊடகத்திலிருந்து ஒரு WSWS கட்டுரையை நீக்கியது.
மக்ரோனின் செல்வாக்கு விகிதம் வரலாற்று வீழ்ச்சியாக 21 சதவீதத்திற்கு சரிந்துள்ள நிலையில் அவர் அவரது தணிக்கை திட்டத்தைத் தொடங்குகிறார். "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என அவர் தொழிலாள வர்க்கத்தால் கடிந்து கொள்ளப்படுகின்ற நிலையில், முன்மொழியப்பட்ட பிற்போக்கு எரிவாயு வரி உயர்வை எதிர்த்து ட்ரக் மற்றும் கார் ஓட்டுனர்கள் நவம்பர் 17 இல் பிரெஞ்சு நகரங்களில் ஒரு திட்டமிட்ட பாரிய போராட்டம் மற்றும் மறியலை முகங்கொடுத்து, அவரது அரசாங்கம் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சும் ஐரோப்பாவும் ஒரு புரட்சிகரமான வெடிப்பின் விளிம்பில் உள்ளன.
இத்தகைய நிலைமைகளின் கீழ், ஊடகங்களின் பல பிரிவுகள் மக்ரோனுக்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடுகளை அரசு தணிக்கை செய்ய வேண்டுமென கோரி வருகின்றன. ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையில், La Voix du Nord, மக்ரோன் குறித்த அதன் செய்திகளுக்கு வரும் வாசகர்களின் இணைய கருத்துக்களை அது தணிக்கை செய்து வருவதாக பெருமைபீற்றி, அதன் சொந்த வாசகர்களைக் கண்டித்தது.
அது எழுதியது, “இவ்விதத்தில், முதலாம் உலக போர் நினைவு கொண்டாட்டத்திற்கான அவரின் ஒவ்வொரு பயணம் குறித்த ஒவ்வொரு கட்டுரையின் கீழ்,” “நீங்கள் 'மக்களை அலட்சியப்படுத்துபவர்' என்றும் 'பணக்காரர்களுக்கு மட்டுமே உதவுபவர்' என்றும் கூறும் ஜனாதிபதிக்கு எதிரான டஜன் கணக்கான கருத்துக்கள் மற்றும் அவமரியாதைகளை நாங்கள் அழித்துள்ளோம். ... ஜனாதிபதி குறித்து கருத்துரைகளில் வரும் வன்முறை மட்டம் முன்னொருபோதும் இல்லாதளவில் உள்ளது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்களின் சமூக வலையமைப்புகளில் நூற்றுக் கணக்கான கருத்துரைகளைத் தூண்டுகிறது, வெறுப்பு மற்றும் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறது. பிறிஜிட் மக்ரோனின் மூத்த சகோதரரின் மரணம் குறித்த கட்டுரை பிரசுரத்தைத் தொடர்ந்து வந்த வன்முறையான பாலியல்ரீதியான கருத்துரைகளைக் குறிப்பாக மறக்க முடியாது.”
மக்ரோன் மற்றும் அதுபோன்ற அரசாங்கங்கள் மீதான விமர்சனங்களானது, அபாயகரமான வெளிநாட்டு சர்வாதிபத்திய குளறுபடிகளின் வெளிப்பாடு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் நியாயமான சமூக கோபத்தின் வெளிப்பாடுகளாகும். சமூக கோபம் மற்றும் வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதற்கு, தணிக்கை மற்றும் அவசரகால நிலை சட்டத்தை பிரெஞ்சு அரசு கருவிகளாக பயன்படுத்துவதைப் பார்க்கையில், மக்ரோனின் இராணுவ கதாநாயகன் பிலிப் பெத்தான் மேற்பார்வையில் இருந்த ஒரு வகையான ஆட்சிக்குத் திரும்பும் பாதையில் அது பயணித்துக் கொண்டிருப்பது வெளிப்படுகின்றது.