ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan tea estate workers step up demands for higher pay

இலங்கை: தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சம்பள அதிகரிப்பு கோரி எதிர்ப்பு இயக்கம் வளர்ச்சியடைகின்றது

M. Thevarajah
10 October 2018

கடந்த வாரம், நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள், சம்பள அதிகரிப்பு கோரி போராட்டங்களை நடத்தினர். ஒக்டோபர் 3 மற்றும் 5ம் திகதிகளில், பிரௌன்ஸிவிக் மற்றும் மரே தோட்டங்களில் இருந்து 1,000 தொழிலாளர்களும், மஸ்கெலியாவில் மொக்கா மற்றும் காட்மோர் தோட்டங்களில் இருந்து சுமார் 600 தொழிலாளர்களும், தங்களது ஊதியத்தை 500 ரூபாவில் (அமெ.டொலர் 2.94) இருந்து 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரும் பதாகைகளை ஏந்தி காலையிலேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் பங்குபற்றலானது சம்பள அதிகரிப்புக்காக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றது. வறிய மட்டத்திலான அவர்களது ஊதியத்தின் பெறுமதியும், வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பால் அரித்துச் செல்லப்படுகின்றது.


எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் ஒரு பகுதி

மரே, பிரௌன்ஸிவிக், மொக்கா மற்றும் காட்மோர் தோட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ததன் பின்னணியில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவர் ப. திகாம்பரம் இருக்கின்றார். முன்னதாக செப்டம்பர் 23 அன்று, NUW உட்பட ஏழு தொழிற்சங்கங்கள் ஒரு எதிர்ப்பு ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் தலாவாக்கலையில் ஒரு கூட்டத்தையும் நடத்தியிருந்தன://www.wsws.org/tamil/articles/2018/10-Oct/plan-o16.shtml:இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்

சம்பள அதிகரிப்புக்கான தொழிலாளர்களின் உண்மையான ஆர்வம் பரந்தளவில் உள்ளது. இதனால் தோட்டங்கள் பூராவும் போராட்டங்களின் எழுச்சியையிட்டு தொழிற்சங்கங்கள் விழிப்படைந்துள்ளன. அவை, தோட்டங்களில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்களை திசை திருப்பவும் தணித்துவிடவும் திட்டமிட்டு செயற்படுகின்றன. பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து கொண்டு, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலமைகள் மீது மோசமான தாக்குதலை நடத்தும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கிவருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா நாட் சம்பளத்துக்காக அழுத்தம் கொடுக்கின்ற அதே வேளை, இந்த தொழிற்சங்கங்கள் “நியாயமான” அதிகரிப்புக்காக அழைப்பு விடுக்கின்றன. இந்த நியாயம் என்பது, கம்பனிகளுக்கே ஒழிய தொழிலாளர்களுக்கு அல்ல.

தொழிற்சங்கங்களுக்கும் பிராந்தியத் தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இந்த மாதத்துடன் காலாவதியாகின்றது. இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவரான சுனில் பொஹோலியத்த கடந்தவார டெய்லிமிரர் பத்திரிகையின் வர்த்தகப் பக்கத்தில், தாங்கள் 10 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்ததாக அறிவித்தார். இது நாளாந்த சம்பளத்தில் 50 ரூபா அற்ப அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், “உற்பத்திதிறன் அடிப்படையிலான வேறுபட்ட மாதிரியை மற்றும் வருவாய் பங்கீட்டை” பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் 164 வது வருடாந்த கூட்டத்தில் பேசும்போது, பொஹோலியத்த, கடந்த வருடம் தொழிற்சங்கங்கள் “உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்ட சம்பளக் கட்டமைப்புக்கும்” மற்றும் “வருவாய் பங்கீடு முறையை பற்றி கவனத்தில் எடுக்கவும் இணங்கியதற்கு” தொழிற்சங்கங்களைப் பாராட்டினார். “தொழிற்துறை நிலைத்து நிற்பதற்காக ஆக்கிரோசமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதுடன்” இந்த திட்டத்தினை “கடுமையாக” நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான வாய்ச்சவடால்களுக்குப் பின்னால், உண்மையில், கம்பனிகளின் திட்டங்களை ஈவிரக்கமற்ற முறையில் அமுல்படுத்தப்படவுள்ள ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கே தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

மொக்கா தோட்ட தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் பேசினர்கள். அவர்கள் தாங்கள் முகம்கொடுத்துக் கொண்டிருந்த சிரமங்களைப் பற்றி விவரித்தார்கள். அவர்கள் தொழிற்சங்கங்கள், கம்பனிகள் மற்றும் அரசாங்கத்தின் மீதான தங்களின் கோபங்களை வெளிப்படுத்தினார்கள்.

ஒரு தொழிலாளி கூறியதாவது: “எங்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகயை தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் நிராகரித்துள்ளன. ஏன் அரசாங்கம் எங்களை இரண்டாந்தர பிரஜைகளாக பார்க்கின்றது? ஒரு போராட்டம் இல்லாமல் எங்களால் ஒரு சிறிய சம்பள அதிகரிப்பைக் கூட பெறமுடியாது. கடைசியாக 2016ல், நாங்கள் பத்து நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். ஆனால் சகல தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததுடன் நாள் சம்பளத்தில் 50 ரூபா அற்பத் தொகை அதிகரிப்புக்கு எங்களை அடிபணிய வைத்தன.”

தொழிற்சங்கங்கள், சம்பள வெட்டுக்கும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கும் ஆதரவளிப்பதாக அவர்கள் விளக்கினார்கள். “ஒரு நாளைக்கு நாங்கள் 16 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கும் இலக்கினை அடைய முடியவில்லையானால், 140 ரூபா கொடுப்பனவை பெற முடியாது. கடந்த மாதம், அநேகமான தொழிலாளர்கள் கழிவுகள் போக 4,000 ரூபாவை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள். இது சம்பந்தமாக நாங்கள் தொழிற்சங்கங்களிடம் முறைப்பாடு செய்யும்போது, இந்த நிபந்தனைகள் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். எங்களுடன் கலந்துரையாடமாலேயே தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் இரகசியமாக கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றன. அவர்கள் என்ன கலந்துரையாடினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.”

கடைசி சம்பள உடன்படிக்கையில், தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றும் வருமான பங்டகீடு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளன. எனினும், தொழிலாளரகளின் கடுமையான எதிர்ப்பினால், களனிவலி தோட்டக் கம்பனிக்கு சொந்தமான டில்லறி, பட்டல்கல தோட்டம் மற்றும் மதுரட்ட தோட்டக்கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்படும் என்பீல்ட் மற்றும் வலப்பன மஹா உவா தோட்டம் உட்பட சில தோட்டங்களில் மட்டுமே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. இப்போது, தொழிலாளர்கள் இந்த முறைமையை எதிர்ப்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

டிக்கோயாவில் டில்லறி தோட்டத்தில், 80 தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பகுதியை நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு, திரும்வும் முன்னைய சம்பள முறைமையின் கீழ் வேலை செய்கின்றனர். “இந்த வருமான பங்கீடு முறையின் கீழ் நாங்கள் கடனாளிகளாக மாறிவிடுவோம்” என டில்லறி தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தொழிற்சங்கங்கள் வருமான பங்கீடு முறையை அமுல்படுத்துவதற்கு பிரச்சாரம் செய்கின்றன. பிரௌன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, “தோட்டக்கம்பனிகள் நியாயமான சம்பள  அதிகரிப்பு வழங்க மறுத்தால், அவர்கள் தோட்டத்தைப் பிரித்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், தொழிலாளர்கள் அதனை நிர்வகிப்பார்கள்,” என மஸ்கலிய தோட்ட NUW  அமைப்பாளர் தியாகராஜா தெரிவித்தார்.

மஸ்கெலிய பிரதேச சபையின் NUW உறுப்பினரான ஏ. ரவீந்திரராஜா, “இந்த முறையின் கீழ் தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை உயர்த்திக்கொள்வார்கள்” என கூறி வருவாய் பங்கீடு முறையை நியாயப்படுத்தி மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயாரான ஒரு பெண் தொழிலாளி கே. திரேசா தெளிவுபடுத்தியதாவது. “இந்த வாழ்க்கைச் செலவை எங்களால் சகிக்க முடியாது. எங்களுடைய சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாது, பிள்ளைகளின் படிப்புக்கு எப்படி செலவிடுவது? நாங்கள் கடன் வாங்கத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முறை 1,000 ரூபா நாள் சம்பளத்துக்கு குறைவான ஊதியத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தோம், ஆனால் அவர்கள் எங்களை மறந்துவிட்டார்கள்.”


கே. திரேசா

730 ரூபா முழுநேர நாள் சம்பளத்தைப் பெறுவதற்காக, கடுமையான சூழ்நிலைக்கு மத்தியிலும் 16 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது என இதே தோட்டத்தைச் சேர்ந்த புனிதவதி கூறினார். எங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், அவர்கள் சம்பளத்தை வெட்டுவார்கள். கடந்த மாதத்தில் எனக்கு 4,000 ரூபா மட்டுமே சம்பளமாக கிடைத்தது. எனது கனவருக்கும் அதே தொகைதான். எப்படி வாழ்வது? எங்களுக்க நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களின் கல்விச் செலவுக்கே மாதாந்தம் 20,000 ரூபா தேவையாக உள்ளது. தொழிற்சங்கங்கள் பிரயோசனமற்றவை. அவர்கள் எங்களது உரிமைகளுக்காகப் போராடுவதில்லை.”   

இந்த தோட்டத்தில் வீடுகளின் நிலமை மிகவும் மோசமாக உள்ளதாக விஜயலட்சுமி கூறினார். பல தொழிலாளர்களுக்கு பொருத்தமான வீடு கிடையாது. எங்கள் வீடும் இன்னும் 7 தொழிலாளர்களது வீடுகளும் அண்மையில் நடந்த மண்சரிவில் சேதமாகியுள்ளன. அதனால் நாங்கள் அகதிகளாகி, பாடசாலையில் இருந்தோம். திரும்பி வந்து சேதமடைந்த அதே விட்டிலேயே வாழ்கிறோம். வீடு கட்டுவதற்கு எமக்கு யாரும் உதவி செய்யவில்லை.”


புனிதவதி மற்றும் விஜயலட்சுமி

இடம்பெயர்ந்து இருந்தபோது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வந்ததாக அவர் கூறினார். அவர்கள் கொஞ்சம் அரிசியும் பிஸ்கட்டும் தந்திவிட்டு மறைந்துவிட்டார்கள். “சம்பளம் சாப்பாட்டுக்கே போதாதபோது, வீடு கட்ட எப்படி செலவு செய்வது?” அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்காக ஒவ்வொரு தடவையும் 80 ரூபா செலவழித்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மஸ்கெலியாவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது.

மஸ்கெலியாவில் பிரௌன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிற்சாலை தொழிலாளியான வடிவேல் கணேஸ், தொழிற்சங்கத் தலமைகள் தொழிலாளர்களுக்கு தேயிலைக் கன்றுகளை ஒதுக்குவது சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது ஒரு ஆபத்தான திட்டம், என்றார். “இந்த முறையின் கீழ், நாங்கள் எமது பிள்ளைகள் மற்றும் வயதான பெற்றோருடனும் சேர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதனூடாக கம்பனி முழுக் குடும்பத்தையும் சுரண்டுவதற்கு முயற்சி செய்கின்றது. ஆகவே சகல தொழிலாளர்களும் இந்த முறையை எதிர்ப்பதற்கு முன் வர வேண்டும்.”

அவர் கூறியதாவது: “தொழிற்சங்கத் தலைமைகள் அரசாங்கத்துடன் இணைந்து, அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள். தேர்தல் காலத்தின்போது, NUW பிரதேச தலைவர், எங்கள் தோட்டத்தில் ஒரு பாலம் கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டினார். 4 வருடங்கள் ஆகிவிட்டன, இன்னும் பாலம் கட்டப்படவில்லை. நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஆபத்தான பாலம் வழியாக போய் வருகிறார்கள். மழைக் காலங்களில் இது மிகவும் ஆபத்தானது.” 

அவரது தோட்டத்தில் சில தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணத்தை நிறுத்தி, தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு ஒரு கமிட்டியை அமைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக கணேஸ் தெரிவித்தார்.

தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து தூர விலகுவதையும் தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு புதிய அமைப்பு சம்பந்தமாக சிந்திப்பதையுமே இது காட்டுகின்றது. எவ்வாறெனினும், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு, முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக பெருந்தோட்டங்களிலும் ஏனைய துறையிலும் தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும், என உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் விளக்கினார்கள்.