Print Version|Feedback
German government celebrates “unity day” under the shadow of renewed neo-fascist movement
புதுப்பிக்கப்பட்ட நவ-பாசிசவாத இயக்க நிழலின் கீழ், ஜேர்மன் அரசாங்கம் "ஐக்கிய தினம்" கொண்டாடுகிறது
By Johannes Stern
4 October 2018
அக்டோபர் 3, 1990 இல் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி ஐக்கியத்தின் 28 ஆம் நினைவாண்டை ஜேர்மன் அரசு வியாழக்கிழமை கொண்டாடியது. இந்நிகழ்வு, ஓர் "ஐக்கிய ஜனநாயக ஜேர்மனி" குறித்த அரசியல்வாதிகளின் தேனொழுகும் பேச்சுக்களைச் சந்தித்தது. ஆனால் இந்த வார்த்தைகள், ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றி 85 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மனி மீண்டும் பாசிசத்திற்குத் திரும்பி வரும் அபாயம் குறித்த உண்மையை மறைத்துவிடவில்லை.
போருக்குப் பின்னர் ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, ஆக்ரோஷமான நவ-நாஜிக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற ஒரு அதிவலது கட்சி, மத்திய நாடாளுமன்றத்தில் (Bundestag) இடம் பெற்றுள்ளது. திங்களன்று, கூட்டாட்சியின் வழக்குத்தொடுனர் அலுவலகம் "புரட்சி கெம்னிட்ஸ்" என்றழைக்கப்படும் தீவிர கொள்கையுடைய வலதுசாரி பயங்கரவாத குழுவின் ஏழு அங்கத்தவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. வெளிநாட்டவர்கள் மற்றும் இடதுசாரியினர் மீதான தாக்குதல்களுக்கு மேலாக, அவர்கள் ஜேர்மன் ஐக்கிய தினத்தில் ஓர் ஆயுதமேந்திய "நடவடிக்கையை" திட்டமிட்டு வந்ததாகவும், ஒரு தீவிர வலதுசாரி மேலெழுச்சியைத் தூண்டிவிட முனைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.
கூட்டாட்சியின் பொது வழக்குத்தொடுனர் அலுவலக தகவல்களின்படி, பிரதிவாதிகள் ஆயுதங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்னதாக, கெம்னிட்ஸில் நடந்த கலகங்கள் மற்றும் போராட்டங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர், அங்கே நவ-நாஜி குண்டர்கள் வீதிகளில் வெளிநாட்டவர்களைத் துரத்தி வேட்டையாடியதுடன், ஹிட்லர் வணக்கம் செலுத்தினர் மற்றும் ஒரு யூத உணவு விடுதியைத் தாக்கினர். செப்டம்பர் 14 இல் கெம்னிட்ஸ் பூங்காவில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஓர் இரத்தக்களரியான தாக்குதல் ஜேர்மன் ஐக்கிய தின "நடவடிக்கைக்கான" வெள்ளோட்டமாக இருந்தது என்று பிரதான அரச வழக்குத்தொடுனர் தெரிவித்தார்.
கெம்னிட்ஸ் இனை விட, கொதென் மற்றும் டோர்ட்முண்ட் நகரங்களிலும் சமீபத்திய வாரங்களில் நவ-நாஜி பேரணிகள் நடத்தப்பட்டன, இது ஜேர்மன் வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவூட்டியது. 1930 களைப் போல, இன்று நாஜிக்கள் ஒரு பாரிய இயக்கமாக இல்லை, மாறாக வெறுக்கப்படும் ஒரு சிறுபான்மையினராக உள்ளனர். ஆனாலும் இது எவ்விதத்திலும் அவர்களைக் குறைந்த அபாயம் உள்ளவர்களாக ஆக்கிவிடாது.
அனைத்திற்கும் மேலாக, அவர்கள் உயர்மட்டத்திலிருந்து அதாவது முதலும் முக்கியமுமாக அரசு எந்திரம், உளவுத்துறை சேவை மற்றும் போலிஸ் இல் இருந்து கிடைக்கும் ஆதரவிலிருந்தும், மேலும் அரசாங்கம் மற்றும் ஸ்தாபக கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும் பலம் பெறுகிறார்கள். வன்முறையான இந்த நவ-நாஜிக்களின் ஆக்ரோஷமான மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக அரசியல்ரீதியாக மற்றும் சித்தாந்தரீதியில் தயாரிப்பு செய்யப்பட்டு வந்துள்ள ஓர் அபாயகரமான அபிவிருத்தியின் விளைவாகும்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் ஐக்கிய தினத்தின் அவரது உரையில், ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் சார்பில் ஓர் ஆக்ரோஷமான ஜேர்மன் வெளியுறவு மற்றும் வல்லரசு கொள்கைக்குத் திரும்புவதைக் குறித்து அறிவித்தார்.
ஜேர்மனி "ஐரோப்பாவிலும் உலகிலும்" மீண்டும் ஒரு பாத்திரம் வகிக்க வேண்டும், அது உண்மையில் அதன் பலம் மற்றும் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டுமென கௌவ்க் கோரினார். "மக்கள் நிறைந்த, இக்கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ள, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான" ஜேர்மனி இனியும், “அரசியல் மற்றும் பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களினது தீர்வுகளில் பங்கெடுக்காமல் இருந்தால், அவற்றிலிருந்து நாம் விலகி இருந்துவிடலாம் என்ற அவநம்பிக்கையுடன் திருப்தியடைந்து கொண்டு" இருக்கக்கூடாது.
அதேநேரத்தில், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைக் குறைத்துக் காட்ட ஒரு விரிவான பிரச்சாரத்தைத் தொடங்கியது. முதல் உலக போர் வெடித்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலக போர் வெடித்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், பேர்லின் சுவர் உடைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், பெப்ரவரி 2014 இல், வாராந்தர பத்திரிகையான Der Spiegel குறிப்பிடுகையில், “ஜேர்மன் குற்றம்" மீதான பிரச்சினை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டுமென வாதிட்டது.
“முதலாம் உலக போர் குற்றம்: குற்ற உடந்தை மீதான கேள்வி வரலாற்றாளர்களை இன்று பிளவுபடுத்துகிறது" என்ற கட்டுரை பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்களுடனான நேர்காணல்களின் அடிப்படையில் இருந்தது: ஒருவர் ஹெர்ஃபிரட் முன்ங்லெர், இவர் முதலாம் உலக போரில் ஜேர்மனி குற்றவாளி என்பது ஒரு "கட்டுக்கதை" என்று வாதிட்டார், மற்றொருவர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, இவர் நாஜி அனுதாபியான ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ பாதுகாத்ததுடன், ஹிட்லர் "வக்கிரமானவர் இல்லை" ஏனென்றால் அவர் "யூதர்களின் நிர்மூலமாக்கல் குறித்து அவர் மேசையில் பேசக் கூட விரும்பவில்லை" என்று வாதிட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அந்நேரத்தில் பின்வருமாறு கருத்துரைத்தது: “ஜேர்மனி நாஜிக்களின் கொடூர குற்றங்களில் இருந்து பாடம் படித்திருப்பதுடன், 'மேற்கை வந்தடைந்து இருக்கின்றது’, ஒரு சமாதானமான வெளியுறவு கொள்கையைத் தழுவி, ஒரு ஸ்திரமான ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்திருக்கிறது என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம், பொய்களென அம்பலமாகி உள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் வரலாற்றுரீதியில் மீண்டும் மேலெழுந்துள்ள நிலையில் அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் மொத்த ஆக்ரோஷத்துடன் மீண்டுமொருமுறை அதன் நிஜமான நிறத்தைக் காட்டத் தொடங்கி உள்ளது.”
இது அதற்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கௌவ்க் இன் பேச்சும் ஜேர்மன் வரலாறை மறுதிருத்தம் செய்வதற்கான முயற்சிகளும், இராணுவவாதம் மற்றும் வல்லரசு அரசியலுக்குத் திரும்புவதற்கான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்திற்கும், அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மற்றும் நவ-நாஜிக்களுக்குச் சித்தாந்தரீதியான அடித்தளத்தைத் தயாரிப்பு செய்வதற்கும் முன்னறிவிப்பாக இருந்தன. 1930 களில், ஆளும் வட்டாரங்கள் தொழிலாளர்களின் இயக்கத்தை நசுக்குவதைப் பலப்படுத்துவதற்கும் ஜேர்மனியின் இராணுவ பலத்தை விரிவாக்குவதற்கும் ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததன் மூலமாக, ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு விடையிறுத்தன. அவை இன்றும் அதே திசையில் நகர்ந்து வருகின்றன.
கெம்னிட்ஸில் நவ-நாஜி பேரணி அப்போது இரகசிய சேவை தலைவராக இருந்த ஹன்ஸ்-கியோர்க் மாஸன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரால் பகிரங்கமாக பாதுகாக்கப்பட்டது. வீதிகளில் வெளிநாட்டவர்கள் வேட்டையாடப்பட்டதை மாஸன் மறுத்த அதேவேளையில், சீகோவர், அவர் ஓர் அமைச்சராக இல்லையென்றால் கெம்னிட்ஸ் அணிவகுப்பில் கலந்திருப்பார் என்று கூறினார். AfD இன் வாய்சவடாலை நினைவூட்டும் வார்த்தைகளில், “புலம்பெயர்ந்தோர் பிரச்சினையே" “இந்நாட்டின் அனைத்து அரசியல் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் AfD புகழப்படுகிறது. பொது தேர்தலில் AfD வெறும் 12.6 சதவீத வாக்குகளே பெற்றிருந்த போதும், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடன் (CDU/CSU) மதிப்பிழந்த மகா கூட்டணியைத் தொடர்வதென முடிவெடுத்து, சமூக ஜனநாயகக் கட்சியினர் (SPD) உத்தியோகபூர்வ எதிர்கட்சி தலைவர் பாத்திரத்தை AfD வசம் ஒப்படைத்தது. நாடாளுமன்றத்தில், அனைத்து கட்சிகளும் AfD உடன் நெருக்கமாக இணைந்து இயங்குகின்றன என்பதுடன், அவை முக்கிய குழுக்களின் தலைமை பதவியையும் அக்கட்சிக்கு வழங்கி உள்ளன.
இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது சிரமமில்லை. மிகவும் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையைக் கோரி வரும் கட்சிகளில் சமூக ஜனநாயகக் கட்சியும் ஒன்றாகும். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் மற்றும் அவரை அடுத்து வந்த ஹெய்கோ மாஸ் (SPD ஐ சேர்ந்த) இவ்விருவரும், அமெரிக்கா உடனான மோதலை, மீண்டுமொருமுறை வல்லரசு அரசியலைப் பின்தொடர்வதற்கான ஒரு "சந்தர்ப்பமாக" புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்த ஒருபோதும் தயங்கியதில்லை.
பசுமைக் கட்சியினரும் இடது கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு சளைத்தவை அல்ல. பசுமைக் கட்சியினர் கடுமையான மக்கள் எதிர்ப்புக்கு எதிராக 1999 இல் யூகோஸ்லாவியாவில் ஜேர்மன் ஆயுதப்படையின் (Bundeswehr) முதல் போர் முன்னெடுப்பு முயற்சியை அவர்கள் உறுதிப்படுத்தியதில் இருந்தே ஜேர்மன் இராணுவவாதத்தின் ஒரு கட்சியாக மாறியிருந்தனர். இடது கட்சியோ, ஜேர்மனியின் பொருளாதார போட்டியாளர்களுக்கு எதிராக, அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவுக்கு எதிராக அதன் நலன்களை வலியுறுத்துவதென வந்த உடனேயே, அதன் அமைதிவாத வசனங்களைக் கைவிட்டுவிடும்.
இராணுவவாதம் வெறுக்கப்படுவதுடன், மக்களிடையே ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதால், உத்தியோகப்பூர்வ அரசியல் அதிகரித்தளவில் ஒரு நிரந்தர சூழ்ச்சி வடிவத்தை ஏற்று வருகிறது. ஆளும் வர்க்கம் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு எதிராக அதன் செல்வவளத்தைப் பாதுகாப்பதற்கும், ஓர் எதேச்சதிகார அரசைக் கட்டமைக்கவும் மற்றும் ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் அதன் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்குத் தகைமை கொண்ட ஒரு முன்னணி இராணுவ சக்தியாக ஜேர்மனியை மீளக்கட்டமைப்பதற்கும், அதற்கு அதிவலது அவசியப்படுகிறது.
ஜேர்மனியில் இராணுவவாதம் மற்றும் பாசிசத்தின் புத்துயிரூட்டலை நிறுத்துவதற்கு அங்கே ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது: அதாவது, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும், சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் நான்காம் அகிலத்தை ஒரு பரந்துபட்ட மக்கள் கட்சியாக கட்டமைப்பதும் ஆகும். பின்வருவன நமது கோரிக்கைகள்:
* மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து!
* புதிய தேர்தல்களுக்கு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!
* இனியும் போர் வேண்டாம்! ஜேர்மன் மீண்டும் ஆக்ரோஷ வல்லரசு அரசியலுக்குத் திரும்புவதை நிறுத்து!
* இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் பிற இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை உடனடியாக நிறுத்து!
* தஞ்சம் கோரும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! அரசு அதிகாரங்களின் அதிகரிப்பு மற்றும் உளவுபார்ப்பு வேண்டாம்!
* சமூக சமத்துவத்திற்காக வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வவளங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்!