Print Version|Feedback
After 250,000 people march in Berlin
The way forward in the struggle against the far-right danger in Germany
பேர்லினில் 250,000 பேர் அணிவகுத்த பின்னர்
ஜேர்மனியில் அதிவலது அபாயத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்வதற்கான பாதை
Ulrich Rippert and Johannes Stern
18 October 2018
கடந்த வாரயிறுதியில், ஜேர்மனியின் பேர்லினில் அண்ணளவாக கால் மில்லியன் பேர் இராணுவவாதம், இனவாதம் மற்றும் ஜேர்மனியின் மகா கூட்டணி அரசாங்கம் தீவிர வலதை ஊக்குவிப்பதை எதிர்க்க அணிவகுத்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தவர்கள் அதை "#பிரிக்கவியலாதது" என்று வர்ணித்த நிலையில், அது 2003 ஈராக் போருக்கு எதிரான அணிவகுப்புகளுக்குப் பிந்தைய அந்நாட்டின் மிகப்பெரிய பாரிய போராட்டமாக இருந்தது.
அந்த போராட்டங்களில் காட்டப்பட்ட அறிவிப்பு பலகைகளில் பல, கைகளால் எழுதப்பட்டிருந்த நிலையில், அவற்றின் சிலவற்றில் “முஸ்லீம்கள் மீதான வேட்டையாடல் வேண்டாம்,” “நாஜிக்களுக்கு இடமில்லை,” “இனவாதம் மாற்றீடு அல்ல,” என்று எழுதப்பட்டிருந்தன. “வலதுசாரி, இனவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நல்லிணக்கம்" என்ற அறிவிப்பை ஒரு பதாகை தாங்கியிருந்தது.
உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடனான விவாதங்களில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜேர்மனியின் இரகசிய சேவையை வலதுசாரி தீவிரவாதத்தின் இரும்புகோட்டையாக வர்ணித்ததுடன், ஸ்தாபக கட்சிகள் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியை அரவணைப்பதையும் கண்டித்தனர்.
அதற்கடுத்த நாள் நடத்தப்பட்ட பவேரிய மாநில தேர்தலும், அரசியல் உயரடுக்கிற்கும் மக்களின் பரந்த பிரிவுகளின் இடதுசாரி உணர்வுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த பிளவை அடிக்கோடிட்டன. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சியும் கடந்த ஆண்டின் கூட்டாட்சி தேர்தலில் 70 ஆண்டுகளில் அவற்றின் மோசமான வாக்குகளாக படுமோசமான தேர்தல் முடிவுகளைக் கண்ட பின்னர், பவேரியா தேர்தல்களிலும் CSU மற்றும் SPD 21 சதவீத புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்து, ஏறத்தாழ முழுமையாக தோல்வியடைந்தன. பவேரியாவில் எதிர்கட்சியாக இருந்த SPD, ஆட்சியிலிருந்த CSU ஐ விட அதிக வாக்குகளை இழந்திருந்தது. வெறும் 9.5 சதவீத வாக்குகளுடன் SPD, முன்னொருபோதும் இல்லாத அதன் படுமோசமான மாநில தேர்தல் முடிவைப் பெற்றது.
வலதுசாரி தீவிரவாத கட்சியான AfD உம் கணிசமான வாக்குகளை இழந்தது. கடந்த ஆண்டின் கூட்டாட்சி தேர்தலில் AfD பவேரியாவில் 12.4 சதவீத வாக்குகள் பெற்றிருந்த போதும், ஞாயிறன்று நடந்த மாநில தேர்தலில் வெறும் 10.2 சதவீத வாக்குகளே வென்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கும், அதன் முன்னணி கட்சிகளும் மற்றும் ஊடக ஊதுகுழல்களும் திட்டமிட்டு AfD ஐ ஊக்குவித்து வலதுசாரி தீவிரவாத கருத்துருக்களை நியாயப்படுத்திய போதினும், அந்த அதிவலது கட்சி சுமார் 231,000 வாக்குகளை இழந்தது, அல்லது அதன் வாக்காளர்களில் ஒரு கால்வாசி பேரை இழந்தது.
இந்த அபிவிருத்திகள் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) முன்னெடுத்த இரண்டு மத்திய நிலைப்பாடுகளை உறுதிப்படுத்துகின்றன.
முதலாவதாக, AfD பிரதிபலிக்கும் பரந்த அதிவலது உணர்வுகள் மக்களினது அல்ல, மாறாக மக்களின் எதிர்ப்புக்கு முன்னால் சமூக சிக்கன திட்டங்கள் மற்றும் போருக்கான கொள்கைகளைத் திணிக்க ஆளும் உயரடுக்கால் ஊக்குவிக்கப்பட்டவையாகும். “நாஜி குற்றங்களில் இருந்து மொத்தத்தில் விலகி இருந்திருந்தாலும் கூட, ஜேர்மன் ஜனநாயகம் கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே அதேயளவுக்குப் பலவீனமாக உள்ளது,” என்று SGP அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வினியோகித்த அதன் அறிக்கையில் எழுதியது. “ஆளும் உயரடுக்கு ஒரு புதிய ஏகாதிபத்திய போக்கை ஏற்கையில் அடிமட்டத்திலிருந்து எதிர்ப்பை உணர்கையில் உடனேயே, அவர்கள் அதிவலதுக்கான அவர்களின் முன்னுரிமையைக் காட்டுவார்கள்.”
இரண்டாவது, அதிவலது அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு அவசியமாகும். அரசியல் சீற்றம் மற்றும் பெருந்திரளான மக்கள் எதிர்ப்புகளும் அவசியமானதே, ஆனால் போதுமானதல்ல. ஆளும் வர்க்கம் பாசிசவாத சக்திகளை ஊக்குவிப்பதன் மூலமாக அவர்களின் பிற்போக்குத்தனமான திட்டநிரலை மீண்டுமொருமுறை பின்தொடர்வதிலிருந்து அவர்களைத் தடுக்க, சமூக சமத்துவமின்மை, அதிவலதின் வளர்ச்சி மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு சர்வதேச சோசலிச இயக்கம் அவசியமாகும்.
கடந்த வாரயிறுதி சம்பவங்களுக்குப் பின்னர், அதிவலதை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச மூலோபாயம் சார்ந்த கேள்வி புதிய அவசரத்துடன் முன்நிற்கிறது. வாக்குப்பெட்டியில் இடப்பட்ட மற்றும் வீதிகளில் காட்டப்பட்ட பரந்த எதிர்ப்புக்கு ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் வலதை நோக்கி கூடுதலாக திரும்புவதன் மூலமாக விடையிறுத்து வருகிறது. ஆளும் உயரடுக்கு ஜனநாயக எதிர்ப்பின் அனைத்து வடிவங்களையும் ஒடுக்கியும், மக்களுக்கு எதிரான அதன் அரசியல் சூழ்ச்சியைத் தீவிரப்படுத்தியும் பாதையை அடைத்து வருகிறது.
முன்னாள் SPD தலைவர் சிக்மார் காப்ரியேல், இந்த மகா கூட்டணி அரசாங்கம் "நிறைய பொலிஸை" நியமிக்க வேண்டுமென்றும், வீதிகளிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுத்துவிடக் கூடாதென்றும் வலியுறுத்தினார். “பிசாசுகளுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலமாக புதிய அரசு நெருக்கடியைத் தூண்டுவது ஜேர்மனியை எந்தவிதத்திலும் அதிக ஸ்திரமானதாக ஆக்காது,” என்றவர் Bild பத்திரிகைக்குத் தெரிவித்தார். ஜேர்மனி "தனித்து நம்மில் ஒருமுனைப்படுவதற்கும் கூடுதலாக பலமானது. நாம் ஐரோப்பாவை ஒருங்கிணைத்து தாங்கிப் பிடித்திருந்தால் மட்டுமே உலகம் நம்மை செவிமடுக்கும்,” என்றார்.
புதன்கிழமை அவரது அரசாங்க அறிக்கையில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இதே பிற்போக்குத்தனமான தொனியை வெளியிட்டார். “வெளிப்புற எல்லைகளைப் பாதுகாப்பதில்" மற்றும் "சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்புவதில்" “கூட்டு முன்னேற்றங்களுக்கு" அழைப்பு விடுத்து, அப்பெண்மணி அகதிகள் மீது கூடுதல் அடக்குமுறையை கோரினார். “உள்நாட்டு பாதுகாப்பை" இறுக்குவது மற்றொரு பிரச்சினையாக இருந்தது. ஐரோப்பிய தேர்தல்களைப் பொறுத்த வரையில், அரசாங்கம் "தங்களின் பிரச்சாரங்களில் தவறான தகவல்களைச் செயலூக்கத்துடன் பரப்பும் கட்சிகளுக்கு வழிமுறைகளை உருவாக்க" திட்டமிட்டு வருகிறது.
இதன் விளைவுகள் தெளிவாக உள்ளன. “தவறான தகவல்களை” எதிர்க்கும் சாக்குபோக்கின் கீழ், கூகுள் ஜேர்மன் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, உலக சோசலிச வலைத்தளம் உட்பட இடதுசாரி மற்றும் முற்போக்கு செய்தி அமைப்புகளைத் தணிக்கை செய்துள்ளது. இந்த மகா கூட்டணியின் உள்நாட்டு உளவுத்துறை முகமையினது சமீபத்திய அறிக்கையானது, முதலாளித்துவம், தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் "இடதுசாரி தீவிரவாதமாக" மற்றும் "அரசியலமைப்புக்கு விரோதமானதாக" குற்றமயப்படுத்தியது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை (SGP) “இடதுசாரி தீவிரவாத கட்சி" என்றும், “கண்காணிப்பிற்குரியது" என்றும் முத்திரைக் குத்தியது.
அரசாங்கத்தால் இந்தளவுக்கு ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் அது அரசு எந்திரத்தாலும் நடைமுறையளவில் "இடதுசாரி" எதிர்கட்சிகளாலும் ஆதரிக்கப்படுவதால் ஆகும். போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் ஜேர்மனியின் முதல் இராணுவ தலையீட்டுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்த போதும் கூட, பசுமை கட்சி அதை ஒழுங்கமைத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அவர்கள் உள்நாட்டு மற்றும் அகதிகள் கொள்கையில் வலதுக்கு நகர்ந்துள்ளனர். எங்கெல்லாம் அவர்கள் ஆளும் கூட்டணியின் பாகமாக இருக்கிறார்களோ, அவர்கள் பாதுகாப்பு படைகளைப் பலப்படுத்தி உள்ளதுடன் அகதிகளை மூர்க்கமாக நாடு கடத்துவதை ஒழுங்கமைத்துள்ளனர். சமீபத்தில் கெம்னிட்ஸில் நவ-நாஜி அட்டூழியத்தை வெளிப்படையாக பாதுகாத்த உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரின் CSU உடன், பவேரியாவில் அவர்கள் கூட்டணி அமைக்க கருதி வருகின்றனர்.
இடது கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் சாரா வாகன்கினெக்ட் புதன்கிழமை அவரது அறிக்கையில் "சான்சிலரின் அலுவலகம் நொண்டி வாத்தாக" இருப்பதாக குற்றஞ்சாட்டியதுடன், “ஜேர்மனி தற்போது செயல்பட தகைமையற்ற ஓர் அரசாக இருப்பதாக" குறைபட்டுக் கொண்டார். கடந்த வார சம்பவத்தில், அப்பெண்மணி பெருந்திரளான பேர்லின் போராட்டங்களில் இருந்து பகிரங்கமாக அவர் கட்சியை அந்நியப்படுத்தி கொண்டதுடன், “சுதந்திர எல்லைகள்" குறித்த சிந்தனையை "யதார்த்தமற்றது மற்றும் முற்றிலும் நடைமுறைக்கு உதவாதது" என்று வர்ணித்தார். தீவிர வலதுடன் ஓர் உடன்படிக்கைக்கு வாகன்கினெக்ட் உடன்படுவது வெறுமனே சந்தர்ப்பம் சார்ந்த ஒரு விடயமாக மட்டுமே உள்ளது. வாகன்கினெக்ட் இனது "நியாயத்திற்கான தைரியமான குரல்" என்று AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் உற்சாகப்படுத்தினார், இவர் 1933 ஹிட்லர் உரையின் பெரும்பகுதியை மையப்படுத்தி Frankfurter Allgemeine Zeitung இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதிவலதை ஊக்குவிப்பதற்கான அரசியல் சூழ்ச்சியில் ஊடகங்கள் ஒரு மத்திய பாத்திரம் வகிக்கின்றன. அவை AfD ஐ ஊக்குவிக்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு அகதிகள்-விரோத ஆர்ப்பாட்டத்திற்கும் தாராள மனதுடன் முக்கியத்துவம் அளிக்கின்றன, மேலும் நவ-நாஜிக்களை "அக்கறை கொண்ட குடிமக்களாக" வர்ணிக்கின்றன, அதேவேளையில் பேர்லினில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டம் மீது எந்த செய்தியும் வெளிவரவில்லை. விமர்சகர்கள் பகிரங்கமாக அந்த ஆர்ப்பாட்டத்தைக் குறைகூறுகின்றனர். பேர்லினை மையமாக கொண்ட Tagesspiegel ஆத்திரமூட்டும் விதத்தில் ஜேர்மன் கொடிகள் மற்றும் AfD உறுப்பினர்களுக்குத் தடை விதித்ததற்காக சட்டவிரோத தணிக்கையின் ஒழுங்கமைப்பாளர்களைக் குற்றஞ்சாட்டியது.
அரசியலின் செல்வாக்கான வாட்டாரங்களும், ஊடகங்கள், உளவுத்துறை முகமைகள், மற்றும் இராணுவமும் பேர்லினில் AfD க்கு இன்னும் கூடுதலாக அதிகாரம் வழங்க திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திற்குள் AfD உள்நுழைந்தமை "சற்று நேர்மறையான மாற்றங்களை உருவாக்கி" இருப்பதாக நாடாளுமன்ற தலைவர் வொல்ஃப்காங் சொய்பிள Bild am Sonntag க்கு அளித்த ஒரு பேட்டியில் அறிவித்தார். “இந்த மகா கூட்டணியின் பெரும்பான்மை" “கடந்த சட்டமன்ற காலத்தின் போது இருந்ததைப் போல அதேயளவுக்குத் தெள்ளத்தெளிவாக இல்லை,” என்பதுடன் இது "விவாதங்களை இன்னும் சுவாரசியப்படுத்துகிறது" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் AfD இன் பாசிசவாத இனவாத வெறிப்பேச்சுக்களைக் குறிப்பிட்டு, சொய்பிள அறிவிக்கையில் அதுபோன்ற "கடுமையான" வீராவேச உரை "நாம் கவலைப்பட வேண்டியளவுக்கு மோசமானதல்ல,” என்றார்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், SGP புதிய தேர்த்லகளுக்கான அதன் அழைப்பை மீண்டும் புதுப்பிக்கிறது. வலதுசாரி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், ஜேர்மனி மீள்ஆயுதமேந்த செய்வதற்கும், இரத்தத்தை விலையாக கொடுக்க மக்களை நிர்பந்திப்பதற்கும், எந்தவொரு மக்கள் கட்டளையும் பெற்றிராத வலதுசாரி சூழ்ச்சியாளர்களின் ஒரு கும்பலை அனுமதிக்க முடியாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, SGP, ஆளும் உயரடுக்கின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை அம்பலப்படுத்தவும் முதலாளித்துவம், போர் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைக்கவும் அதன் அனைத்து சக்திகள் மற்றும் ஆதாரவளங்களை அணித்திரட்டும்.
நாங்கள் பின்வருவனவற்றைக் கோருகிறோம்:
* மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து!
* தீவிர வலதுக்கு எதிரான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு, ஒரு சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணித்திரட்டப்பட வேண்டும்.
* இனியும் போர் வேண்டாம்! ஜேர்மனி மீண்டும் இராணுவவாத வல்லரசு கொள்கையை நோக்கி திரும்புவதை நிறுத்து!
* இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, SGP மற்றும் ஏனைய இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை உடனடியாக நிறுத்து!
* தஞ்சம் கோரும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! அரசை இராணுவமயப்படுத்துவதை மற்றும் உளவுபார்ப்பை நிறுத்து!
* சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! நிதியியல் செல்வந்த தட்டுக்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்!