Print Version|Feedback
Facebook’s purge of left-wing media: A frontal assault on freedom of speech
இடதுசாரி ஊடகங்கள் மீதான பேஸ்புக் களையெடுப்பு : பேச்சுரிமை மீதான ஒரு முன்னணித் தாக்குதல்
Andre Damon
15 October 2018
இணையத்தை தணிக்கைசெய்யும் முகமாக அரசாலும் தொழில்நுட்ப ஏகபோகங்களாலும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சதியின் அங்கமாக வியாழன் அன்று பேஸ்புக், பரந்த அளவில் இடதுசாரி அரசியல் பக்கங்கள் மீதான களையெடுப்பை மேற்கொண்டது. 800 பக்கங்களுக்கும் மேலாக மற்றும் கணக்குகளுடன் சேர்ந்ததாய் பின்வரும் பத்து மில்லியன் கணக்கிலானவை மொத்தமாக அகற்றப்பட்டன. தடைசெய்யப்பட்ட பக்கங்களுள் Police the Police, Cop Block மற்றும் Filming Cops போன்ற குழுக்களால் எதிர்க்கப்படும் மற்றும் வெளியிடப்படும் பொலீஸ் வன்முறைச் சம்பவங்கள், அதேபோல முக்கிய இடதுசாரி செய்திப் பக்கங்களான Anti-Media, Reverb Press, Counter Current News மற்றும் Resistance போன்ற பெரிதும் பிரசித்தி பெற்ற பதிவுகள் உள்ளடங்கும்.
இந்தப் பக்கங்கள் அகற்றப்பட்டமை பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை மீதான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலாகும். அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயல்படும் பேஸ்புக்கானது, அமெரிக்க மக்களின் மிகவும் அடிப்படையான உரிமைகளை மீறிவருகிறது.
பக்கங்கள் “உண்மையல்லாத நடத்தை”க்காக அகற்றப்பட்டிருக்கின்றன என்ற பேஸ்புக்கினது கூற்றானது தெள்ளத்தெளிவான பித்தலாட்டமாகும். அது அரசியல் தணிக்கைக்கான ஒரு சாக்குப்போக்காகும். அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட பேச்சை “குப்பை” என்று முத்திரை குத்தும் “வல்லுநர்களை” மேற்கோள்காட்டி, இந்நிறுவனத்தின் அப்பட்டமான பொய்களை கிளிப்பிள்ளைபோல் திருப்பிச்சொல்லும் பிரதான அரசியல் செய்தி ஊடகங்கள் அனைத்தினதும் பதில் பேஸ்புக்கினது அப்பட்டமான செயல்பாடுகளை விடவும் குறைந்த அதிர்ச்சியூட்டுவன அல்ல.
பேஸ்புக்கின் செயல்பாடுகள், எதிர்ப்புக் குழுக்களையும் செய்தி வெளியீடுகளையும் பலவந்தமாய் நசுக்குவதற்கான தயாரிப்பில் அரசியல் எதிர்ப்பினை சட்டபூர்வமற்றதாக்க நோக்கங்கொண்டுள்ள ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தில் மிக சமீபத்திய மற்றும் இந்தத் தேதிவரையிலான மூர்க்கத்தனமான நகர்வுகளாகும்.
அமெரிக்க இராணுவ / உளவு சாதனத்தின் விருப்பிற்குரிய வேட்பாளரான ஹில்லாரி கிளிண்டனுக்கு வோல் ஸ்ட்ரீட்டிற் உடன் கிளிண்டன் கொண்ட ஊழல் உறவுகள் விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்டதால் அவருக்கு பொதுமக்களின் குரோதமானது அதிகரிக்க, 2016 தேர்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஊடகமானது எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை ரஷ்யரால் தூண்டப்பட்ட “போலிச் செய்தி” எனக் கறைப்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் Adam Schiff மற்றும் ஜனநாயகக் கட்சி செனெட்டர் மார்க் வார்னர் மற்றும் அமெரிக்க உளவு சாதனம் ஆகியவை அரசியல் எதிர்ப்பைத் தணிக்கை செய்யவும் மூடவும் தொழில்நுட்ப ஏகபோகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும்பொருட்டு “ரஷ்ய தலையீடு” என்ற ஒரு விவரிப்பை ஜோடனை செய்தனர்.
இந்தப் பிரச்சாரத்தில் முன்னணிப் பாத்திரம் கூகுளால் ஆற்றப்பட்டது, அது 2017 ஏப்ரலில், தேடல் முடிவுகளைக் கையாளுவதன் மூலம் “மாற்று” கருத்துக்கள் மீதாக “அதிகாரபூர்வ” செய்தி மூலங்களை அது ஊக்குவிக்கப் போவதாக அறிவித்தது.
கூகுள் அதனது தேடுதல் வழிமுறையில் இந்த மாற்றங்களை நடமுறைப்படுத்திய பின்னர், 2017 ஆகஸ்டில், 13 இடதுசாரி, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு தளங்களுக்கான தேடல் போக்குவரத்து மூழ்கடிக்கப்பட்டன என்று உலக சோசலிச வலைத் தளம் செய்தி வெளியிட்டது. அதன் முன்னணி இலக்காக உலக சோசலிச வலைத் தளமே இருந்தது, இந்த அறிவிப்புக்குப் பின்னர் அது அதன் கூகுள் தேடல் போக்குவரத்தில் 75 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை கண்டது. இதற்குப் பதில்கொடுக்கும் விதமாக, உலக சோசலிச வலைத் தளம், “அனைத்து இடதுசாரி, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை தணிக்கை செய்வதைக் கைவிடுமாறு” அதனைக் கோரும் ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டது.
அடுத்தடுத்த மாதங்களில், பிரதான தணிக்கை முன்முயற்சிகளை அறிவிப்பதில் பேஸ்புக்கும் டுவிட்டரும் கூகுளுடன் சேர்ந்து கொண்டன. ஜனவரியில், பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பேர்க் அறிவித்தார், “மாற்று” அரசியல் கருத்துக்களின் இழப்பில் நிர்வாகமானது நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற “நம்பத்தகுந்த” செய்தித் தளங்களை முன்னிலைப்படுத்தும் என அறிவித்தார். அதே உரையில் சக்கர்பேர்க், பேஸ்புக்கானது அதன் பயனாளர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தணிக்கை செய்யவும் கண்காணிக்கவும் ஒரு பொலீசாக, அரசு வழக்கறிஞர் அல்லது உளவுத்துறைப் பின்புலமுள்ள சுமார் 20,000 பேர்களை பணியிலமர்த்தப் போவதாக அறிவித்தார்.
கடந்த மாதம் வாஷிங்டனில் ஒரு விசாரணைக்குப் பின்னர், தணிக்கை முறைக்கான உந்துதல் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது, அதில் செனெட்டர் வார்னர் “அதி இடது” அரசியல் உள்ளடக்கத்தின் அபரிமிதமான பெரும்பான்மை வெளிநாட்டு செயல்பாட்டாளர்களால் அல்லது தானியங்கும் கணக்குகளால் உற்பத்தி செய்யப்பட்டது” என்று கூறியிருந்தார். பேஸ்புக்கின் தலைமை செயற்பாட்டு அலுவலர் Sheryl Sandberg “கெட்ட பேச்சை” “மாற்று உண்மைகள்” என்பதால் பதிலீடு செய்யும் அவரது நோக்கத்தை அறிவித்தார்.
அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் அரசியற் தணிக்கையில் நனவுபூர்வமாக ஈடுபட்டுள்ளனவா என்பது இனியும் கேளவிக்குரிய ஒன்று அல்ல. அவர்களது அரைமனதுடனான மறுப்புக்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கூகுளின் உள்ளார்ந்த ஆய்வு ஆவணத்தால் பொய்களென அம்பலப்பட்டன. தொழில்நுட்ப ஏகபோகங்கள் “ஜனநாயகத்திற்கான பேச்சுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் அமெரிக்க மரபு” என்பதை நிராகரிக்கும் “பேச்சுரிமை மற்றும் தணிக்கையை நோக்கி” விலகிச்சென்றுள்ளன என்று ஆவணங்கள் கூறுகின்றன.
தணிக்கை உந்துதலானது பேஸ்புக் கணக்குகளை அகற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது. நிழல் நிறுவனமான PropOrNot, அதன் 2016 கறுப்புபட்டியல், அமசன் பில்லியனர் Jeff Bezos இன் வாஷிங்டன் போஸ்ட்டால் வெளியிடப்பட்டது, தணிக்கைப் பிரச்சாரம் தொடங்குவதற்கு உதவியது, அது பேஸ்புக் கணக்குகள் களையெடுப்பை புகழ்ந்தது. அவ்வாறு செய்வதில் இது ஆரம்பம் மட்டுமே என்று அது தெளிவுபடுத்தியது.
பேஸ்புக்கால் இலக்குவைக்கப்பட்ட அமைப்புக்கள் அனைத்தும் இன்னும் “வலைத் தளங்களைக் கொண்டுள்ளன” என்று PropOrNot சுட்டிக்காட்டியதுடன், “ஆனால் ஒரே நேரத்தில் ஒரு விடயம்தான்” செய்யமுடியும் என்று மேலும் குறிப்பிட்டார். வேறுவிதமாகச் சொன்னால், தேடல் முடிவுகளில் இருந்து இலக்குவைக்கப்பட்ட வெளியீடுகளை அகற்றியவுடன் மற்றும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை மூடிய பின்னர், அடுத்த நடவடிக்கை வலைத் தளங்களை தாங்களே பலவந்தமாக நசுக்குவதாகும்.
தணிக்கைப் பிரச்சாரத்திற்கு வழிவகுத்த சக்திகள் தங்களின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் குறிப்பிடத்தக்க வகையில் திறந்துள்ளன. பேஸ்புக்கின் உத்தியோகபூர்வ “பங்குதாரர்களுள்” ஒருவரான அட்லாண்டிக் கவுண்சில் சிந்தனைக் குழாம் கடந்த மாதம் வெளியிட்ட, “இறையாண்மை” மீதான அமெரிக்க சிறப்புப் படைகளின் நடைமுறைகளை தொகுத்தளிக்கும் ஒரு ஆவணத்தில், இணையத்தை தணிக்கை செய்வதற்கான அரசாங்க முயற்சிகளின் நோக்கங்களை வெளிப்படக் கூறியது.
அமெரிக்காவில் அரசியல் எதிர்ப்பின் வளர்ச்சி, அரசுக்கு அதன் இருப்புக்கே அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்று ஆவணம் வாதிடுகிறது. அது எச்சரிக்கும், இந்த நெருக்கடியானது, அரசியல் எதிர்ப்பு எனும் “வைரஸை” அகற்றுவதால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். இதைச்செய்வதற்கான மிகவும் சக்தியுள்ள வழிமுறையானது, அரசின் சார்பாக தணிக்கையை மேற்கொள்வதில் ஒரு “மையப் பாத்திரத்தை” ஆற்றுவதற்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைப் பணியில் சேர்ப்பதாகும் என அது விவரிக்கிறது.
இணையத்தை தணிக்கை செய்வது, முதலாளித்துவ ஜனநாயக வடிவத்தின் நிலைமுறிவினது ஒரு செறிந்த வெளிப்பாடாகும். அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகமானது எதேச்சாதிகார மற்றும் பாசிசப் போக்குகள் கொண்ட அதி பிற்போக்கு அரசாங்கமாக இருக்கிறது. ஆயினும், ஜனநாயகக் கட்சியினால் வழிநடத்தப்படும் ஆளும் வர்க்கத்திற்குள்ளேயான ட்ரம்ப் விமர்சகர்கள், ஆட்சியின் ஜனநாயக வடிவங்களுக்கு குறைந்த குரோதம் கொண்டவர்கள் அல்லர். இராணுவம் மற்றும் உளவு சாதனங்களுடனான கூட்டில், “போலிச் செய்திக”ளுக்கு எதிரான பிரச்சாரத்தில் பேச்சுரிமையிலிருந்து மற்றும் கருத்துரிமையிலிருந்து மற்றும் #MeToo வேட்டையாடலில் குற்றம் சாட்டப்படுபவர்களின் குற்றத்திற்கான ஆதாரத்தை சட்டப்படியானதிற்கும் வழக்காடுவதிலும் வைப்பது வரை ஜனநாயகக் கட்சியினர், ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றனர்.
தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்துவரும் எதிர்ப்பினாலும் சோசலிசத்தில் அதிகரித்துவரும் ஆர்வத்தினாலும் ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலைநிலைகளிலும் சம்பளத்திலும் முன்னேற்றத்திற்கான உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கும் செல்வத்தை மேல்நோக்கிய மறுவினியோகத்தில் வேகத்தைக்கூட்டும் மற்றும் புதிய இராணுவக் கட்டியெழுப்பலை மேற்கொள்ளும், ஆளும் செல்வந்தத் தட்டின் கொள்கைகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் வழிவிலகல் இருக்கிறது.
நூறாயிரக் கணக்கான UPS தொழிலாளர்களாலான சலுகைகள் ஒப்பந்தம் நிராகரிப்பு உட்பட மற்றும் நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதித் தொழிலாளர்களாலான வேலை நிறுத்தம் உட்பட, வர்க்கப் போராட்டத்தில் ஒரு மேலெழுச்சியை எதிர்கொள்கையில், ஆளும் செல்வத்தட்டானது தணிக்கை மற்றும் இறுதியாக சர்வாதிகாரத்திற்கான அதன் திட்டங்களை வேகப்படுத்தி வருகிறது. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது அரசியல் தணிக்கைக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான சமூக அடிப்படையை வழங்குகிறது. கருத்துரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக தொழிலாளர்கள் முன்னெடுத்தாக வேண்டும்.