Print Version|Feedback
Murder in Istanbul
இஸ்தான்புல் படுகொலை
Bill Van Auken
11 October 2018
பிரபல சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்திற்கு சென்ற பின்னர், அக்டோபர் 2 இல் காணாமல் போனது குறித்து மேற்கொண்டு கூடுதல் விபரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த உலகளாவிய உள்நோக்கங்களுடன் ஒரு பயங்கர குற்றம் நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகி வருகிறது.
கஷோகி காணாமல் போன அதே நாளில் 15 உறுப்பினர்களின் சவூதி படுகொலைப் படை ஒன்று அடாடுர்க் விமான நிலையம் வந்தடைவதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை துருக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள், உளவுத்துறை நடவடிக்கையாளர்கள் மற்றும் சவூதி முடியாட்சியின் உயரடுக்கு தனிநபர் பாதுகாவலர் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கி இருந்தனர். துருக்கிய அதிகாரிகளின் தகவல்படி, அவர்களில் ஒரு தடவியல் நிபுணரும் இருந்தார், மேலும் அவர் எலும்பு-அறுவை கருவியுடன் வந்திருந்ததாக செய்திகள் தெரிவித்தன.
ஒரு துருக்கிய பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த கஷோகி அவருக்கு அவசியப்பட்ட ஆவணங்களைக் கோருவதற்காக ஒரு வாரத்திற்கு முன்னரே அத்தூதரகத்திற்கு விஜயம் செய்திருந்ததாக துருக்கி ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. அக்டோபர் 2, மதியம் 1 மணிக்குத் திரும்ப வருமாறு அவருக்குக் கூறப்பட்டிருந்தது. அந்த 15 அரசு படுகொலையாளர்கள் வந்திருந்ததால், அலுவலகத்திலிருந்த பணியாளர்கள் மதியத்திற்குப் பின் வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். பெயர் வெளியிடவியலாத நிலைமையின் கீழ் பேசிய துருக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் விபரங்கள்படி, கஷோகி துருக்கிய அலுவலகத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார், பின்னர் அவர் சடலம் அறுவை இயந்திரம் கொண்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டது.
இந்த குற்றத்தின் திமிர்த்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் காரணமாக, அத்துடன் கண்கூடாக பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தின் காரணமாக, அது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கஷோகியின் பத்திரிகை தொழில் வாழ்க்கையானது, சவூதி அரசாட்சியின் மிகவும் சக்தி வாய்ந்த அதிகாரிகள் மற்றும் பில்லியனர்கள் சிலருடனான நெருக்கமான தொடர்புகளுடன் சேர்ந்து, சவூதி ஆளும் வட்டாரத்தின் ஓர் உள்நபர் என்றளவில் இருந்துள்ளது. நீண்டகால சவூதி உளவுத்துறை தலைவரும் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான இளவரசர் துர்கி பின் ஃபைசல் இன் ஓர் உதவியாளராக சேவையாற்றிய அவர், அந்த முடியாட்சிக்கும் மேற்கு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான மத்தியஸ்தராக அறியப்பட்டிருந்தார்.
செப்டம்பர் 2017 இல் நடைமுறையளவில் அந்த அரசாட்சியின் ஆட்சியாளரான மகுடம் தரிக்கவுள்ள இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் (MBS) —இவர் மேற்கத்திய ஊடகங்களால் சிறந்த "சீர்திருத்தவாதியாக" பாராட்டப்பட்டவர் என்பதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தாலும் அமெரிக்க நிதியியல் உயரடுக்காலும் உபசரிக்கப்பட்டவர்— அரச குடும்ப உறுப்பினர்கள், முக்கிய வணிக பிரமுகர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் உள்ளடங்கலாக இவர்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான அடுக்குமுறையைத் தொடங்கினார். வெளியுறவு விவகாரங்கள் குறித்து எழுதும் நியூ யோர்க் டைம்ஸின் சொல்லுதற்கரிய கட்டுரையாளர் தோமஸ் ஃபிரட்மன், இவர் ரியாத்தின் அரச மாளிகையில் இரவு விருந்து மற்றும் மது விருந்துகளை அனுபவித்தவர், அந்நேரத்தில் எழுதுகையில் "இங்கே மூன்று நாட்களில் நான் பேசியவர்களில் ஒரேயொரு சவூதியர் கூட, இந்த துஷ்பிரயோக எதிர்ப்பு முனைவுக்கு மனமுவந்து ஆதரவு அளிப்பதாக கூறியதைத் தவிர வேறொன்றும் வெளிப்படுத்தவில்லை,” என்று எழுதினார்.
கஷோகி சிறைவாசத்தைத் தவிர்ப்பதற்காக தானே முன்வந்து அமெரிக்காவில் நாடு கடந்து இருக்க முடிவெடுத்தார், இங்கே அவருக்கு வாஷிங்டன் போஸ்டில் கட்டுரை பகுதி ஒன்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதுடன், அவர் அமெரிக்க குடிமகனாக மாறுவதற்குரிய வழிமுறைகளைத் தொடங்கினார். அவர் அரசு குடும்பத்திற்குள்ளே நிலவும் பிளவுகளைப் பிரதிபலிக்கும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து மொஹம்மத் பின் சல்மானை விமர்சிப்பதற்காக அந்த கட்டுரை பகுதியைப் பயன்படுத்தினார். மிக சமீபத்தில், அவர் மொஹம்மத் பின் சல்மான் தொடங்கிய ஒரு தலையீடான யேமனுக்கு எதிராக சவூதி ஆட்சி தொடுத்த போரைக் கண்டித்து எழுதி இருந்தார்.
அவரின் சிறப்புக்களைக் குறித்து ஒருபுறம் பேசினாலும், ட்ரம்ப் நிர்வாகம், கஷோகி காணாமல் போனதன் மீது கவனம் செலுத்துவதற்கு அழைப்பு விடுக்க முற்றிலும் தயங்குவதுடன், எந்த அறிக்கை வெளியிடுவதற்கும் ஒரு வாரம் காத்திருந்தது. செவ்வாயன்று ட்ரம்ப் பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில், அந்த பத்திரிகையாளரின் கதி குறித்து “ஒவ்வொருவருக்கும் என்ன தெரியுமோ—அதாவது ஒன்றும் தெரியாது,” என்பது தான் தனக்கும் தெரியும் என்றார். இதற்கிடையே, வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ சவூதி அதன் சொந்த குற்றத்தின் மீது "முற்றிலுமாக புலனாய்வு" நடத்த ஆதரிக்குமாறு சவூதி முடியாட்சிக்கு அழைப்பு விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், கஷோகி காணாமல் போனதற்கு முன்னதாக, வாஷிங்டன் போஸ்ட், அந்த பத்திரிகையாளரைக் கடத்திச் செல்வதற்கான ஒரு திட்டத்தை வெளிப்படுத்தும் சவூதி அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க உளவுத்துறை குறுக்கீடு செய்திருந்ததாக அறிவித்திருந்த நிலையில், அவரை அகற்றுவதற்கான சவூதி திட்டங்கள் குறித்து அமெரிக்க அரசுக்குத் தெளிவாக தகவல் அளிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
விடயம் என்னவாக இருந்தாலும், சவூதி அரேபியாவின் வக்கிரமான முடியாட்சி நீண்டகாலமாக மத்திய கிழக்கு எங்கிலும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கும் அச்சாணியாக இருந்து வந்துள்ளது. அந்த ஆட்சி வழமையாக அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அமைதியான வழியில் போராடியவர்களின் தலைகளைத் துண்டித்துள்ள நிலையிலும் (2017 இல் மட்டும் வாளுக்குப் பலியானவர்கள் 150 பேர்), இத்தகைய உறவுகள் —ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி நிர்வாகங்கள் இரண்டினது கீழும்— பலமாக இருந்தது.
கஷோகி காணாமல் போவதற்கு முன்னர், ஒரு மதிப்பீட்டின்படி 30 சவூதி பத்திரிகையாளர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள், இதற்கு மேற்கத்திய சக்திகளிடமிருந்து, அவற்றில் பிரதானமாக அந்த அரசாட்சிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்கும் மற்றும் அதன் எண்ணெய் வளத்திலிருந்து இலாபம் உறிஞ்சும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை.
அமெரிக்க-சவூதி இணைப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நெருக்கமாக மட்டுமே வளர்ந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் யேமன் மக்களுக்கு எதிரான ஏறத்தாழ இனப்படுகொலைக்கு நிகரான போருக்கு அமெரிக்க உதவிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வருகின்ற அதேவேளையில், சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலை மையமாக கொண்ட ஈரானிய-எதிர்ப்பு அச்சை ஜோடிக்க முனைந்துள்ளது.
கஷோகி காணாமல் போனதற்கு வாஷிங்டனின் உத்தியோகபூர்வ விடையிறுப்பால் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டப்படுகின்ற இவற்றிற்கு இடையிலான உறவு, ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து ஈரான், சிரியா மற்றும் வெனிசூலா வரையில் அது தூக்கியெறிய முயன்று வருகின்ற அரசாங்கங்கள் அல்லது அது மூலோபாய போட்டியாளர்களாக பார்க்கின்ற அரசாங்கங்கள் நடத்தியதாக கூறப்படும் குற்றங்கள் மீதான அதன் போலியான சீற்றமும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "மனித உரிமைகள்" பாசாங்குத்தனமும் அளவிடவியலாத அதன் வெறுப்பு மற்றும் போலித்தனத்தை அம்பலப்படுத்துகின்றது.
கஷோகி விவகாரம் இன்னும் பரந்த சர்வதேச முக்கியத்துவம் கொண்டுள்ளது. அது உலக அரசியலில் ஒரு கபடத்தனமான திசை மாற்றத்திற்கு அடையாளமாக உள்ளது, இதுபோன்ற வெறுக்கத்தக்க குற்றங்கள் உலக அரசியலில் இன்னும் இன்னும் வழமையானதாக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக மாற்றப்பட்டு வருகின்றன. இது 1930 களின் இருண்ட காலங்களில் இருந்த நிலைமைகளை நினைவூட்டுகிறது, அப்போது பாசிசவாத மற்றும் ஸ்ராலினிச படுகொலை படைகள் சோசலிஸ்டுகளையும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் இருந்த ஹிட்லர் மற்றும் ஸ்ராலினின் ஏனைய எதிர்ப்பாளர்களையும் வேட்டையாடி படுகொலை செய்தன.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குழு பூமி எங்கிலும் இந்தாண்டு 48 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் —இது ஒட்டுமொத்தமாக 2017 ஐ விட 50 சதவீதம் அதிகம்— இன்னும் 60 பேர் "காணாமல் போயிருப்பதாகவும்" குறிப்பிடுகின்ற நிலையில், உலகளாவிய அரசியலின் இந்த மாற்றத்தின் விளைவுகளால் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு, பொலிஸின் மத்திய கருவியாக இஸ்ரேலியர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட இலக்கு வைத்து படுகொலை செய்யும் முறை, தொழில்துறை அளவில் வாஷிங்டனால் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" என்றழைக்கப்பட்டதில் பயன்படுத்தப்பட்டது. புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கிய கொலை செய்தல், சித்திரவதை மற்றும் "பிற நாட்டிடம் அசாதாரண ஒப்படைப்புகள்" —இதற்காக இதுவரையில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதுடன், “நிழலுலக" சித்திரவதையாளர் ஒருவர் சிஐஏ இன் இயக்குனராக மேலுயர்த்தப்பட்டுள்ளார் என்பதை கூறவும் வேண்டியதில்லை— ஒபாமாவின் கீழ் அதன் "பயங்கரவாத செவ்வாய்கிழமைகள்" என்றழைக்கப்பட்டதை வெள்ளை மாளிகை ஒழுங்கமைத்த போது அமைப்புமயப்படுத்தப்பட்டன, அதில் கோப்புகளிலிருந்து படுகொலைக்கான இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதிக்கும் அவர் உதவியாளர்களுக்கும் புகைப்படங்கள் காட்டப்பட்டது.
மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ள அமெரிக்காவின் வலிந்து தாக்கும் போர்கள், “பயங்கரவாதிகள்" என்று கருதப்பட்டவர்கள் வழமையாக படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் அமெரிக்க நலன்களின் மீதிருக்கும் ஏற்றுக்கொள்ளவியலாத தளைகளாக சர்வதேச சட்டம் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டமை என இவை துர்நாற்றம் மிகுந்த ஓர் உலகளாவிய அரசியல் சூழலை உருவாக்கி உள்ளது, இதில் கஷோகிக்கு எதிராக நடத்தப்பட்டதைப் போன்ற குற்றங்கள் நடக்கலாம் என்பது மட்டுமல்ல, மாறாக தவிர்க்கவியலாதவையாக மாறியுள்ளன.
உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் வேரூன்றிய அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் கூர்மையடைந்து வரும் வர்க்க போராட்டங்களின் முன்னால், அமெரிக்காவில் ட்ரம்ப் மேலெழுந்ததில் இருந்து, ஐரோப்பாவில் அதிவலது சக்திகள் அதிகரித்தளவில் பலமடைந்து வருவது வரையில், பிரேசிலில் ஒரு பாசிசவாத முன்னாள் இராணுவ தளபதி ஏறத்தாழ தேர்ந்தெடுக்கப்படக் கூடிய நிலைக்கு வந்திருப்பது வரையில், முதலாளித்துவ அரசியல் எதேச்சதிகாரத்தை நோக்கி வலதுக்குக் கூர்மையாக திரும்பி உள்ளது. இத்தகைய நிலைமைகளின் கீழ், இப்போதிருக்கும் அரசாங்கங்கள் மற்றும் சமூக ஒழுங்கமைப்பின் எதிர்ப்பாளர்களைக் கையாள்வதற்கான வழிவகைகளாக படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படும் முறைகள் முன்பினும் அதிகமாக மேலோங்கும்.
ஜமால் கஷோகியின் உயர்மட்ட தொடர்புகளே கூட கண்கூடாக அவரைப் பாதுகாக்க தவறிவிட்ட நிலையில் அவரின் கதியை ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நடைமுறையளவில் எந்தவொரு நாட்டிலும் அரசின் கரங்களில் தங்களை ஒப்படைத்திருப்பவர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்பகமாக எதிர்பார்க்க முடியாது.
உலகளவில் பாசிசவாதம் மற்றும் உலக போருக்குள் மீண்டும் வீழும் இந்த அச்சுறுத்தலுக்கான ஒரே பதில், சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு பாரிய புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் தான் தங்கியுள்ளது.