Print Version|Feedback
UN says millions in Britain deliberately plunged into “great misery”
பிரிட்டனில் மில்லியன் கணக்கானவர்கள் திட்டமிட்டு "மிகப்பெரும் வறுமையில்" மூழ்கடிக்கப்படுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது
By Robert Stevens
21 November 2018
ஐக்கிய நாடுகள் சபை செய்தியாளர் பிலிப் அல்ஸ்டனின் பிரிட்டனில் வறுமை மற்றும் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை, தொழிலாள வர்க்கத்தை நாசப்படுத்தி வரும் சமூக பேரழிவின் அசாதாரண எடுத்துக்காட்டாக உள்ளது.
பல ஆண்டுகளாக, இந்த சிறப்பு செய்தியாளர் "அதீத வறுமை" தொற்றுநோய் போல பரவியுள்ள சீனா, கானா மற்றும் மொரித்தேனியா போன்ற "அபிவிருத்தி அடைந்து வரும்" நாடுகளைக் குறித்து மட்டுமே ஆய்வு செய்து வந்தார்.
ஆனால் அல்ஸ்டன் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை நோக்கி அவர் கவனத்தைத் திருப்ப நிர்பந்திக்கும் அளவுக்கு, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளது. அவர் 2017 இல் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார், அங்கே அவர் வறுமை மற்றும் சமத்துவமின்மை மட்டங்களை எதிர்கொண்ட போது, அதிர்ந்து போனார்.
இலண்டன், ஆக்ஸ்போர்ட், நியூகாஸ்டல், கார்டிஃப், கிளாஸ்கோவ் மற்றும் பெல்பாஸ்ட் உட்பட ஒன்பது நகரங்களை உள்ளடக்கி, 24 பக்க இங்கிலாந்து அறிக்கை ஒன்றை அல்ஸ்டன் இப்போது பிரசுரித்துள்ளார்.
கடந்த வாரம் அவரது கண்டுபிடிப்புகளைக் குறித்து இலண்டன் பத்திரிகையாளர் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசுகையில், “மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர், 14 மில்லியன் பேர், வறுமையில் வாழ்கின்றனர். நான்கு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் 50 சதவீதத்திற்கும் கீழே உள்ளனர். ஒன்றரை மில்லியன் பேர் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளனர்,” என்ற உண்மையை, அவர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமான "பிரிட்டனின் மிகப் பெரியளவிலான செல்வவளத்திற்கு" நேரெதிராக முன்வைக்க விரும்பியதாக தெரிவித்தார்.
குழந்தை வறுமை விகிதங்கள் "மலைப்பூட்டுகின்றன", “அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்குமென அனுமானிக்கப்படுகின்றன.”
“துன்பப்படுவர்களுக்கு காட்டப்படும் பிரிட்டிஷ் கருணையானது, தண்டிக்கும் விதமான, ஈவிரக்கமற்ற, பெரும்பாலும் கடுமையான அணுகுமுறையைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ள" நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் "மிகப்பெரும் வறுமையில்" அவதிப்பட்டு வருகிறார்கள்.
அங்கே "இலவச உணவு வினியோக கூடங்களும் மற்றும் அவற்றிற்கு வெளியே காத்திருக்கும் வரிசைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன, மக்கள் வீதிகளில் கரடுமுரடான தரைகளில் தூங்குகிறார்கள், வீடற்றநிலையின் அதிகரிப்பு, தற்கொலை தடுப்புக்காக அரசு ஓர் அமைச்சரை நியமிக்க இட்டுச் சென்றுள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை உணர்வு, முன்னர் கேட்கப்பட்டிராத மட்டத்திலான தனிமை மற்றும் அன்னியப்படடிருக்கும் மட்டத்தை பற்றி சிவில் சமூகம் அறிவிக்கவேண்டிய நிலைமை நிலவுகிறது. ...
“இருப்பத்தோராம் நூற்றாண்டில் ஏறக்குறைய இரண்டு குழந்தைகளில் ஒன்று வறுமையில் உள்ளது என்பது அவமானம் மட்டுமல்ல, மாறாக ஒரு சமூக பேரிடர் மற்றும் ஒரு பொருளாதார சீரழிவு, அனைத்தும் ஒன்றாக ஒன்று திரள்கிறது.”
தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்தியமை ஒரு திட்டமிட்ட கொள்கை என்பதே அல்ஸ்டன் வெளிப்படுத்தியிருப்பதில் மிகவும் திட்டவட்டமாக வெளிப்படுவதாக உள்ளது. சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் என்பது வெறுமனே பொருளாதார சூழல்களால் தீர்மானிக்கப்படவில்லை மாறாக "தீவிர சமூக மீள்வடிவமைப்புக்கான" ஓர் அரசியல் திட்டநிரலால் உந்தப்படுகிறது என்று அல்ஸ்டன் அறிவிக்கிறார்.
“அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பிரிட்டிஷ் மக்களுக்கு குறைந்தபட்ச அளவில் நியாயம் மற்றும் சமூக நீதி இரண்டையும் வழங்கும் முறைகளில், அதுவும் குறிப்பாக அதை கீழ் மட்டத்தில் வைத்திருக்கும் அளவில், புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. போருக்குப் பிந்தைய பெவெரிட்ஜ் சமூக உடன்படிக்கையின் [நலன்புரி அரசு] முக்கிய அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன,” என்றவர் முடிக்கிறார்.
இங்கிலாந்தின் உள்ளாட்சி அரசாங்கங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய அரசின் நிதியுதவிகளில் பாதியளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் தேசிய கணக்கு தணிக்கை அலுவலக புள்ளிவிபரங்களை அல்ஸ்டன் காட்டுகிறார். இதன் விளைவாக, 2010 மற்றும் 2018 க்கு இடையே 500 க்கும் அதிகமான குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களும், 2010 மற்றும் 2016 க்கு இடையே 340 க்கும் அதிகமான நூலகங்களும் மூடப்பட்டன.
இதன் விளைவாக உண்டான சமூக வறுமை மட்டம் திகைப்பூட்டுகிறது. “இங்கிலாந்தில், வீடற்றநிலை 2010 க்குப் பின்னர் 60% வரை அதிகரித்துள்ளது, ஆங்காங்கே படுத்துறங்குவது 134 சதவீதம் அதிகரித்துள்ளது. சமூக வீட்டுவசதி திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் 1.2 மில்லியன் பேர் காத்திருக்கின்றனர், ஆனால் கடந்த ஆண்டு 6,000 க்கும் குறைவான வீடுகளே கட்டப்பட்டன.
அல்ஸ்டன் எழுதுகிறார், “எனது விஜயத்தின் போது, தங்களின் அடுத்த வேளை உணவுக்காக இலவச உணவு வினியோக கூடங்கள் மற்றும் அறக்கட்டளைகளைச் சார்ந்திருக்கும் மக்களுடன் நான் பேசினேன். இவர்கள் நண்பர்களின் சாய்கதிரைகளில் படுக்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு வீடில்லை, அவர்களின் குழந்தைகள் படுத்துறங்குவதற்கும் ஒரு பாதுகாப்பான இடமில்லை.”
இலவச உணவு வினியோக கூடங்களின் பயன்பாடு “2012 க்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மடங்கு அதிகரித்துள்ளது... இப்போது பிரிட்டனில் சுமார் 2,000 உணவு வினியோக கூடங்கள் உள்ளன, இவை நிதியியல் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது வெறும் 29 ஆக இருந்ததில் இருந்து அதிகரித்துள்ளன.”
உழைக்கும் ஏழைகள் கூட்டம்கூட்டமாக உணவு வினியோக கூடங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். பல உணவு வினியோக கூடங்களை நடத்தும் ட்ரூஸ்செல் அறக்கட்டளை அல்ஸ்டனுக்கு கூறுகையில், “அவர்களின் உணவு வினியோக கூடங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆறில் ஒருவர் பணியாற்றுபவராக உள்ளார். ஒரு கிறிஸ்துவ மதகுரு கூறுகையில், 'எங்களின் உணவு வினியோக கூடத்தைப் பயன்படுத்தி வரும் மக்களில் பெரும்பான்மையினர் வேலை இருப்பவர்கள் தான். ... செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களும் உணவு வினியோக கூடங்களை அணுகுகிறார்கள்.'”
இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் கீழ்நோக்கி செல்லும் நிலையில் உள்ளார்கள்: “ஒரு சமூக பாதுகாப்பு வலையமைப்பு என்பது ஏற்கனவே வறுமையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. ... ஒவ்வொரு சம்பளத்தையும் எதிர்நோக்கி வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கமானதாக இருக்கின்றது. பிரிட்டனில் 2.5 மில்லியன் பேர் வறுமை கோட்டுக்கு மேலே 10 சதவீதத்திற்கு மிகாத வருவாய்களில் உயிர்பிழைக்கின்றனர். இவ்விதத்தில் அவர்களின் சொந்த தவறினால் வறுமைக்குள் விழாமல் இருப்பதிலிருந்து ஒரு நெருக்கடிக்கு சற்று விலகியே உள்ளனர்.”
அல்ஸ்டனின் அறிக்கையின் குறிப்பிடத்தக்க அளவிலான பகுதி, தண்டிக்கும் விதமான அனைவருக்குமான கடன் வழங்கு முறை (Universal Credit-UC) திணித்த பாதிப்புகளைக் குறித்து குறிப்பிடுகிறது, இதை அரசாங்கம் இந்த நாடாளுமன்ற அமர்வின் போது தேசியளவில் கொண்டு செல்ல முயன்று வருகிறது. அவர் குறிப்பிடுகிறார்: “அனைவருக்குமான கடன் முறையை விட அதிகமாக சமூக செலவினக் குறைப்புகளை ஊக்குவிக்கும்" “வேறெந்தவொரு திட்டமும் இல்லை.” அரசாங்கம் "சலுகைகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான முறை உள்ளடங்கி இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது" என்பதே அனைவருக்குமான கடன் வழங்கு முறை இன் நகர்வாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக இணையவழி நிகழ்முறையாக இருந்தாலும் கூட, பலரால் அனைவருக்குமான கடன் வழங்கு முறையை கோருவது சாத்தியமில்லை. "டிஜிட்டல் தர வழிமுறை" என்பது பலன் கோருபவர்களுக்கு கடுமையான வழிமுறைகளை மட்டும் உள்ளடக்கி உள்ளது என்பது மட்டுமல்ல, அனைவருக்கும் கடன் முறை "கடன் கோரி வெற்றிகரமாக விண்ணப்பம் பதிவு செய்வதில் இருந்து மற்றும் அவர்கள் நலன்களைப் பெறும் வரையில் இதற்கிடையே ஐந்து வார இடைவெளி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த "காத்திருப்பு காலம்,” நடைமுறையில் இது 12 வாரங்கள் வரை எடுக்கின்ற நிலையில், ஏற்கனவே நெருக்கடியில் இருப்பவர்களை உணவோ அல்லது வெப்பமூட்டலையோ தியாகம் செய்யக்கோரி, கடன் செலுத்தவியலா நிலைக்கோ, வாடகை நிலுவையில் நிறுத்தவோ, தீவிர கடுமையான நிலைக்கோ தள்ளுகிறது என்று ஆய்வு அறிவுறுத்துகிறது.”
“சிறிய விதிமீறலாக இருந்தாலும் கடுமையான தடையாணைகள் திணிக்கப்பட்டிருப்பது,” அனைவருக்குமான கடன் வழங்கு திட்டத்தின் (UC) மையத்தில் உள்ளது. “இந்த தடையாணைகள் சிலவற்றின் கடுமையான மற்றும் எதேச்சதிகார தன்மையையும், அத்துடன் ஒரு சில வாரகால அல்லது மாத காலங்களில் நலன்களது முறையை முற்றிலுமாக மூடுவதில் போய் முடிந்த பேரழிவுகரமான விளைவுகளையும் சித்தரிக்க ... நம்பவியலாத அளவுக்கு முடிவில்லா ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த முறை வளர்ந்து பழையதாக ஆகும்போது, சில தண்டனைகள் விரைவில் ஆண்டுக் கணக்கில் கணக்கிடப்பட உள்ளன.”
இத்திட்டத்தை வெளியிடுவதற்கான "அவர்களின் தயாரிப்புகள் குறித்து" உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் தன்னார்வத்துறை அதிகாரிகளுடன் அல்ஸ்டன் நடத்திய கலந்துரையாடல்களை நினைவுகூரும் அளவுக்கு இந்த அனைவருக்குமான கடன் வழங்கு திட்டம் மிகவும் கொடூரமானதாக உள்ளது. “அவர்கள் வரவிருக்கும் இயற்கை சீற்றம் அல்லது மருத்துவ தொற்றுநோயை எதிர்பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்பது எனக்கு மலைப்பூட்டியது. ஒரு உதவித் திட்டம் என்று கூறப்படும் ஒன்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அவர்கள் குறிப்பிடத்தக்களவில் செலவும் மற்றும் ஆற்றலும் செலவிட்டுள்ளனர்.”
அல்ஸ்டன் எழுதுகிறார், “ஒரு வலைப்பக்கம் மற்றும் ஒரு மென்பொருள் வழிமுறையின் பின்னால், போருக்குப் பிந்தைய பிரிட்டிஷ் நலன்புரி அரசு படிப்படியாக காணாமல் போவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ... பிரிட்டனில் பலவீனமானோரின் மனித உரிமைகளின் மீதான தாக்குதல் எவ்வளவு பாரியளவிலானதாக இருக்கின்றது.”
ஒரு சமூக உடன்படிக்கை இல்லையென்றால், வாழ்க்கை "அந்தரத்தில் தொங்குவதாக, வறுமை, அருவருப்பு, கொடூரம், மற்றும் குறுகியதாக" இருக்கும் என்று தத்துவவியலாளர் தோமஸ் ஹோப்ஸின் அறிக்கை மீது அவர் கவனம் கொண்டு சென்றார்.
நலன்புரி அரசு வழிவகைகள் இருப்பதற்கு முந்தைய சகாப்தத்திற்கு, காலத்தை தசாப்தங்களுக்கு பின்னோக்கி திருப்புவது, ஒரு சமூக எதிர்தாக்குதலைத் தூண்டும் என்று அல்ஸ்டன் எச்சரிக்கிறார். “பணவீக்கம், நிஜமான ஊதியங்கள், மற்றும் நுகர்வு விலைகள் ஆகியவற்றின் விளைவுகளோடு, பிரிட்டன் வெளியேறுவதிலிருந்து பிரிட்டன் பொருளாதாரம் மோசமடையும் என்பதை ஏறத்தாழ எல்லா ஆய்வுகளும் எடுத்துக்காட்டுகின்றன.”
தற்போதைய கொள்கைகள் “குறைந்த வருவாய் உழைக்கும் மக்கள் மற்றும் வறுமையில் வாழும் ஏனையவர்களை நோக்கி பேணப்பட்டால்" ... இது குறிப்பிடத்தக்க அளவில் மக்களின் அதிருப்திக்கும், கூடுதல் பிளவுக்கும் மற்றும் ஸ்திரமின்மைக்குமே கூட இட்டுச் செல்லும்.”
அல்ஸ்டன் Channel Four செய்திகளுக்குப் பேசுகையில், அரசாங்க பிரமுகர்கள் யாருடன் அவர் உரையாற்றினாரோ அவர்கள் தங்களின் கொள்கைகள் ஏற்படுத்தி உள்ள நாசங்களைக் குறித்து "பெரிதும் கவலையற்று இருந்ததாகவும்" மற்றும் "மறுத்ததாகவும்" அல்ஸ்டன் தெரிவித்தார்.
சிக்கனக் கொள்கையானது, சமூக வடிவமைப்பின் ஒரு திட்டமிட்ட கொள்கை என்று அவர் வலியுறுத்துகையில், இதுவொரு பெருமனதுடனான அறிக்கையாகும். புதிதாக நியமிக்கப்பட்ட பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலர் அம்பெர் ரூட், முன்னாள் உள்நாட்டு செயலராக மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் "தங்கியிருக்கலாம்" என்பதற்கு சார்பானவர் ஆவார். “பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் அணியினர்" உடன் பகிர்ந்து கொண்ட தொழிலாள வர்க்கம் மீதான விரோதத்தை உறுதிப்படுத்தும் வகையில், ரூட் அல்ஸ்டனின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தார். ஒரு சீற்றமான தோற்றத்தை ஏற்று, “அவர் மொழியில் உள்ள அசாதாரணமான அரசியல் இயல்பால்" அவர் எந்தளவுக்கு "ஏமாற்றம் அடைந்தார்" என்பதை வெளிப்படுத்தினார், அது "அவர் கூறும் பலவற்றால் மதிப்பிழந்திருப்பதாக" தெரிவித்தார்.
இது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் இடைவிடாது தொடரும் என்பதற்கான ஆளும் வர்க்கத்தின் பிரகடனமாக உள்ளது.