Print Version|Feedback
Hundreds of thousands demand strike action in the US
அமெரிக்காவில் ஆயிரக் கணக்கானவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை கோருகின்றனர்
Jerry White
1 October 2018
அமெரிக்க செய்தி ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், உச்சநீதிமன்றத்திற்கு பிரட் கவனோ (Brett Kavanaugh) இன் நியமனத்தை செனட் உறுதிப்படுத்திய தரந்தாழ்ந்த சம்பவத்துடன் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினை ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒளிபரப்பு சேனலிலும் நிரம்பி வழிவதுடன், ஞாயிறன்று காலை செய்தி வலையமைப்பு நிகழ்ச்சிகளுக்குரிய ஒரே விடயமாக இருந்தது.
கவனோவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் மீது ஒருங்குவிவதற்கான ஜனநாயகக் கட்சியின் அடிப்படை நோக்கம், WSWS விளக்கி உள்ளவாறு, ட்ரம்ப் நிர்வாகம் மீதான மக்கள் எதிர்ப்பைச் சுரண்டுவதற்கும் மற்றும் போர், தணிக்கை, சமூக சமத்துவமின்மை மீதான ஜனநாயகக் கட்சியின் சொந்த திட்டநிரலுக்கு அதை அடிபணிய செய்வதற்குமாகும். அமெரிக்க சமூகத்தை பிளவுபடுத்துவதில் வர்க்கம் அல்ல, இனம் மற்றும் பாலினமே மையத்தில் உள்ளன என்ற ஒரு பொய்யை இதற்காக முடிவில்லாமல் ஊக்குவிக்க வேண்டியுள்ளது.
இந்த நோக்கம் ஏதோவிதத்தில் சமூக மற்றும் அரசியல் யதார்த்தத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பி, மூடிமறைப்பதற்காகும். சமூக மற்றும் அரசியல் யதார்த்தம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அனைத்திற்கும் மேலாக வர்க்க பதட்டங்கள் மற்றும் மோதல்களின் அதிகரிப்பால் குணாம்சப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் செல்வவளத்தை முன்பில்லாத விதத்தில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பெரும் பணக்காரர்களுக்கு கைமாற்றுவதற்காக ஆளும் வர்க்கத்தால் 2008 பொறிவு பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர்கள், அதற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், வர்க்கப் பிரச்சினைகள் மீது தொடர் வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருந்திரளான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம், அர்ஜென்டினாவில் தொழிலாளர்கள் மவ்ரீசியோ மாக்ரியின் வலதுசாரி அரசாங்கத்திற்கும் எதிராகவும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அவர்களின் நான்காவது பொது வேலைநிறுத்தைத் தொடங்கியபோது அர்ஜென்டினாவின் பிரதான நகரங்கள் ஸ்தம்பித்தன. வியாழன் மற்றும் வெள்ளியன்று, ஆறு ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக் கணக்கான விமானிகளும் விமானச் சேவை சிப்பந்திகளும் ரைன்எயர் விமானச் சேவை நிறுவனத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்தினர். பின்லாந்தில் 30,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள், வேலைநீக்கத்தைச் சுலபமாக்கும் அரசாங்க திட்டங்களை எதிர்க்க செவ்வாயன்று வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நைஜீரிய தொழிலாளர்கள் ஞாயிறன்று முடிவுற்ற நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தி இருந்தனர், அது பள்ளிகள் மற்றும் பொது போக்குவரத்தை முடக்கியதுடன், தொழிற்சங்கங்கள் அந்த வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதற்கு முன்னதாக அது எண்ணெய் தொழில்துறைக்குப் பரவ அச்சுறுத்தியது. அந்த தொழிலாளர்கள் அவர்களின் தற்போதைய மாதாந்தர குறைந்தபட்ச கூலியை 18,000 நைராவில் (49 அமெரிக்க டாலர்) இருந்து 45,000 மற்றும் 65,000 நைராவுக்கு (124-179 அமெரிக்க டாலர்) இடையே அதிகரிக்க கோரினர்.
அமெரிக்காவில், நிஜமான கூலிகளின் வீழ்ச்சி, அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் படுமோசமான வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தமளித்து வருகின்றனர், அதேவேளையில் ஆயிரக் கணக்கானவர்கள் நடந்து கொண்டிருக்கும் வேலைநிறுத்தங்களில் பங்கெடுக்கின்றனர்.
சிக்காகோவில், 4,000 க்கும் அதிகமான ஹோட்டல் தொழிலாளர்கள் கண்ணியமான கூலிகள் மற்றும் ஆண்டு முழுவதற்குமான மருத்துவ கவனிப்பைக் கோரி, அவர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர், இது செப்டம்பர் 7 இல் தொடங்கியது. Hilton நிறுவனத்துடன் ஒரு தீர்வு எட்டப்பட்டதாக ஞாயிறன்று UNITE HERE சங்கம் அறிவித்த பின்னரும், 11 ஹோட்டல்களில் அந்த வெளிநடப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹவாய் இல் உள்ள Waikiki மற்றும் Maui இல், மற்றும் சான் பிரான்சிஸ்கோ, போஸ்டன், டெட்ராய்ட் மற்றும் பிற நகரங்களிலும் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் குழுமமான மாட்ரியட் இன்டர்நேஷனலில் மற்றொரு 8,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அங்கீகரித்துள்ளனர்.
சரக்கு கிடங்கு தொழிலாளர்களும் பாரவூர்தி ஓட்டுனர்களும் மருத்துவக் காப்பீடு, எரிபொருள் செலவுகள், பாரவூர்திக்கான கட்டணம் மற்றும் பழுதுகளுக்கு அவர்களே பணம் செலுத்த நிர்பந்திக்கும் "சுதந்திர ஒப்பந்ததாரர்களாக" வைத்திருப்பதிலிருந்து முழு நேர அந்தஸ்திற்கு மாற்றுமாறு கோருவதற்காக, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் லாங் பீச் துறைமுகங்களில் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் தொடங்க இருக்கிறார்கள்.
இண்டியானா, இலினோய், பென்சில்வேனியா, மிச்சிகன், அலபாமா மற்றும் பிற மாநிலங்களிலும் உள்ள US Steel மற்றும் ArcelorMittal ஆலையின் 30,000 க்கும் அதிகமான உருக்குத்துறை தொழிலாளர்கள், அதிகளவில் இலாபமீட்டும் இந்த உருக்கு நிறுவனங்களால் கூலிகள் மற்றும் மருத்துவச் சலுகைகள் மீது விட்டுக்கொடுப்புகளை அதிகரிக்க கோரும் கோரிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்திற்கு அதிகரித்தளவில் ஏற்கனவே வாக்களித்த இரண்டரை இலட்ச UPS தொழிலாளர்கள், Teamsters சங்கம் கையெழுத்திட்ட பரவலாக வெறுக்கப்பட்ட தொழிலாளர் உடன்படிக்கை மீது இவ்வாரம் வாக்களிப்பை நிறைவு செய்ய உள்ளனர், இச்சங்கம் பகுதி-நேர தொழிலாளர்களுக்கு வறிய கூலிகளைத் தக்க வைத்துள்ளதுடன், வினியோக டிரக் ஓட்டுனர்களுக்கு புதிய விதமான பகுதி-நேர அந்தஸ்துடன் கூடிய குறைவூதியத்தை நீடிக்கிறது.
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பள்ளிக்கல்வி மாவட்டமான லாஸ் ஏஞ்சல்ஸில் 33,000 ஆசிரியர்களும் உதவி பணியாளர்களும் ஒரு வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்ததும், ஒருங்கிணைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரியர் சங்கம் (UTLA) மத்தியஸ்தம் செய்ய உடன்பட்டது. இந்த நடவடிக்கையானது, இந்தாண்டு தொடக்கத்தில் மேற்கு வேர்ஜினியா, ஆக்லஹாமா, அரிசோனா, கொலொராடோ, கென்டக்கி மற்றும் பிற மாநிலங்களில் நடந்த மாநிலந்தழுவிய வேலைநிறுத்தங்கள் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் ஆசிரியர் வேலைநிறுத்தங்களின் ஓர் அலையைத் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க மருத்துவமனை குழுமம் (HCA Healthcare) உடன் இணைந்துள்ள 15 மருத்துவமனைகளில் ஏழாயிரம் பதிவுசெய்த செவிலியர்கள், பணியாளர்களது எண்ணிக்கையை உயர்த்தவும் மற்றும் கண்ணியமான சம்பளங்கள் வழங்கவும் கோருவதற்காக புளோரிடா, மிசிசிப்பி, கன்சாஸ், டெக்சாஸ் மற்றும் நெவாடா மருத்துவமனைகளில் வேலைநிறுத்தத்தில் இறங்க பெருவாரியாக வாக்களித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள செவிலியர்களின் உதவியாளர்கள், சுவாச சிகிச்சையாளர்கள் மற்றும் பிற நோயாளிகளது பராமரிப்பு தொழிலாளர்களும் பணிகளை துணை-ஒப்பந்தத்திற்கு விடுவது மீதும் பிற பிரச்சினைகள் மீதும் வேலைநிறுத்தம் செய்ய அக்டோபர் 9 மற்றும் 10 இல் வாக்களிப்பார்கள். 4,000 செவிலியர்களில் 94 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்ததும், மிச்சிகன் பல்கலைக்கழக தொழில்சார் செவிலியர் கவுன்சில் புதிய உடன்படிக்கை மீது உடன்பாடு எட்டப்பட்டதாக வாரயிறுதி வாக்கில் அறிவித்தது.
பியட் கிறைஸ்லர் நிறுவனத்தின் இண்டியானா, கொகொமோ மின்பிரிவு ஆலைகளில் ஏழாயிரம் தொழிலாளர்கள் 10 வாரங்களுக்கு முன்னர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான தீர்க்கப்படாத 200 புகார்கள் மீது வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) தொழிலாளர்களை வேலையை தொடர வைத்துள்ளதோடு, அச்சங்கத்தின் உள்ளூர் பிரிவு 685 இன் தலைவர் ரிக் வார்ட் அறிவிக்கையில், “வேலைநிறுத்த வாக்குகள் மீது காலவதி தேதி இல்லை,” என்று அறிவித்தார்.
தொழிலாளர்கள் தரப்பிலிருந்து, வேலைநிறுத்த வாக்குகள் போராடுவதற்கு அதிகரித்து வரும் போர்குணத்தை மற்றும் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறது. தொழிற்சங்கங்களின் பாகத்தில், இந்த வாக்குகள் கொதிப்பை அடக்குவதற்கும் எதிர்ப்பைத் தணிப்பதற்குமான ஒரு வழியாக உள்ளன. சங்கங்கள் எந்தவொரு போராட்டங்களையும் முன்னெடுப்பதற்குப் பதிலாக, சரிந்து வரும் வாழ்க்கை தரங்கள் மீதும் மருத்துவக் கவனிப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் வெட்டப்படுவதன் மீதும் நிலவுகின்ற தொழிலாளர்களின் கவலைகளை ஜனநாயகக் கட்சி தீர்த்து வைக்கும் என்ற மோசடியான வாதத்தின் அடிப்படையில், இந்த அதிகரித்து வரும் எதிர்ப்பை அவை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்ப முயன்று வருகின்றன.
ஆசிரியர்களுக்கான அமெரிக்க சம்மேளனம் (AFT) தலைவரும், ஜனநாயக தேசிய குழுவின் முன்னணி பிரமுகருமான ராண்டி வென்கார்டென் அறிவிக்கையில், இந்த “வெளிநடப்புகளை" இந்த நவம்பரில் "வாக்குச்சாவடிகளுக்கான உள்-நடப்புகளாக திருப்புவதே" சங்கத்தின் நோக்கம் என்றார். AFT உம் மற்றும் தேசிய கல்வித்துறை கூட்டமைப்பும் இந்தாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களை விற்றுத் தள்ளிய நிலையில் இவற்றின் பிரதான கோஷம், “நவம்பரை நினைவில் வைத்திருங்கள்" என்பதாக இருந்தது.
இவ்வாரம், சேவை பணியாளர்கள் சர்வதேச சங்கம் (SEIU) நாடெங்கிலுமான பல விமான நிலையங்களில் சமையல்காரர்கள், கணக்கர்கள், வாயிற்காவலர்கள் மற்றும் விமானச் சேவை தொழிலாளர்களை நோக்கி மோசடியாக "வேலைநிறுத்தத்திற்கு" அழைப்புவிடுத்தது. வறிய கூலிகள், பகுதி-நேர தொழிலாளர் அந்தஸ்து, மருத்துவக் காப்பீடு இல்லாதிருப்பது ஆகிய நிஜமான பிரச்சினைகளை இத்தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற நிலையில், SEIU இந்த விடயங்களை புளோரிடா மற்றும் விஸ்கான்சின் போன்ற களம் காணும் மாநிலங்கள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்குகளைப் பெறுவதற்கான பிரச்சார முயற்சியாக திருப்பி வருகிறது.
இது, சிக்காகோவில் தொழிற்சங்கத்துடன் அணிசேர்ந்த "15 டாலருக்கு போராடுவோம்" (Fight for $15) பிரச்சாரக் குழு இம்மாத தொடக்கத்தில் மெக்டொனால்டின் தலைமையகங்களில் ஒழுங்கமைத்த சிறிய போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறது, இக்குழு பாலியல் துன்புறுத்தல் மற்றும் வேலையிடத்தில் ஏனைய துஷ்பிரயோகங்கள் மீதான நிஜமான கவலைகளைத் தீர்க்க சங்கங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் ஆழந்த பிற்போக்குத்தனமான #MeToo குழுவை நோக்கி திரும்ப வேண்டுமென துரித உணவு தொழிலாளர்களை வலியுறுத்தியது.
ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதன் மூலமாக தொழிலாளர்களும் இளைஞர்களும் ட்ரம்ப் நிர்வாகத்தை எதிர்க்க முடியுமென பெருநிறுவன-சார்பு தொழிலாள வர்க்க விரோத தொழிற்சங்கங்கள் வாதிடுகின்றன. முடிவில்லா போர்கள், நிஜமான வருவாயில் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரியளவில் செல்வவளத்தை பணக்காரர்களுக்குக் கைமாற்றியதை மேற்பார்வை செய்த ஒபாமா நிர்வாகத்தின் எட்டாண்டுகள் தான், முதலிடத்தில் இருந்து ட்ரம்புக்கு வழிவகுத்தது என்பதை தொழிலாளர்கள் மறுந்துவிடுவார்கள் என்று அவை அனைத்தும் நம்புகின்றன.
ஜனநாயகக் கட்சியும், முன்னாள்-சிஐஏ முகவர்கள் மற்றும் இராணுவ வேட்பாளர்களின் அதன் பரிவாரங்களும் சாத்தியமான அளவுக்கு மிகவும் வலதுசாரி, இராணுவவாத அடித்தளத்தின் மீதிருந்து ட்ரம்பை எதிர்த்து வருகின்றன. ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட்டதில் இருந்து அண்மித்து இந்த இரண்டு ஆண்டுகளில், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் செல்வாக்கான பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்து வருகின்ற ஜனநாயகக் கட்சி "ரஷ்யா குறுக்கிட்டதாக" ஆதாரமற்ற வாதங்களின் மீது எதிர்ப்பை ஒருமுனைப்படுத்த முனைந்துள்ளது, இதேயே இந்த இடைத்தேர்தல்களிலும் தொடர்புபடுத்தி மீண்டும் கூறி வருகிறது. பாலினம் மற்றும் இன அடையாளம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளின் பரந்த ஆதரவை அணித்திரட்டுவதற்காக, #MeToo பிரச்சாரம் மற்றும் கவனோ விசாரணைகளை ஜனநாயகக் கட்சி பயன்படுத்தி உள்ளது, அதேவேளையில் அது முறையான விசாரணை நடைமுறைகளுக்குக் குழிபறிப்பதற்கான மற்றும் ஜனநாயக உரிமைகளைக் கூடுதலாக ஒழிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் ஆளும் வர்க்கத்தின் எந்த கன்னைக்கும் அடிபணிய செய்யப்படக் கூடாது. முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடியில் வேரூன்றிய வர்க்க மோதலின் அபிவிருத்திக்கு, பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த, வேலையிடங்கள், ஆலைகள் மற்றும் அண்டை அயலார்களிடையே, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, சாமானிய குழுக்களாக போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகும்.
இது ஒரு சோசலிச, புரட்சிகர மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிர்ப்பாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும்.
ஜனநாயகக் கட்சிக்கு ஒரு "முற்போக்கான" முகத்தை வழங்குவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியானது, அக்கட்சி ஒரு முதலாளித்துவ போர்-ஆதரவு கட்சி என்பதை விரைவிலேயே அம்பலப்படுத்தும். இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் தீவிரப்படலையும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி போராடி வரும் ஓர் உண்மையான சோசலிச மாற்றீட்டிற்கான அவர்களின் ஆதரவையும் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.