ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Large Colombo audience hears David North’s lecture on the history of the Fourth International

கொழும்பில் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய டேவிட் நோர்த்தின் விரிவுரையை கேட்க பெருமளவானோர் கூடினர்

By our reporters
9 October 2018

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய விரிவுரையை கேட்க, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் புதிய நகர மண்டபத்துக்கு முன்னூறு வலுவான பார்வையாளர்கள் கூடினர். இந்த விரிவுரை, "வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்திற்கான இன்றைய போராட்டமும்" என்ற தலைப்பில் இடம்பெற்றது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவரான நோர்த், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பின் பேரில் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 3 அன்று, கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இதே தலைப்பில் அவர் ஒரு விரிவுரையை ஆற்றினார். அந்த விரிவுரைக்கும் உற்சாகமான ஆதரவு கிட்டியது.

1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஏற்பாடு செய்து வரும் தொடர் விரிவுரைகளின் ஒரு பகுதியாகவே இந்த இரு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனுடன் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவும் கொண்டாடப்பட்டது.


டேவிட் நோர்த்

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் விளைவாக, கூட்டத்திற்கு அதிகமான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நனவுகொண்ட புத்திஜீவிகளும் தீவின் பல பாகத்தில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், SEP மற்றும் IYSSE உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளடங்கிய ஒரு பெரிய குழுவினர் கொழும்பில் நடந்த நிகழ்வுக்கு தீவின் வடக்குப் பகுதியிலிருந்து சுமார் 250 மைல் தூரம் பயணம் செய்து வந்திருந்தனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ், கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டுவிழா சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்: "ஒருபுறம், பிரதான ஏகாதிபத்திய சக்திகள், அணு ஆயுதங்களால் நடக்க கூடிய மூன்றாம் உலகப் போரை நோக்கி உந்தப்படுகின்றன. அதேவேளை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுகின்றன. மறுபுறம், இந்தப் போர் தயாரிப்புகளுக்கு எதிராக, இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் பரவலாக தொழிலாள வர்க்கம், வர்க்கப் போராட்ட அலைக்குள் நுழைந்துள்ளது," என்று டயஸ் தெரிவித்தார்.

"முழு உலகப் பொருளாதார அமைப்பு முறையும் உடைந்து கொண்டிருக்கிறது. ஒரு மாற்று சமூக அமைப்பு முறையை கட்டியெழுப்ப வேண்டும்,” என பேச்சாளர் வலியுறுத்தினார். "அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னுடன் அணிதிரட்டிக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், சோசலிச குடியரசுகளின் ஒரு உலக ஒன்றியத்தை உருவாக்குவதன் மூலமே இதை நிறைவேற்ற முடியும், என டயஸ் கூறினார்.


விஜே டயஸ்

"சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை கைவிட்டதன் விளைவாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகரமான விளைவுகளுக்கு இலங்கை ஒரு பிரதான உதாரணமாகும்" என டயஸ் சுட்டிக்காட்டினார். லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1964ல் பப்லோவாத திருத்தல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் செய்த காட்டிக்கொடுப்பை அவர் சுட்டிக்காட்டினார். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) சர்வதேச சோசலிசத்தின் கொடியை மீண்டும் உயர்த்துவதற்காகவே 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது.

டயஸ் தொடர்ந்தார்: "இந்த வரலாற்றை நாம் நினைவுகூருவதற்கு காரணம், இன்றைய வர்க்கப் போராட்டங்களுக்கு அதன் படிப்பினைகள் அவசியமாகும். சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும், தெற்காசிய சோசலிச குடியரசின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கு இந்த படிப்பினைகள் மிக அடிப்படையானவை ஆகும்."

நோர்த்தை அறிமுகம் செய்த டயஸ், அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் மீது ஒரு ஆளுமை கொண்டவர் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக 1985-86 தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகளுடனான பிளவின் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தீர்க்கமான தலைமையை வழங்கியுள்ளார். 1990களின் நடுப்பகுதியில் அனைத்துலகக் குழுவின் கழகங்கள் கட்சிகளாக மாற்றப்பட்டதையும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வெளியீடாக 1998ல் உலக சோசலிச வலைத் தளம் நிறுவப்பட்டதையும் டயஸ் சுட்டிக்காட்டினார். நோர்த் எழுதிய பல முக்கியமான புத்தகங்களையும் அவர் காட்சிப்படுத்தினார்.


கொழும்பு கூட்டத்தின் பார்வையாளர்களின் ஒரு பகுதியினர்

அவருடைய விரிவுரையின் ஆரம்பத்தில், இன்று சோசலிசத்திற்கான போராட்டத்தில் வரலாறு தொடர்பான படிப்பினைகளின் தீர்க்கமான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: “வரலாற்று அனுபவம் பற்றி தொடர்ச்சியாக, விமர்சன ரீதியான மறுஆய்வு செய்வதன் மூலமே புரட்சிகர இயக்கம் அதன் வேலைத்திட்டத்தையும் செயல்பாட்டையும் அபிவிருத்தி செய்கின்றது. வரலாறு தொடர்பான ஒரு குறிப்பு இல்லாமல், வர்க்கப் போராட்டத்தின் கொந்தளிப்பான அலையின் ஊடாக பயணிப்பது சாத்தியமற்றது. அதற்கும் மேலாக, கடந்த நூற்றாண்டின் மிகப்பாரிய புரட்சிகர நிகழ்வுகளைப் பற்றி கற்றுக் கொள்ளாமல் ஒரு புரட்சிகரக் கட்சி எவ்வாறு அதன் இளம் உறுப்பினர்களையும், முழு தொழிலாள வர்க்கத்தையும் பயிற்றுவிக்க முடியும்?”

"ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் படிப்பினைகளைக் கற்று கிரகித்துக்கொள்ள வேண்டியதன்" அவசியத்தை அனைத்துலகக் குழுவின் தலைவர் விளக்கினார். “அந்த படிப்பினைகள் கடந்த நூற்றாண்டின் அடிப்படை தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டமாகும். மற்றும் தொழிலாளர்களும் நடப்பு உலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சரியான பாதையை அக்கறையுடன் தேடும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தீர்க்கமான அரசியல் மூலோபாயப் பிரச்சினைக்குமான மிக ஆழமான மற்றும் உடனடி முக்கியத்துவம் உடையதாக இந்த படிப்பினை உள்ளது.” நோர்த் நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் அரசியல் மூலங்களின் சுருக்கமான சாராம்சத்தை வழங்கினார்.

ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, உலகத்தை அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளதை நோர்த் சுட்டிக் காட்டினார். “சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவம் மனிதகுலத்துக்கு "சமாதானம், செழுமை மற்றும் அனைவருக்குமான ஜனநாயகத்தை" வழங்கும் என்ற ஆளும் உயரடுக்கின் பிரகடனங்களுக்கு நேர்மாறாகவே இந்தப் போர் தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.”

"பாசிசம் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் அபாயத்தை பற்றி பரவலாகப் பேசப்படுவது" பற்றி நோர்த் சுட்டிக் காட்டினார். அவர் அண்மையில் வெளியான பல புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டினார். வலதுசாரி பாசிச சக்திகளின் இத்தகைய எழுச்சிக்கான உண்மையான மூல காரணத்தை விளக்குவதற்கு இந்த ஆசிரியர்களில் எவராலும் முடியாமல் போயுள்ளதைப் பற்றி குறிப்பிட்ட நோர்த் கூறியதாவது: "பாசிசம் பற்றி மிகச் சிறந்த பகுப்பாய்வை செய்த ட்ரொட்ஸ்கி, இதற்கான அரசியல் மூல காரணம் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளதுடன், பூகோளப் பொருளாதார நெருக்கடி, சர்வதேச புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உள்நாட்டு சமூக மோதலினதும் அழுத்தத்தின் கீழ், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதின் உடைவானது தடுத்துநிறுத்தமுடியாத போக்காகிவிட்டது."

"முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தத்தில் அதனாலேயே முன்வைக்கப்படும் அரசியல் மாற்றீடுகள், ஒன்று பாசிச காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசப் புரட்சியே ஆகும்”, என நோர்த் தொடர்ந்தார். “இதில் ஏதாவதொன்றின் வெற்றியே மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாசிசத்தின் வெற்றியானது மனித நாகரீகத்தின் மரணத்தை குறிக்கும். சோசலிசப் புரட்சியின் வெற்றியானது ஒரு புதிய, ஆச்சரியமூட்டும் அளவில் மனித நாகரீகத்தின் புத்துயிர்ப்புக்கும் மறுமலர்ச்சிக்குமான சாத்தியத்தை திறந்து விடும். எம் முன்னுள்ள தேர்வு இதுவே ஆகும்."


கொழும்பு கூட்டத்தில் டேவிட் நோர்த் உரையாற்றுகிறார்

அனைத்துலகக் குழுவின் சார்பிலும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பிலும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 ஆவது ஆண்டுநிறைவிற்கு வாழ்த்து தெரிவித்த நோர்த், இலங்கை கட்சியானது ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக பாரிய கடினமான சூழ்நிலைகளிலும் உறுதியுடன் போராடியது, என்று அறிவித்தார்.

விரிவுரையின் முடிவில் பார்வையாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நோர்த் பதிலளித்தார். அவருடைய பதில்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டன. பார்வையாளர்களின் வசதிக்காக, இந்த விரிவுரை ஆங்கிலத்தில் இருந்து சிங்களம் மற்றும் தமிழுக்கு ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வருகை தந்த பலர் கூட்டத்திற்கு முன்பும் பின்பும் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசினர்.


கேஷா
னி

கொழும்பு பல்கலைக்கழக மாணவரான கேஷானி, முன்னர் சோசலிசம் நடைமுறை சாத்தியமற்றது என்று நினைத்துக்கொண்டு அதை நம்பவில்லை எனக் குறிப்பிட்டார். "ஆனால் பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களுடனான நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இந்த உலக நிலைமையில் சோசலிசத்திற்கு பெருகிவரும் வாய்ப்பைப் பற்றி இப்போது நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச முன்னோக்கு குறிப்பாக சோசலிசத்திற்கான எனது ஆர்வத்தை பலப்படுத்தியது. சோசலிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் வேறு எவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை."

நோர்த்தின் விரிவுரையை பற்றிக் குறிப்பிட்ட கேஷானி, தான் நிறைய கற்றுக் கொண்டாதாகவும், பல கேள்விகளுக்கு விடை கிடைத்ததாகவும் கூறினார். "வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், மற்றும் சர்வதேச முன்னோக்கை நாம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியமும் நன்கு தெளிவுபடுத்தப்பட்டது. நான் ஆர்வமாக இருக்கிறேன். பூகோளமயமாக்கத்தின் கீழ் முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதன் மூலமே பதிலளிக்கமுடியும்."

இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பின் வரலாறு தனக்கு புதிய விடயம், ஆனால் அது ஒரு முக்கியமான படிப்பினையாக இருந்தது என்று கேஷானி கூறினார். "இந்த விஷயங்களைப் பற்றி கலந்துரையாடவும் அதற்கான  முன்னெடுப்பை செய்யவும் நான் முயற்சி செய்கிறேன்," என்று அவர் கூறினார்.


பேர்சி

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி-சாரா ஊழியரான பேர்சி, நோர்த்தின் விரிவுரையில் கலந்துரையாடப்பட்ட அனுபவங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானவை என்று கூறினார்: "இந்த படிப்பினை இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது. தொழிலாள வர்க்கத்தின் வலிமையை வலியுறுத்துவதிலேயே சோசலிச சமத்துவக் கட்சி வேறுபடுகிறது. அந்த சக்தி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு இது போன்ற இன்னும் விரிவுரைகள் தேவை என்று நான் நினைக்கிறேன். பல்கலைக்கழகத்தில் ஒரு தொழிலாளி என்ற வகையில், பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டங்களை நான் கண்டிருக்கிறேன். ஒரு சர்வதேச முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் வழங்கப்படாவிட்டால், தொழிலாள வர்க்கம் வெற்றி பெற முடியாது."

உலகின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச சோசலிசம் தேவை என்று தான் நம்பியதாக வடக்கில் பருத்தித்துறையில் இருந்து வந்திருந்த தனேஸ்வரி கூறினார். ஒரு உலகளாவிய உற்பத்தி முறையிலேயே தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர், என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொடூரமான 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரைப் பற்றி பேசிய தனேஸ்வரி, அழிவுகரமான விளைவுகளோடு மக்கள் தேசியவாதத்திற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதை இப்போது புரிந்துகொண்டிருந்தார். "தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் மக்களுக்கு ஆதரவளிக்கவில்லை. யுத்தம் முடிவடைந்த போதிலும், தமிழ் மக்களின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சி தொடர்கிறது." இந்த கூட்டத்திற்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இனப் பிரிவுகளைக் கடந்து வந்து கலந்து கொண்டதை அவர் பாராட்டினார்.

நோர்த்சீ தொழிற்சாலையின் கணக்காளர் ஞானவேல் கூறியதாவது: "இந்த நிகழ்வில் பங்குபற்ற நான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு ஒரு மாற்றம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

"டேவிட் நோர்த் கட்சியின் வரலாற்றைப் பற்றி பேசினார். முதலாளித்துவம் உலகத்தை ஆட்சி செலுத்துகையில், தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியில் சோசலிசத்தை நோக்கி வழிநடத்துவதே நல்லது."

இருப்பினும், கட்சியின் கொள்கைகள் இன்னும் பரந்த வெகுஜனங்களை எட்டியிருக்கவில்லை, அதன் நடவடிக்கைகள் அதிகரிக்கவும் விரிவுபடுத்தவும் வேண்டும் என்று அவர் கூறினார். இத்தகைய கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில், கட்சியின் நிலைப்பாடுகள் விளக்கப்பட வேண்டும்.

இலங்கையின் பிரதான கருத்துச்சித்திரம் வரைபவரான அவந்தா ஆடிகல, உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறியதாவது: "என் பார்வையில், ஒரு தேசிய கட்டமைப்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பேசுவது முற்றிலும் முட்டாள்த்தனமானது. ஜே.வி.பி., முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஏனைய போலி இடது கட்சிகள் இலங்கையில் நிகழ்வுகளுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசுவதில்லை.

"ஸ்ராலினிசம் மற்றும் ஏனைய திருத்தல்வாத போக்குகள் பற்றி விரிவுரையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மிக முக்கியமானவை. பலர் சோசலிசத்தை ஸ்ராலினிசம் அல்லது குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் வடிவங்களாக தவறாக அடையாளம் காண்கின்றனர். எந்தவொரு கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான முன்னோக்கை வழங்காததால், தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியால் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்."

களுத்துறையில் இருந்து வந்த மாணவனான அஞ்சன கூறியதாவது: "முதலாளித்துவவாதிகள் ஒரு உலகப் போரை நோக்கி உந்திச் செல்லப்படுகின்றனர் என்று விரிவுரையில் குறிப்பிடப்பட்டது. ஒரு விஞ்ஞான மாணவன் என்ற முறையில், இதுபோன்ற அணுசக்தி போர் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்துள்ளேன்.

“நோர்த், பாசிசம் மீண்டும் தலைதூக்குவதை பற்றிக் கூறினார். 1930 களில் ஜேர்மனியில் மக்கள் இதே நிலைமையை எதிர்கொண்டனர். ட்ரொட்ஸ்கி ஜேர்மனியில் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு இடையே ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அந்த நேரம் அந்தக் கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக, ஹிட்லர் பதவிக்கு வந்தார், இதனால் பேரழிவுகரமான உலகப் போருக்கு வழிவகுக்கப்பட்டது. 1938ல், ட்ரொட்ஸ்கி முதலாளித்துவத்தின் நெருக்கடியை விளக்கியதும் மற்றும் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்."

ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற பிற கட்சிகள் சர்வதேச சோசலிசத்தைப் பற்றி பேசவில்லை என்று அஞ்சன சுட்டிக்காட்டினார்.

டேவிட் நோர்த்தின் விரிவுரையால் ஏற்பட்ட ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பார்வையாளர்கள், கட்சியின் நிதிக்கு 28,800 ரூபாய்களை வழங்கினர். கூட்டத்தில் நடந்த புத்தக விற்பனையில் 13,500 ரூபாய் மதிப்புள்ள மார்க்சிச இலக்கியங்களையும் அவர்கள் வாங்கினர்.

பல தொலைக்காட்சி அலைவரிசைகளும் மற்றும் வானொலி நிறுவனங்கள் கூட்டத்தை பதிவு செய்தன. அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக் காட்சி (ITN), தனியார் நிறுவனமான சியத்த (Siyatha) மற்றும் ஹிரு (Hiru) ஒளிபரப்பாளர்கள் அதில் அடங்கும். IBC, லங்காசிறி மற்றும் மாத்யவேதியா (சிங்களம்) ஆகிய இணையத்தள ஊடகங்களும் வந்திருந்தன.