Print Version|Feedback
US has spent almost $6 trillion on wars since 2001
2001 ல் இருந்து கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா போர்களுக்காக செலவிட்டுள்ளது
By Trévon Austin
17 November 2018
பிரவுன் பல்கலைக்கழக, சர்வதேச மற்றும் பொது விவகாரத்திற்கான வாட்சன் கல்வி நிறுவனம் (Watson Institute of International & Public Affairs at Brown University) வெளியிட்ட ஒரு அறிக்கை, “பயங்கரவாதத்தின் மீதான போர்” குறித்து செலவிடப்பட்ட மொத்த தொகை , முன்பு கூறபட்டதை விட மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்த ஆய்வின் ஆசிரியரான, பேராசிரியர் நேட்டா சி. க்ராஃபோர்ட், 2019 ஆம் நிதி ஆண்டின் இறுதிக்குள்ளாக 9/11 க்குப் பிந்தைய போர்களுக்காக கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்கள் தொகையை செலவிடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இராணுவம், போர்களுக்காக 1.5 டிரில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது என பாதுகாப்புத் துறை (Department of Defense - DoD) மார்ச்சில் வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், பிரவுன் பல்கலைக்கழக அறிக்கை, ஏனைய கூட்டாட்சித் துறைகள் முழுவதிலுமான செலவின விபரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள DoD இன் புள்ளிவிபரங்கள் தவறிவிட்ட நிலையில், அதனை ஒரு வேண்டுமென்றே குறைத்துக்காட்டும் மதிப்பீடாக குறிப்பிடுகிறது. அத்துடன், இந்த புதிய மதிப்பீடு, உள்நாட்டு பாதுகாப்புத்துறை (Department of Homeland Security - DHS) செலவுகள், வரவு செலவுத் திட்ட அதிகரிப்புக்கள், மூத்த படையினருக்கான மருத்துவச் செலவுகள் போன்றவற்றை மட்டுமல்லாமல், போர்களுக்கான செலவினங்களுக்கான கடன்கள் மீதான வட்டியையும் உள்ளடக்கியதாக உள்ளது.
மறைமுக போர் செலவினங்கள் உட்பட, 2001 முதல் போர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4.6 டிரில்லியன் டாலர் அளவினதாக இருக்கும். மேலும் இந்த அறிக்கை, 9/11 க்குப் பிந்தைய மூத்த படையினரின் எதிர்கால பாதுகாப்பிற்காக 2059 ஆம் ஆண்டு வரையிலுமாக சுமார் 1 டிரில்லியன் டாலரை செலவிட அரசாங்கம் கடமைப்பட்டிருக்கும் எனவும் மதிப்பிடுகிறது. அதாவது, மொத்த தொகை 5.993 டிரில்லியன் டாலரை நெருங்கியதாக இருக்கும் என்பதாகும்.
அமெரிக்கா அதன் போர் மற்றும் தலையீடுகளை பெருமளவில் தொடர்வதை 2023 இல் நிறுத்திக் கொண்டாலும் கூட, இன்னும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அதற்கான கூடுதல் செலவினத் தொகை 808 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது. அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைகளை தொடரும் காலம் வரை மூத்த படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்ற காரணத்தால், தொகுக்கப்பட்ட செலவுகள் 6.7 டிரில்லியன் டாலரை விஞ்சி நிற்கும் எனவும் தெரிவிக்கிறது.
எங்குபோய் முடியும் என்று தெரியாத நிலையில், அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களுக்கான நிதி மற்றும் மனித இழப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா போர்களுக்காக செலவிடுவதில் பற்றாக்குறையை கொண்டிருக்கும் நிலையில் கடன் பெற்று அதற்காக நிதியளிக்கும் நிலையில் இருப்பதாக ஒரு குறிப்பிட்ட கவலையையும் சமீபத்திய ஆய்வு உருவாக்கியுள்ளது. 2011 இல், போர்களுக்கான செலவின ஒதுக்கீடுகள் 1.5 டிரில்லியன் டாலர் என இருந்திருக்குமானால், அதுவே வட்டியுடன் சேர்ந்து 7.9 டிரில்லியன் டாலராக பெருகி நிற்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த மதிப்பீட்டில் இருந்து போர் செலவினங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டிருந்தது என்பதுடன், பெருமளவில் கடன்களும் சேர்ந்துவிட்டன, எனவே இது, ஒரு வேண்டுமென்றே குறைத்துக்காட்டும் மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியும்.
9/11 முதலாக போர் தொடர்பான செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக பென்டகன் கூறியதை விடவும் மூன்று மடங்கு அதிகமானதாக, பெரியளவினதாக 5.9 டிரில்லியன் டாலர் மதிப்பீடு உள்ளது. DoD மதிப்பீடு செய்த 1.7 டிரில்லியன் டாலர் என்பது 2018 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் செலவு செய்யப்பட்டுவிடும், ஆனால் இந்த குறைந்த மதிப்பீடு போர் தொடர்பான ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டம் மற்றும் செவினங்களில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியதாகும்.
காங்கிரஸின் செலவின ஒதுக்கீடு பென்டகனின் மதிப்பீட்டை உள்ளடக்கவில்லை. ஏனைய போர் தொடர்பான செலவினங்களில், குறிப்பாக “வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் (overseas contingency operations - OCO)” போன்றவற்றில் செலவின அதிகரிப்பை காங்கிரஸ் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகளை OCO செலவு நேரடியாக ஆதரிக்கிறது. DoD உடன் சேர்ந்து, 2001 முதல், OCO செலவுகளில் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.
இன்னும் கூடுதலாக அளவிட முடியாத அளவிற்கு தொகை செலவிடப்பட்டுள்ளது, ஊட்டச்சத்து குறைபாடு, சேதமடைந்த உள்கட்டமைப்பு, மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற மறைமுக விளைவுகளால் பலமுறை நிகழ்ந்த அதிகபட்ச நிதி இழப்புக்களுடன் 370,000 உயிர்களின் நேரடி இழப்பும் போரில் நிகழ்ந்ததாக இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. சுமார் 200,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பேராசிரியர் க்ராஃபோர்ட், இன்னும் அதிகமானோர் பலியாகியிருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கின் காரணமாக இந்த மதிப்பீடுகள் அதை குறைத்துக் காட்டுவதாக தனது தனிப்பட்ட கருத்தைக் குறிப்பிடுகிறார்.
மேலும், “அவர்கள் கேட்கும் நிதி எந்த அளவினதாக இருந்தாலும், செலவைப் பற்றி கவலையில்லை, அத்துடன் இந்தச் செலவு தகுதி வாய்ந்ததா அல்லது விவேகமானதா என்பதைப் பொறுத்ததாகவும் அல்லாமல் பென்டகன் செலவு செய்யும் திறனுடன் இருப்பதாக மட்டும் கருதுவதாகவே “காங்கிரஸின்” மனப்பாங்கு கிட்டத்தட்ட உள்ளது” என்றும் க்ராஃபோர்ட் குறிப்பிடுகிறார்.
“பயங்கரவாதத்தின் மீதான போரில்” இருந்து வரும் மூத்த படையினரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும். மூத்த படையினர் விவகாரத் துறை (Department of Veteran Affairs), 2039 ல், மூத்த படையினரின் எண்ணிக்கை 4.3 மில்லியனாக உயரும் என்று மதிப்பிடுகிறது. அத்துடன், போரில் இருந்து கடுமையான காயங்களுடனோ அல்லது மனநிலை பாதிப்புக்களுடனோ பலரும் திரும்புவார்கள் என்ற நிலையில், நிதி தேவையும் சமுதாய எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மத்திய கிழக்குப் போர்கள், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்களது நாடுகளை விட்டு தப்பியோடும் நிலைக்கு தள்ளியதான மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. செலவழிக்கப்பட்ட அசாதாரண அளவிலான பெரும் தொகையுடன் சேர்த்து, வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் நடத்திய போர்கள் முதலாளித்துவத்தின் நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தொடர்ந்து முன்னேறுவதற்கு போரைத் தவிர வேறு வழியில்லை என்றே ஆளும் வர்க்கம் கருதுகிறது, ஆனால், அதன் விளைவு உழைக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரழிவுகரமானதாக இருக்கும் என்பதே உண்மை.