Print Version|Feedback
Mass shooting at Pittsburgh synagogue
Anti-Semitic violence erupts in America
பிட்ஸ்பேர்க் யூதக்கோவிலில் பெருவாரியானோர் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் யூத-விரோத வன்முறை வெடிக்கிறது
Joseph Kishore
29 October 2018
பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பேர்க் நகரில் ட்ரீ ஆஃப் லைஃப் யூதக்கோவிலில் (Tree of Life Synagogue) நடந்திருக்கும் யூத-விரோத படுகொலை அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தின் நெருக்கடியை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் நிலைமைகள், மேலும் மேலும் அதிகமாய், ஒரு உள்நாட்டுப் போரின் தன்மையைக் கொண்டிருக்கின்றன, மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்கான சக்திகள் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சனிக்கிழமை காலை மதச் சடங்குகளின் போது நிகழ்ந்த இந்த பிட்ஸ்பேர்க் படுகொலையில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையாக முதியவர்களை பலிகொண்ட இந்த தாக்குதலில் இரண்டு சகோதரர்களும், 84 மற்றும் 86 வயது கொண்ட ஒரு வயதான தம்பதியும் பலியாகினர். பலியான இன்னொருவரான ரோஸ் மலிங்கர் 97 வயதானவர், யூதப்படுகொலையில் உயிர்தப்பியவர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ரோபர்ட் போவர்ஸ் (Robert Bowers) மீது குற்றவியல் படுகொலைக் குற்றங்கள் 11 எண்ணிக்கையும் இனரீதியான அச்சுறுத்தலின் 13 எண்ணிக்கையும் சுமத்தப்பட்டுள்ளன.
யூத-விரோதம் அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்ற அதேநேரத்தில், யூத மக்களைக் குறிவைத்து இந்த அளவுக்கான ஒரு பெருந்திரள் வன்முறை நடவடிக்கை என்பது முன்கண்டிராததாகும். இஸ்ரேலின் செய்தித்தாளான Haaretz இல் ஒரு கருத்துரையாளர் எழுதியதைப் போல, “ ‘இது இங்கே நடக்காது’ என்றதான மாயை நொருக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் யூதர்கள் மறுநாள் காலையில் எழுந்து, இது இங்கே நடந்திருக்கிறது என்பதை அறிவதோடு மட்டுமல்லாமல், இந்த தாக்குதல் வருங்காலத்தில் இதேபோன்ற தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்றும் உணரும்போது ஒரு புதிய மற்றும் மிகக் கூடுதலாய் அச்சுறுத்துகின்ற ஒரு எதிர்காலத்தை மனதில் காண்பார்கள்.”
இந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு, அதனை உள்நாட்டு உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது, அதன் சர்வதேச மற்றும் வரலாற்று உள்ளடக்கத்திலும் பொருத்திக் காண்பது அவசியமாகும்.
ட்ரம்ப் நிர்வாகம் பாசிச வன்முறைக்கு விடுத்த திறந்த விண்ணப்பங்களின் ஒரு நேரடியான விளைபொருளாக இந்தத் தாக்குதல் அமைந்திருக்கிறது. போவெர்ஸ் யூத-விரோத வெறித்தனம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதத்தின் ஒரு கலவையால் ஊக்குவிக்கப்பட்டிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தாக்குதலுக்கு சற்று முன்பாய் சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டிருந்த கருத்துகளில், யூதர்கள் மீது அவர் காட்டும் வெறுப்பை ஹீப்ரு புலம்பெயர்ந்தோர் உதவி சமூகம் (HIAS) என்ற அமைப்பு -ட்ரீ ஆஃப் லைஃப் யூதக்கோயில் இதனைச் சேர்ந்ததாகும்- மத்திய அமெரிக்காவில் இருந்து தப்பிவரும் அகதிகளுக்கு உதவுவதற்கு செய்யும் முயற்சிகளுடன் தொடர்புபடுத்திக் காட்டியிருந்தார். “நமது மக்களைக் கொல்ல படையெடுத்து வருபவர்களை உள்ளே கொண்டுவருவதற்கு HIAS விரும்புகிறது” என்று அவர் எழுதினார். “எனது மக்கள் கொல்லப்படுவதை நான் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.”
மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட வறுமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பித்து ஓடிவரும் அகதிகளை குறிப்பிட “படையெடுத்து வருபவர்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உள்ளிட அவர் பயன்படுத்திய மொழி, ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தி வரும் ஒரு மொழியாகும். சென்ற வாரத்தில் நிகழ்த்திய ஒரு உரையில், ட்ரம்ப், அமெரிக்க எல்லையை நோக்கி புலம்பெயர்மக்கள் நடைபயணமாய் வந்ததை ”நமது நாட்டின் மீதான ஒரு தாக்குதல்” என்று குறிப்பிட்டார். இது “உங்கள் அண்டைஅருகாமைகளை, உங்கள் மருத்துவமனைகளை, உங்கள் பள்ளிகளை” அழிக்க அச்சுறுத்துகின்ற ஒரு படையெடுப்பு என்று அவர் அழைத்தார். யூத-விரோத மற்றும் பாசிச சூசகங்களால் நிறைந்த தனது கருத்துகளில் ட்ரம்ப் “கடிகாரத்தை பின்னுக்கு நகர்த்தி ஊழலடைந்த, அதிகார-பசி கொண்ட உலகவாதிகளுக்கு அதிகாரத்தை மீட்சி செய்ய விரும்புபவர்கள்…” மீது கண்டனம் செய்தார்.
யூதக்கோவிலிலான தாக்குதலைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி பிரபலங்களுக்கு ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் பைப் குண்டுகளை அனுப்புவது பின்தொடர்கிறது.
ஆயினும், ட்ரம்ப்பே கூட ஒரு நோய்க்குறியே தவிர விளக்கமல்ல. ட்ரம்ப்பை எது அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது?
“மறக்கப்பட்டுப்போன மனித”னின் பாதுகாவலர்களாக வலதுசாரிகள் காட்டிக்கொள்வதற்கு வழிவகை தந்த 2008 நிதிப் பொறிவின் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் வோல்-ஸ்ட்ரீட் ஆதரவுக் கொள்கைகளின் பின்விளைவுகள்; “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பதாகையின் கீழ் 17 ஆண்டுகள் உள்ளிட கால் நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான முடிவற்றதொரு போரின் தாக்கம்; தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான எதிர்ப்பு பெருகுவதற்கான பதிலிறுப்பில் ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி கட்சியினரும் முன்னெப்போதினும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பினர்.
ட்ரம்ப் நாடாளுமன்றத்திற்கு-அப்பாற்பட்டு அதி-வலதுகளின் இயக்கத்தை வளர்த்தெடுக்க முனைகிறார் என்றால், ஜனநாயகக் கட்சியினரோ “பிளவுகளை”யும் அதிருப்தியையும் விதைப்பவர்களுக்கு எதிராய் ஸ்திரத்தன்மையை உத்தரவாதம் செய்பவர்களாக FBI, CIA மற்றும் இராணுவத்தை ஊக்குவிக்கின்றனர்.
வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்தை விடவும் மிக அதிகமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற உன்மையையே சர்வதேச உள்ளடக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களின் வளர்ச்சி ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்காக இருக்கிறது.
பிலிப்பைன்ஸில் இது ரோட்ரிகோ டூடெர்டே ஐ உருவாக்கியிருக்கிறது, இவர் கண்காணிப்பு தற்கொலைப் படைகளை புகழ்ந்து வந்திருப்பவரும் ஒழுங்கமைக்க உதவியிருப்பவருமாவார்.
இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி பாசிச ஆர்.எஸ்.எஸ். இன் ஒரு உறுப்பினராவார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்ட 2002 கலவரங்களை ஒழுங்கமைப்பதில் அவர் உதவினார்.
பிரேசிலில், நேற்று நடத்தப்பட்ட தேர்தல் அதி-வலது வேட்பாளரான ஜெயர் போல்ஸோனாரோவை அதிகாரத்துக்கு உயர்த்தியிருக்கிறது.
ஐரோப்பா முழுவதிலும், அதி-வலது மற்று பாசிசக் கட்சிகள் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஜேர்மனியிலான அபிவிருத்திகள் குறிப்பான முக்கியத்துவமுடையவை ஆகும். ஹிட்லரையும் யூதப்படுகொலையில் ஆறு மில்லியன் யூதர்களை படுகொலை செய்தமை உள்ளிட இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான குற்றங்களையும் உருவாக்கிய நாட்டில், பாசிசம் மீண்டும் ஒரு பெரிய அரசியல் சக்தியாக எழுந்திருக்கிறது.
பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது; ஒவ்வொரு திருப்பத்திலும் அதன் புலம்பெயர்-விரோத பேரினவாதத்திற்கு தகவமைத்துக் கொண்டமை மற்றும் ஏற்றுக் கொண்டமையின் மூலம் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆகிய அரசியல் ஸ்தாபகத்தின் கட்சிகளால் இது திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
சென்ற மாதத்தில், AfD தலைவரான அலெக்சாண்டர் கௌலான்ட் முன்னணி செய்தித்தாளான Frankfurter Allgemeine Zeitung இல் எழுதியிருந்த ஒரு பத்தி, ஹிட்லரின் ஒரு உரைக்கு இணைசொல்லக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டிருந்தது. இதனிடையே, அரசு, AfD உடனான கூட்டணியில், பாசிசத்திற்கான இடது-சாரி எதிர்ப்பை குற்றமாக்குவதை நோக்கி நகர்ந்திருக்கிறது.
ஜேர்மனியில் பாசிசம் எழுச்சி காண்பதன் முக்கியத்துவம், நியூ யோர்க் டைம்ஸ் உள்ளிட, அமெரிக்க ஊடகங்களால் கிட்டத்தட்ட முற்றிலுமாக உதாசீனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஜேர்மன் வரலாற்றை திருத்தி எழுவதற்கும் நாஜிக்களது குற்றங்களை சார்பியலானவையாக்குவதற்கும் பிற்போக்கான வரலாற்றாசிரியர்கள் செய்கின்ற முயற்சிகள் அமெரிக்காவிலுள்ள ஊழலடைந்த கல்வியறிஞர்கள் உள்ளிட தாராளவாத ஸ்தாபகத்திடம் இருந்து எந்த எதிர்ப்பையும் தூண்டியிருக்கவில்லை.
பாசிசம் உயர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இஸ்ரேலும் இருக்கிறது என்ற உண்மையானது இந்த நிகழ்ச்சிபோக்கின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. யூத வெறுப்பு என்பது தேசியவாதத்தின் ஒரு நச்சுத்தனமான வகையின் ஒரு குறிப்பிட்ட வடிவமென்பது இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அரசு-ஒப்புதலுடனான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் வெளிப்படுகிறது. சமீபத்தில் யூத மேலாதிக்கத்தை புனிதப்படுத்துகின்ற “தேசிய-அரசு சட்டம்” நிறைவேற்றப்படுவதை மேற்பார்வை செய்த இஸ்ரேலிய பிரதமரான பெஞ்சமின் நெத்தனியாகு, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் உள்ளிட ஐரோப்பாவில் உள்ள அதி-வலது பாசிச சக்திகளுடன் பொதுவான நோக்கத்தைக் காண்கிறார்.
இறுதியாக, பாசிச இயக்கங்களின் சர்வதேச வளர்ச்சியானது அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் வைக்கப்பட வேண்டும். ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த 85 ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பின்னர் பாசிசம் மறுஎழுச்சி காண்பதன் முக்கியத்துவம் என்ன?
சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், 1989-1991 இல் நடந்ததன் அத்தியாவசியமான பிற்போக்கான தன்மை ஒட்டுமொத்த உலகத்தின் முன்பாக அம்பலப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த காலத்தில் ஓரளவுக்கு ஒடுங்கிவந்த பாசிச நோய், சக்தியுடன் மீளெழுச்சி கண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் முடிவானது, முதலாளித்துவத்தின் பரப்புரைவாதிகள் ஆருடம் கூறியதைப் போல, ஜனநாயகத்தின் ஒரு மலர்ச்சியை உருவாக்கவில்லை, மாறாக சமத்துவமின்மையின் வெடிப்பையும், ஏகாதிபத்தியப் போரையும், எதேச்சாதிகாரவாதத்தையும் அத்தோடு பாசிசத்தின் ஒரு மறுமலர்ச்சியையுமே உருவாக்கியிருக்கிறது.
பாசிசம், தீவிர முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு அரசியல் வெளிப்பாடாகும். நாஜிசத்தின் எழுச்சி மூலமாக, “முதலாளித்துவ சமூகம் அதன் சீரணமாகாத காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்கக்குகிறது” என்று ”தேசிய சோசலிசம் (நாஜி) என்றால் என்ன?” (1933) என்பதில் ட்ரொட்ஸ்கி விளக்கினார். பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரமாகும்” என்று அவர் எழுதினார்.
அவ்வாறே இன்றும் கூட, முதலாளித்துவமானது அதன் சீரணிக்காத காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்கக்கிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலின் பின்விளைவுகளுக்குத் தப்பி வரும் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளுமே அதன் மிக உடனடியாக இலக்குகளாய் இருக்கின்றனர். அமெரிக்காவில், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எழுப்பப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்கள் குழந்தைகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த மக்களை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளின் கீழ் வைத்திருக்கின்றன.
1940 மேயில் வெளியான அவர் கடைசியாக எழுதிய முக்கியமானவற்றில் ஒன்றான “ஏகாதிபத்தியம் மற்றும் போர் தொடர்பாக நான்காம் அகிலத்தின் அறிக்கை”யில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “சிதையும் முதலாளித்துவம் யூத மக்களை அதன் அத்தனை துவாரங்களின் வழியும் பிழிந்தெடுக்கப் பார்க்கிறது; இரண்டு பில்லியன் உலக மக்களில் பதினேழு மில்லியன் மனிதர்களுக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு, நமது கோளத்தில் இன்னமும் ஒரு இடம் கண்டுபிடிக்க முடியவில்லை! பரந்த நிலப் பரப்புகள் மற்றும் மனிதனுக்கு பூமியுடன் சேர்த்து வான்பரப்புகளையும் கூட வென்றுகொடுத்திருக்கின்ற தொழில்நுட்ப அற்புதங்களின் மத்தியில், முதலாளித்துவ வர்க்கம் நமது கோளத்தை ஒரு நாற்றமடிக்கும் சிறைச்சாலையாக மாற்றி விட முடிந்திருக்கிறது.” இதுவே இன்று மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுக்கும் நிலைமையாக இருக்கிறது.
சனிக்கிழமை அன்றான படுகொலை மீண்டுமொருமுறை விளங்கப்படுத்தியிருப்பதைப் போல, அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் போரின் ஒரு காலகட்டமானது, பேரினவாதத்தின் மிகப்பழம் வடிவங்களில் ஒன்றான யூத-விரோதத்தின் புத்துயிர்ப்புடன் தவிர்க்கவியலாமல் தொடர்புபட்டுள்ளது. இஸ்ரேலின் இருப்பானது யூத-விரோத துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு ஒருவகையிலான பாதுகாப்பு என்பதான கருத்து ஒதுக்கப்பட வேண்டிய பிரமைகளில் ஒன்றாகும்.
வலது-சாரி பிற்போக்குத்தனத்தின் மிக அடிப்படையான இலக்காக இருப்பது தொழிலாள வர்க்கமாகும். முதலாளித்துவத்தில் இருந்து பாசிசம் பிறப்பதைப் போலவே, வர்க்கப் போராட்டமும் பிறக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியும் சோசலிசத்திலான பெருகும் ஆர்வமும் ஆளும் வர்க்கத்திற்கு பீதியூட்டுகிறது. தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினர் வலதை நோக்கி அல்ல, இடதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக சமத்துவமின்மைக்கும் போருக்கும் ஆளும் வர்க்கம் செய்கின்ற தயாரிப்புகளுக்கு குரோதம் ஆழமடைகிறது மற்றும் அதிகரித்துச் செல்கிறது.
சமூக எதிர்ப்பின் முதல் அறிகுறியிலேயே, ஆளும் வர்க்கம் பாசிச வன்முறைக்கு அழைப்பு விடுவதென்பது அதன் நம்பிக்கையற்ற தன்மையின் ஒரு அறிகுறியாகும். 1930களில், பாசிச இயக்கங்கள் ஒரு வெகுஜன அடித்தளத்தை பெற்ற சமயத்தில், ஆளும் உயரடுக்குகளின் அரசியல் சதிகளே ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அவை அதிகாரத்திற்கு உயர்வதை சாத்தியமாக்கின. இன்று, மேலிருந்து பாசிசத்தை திட்டமிட்டு தூண்டிவிடுவதென்பது இன்னும் அதிக மேலாதிக்கமான ஒரு காரணியாக இருக்கிறது.
சோசலிசப் புரட்சியா அல்லது முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றினை முதலாளித்துவம் மறுபடியும் மனிதகுலத்தின் முன்வைத்துக் கொண்டிருக்கிறது. “நாகரிகத்தை மீண்டும்கொண்டுவருவதற்கும்” மற்றும் “பிளவுபடுத்தும் அரசியல் வாய்வீச்சை” முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான அவசியம் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்படும் அத்தனை கதைகளும் முக்கியமான பிரச்சினைகள் அத்தனையில் இருந்தும் நழுவிச் செல்கின்ற வெற்றுக் கதையாடல்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறையே ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
ஸ்ராலினிசத்தின் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கான பதிலிறுப்பில் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1938 இல், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் தோல்வியாக அமைந்த 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் பெற்ற வெற்றியில் இருந்தான படிப்பினைகளின் உட்கிரகிப்பு புதிய அகிலத்தின் அரசியல் வேலைத்திட்டத்தில் வெகு மையத்தில் இருந்தது.
ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்ட அடிப்படையிலன்றி பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லாததாகும் என்பதே மிக முக்கியமான படிப்பினையாக இருந்தது. 1930களின் பயங்கரங்கள் மறுபடியும் எழுகின்ற நிலையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை, போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கான எதிர்ப்புடன் இணைக்கின்ற ஒரு சோசலிசத் தலைமையை, சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதன் மூலமாக, இந்தப் புரிதலானது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டாக வேண்டும்.