ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NY Times exposé on Trump fortune: An empire built on tax evasion and fraud
“Behind every great fortune there is a great crime” – Honoré de Balzac

ட்ரம்ப்பின் செல்வக்குவிப்பின் மீதான நியூ யோர்க் டைம்ஸின் அம்பலப்படுத்தல்: வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யம்

ஒவ்வொரு பெரும் செல்வத்தின் பின்னாலும் ஒரு பெரும் குற்றம் இருக்கிறது” - Honoré de Balzac

By Barry Grey
6 October 2018

நியூ யோர்க் டைம்ஸ், புதனன்று வெளியான அதன் அச்சுப்பதிப்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பலபில்லியன் டாலர் செல்வத்திற்கு வழிவகை தந்த நிதி நடைமுறைகள் பற்றிய 14,000 வார்த்தைகளுடனான ஒரு புலனாய்வு அறிக்கைக்கு எட்டு முழுப் பக்கங்களை அர்ப்பணித்திருந்தது.

ட்ரம்ப்பின் நில-மனை அதிபதி தந்தை ஃபிரெட் சி.ட்ரம்ப்பின் முன்னாள் ஊழியர்களுடனான நேர்காணல்கள், அத்துடன் கிட்டத்தட்ட 100,000 நிதி ஆவணப் பக்கங்கள் மீதான திறனாய்வுகள் உள்ளிட 18 மாத கால புலனாய்வின் ஒரு விளைபொருளாக இந்த கட்டுரை இருந்தது. ட்ரம்ப்பும் அவரது உறவினர்களும் குறைந்தபட்சம் அரை பில்லியன் டாலர்கள் அளவிற்கான வரி ஏய்ப்பில் இருந்து எவ்வாறு ஆதாயமடைந்தனர் என்ற ஒரு விரிவான, உண்மையான தரவுகளின் அடிப்படையிலான ஒரு விவரிப்பை அது வழங்கியிருந்தது.

ஓட்டைகள் கொண்ட வாரிசுகளுக்கு சொத்து மாற்றச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாகக் கூட, நூறுமில்லியன் டாலர் கணக்கில் வரி செலுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ட்ரம்ப் குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்ட வரி ஏய்ப்பு தந்திரங்கள் அநேக சட்டவிரோதமானவையாய் இருந்தன. சட்டப்பிரச்சினைகள் என்னவாக இருந்தபோதிலும், டைம்ஸின் செய்திக்கட்டுரையில் இருந்து எழக் கூடிய குற்றவியல் தன்மை மற்றும் ஊழலின் சித்திரமானது வெறுமனே ட்ரம்ப் குடும்பத்தின் குணாம்சமல்ல, மாறாக ஒட்டுமொத்த பெருநிறுவன-நிதிய ஒருசிலவராட்சியை குணாம்சப்படுத்துவதாக இருக்கிறது.

ஃபிரெட் மற்றும் மேரி ட்ரம்ப் 1 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துகளை மொத்தமாய் 52.2 மில்லியன் டாலர் கூட்டரசாங்க வரி செலுத்தி தமது பிள்ளைகளுக்கு மாற்றியிருக்கின்றனர், அவர்கள் கட்டிய வரி வகிதம் சுமார் 5 சதவீதம் மட்டுமே வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் நிலம் மற்றும் பரிசுப்பொருள் வரியானது 55 சதவீதமாக இருந்தது, அதாவது ட்ரம்ப் குடும்பத்தினர் அவர்கள் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டியிருந்த 550 மில்லியன் டாலர் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செலுத்தியிருந்தனர்.

இந்த பாரிய வரி ஏய்ப்பு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான பெயரளவிலான (ஷெல்) நிறுவனங்களை அமைப்பதன் மூலமாகவும் ஃபிரெட் ட்ரம்ப்பின் மனை-நில சாம்ராஜ்யத்தின் சொத்துக்களை திட்டமிட்டு மதிப்பைக் குறைத்துக் காட்டியதன் மூலமாகவும் —1999 இல் ஃபிரட் ட்ரம்ப்பின் மரணத்திற்கு முன்னதாக சொத்துக்கள் பிள்ளைகளுக்கு மாற்றப்பட்ட போது வாரிசுகளுக்கு சொத்துமாற்ற வரிகளில் இது ஒரு பெரும் குறைப்பை உருவாக்கி கொடுத்தது— செய்யப்பட்டிருந்தது.

ஃபிரட் ட்ரம்ப் வரிகளை குறைத்து செலுத்தி வந்ததாக 1950கள் மற்றும் 1960களில் உள்நாட்டு வருவாய் சேவை (IRS) தொடர்ந்து கூறி வந்திருந்தது. 1995 இல், அவரது பரிசுப் பொருட்கள் வரித் தாக்கலை தணிக்கை செய்தபோது, அவர் தனது பிள்ளைகளுக்கு மாற்றிய சொத்துக்களை 38 சதவீதம் வரை மதிப்பைக் குறைத்துக் காட்டியிருந்ததாக முடிவுக்கு வந்தது. இருந்தும், அமெரிக்காவின் நிதிப் பிரபுத்துவத்திற்கு பாதுகாப்பளிப்பதும் அதன் குற்றங்களுக்கு வழிவகை செய்துதருவதும் தான் இதன் பாத்திரமாகவும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் பாத்திரமாகவும் இருந்து வருவதற்கான உதாரணவிளக்கம் போல, அது அந்த நடைமுறையை நிறுத்துவதற்கு எதுவொன்றும் செய்யவில்லை.

1992 இல் ட்ரம்ப்பின் குடும்பம் All County Building Supply & Maintenance என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியது. ஃபிரெட் ட்ரம்ப்பின் கட்டிடங்களுக்கு கொள்முதல் முகமையாக கொதிகலன்கள் மற்றும் பிற சாதனங்கள் முதல் சுத்தப்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தையும் வாங்குவதற்காக வேலை செய்வதுதான் அது உருவாக்கப்பட்ட நோக்கமாக கூறப்பட்டது.

உண்மையில் All County ஒரு போலி நிறுவனம். ஃபிரெட் ட்ரம்ப்புக்கு பிடித்தமான ஒரு உறவினரான ஜோன் வால்டரின் மன்ஹஸட் வீட்டின் முகவரி தான் அதன் பட்டியலிடப்பட்ட முகவரியாக இருந்தது. டொனால்ட் ட்ரம்ப் அவரது சகோதரிகளான மரியான் மற்றும் எலிசபெத் மற்றும் சகோதரர் ராபர்ட் ஆகியோருடன் சேர்ந்து வால்டரும் All Countyயின் சட்டரீதியான உரிமையாளராக இருந்தார். இந்த நிறுவனம் உண்மையில் ஃபிரெட் ட்ரம்ப்பின் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு பொருட்கள் வாங்குவதை ஒழுங்கமைக்கவில்லை. பதிலாக, அது மத்தியஸ்த நிறுவனமாக, கொள்முதல்களின் உண்மையான செலவில் சிலசமயங்களில் 20 சதவீதம் வரை, இன்னும் சில சமயங்களில் 50 அல்லது அதற்கும் கூடுதலான சதவீதம் வரை உயர்த்தி ஃபிரெட் ட்ரம்ப்பிடம் வசூலித்தது.

தந்தையுடனான ஏற்பாட்டின் படி, ட்ரம்ப்பின் பிள்ளைகள் அரசாங்கத்திற்கு பரிசுப் பொருள் வரிகளை செலுத்தாமல் ஃபிரெட் ட்ரம்ப் மனை-நில சாம்ராஜ்யத்தில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை தமது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாகனமாக All County நிறுவனத்தைப் பயன்படுத்தினர்.

அதன்பின் ஃபிரெட் ட்ரம்ப், செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த தனது குடியிருப்பு கட்டிடங்களின் இலாபமீட்டு நிலையில் ஏற்பட்ட பாதிப்பைப் பயன்படுத்தி, தனது வாடகை-கட்டுப்பாட்டு சொத்துகளில் குடியிருப்போருக்கு வாடகைகளை உயர்த்துவதற்கு அரசிடம் இருந்து அனுமதிக்கு விண்ணப்பித்துப் பெற்றார். “எத்தனை அதிகமாக இந்த அளவு செல்லுமோ, அத்தனை அதிகமாக வாடகை உயர்த்தப்படும்” என்று ரோபர்ட் ட்ரம்ப் ஒரு வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருந்ததை டைம்ஸ் மேற்கோளிட்டது.

ட்ரம்ப்பின் செல்வம் தொடர்பாக தனது செய்திக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை விசாரிப்பதில் நியூயோர்க் நகர நிர்வாகமும் நியூயோர்க் மாநில அரசுடன் இணைந்து கொண்டிருப்பதாக டைம்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஃபிரெட் ட்ரம்ப் தனது கட்டிடங்களின் இலாபநிலையை குறைத்துக் காட்டியதன் மூலமாக, பகுதியாக உரிமையாளர்களால் தெரிவிக்கப்படும் இலாபங்களை  அடிப்படையாகக் கொண்டு வசூலிக்கப்படுகின்ற நகர சொத்து வரிகளை ஃபிரெட் ட்ரம்ப் மோசடியாக குறைத்துக் கட்டியிருக்கலாம் என்று முதலாவது பிரதிநிதி மேயர் Dean Fuleihan சுட்டிக்காட்டியதை இந்த செய்தித்தாள் மேற்கோளிட்டது.

All County உருவாக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1994 ஜனவரியில், ட்ரம்ப் குடும்பத்தார் Apartment Management Associates Inc என்ற ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கினர். இதுவும் ஜோன் வால்டரின் வீட்டு முகவரியை அஞ்சல் முகவரியாகக் கொண்டிருந்த ஒரு போலி நிறுவனம் என டைம்ஸ் குறிப்பிடுகிறது. டொனால்ட் ட்ரம்ப், அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினரான வால்டர் ஆகியோருக்கு சொந்தமான இந்த Apartment Management Associates நிறுவனம், உருவாக்கப்பட்ட இரண்டு மாதங்களில், ஃபிரெட் ட்ரம்ப்பின் கட்டிடங்களை நிர்வகிப்பதற்கான கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியது, முன்னதாக இக்கட்டணங்கள் ட்ரம்ப் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் இருந்த தந்தையின் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.

All County போலவே Apartment Management Associates உம் பரிசுப்பொருள் அல்லது நில வரிகள் செலுத்தாமல் ஃபிரெட் ட்ரம்ப்பிடம் இருந்து அவரது வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றுவதற்கான ஒரு பொறிமுறையாக இருந்தது. டைம்ஸ் எழுதியது: “1998 காலத்தில், All County மற்றும் Apartment Management நிறுவனங்கள் ட்ரம்ப்பின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு இன்றைய மதிப்பில் 2.2 மில்லியன் டாலருக்கு நிகரான வருவாயை உருவாக்கிக் கொண்டிருந்தன என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. இந்தப் பணத்திற்கு அவர்கள் கட்ட வேண்டியிருந்த வருமான வரியானது, ஃபிரெட் ட்ரம்ப் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 2.2 மில்லியன் டாலரை எடுத்து சாதாரணமாக கொடுத்திருந்தால் அவர்கள் செலுத்த வேண்டியதாயிருந்திருக்கக் கூடிய 55 சதவீத வரியில் இருந்து கணிசமாகக் குறைவானதாகும்.”

ஃபிரெட்டின் செல்லப் பிள்ளையும் அவரது வணிக செயல்பாடுகளில் அதிகமாய் பங்குபெற்றவருமான டொனால்ட் ட்ரம்ப் இந்த மற்றும் மற்ற நிழல் நடவடிக்கைகளில் ஒரு செயலூக்கமான பாத்திரம் வகித்ததாக இந்த செய்தித்தாள் கூறுகிறது.

மாற்றப்படும் சொத்துக்களின் மதிப்பை மிகப்பெருமளவில் குறைத்துக் காட்டி அதன் மூலமாக சட்டரீதியாக செலுத்த வேண்டிய பரிசுப்பொருள் வரியில் ஒரு சிறு பங்கை மட்டும் செலுத்தும் வகையில், GRAT (grantor-retained annuity trust) என்ற பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்புக்குப் பரவலாக பயன்படுத்திய ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் குடும்பத்தார் தந்தையிடம் இருந்து பிள்ளைகளுக்கு எவ்வாறு சொத்துக்களை மாற்றினர் என்பதை டைம்ஸ் கட்டுரை விரிவாக விவரிக்கிறது. இந்த விதத்தில், ட்ரம்ப் குடும்பத்தினர் நூறு மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருந்தனர்.

தந்தையின் சொத்து மதிப்பு 41.4 மில்லியன் டாலர் என ட்ரம்ப்புகள் கூறியிருந்தனர். ஆனால் அதே கட்டிடங்கள் அடுத்த பத்தாண்டு காலத்தில் அந்தத் தொகைக்கு 16 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டன.

“இறுதியில்” கட்டுரை ஆசிரியர்கள் எழுதினர், “ட்ரம்ப் சாம்ராஜ்யத்தின் சொத்துமாற்றம் ஃபிரெட் மற்றும் மேரி ட்ரம்ப்புக்கு பரிசுப் பொருள் வரிகளில் 20.5 மில்லியன் டாலர்களையும் அவர்களது பிள்ளைகளுக்கு 21 மில்லியன் டாலர்களுக்கு வருடாந்திர செலுத்தங்களிலுமாய் செலவு வைத்தது. இது டைம்ஸ் கண்டவாறாக, சாம்ராஜ்யத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தியிருக்க வேண்டிய தொகையை விடவும் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் குறைவாகும்.”

இந்த கட்டுரையின் பெரும்பகுதி ஃபிரெட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மாற்றிய பெரும் சொத்துவிவரத்தை விவரிக்கிறது, இன்றைய மதிப்பின் படி அது 413 மில்லியன் டாலர்களாய் இருக்கும் என டைம்ஸ் மதிப்பிடுகிறது. 1 மில்லியன் டாலர் தனது தந்தையிடம் இருந்து கடனுதவியாக பெற்றுக் கொண்டு அதனை ஒரு பல பில்லியன் டாலர் சாம்ராஜ்யமாக கட்டியெழுப்பிய “சுயமாக உருவான பில்லியனர்” என்பதான டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்களது மோசடியை இந்த செய்தித்தாள் பெருமளவில் அம்பலப்படுத்துகிறது.

பெருநிறுவன-நிதிய ஒருசிலவராட்சியினரால் குவிக்கப்பட்டிருக்கும் செல்வத்தில் வாரிசாகப் பெற்ற செல்வத்தின் மிகப்பெரும் பாத்திரத்தை சுட்டிக்காட்டும் மட்டத்திற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆயினும் டைம்ஸ் அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்கும் அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக பெருநிறுவன-நிதிய ஆளும் உயரடுக்கில் வியாபித்திருக்கும் குற்றவியல்தனம், அது சமூகத்தை சூறையாடுவது மற்றும் அது கட்டுப்படுத்துகின்ற ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் இதில் உடந்தையாக இருப்பது என்ற மிக அடிப்படையான பிரச்சினையில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்குமான முறையில் ட்ரம்ப்பின் சுய-விளம்பர விவரிப்பின் மோசடியின் மீது கவனத்தைக் குவிக்கிறது.

டைம்ஸ் மிக நிச்சயமான வர்க்க காரணங்களுக்காக ட்ரம்ப்பை இயல்பில் இருந்தான ஒரு விலகலாக சித்தரிக்க முனைகிறது. அதுவும் அது கூட்டு கொள்கின்ற ஜனநாயகக் கட்சியும், முதலாளித்துவ அமைப்புமுறையையும் அதனை ஆட்சி செய்கின்ற ஒருசிலராட்சியையும் பாதுகாப்பனவாக உள்ளன. சொல்லப் போனால், அது தன்னையே அம்பலப்படுத்திக் கொள்வது, ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களின் —நீதிமன்றங்கள், கட்டுப்படுத்தும் முகமைகள், நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்— வழக்கமான, அன்றாட நடைமுறையின் ஒரு காட்சிக்கீற்றை வழங்குகிறது.

இரண்டு கட்சிகளின் தலைமைகளின் கீழும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சமூக எதிர்ப்புரட்சியுடன் கைகோர்த்த விதத்தில், இந்த வியாபித்துச் செல்லும் ஊழலும் குற்றவியல்தனமும் சமீப தசாப்தங்களில் அதிகரிக்க மட்டுமே செய்துள்ளன. பல தசாப்த கால தொழிற்துறைமய அகற்றத்தின் மற்றும் தொழிற் பெருநகரங்கள் மற்றும் நகரங்களது அழிப்பின் ஏககாலத்தில் நாட்டின் மற்றும், சொல்லப் போனால், உலகத்தின் பொருளாதார வாழ்வில் நிதி ஊகம் மற்றும் கைப்புரட்டின் பங்கு முன்னெப்போதினும் மேலோங்கிய நிலையை எட்டுவதும் நடந்து வந்திருக்கிறது.  

உச்சத்திற்கு எழுந்த சீரழிந்த மற்றும் குண்டர் கும்பல் போன்றதொரு சமூக சக்திகளது உருவடிவமாய் ட்ரம்ப் நிற்கிறார். அவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவின் விளைபொருளும் வெளிப்பாடும் ஆவார். அவர் விதிவிலக்கானவர் அல்ல.

செல்வந்தர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு சாதகமான விதத்தில் வரி அமைப்புமுறையை திட்டமிட்டு வளைப்பது நிதிய ஒருசிலவராட்சியினரின் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் வலுப்பெறலில் ஒரு முக்கியமான பொறிமுறையாக இருந்து வந்திருக்கிறது.

2009க்குள்ளாக, வேலை மற்றும் சேமிப்புகள் மூலமான வருவாய்க்கு சராசரி கூட்டரசாங்க வரி விகிதம் 18 சதவீதமாகி இருந்தது. வாரிசாகப் பெறும் வருவாய்க்கான 4 சதவீத வரிவிகிதத்துடன் இது ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும்.

பெரும் செல்வந்தர்களின் ஏகபோகமாக இருக்கும் செல்வம் மற்றும் வருவாயின் பங்கு ஒரேயடியாக அதிகரித்திருக்கும் நிலையிலும், கூட்டரசாங்க வருவாயில் நில மற்றும் பரிசுப்பொருள் வரிகளின் பங்களிப்பு 1972 இல் 2.6 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 1 சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. பெருநிறுவன வரிகளையும் செல்வந்தர்களுக்கான வரி விதிப்புகளையும் ஒரேயடியாக வெட்டிய, வரி “சீர்திருத்த”த்தில் டிசம்பரில் ட்ரம்ப் கையெழுத்திட்டதின் பின்னர் இந்த நிகழ்ச்சிபோக்கு மிகப்பரந்த அளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் செல்வந்தர்கள் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வது எந்த விதத்திலும் அமெரிக்காவில் மட்டுமான ஒரு நிகழ்வுப்போக்கு அல்ல. ஆகஸ்டில் வெளியான Gabriel Zucman தலைமையிலான பொருளாதார அறிஞர்களின் ஒரு குழு ஆவணப்படுத்தியுள்ளவாறாக, உலகெங்கிலும் உள்ள பெரும் பணக்காரர்களில் மேலிருக்கும் 0.01 சதவீதத்தினரின் வீட்டினர் மட்டும், கடல்கடந்த வரிப் புகலிட நாடுகளில் சொத்துக்களை குவிப்பதன் மூலமாக, அவர்களது வரிகளில் சுமார் 25 சதவீதத்தை ஏய்ப்பு செய்கின்றனர்.

ட்ரம்ப்பின் செல்வம் குறித்த தனது விரிவான அம்பலப்படுத்தல் மூலமாக, டைம்ஸ், ஒரு ஒட்டுண்ணித்தனமான ஒருசிலவராட்சியினரின் தொடர்ந்த இருப்பானது, பரந்த மக்களின் மிகப் பெரும்பான்மையினரது மிக அடிப்படையான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு இணக்கமற்றதாக இருக்கிறது என்ற சோசலிஸ்டுகளின் வலியுறுத்தலை, தன்னையும் அறியாமல், ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

ஒருசிலவராட்சியினரின் பெரும் செல்வத்தைப் பறிமுதல் செய்து அதன் டிரில்லியன் கணக்கான பணத்தை அனைத்து மக்களுக்கும் நல்ல ஊதியமளிக்கும் வேலைகள், கண்ணியமான பள்ளிகள் மற்றும் வீட்டுவசதி, சுத்தமான காற்று மற்றும் நீர், ஒரு பாதுகாப்பான ஓய்வுக்காலம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத்தரத்துக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குவதற்காய் பயன்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அவசியம் கொண்டிருப்பதையே ட்ரம்ப் குடும்பத்தின் முகச்சுளிப்பூட்டும் காவியம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கும் சமூக சமத்துவத்தையும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பொது உடைமைகளாகவும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிலும் இருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதும் அவசியம் என்பதே இதன் அர்த்தமாகும்.