Print Version|Feedback
Pentagon report points to US preparations for total war
முற்றுமுழுதான போருக்கான அமெரிக்க தயாரிப்புகளை பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது
By Andre Damon
11 October 2018
கடந்த இரண்டு வாரங்களாக, எந்தவொரு ஊடகத் தகவல்களும் இல்லாமல், உலகில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணுவாயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் வெளிப்படையான இராணுவ மோதலைத் தொடுப்பதற்கு அமெரிக்கா கணிசமானளவுக்கு நெருங்கிவிட்டது.
அக்டோபர் 3 அன்று, பனிப்போருக்கு பின்னர் முதல் முறையாக, ரஷ்யாவை நேரடியாக தாக்குவதற்கு அமெரிக்கா அச்சுறுத்தியது. அணுசக்தி கடற்படை ஏவுகணையை அபிவிருத்தி செய்வதன் மூலம் மத்திய தூர அணுசக்தி (Intermediate Range Nuclear Forces - INF) உடன்படிக்கையை அமெரிக்கா மீறி வருகிறது என நேட்டோவுக்கான ஐ.நா. தூதர் கே பெய்லி ஹட்சிசன் குற்றம்சாட்டியதுடன், தாக்குதலுக்கு இவ்ஆயுதங்களை “வெளியில் எடுக்க” வாஷிங்டன் தயாராகி வருவதாகவும் கூறினார்.
தென் சீனக் கடலில் “கடல்வழி சுதந்திரம்” என்றழைக்கப்படும் நடவடிக்கையை ஒரு அமெரிக்க அழிப்புக்கப்பல் மேற்கொண்ட நிலையில், அதனுடனான ஒரு மோதல் போக்கை சீனப் போர்க்கப்பல் உருவாக்கிய பின்னர் இந்த அறிக்கை மூன்றே நாட்களில் வெளியாகி, பல தசாப்தங்களாக பசிபிக் பகுதியில் நீடிக்கும் தீவிர மோதலையும், மற்றும் நிகழ வாய்ப்புள்ள மிகக் கொடூரமான இராணுவ மோதலையும் தவிர்ப்பதற்கு அமெரிக்கக் கப்பலை தந்திரோபாயமாக கட்டாயப்படுத்துகிறது.
அத்தகைய மயிர் கூச்செறியும் சம்பவங்களுக்குப் பின்னால், அமெரிக்க பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்வில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஒரு “சரிக்குச்சரியான” எதிரியுடனான ஒரு பெரும் போரைத் தொடுக்கும் வகையில் அமெரிக்க பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்ய தீவிரமான, நீண்டகால தயாரிப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
“அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தளம் மற்றும் விநியோகச் சங்கிலி நெகிழ்ச்சியை மதிப்பிடுதல் மற்றும் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் பென்டகன் கடந்த வாரம் வெளியிட்ட 146 பக்க ஆவணத்தின் முக்கிய உள்ளடக்கம் இது தான். பிராந்திய மோதல்களை தனிமைப்படுத்துவதற்காக மட்டும் என்றல்லாமல், சாத்தியப்படும் தேசிய சர்வாதிகார நிலைமைகளின் கீழ் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான ஒரு பாரிய, நீண்டகால யுத்த முயற்சியைத் தொடங்கவும் வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
டெக்சாஸ் மாகாண ஃபோர்ட் வொர்த் நகரத்தில் F-35 Lightning II கூட்டுத் தாக்குதல் போர் விமானங்கள் தயாரிப்பில் மார்டின் ஊழியர்கள் [பாதுகாப்பு ஒப்பந்த மேலாண்மை நிறுவனத்திற்கு நன்றி]
ஒரு “சரிக்குசரியான எதிரிக்கு” எதிராக “இன்றிரவு போராட” தயாரிப்பு செய்து வருவதாக அமெரிக்க இராணுவம் கூறிய இலக்கை எட்டுவதற்கு அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு முக்கிய மறுசீரமைப்பு தேவை என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “பெரும் வல்லரசு போட்டிக்காக,” அமெரிக்கா “மறுஆயுதமயமாக்கம்” செய்ய வேண்டும் என்றும் இந்த ஆவணம் தெரிவித்துள்ளது.
“எங்கள் போர்விமானங்கள் சார்ந்திருக்கும்” “வழித்தடம் மற்றும் அமைப்புமுறைகளை” இந்த அறிக்கை உருவாக்குகிறது என “அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தளம்” சுட்டிக்காட்டுகிறது. இந்த சிக்கல் அரசாங்கத்தை மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்கள், அத்துடன் “ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான (R&D) அமைப்புகள்” மற்றும் “கல்வி நிறுவனங்கள்” என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தையும் உள்ளடக்கியுள்ளது.
“கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிலவும் அமெரிக்க உற்பத்தியின் அரிப்பு… தேசிய பாதுகாப்புத் தேவைகளை பூர்த்திசெய்யும் அமெரிக்க உற்பத்தியாளர்களின் திறனை குறைத்து மதிப்பிட அச்சுறுத்துகிறது. தற்போது, சில பொருட்களுக்கு ஒற்றை உள்நாட்டு ஆதாரங்களையும் மற்றும் ஏனைய பொருட்களுக்கு வெளிநாட்டு விநியோக சங்கிலிகளையும் நாம் நம்பியிருக்கிறோம், அத்துடன் உள்நாட்டில் இராணுவத்திற்கு தேவையான சிறப்பு கூறுகளை தயாரிக்கவியலாத சாத்தியத்தையும் நாம் எதிர்கொள்கிறோம்” என்று இது எச்சரிக்கிறது
இந்த மூலோபாய குறைபாட்டை சரிசெய்ய, “ஒரு துடிப்பான உள்நாட்டு உற்பத்தி துறைக்கும், ஒரு திடமான பாதுகாப்பு தொழில்துறை தளத்திற்கும் மற்றும் நெகிழ்திறன் மிக்க விநியோக சங்கிலிக்கும் ஆதரவு அளிப்பது என்பது தேசிய முன்னுரிமையாகும்” என்ற விதத்தில் இந்த அறிக்கை நிறைவடைகிறது.
சீனாவை வெளிப்படையாக இலக்கு வைத்து இந்த அறிக்கை, “சீனாவின் பொருளாதார உத்திகள், ஏனைய நாடுகளின் தொழில்துறை கொள்கைகளின் பாதகமான விளைவுகளை உள்ளடக்கி, அமெரிக்க தொழில்துறை தளத்திற்கு கணிசமான அச்சுறுத்தல்களை விடுப்பதாகவும், மற்றும் அதன்மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு அதிகரித்துவரும் அபாயத்தை உருவாக்குவதாகவும்” அறிவிக்கிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்க உற்பத்தி மேலாதிக்கத்தை ஊக்குவித்தல் என்பது இராணுவ மேலாதிக்கத்தை ஊக்குவிப்பதையே முக்கியமாக்குகிறது.
அமெரிக்க இலாபத்தின் ஒரு பரந்த பகுதியின் ஆதாரமாக இருக்கும் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப துறையை பாதுகாக்கும் நிர்வாகத்தின் முயற்சிகளுடன் கனரக தொழிற்துறையின் பாதுகாப்பும் இணைந்தே பயணிக்கிறது.
அறிக்கை குறிப்பிடுவது போல, “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை தொழில்துறை முன்னெடுப்புகளில் ஒன்றான சீனத் தயாரிப்பு 2025 (Made in China 2025) என்பது, செயற்கை நுண்ணறிவு, அளவுகளை மதிப்பிடல் (quantum computing), இயந்திர மனிதமயமாக்கம் (robotics), தன்னியக்கம் மற்றும் புதிய ஆற்றல் கொண்ட வாகனங்கள், உயர் செயல்திறன் மிக்க மருத்துவ சாதனங்கள், உயர் தொழில்நுட்ப கப்பல் கூறுகள், மற்றும் தேசிய பாதுக்காப்புக்கு முக்கியமான ஏனைய வளர்ந்து வரும் தொழில்கள் போன்றவற்றை இலக்கு வைக்கிறது.”
“சீனாவின் ஆய்விற்கும் அபிவிருத்திக்குமான செலவினமும் அமெரிக்காவைப் போன்று விரைவாக மாறி வருகிறது என்பது ஒருவேளை வெகு விரைவில் சமநிலையை எட்டுவதற்கு வாய்ப்பாகலாம்” என இது எச்சரிப்பதுடன், வர்த்தக வான்வழி ஆளில்லா விமான (drone) சந்தை மீது சீன உற்பத்தியாளரான DJI ஆதிக்கம் செலுத்துகிறது என்ற உண்மையையும் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க உயர் தொழில்நுட்ப துறைகளை பாதுகாக்கும் மற்றும் விஸ்தரிக்கும் பென்டகனின் திட்டங்கள் என்பவை, விசா கட்டுப்பாடுகள் மூலமாக அமெரிக்க பல்கலைகழகங்களில் சீன மாணவர்களின் சேர்க்கையை மட்டுப்படுத்தும் நிர்வாக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் உள்ளடக்கியது. “அமெரிக்காவில் 25 சதவிகித STEM (Science, Technology, Engineering and Mathematics) பட்டதாரிகள் சீன தேசத்தவர்களாக உள்ளனர் என்ற நிலையில்… சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ எழுச்சிக்கு முக்கிய அம்சங்களாக அமெரிக்க பல்கலைகழகங்கள் உள்ளன” என்று அறிக்கை புகார் கூறுகின்றது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “இராஜதந்திரம், தகவலளிப்பு, பொருளாதாரம், நிதி, உளவுத்துறை, சட்ட அமலாக்கம் மற்றும் இராணுவம் போன்ற தேசிய அதிகாரத்தின் பல்வேறு கூறுகளின் இசைவான ஒருங்கிணைப்புக்கு” அழைப்பு விடுக்கும் சமீபத்திய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறித்துக் காட்டப்பட்ட கருத்துருவின் உறுதியான வெளிப்பாடாகவே இந்த ஆவணத்தின் பார்வை உள்ளது.
நவீன ஆயுத முறைகளை அபிவிருத்தி செய்ய பென்டகனின் பெரும் ஒப்பந்தங்களுக்காக போராடி வந்த அமெரிக்க பெருநிறுவன தொழில்நுட்பத்துறை தான் இந்த சமன்பாட்டின் முன்னணி கூறாக உள்ளது. இந்த செலுத்துதல்கள், மற்றும் சர்வதேச போட்டியாளர்களிடமிருந்து தீவிர பாதுகாப்பு போன்றவற்றிற்கு பதிலீடாக, அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கோரிக்கைகளுடன் ஒத்துழைப்பதில் “தணிக்கையை நோக்கிய மாற்றம்” என்றழைக்கப்பட்ட உட்கசிந்த கூகுள் ஆவணத்தை செயல்படுத்த அவர்கள் நெருக்கமாக வேலை செய்தனர்.
அரசின் அடக்குமுறை எந்திரம் மற்றும் பெருகிவரும் சக்திவாய்ந்த ஏகபோகங்களுக்கு இடையில் வளர்ந்து வரும் இணைவின் தர்க்கம் என்பது, “ஒட்டுமொத்த யுத்தம்” மற்றும் ஒரு “சர்வாதிகார” சமுதாயம்” இவற்றிற்கு இடையேயான தேவையான தொடர்பாகும், இதில் முக்கிய அரசியலமைப்பு விதிமுறைகள் முற்றிலும் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது.
அத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய இலக்காக, “தேசிய பாதுகாப்பை” ஊக்குவித்தல் என்ற பெயரில் வர்க்கப் போராட்டத்தை பலவந்தமாக ஒடுக்குவது என்பது இருக்கும். அமெரிக்க தொழில்துறை தளத்தை மட்டுமல்லாது, போர்க்கால பொருளாதாரத்தின் கணிசமான பகுதிகளை முடக்கும் திறனுள்ள சக்திவாய்ந்த தொழிலாளர் சக்தியை கொண்ட பெரும் தளவாட நிறுவனமான UPS இல் தொழிலாளர்களின் சலுகைகளுடன் கூடிய ஒப்பந்தத்தை நிராகரித்தது உள்ளிட்ட, உலகளாவிய அமெரிக்க இராணுவவாத விரிவாக்கம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பெரும் எழுச்சியுடன் ஒரேகாலப்பகுதியில் நிகழ்கின்றது.