Print Version|Feedback
දෙමල දේශපාලන සිරකරුවන් ආහාර වර්ජනයක
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
By Sakuna Jayawardane
12 October 2018
அநுராதபுரம், வெலிக்கடை மெகசின் மற்றும் தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பல வாரங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இணையாக, இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி பல நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்த உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டங்களும் அவர்கள் குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்குகளோ இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையிலேயே நடைபெற்றுள்ளன.
செப்டம்பர் 14 அன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள எட்டு கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதத்தில் இன்னும் நான்கு பேர் இணைந்துகொண்டனர். வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை வரை இந்த உண்ணாவிரதம் பரவியதோடு அங்கு அக்டோபர் 3 தொடக்கம் 43 கைதிகள் உண்ணாவிரத்தை தொடங்கினர்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்ளின் படி, 107 அரசியல் கைதிகள் வெலிக்கடை, நீர்கொழும்பு, மஹர, அநுராதபுரம், மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை உட்பட 10 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏழு ஆண்டுகள் குற்றச்சாட்டுக்கள் இல்லாமலும், 13 ஆண்டுகள் வழக்குகள் முடிக்கப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் இதில் அடங்குவர். 46 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், வழக்குகள் முடிக்கப்படவில்லை. இவர்களில் 16 பேர் 10-13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத அதே வேளை, அவர்களில் ஆறு பேர் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்த அரசியல் கைதிகளில், 37 பேர் குற்றவாளிகளாக ஆகியுள்ளதோடு 17 பேருக்கு மேன் முறையீட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
மக்களுக்கு எதிராக முதலாளித்துவ அரசாங்கங்களால் கொண்டு வரப்பட்டுள்ள ஜனநாயக விரோத பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே இந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் படி, ஒரு நபரை 18 மாதங்களுக்கு நீதிமன்றத்திற்கு முற்படுத்தாமல் பொலிஸ் காவலில் வைத்திருக்க முடியும்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், "பயங்கரவாத சந்தேக நபர்களாக" முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலிகள் பயங்கரவாத வழிமுறைகளைப் பயன்படுத்தியிருந்தாலும், அது ஒரு அரசியல் அமைப்பாகும். இந்த அரசியலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கைதிகளாவர். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அரசியல் கைதிகள் என்று யாரும் கிடையாது என்று தொடர்ந்தும் கூறி வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி. உடனான சந்திப்பில், இலங்கையில் அரசியல் கைதிகளே இல்லை குறிப்பிட்டார். அக்டோபர் 4 அன்று கண்டியில் சட்டத்தரணிகள் சங்கத்தினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நீதித்துறை அமைச்சர் தலாத்தா அத்துகோரல, "இலங்கையில் எந்த ஒரு அரசியல் கைதியும் இல்லை" என்று கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரனையும் சந்தித்தபோது இது தொடர்பாக பேசியதாக அவர் தெரிவித்தார். தமிழ் கூட்டமைப்பு இந்த கூற்றை எதிர்த்ததற்கான எந்த பதிவும் இல்லை.
புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதன் நோக்கம், புலிகளின் தோற்றத்துக்கும் போருக்குமான உண்மையான காரணங்களை மூடி மறைப்பதே ஆகும். அதாவது கொழும்பு சிங்கள முதலாளித்துவ வர்க்கம், ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு இழைத்த பாரபட்சங்களே புலிகளின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வழி வகுத்தது என்பதை மூடி மறைப்பதே ஆகும்.
பயங்கரவாத வழிமுறைகளைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவமும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக அதை நன்கு பயன்படுத்திக் கொண்டது. 2009 மே மாதம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது இலங்கை இராணுவத்தால் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.
2018 வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2016க்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதே போல், தங்கள் அரசியல் எதிரிகளை நசுக்குவதற்கும் அரசாங்கங்கள் இந்த சட்டத்தை பயன்படுத்திக்கொண்டன. யுத்தம் முடிவடைந்ததில் இருந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இராணுவம் இன்னும் வடக்கு கிழக்கில் இருந்து அகற்றப்படவில்லை. இது இனவாத அடிப்படையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் மேலும் நசுக்குவதற்கு கொழும்பு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முனைவதையே வெளிப்படுத்துகிறது.
2015 முதலே, அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, அத்துடன் சகல தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் இந்த எதிர்ப்புக்களை முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவே பயன்படுத்திக்கொண்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அவருக்கு ஆதரவளிப்பதற்காக முன்வைத்த பத்து நிபந்தனைகளில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதும் அடங்கும். அதன் பின்னர் ஜூலை மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், விரைவில் தமிழ் கைதிகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க உறுதியளித்துள்ளார். இத்தகைய அரசாங்க வாக்குறுதிகளைக் காட்டி மக்களை ஏமாற்றி வருவதே அவர்களது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில வாரங்களாக, உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கொழும்பில் ஜனாதிபதி செயலக முன்றல், அநுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய தாக்குதல்களுக்கும் எதிராக வளர்ச்சியடைந்து வரும் மக்களின் எதிர்ப்பை, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் வழியில் ஆவியாக்கி விடுவதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கமாக இருந்தன.
இந்த எதிர்ப்பு அரசியலின் ஒரு பகுதியாக, கொழும்பில் நடந்த பிரச்சாரத்தின் முடிவில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு மனு கையளிக்கப்பட்டதுடன், வவுனியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ் கட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், "அரசாங்கம் அரசியல் கைதிகள் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமுமே இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்த அமைப்புக்கள் அனைத்தும், எதிர்ப்பு அரசியலுக்குள் மக்களை அடக்கி வைத்து அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அவர்களை அடிபணிய வைப்பதற்கே செயல்படுகின்றன.
இந்த எதிர்ப்பு அரசியலை நிராகரித்து, அரசாங்கத்தின் தாக்குதல்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும், அரசாங்கத்திற்கும் ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான அரசியல் போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டும். முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுக்கும் தமிழ் விரோத பாகுபாடு மற்றும் இனவாத யுத்தத்திற்கும் பலியாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்! என்பது இந்த போராட்டத்தின் அடிப்படை கோரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு நீதித்துறை அமைச்சரின் பிரதிபலிப்பு, ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான ஆளும் வர்க்கத்தின் கொடூரமான திட்டங்கள் பற்றி தொழிலாள வர்க்கத்திற்கும் வெகுஜனங்களுக்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகும்.