ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

David North outlines contemporary relevance of Trotskyism at Colombo media briefing

கொழும்பு ஊடகவியலாளர் சந்திப்பில் டேவிட் நோர்த் ட்ரொட்ஸ்கிசத்தின் சமகால பொருத்தத்தை கோடிட்டுக் காட்டினார்

By our reporters
3 October 2018

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், அக்டோபர் 1, கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றினார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 80 வது ஆண்டு நிறைவையும் மற்றும் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஸ்தாபிக்கப்பட்டு 50 வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டங்களைப் பற்றியே இந்த மாநாடு நடத்தப்பட்டது. அக்டோபர் 3 கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்திலும் அக்டோபர் 7 கொழும்பில் புதிய நகர மண்டபத்திலும் இடம்பெறவுள்ள இரண்டு கூட்டங்களிலும் நோர்த் உரையாற்றுவார்.

சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தைப் பற்றிய ஒரு சுருக்க உரையை நோர்த் வழங்கினார். ட்ரொட்ஸ்கியின் இந்தப் போராட்டத்தின் உச்சக் கட்டமாகவே நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச சர்வதேசியவாதத்திற்கான பல தசாப்த கால நீண்ட போராட்டமானது சோசலிசத்துக்கான சமகால போராட்டத்திற்கு இன்றியமையாத முக்கியத்துவம் கொண்டது, என நோர்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


டேவிட் நோர்த்

இலங்கையில் உரையாற்றுவதற்கு அழைத்தமைக்காக சோசலிச சமத்துவக் கட்சிக்கு நன்றி தெரிவித்த இந்த அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி மேலும் கூறியதாவது: "இலங்கையில் இன அல்லது மத பின்னணிக்கு அப்பால், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரதும் ஐக்கியத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த அரை நூற்றாண்டு கால கொள்கைப் பிடிப்பான, தைரியமான போராட்டமானது உலகெங்கிலும் சோசலிஸ்ட்டுகளுக்கு ஊக்கமளித்துள்ளது."

நிருபர்கள் மாநாட்டை தொடக்கி வைத்த சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஏதாவதொரு தீர்வை வழங்குவது ஒரு புறம் இருக்க, அதற்கான அடிப்படை காரணங்களை விளக்க கூட முடியாது, மற்றும் அவை சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நாடுகின்றன, என தெரிவித்தார்.


விஜே டயஸ்

"சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), மற்றும் அதன் வெளியீடான உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதனோடு தொடர்புடைய அரசியல் நெருக்கடிக்கும் சாத்தியமான ஒரு விளக்கத்தை அளிக்கும் இயலுமை கொண்டுள்ளன" என்று அவர் கூறினார்.

டேவிட் நோர்த்தை அறிமுகம் செய்த டயஸ், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரின் நான்கு தசாப்த கால பாத்திரத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். நோர்த் எழுதியுள்ள, சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சில நூல்களை டயஸ் சுட்டிக் காட்டினார். லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாப்பதற்காக, ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும், ஒரு கால் நூற்றாண்டு கால யுத்தம்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1991-2016, மற்றும் நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு, ஆகியவை நோர்த் எழுதிய நூல்களில் அடங்கும்.

திங்கள் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நோர்த் பேசினார், அதில் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி, அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி (ITN), கெபிடல் வானொலி மற்றும் லங்கா வெப் நியூஸ் ஆகியவற்றில் இருந்து  நிருபர்கள் கலந்து கொண்டனர். அவரது பேச்சு பல சிந்தனை வளமுள்ள கேள்விகளை எழுப்பியது. கேபிடல் வானொலி நிருபர் ஒருவர் இவ்வாறு கேட்டார்; "புதிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் முன்வைக்கும் சவால்களை" சோசலிஸ்டுகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்.


ஊடகவியலாளர் மாநாட்டில் நோர்த் பேசுகிறார்

நோர்த்தின் பதில்: "தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு மிகவும் முற்போக்கான காரணியாகும். சோசலிசத்தின் வளர்ச்சிக்கு வசதியை ஏற்படுத்தும் ஒரு காரணியாக தொழில்நுட்பம் குறித்து சோசலிஸ்டுகள் ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். முதலாவதாக, அது மக்கள், மிகப்பெருமளவில் தகவல்களை  பெற்றுக்கொள்ள நேரடியாக வழியமைக்கிறது. இரண்டாவதாக, அது பரந்தளவில்  தொடர்பு கொள்ளும் வசதியை ஏற்படுத்துகிறது, தேசிய எல்லைகளை கடந்து மற்றும் அதனை பலவீனப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்கிறது.

"இறுதியாக, செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ச்சிகள் பூகோள மக்களின் நலன்களுக்காக உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வதை சாத்தியமாக்கின்றன. உற்பத்தி சாதனங்கள் தனி உடமையின் கைகளில் இருந்து அகற்றி எடுக்கப்படுமாயின் —இலாபத்திற்கான உற்பத்தியில் இருந்து அகற்றப்படுமாயின்— இவ்வாறான அபிவிருத்திகள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை சாத்தியமாக்குகிறது, பெரும்பான்மையினரின் நலன்களுக்காக உற்பத்தி பயன்படுத்தப்படும் மற்றும் விஞ்ஞானபூர்வமான திட்டமிடல் அறிமுகம் செய்யப்படும்.”

"சோசலிசத்தின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே சிறிதளவில் தான் இருப்பதாக" தோன்றுவது பற்றி கருத்து தெரிவிக்கும்படி அதே பத்திரிகையாளர் நோர்த்திடம் கேட்டார்.

நோர்த் அதற்கு இவ்வாறாக விளக்கம் கொடுத்தார்; ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவை "மக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது. 'சோசலிஸ்ட்' மற்றும் 'கம்யூனிஸ்ட்' என்று தம்மை தாமே அழைத்துக் கொண்ட கட்சிகள் முன்னெடுத்த கொள்கைகள் ஒருபோதுமே மார்க்சிச கொள்கைகளாக இருந்ததில்லை.

நோர்த் தொடர்ந்தார்: "ஆனால் இப்பொழுது நாம் ஒரு வேறுபட்ட காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அங்கு தொழிலாள வர்க்கம் மீண்டும் வேகம் பெற்று வருகிறது அத்துடன் சமூக மற்றும் அரசியல் பிற்போக்கின் தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

"கடந்த மூன்று தசாப்தங்கள், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கை நிலைமைகளில் உலகளாவிய சரிவைக் கண்டன. அமெரிக்காவில் பல தசாப்தங்களான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்குப் பின்னர், அங்கு இப்பொழுது சோசலிசத்தின் மீது மிகப் பெருமளவிலும் அதிகமாகவும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் வாழ்ந்த பின்னர் இளைஞர்கள் இப்போது சோசலிசம் குறித்து மிகவும் சாதகமான கண்ணோட்டங்களை கொண்டுள்ளனர். சோசலிசம், புரட்சிகர மார்க்சிசம் மற்றும் சர்வதேசியவாதம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தினுள்ளே பரந்த வரவேற்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்."

ஏனைய "இடது அமைப்புக்கள்" குறித்து நான்காம் அகிலத்தின் நிலைப்பாடு என்னவென்று ஒரு ITN பத்திரிகையாளர் கேட்டார்.

தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலில் இருந்து எழுகின்ற பல அரசியல் இயக்கங்களுக்கு, ஒவ்வொரு நாட்டிலும் தோல்வியுற்ற பல்வேறு தேசிய முதலாளித்துவ இயக்கங்களின் தலைவிதி பற்றிய வரலாற்று கேள்விகளுக்கு முக்கியமான பதில்கள் கிடையாது மற்றும் பதில்களை வழங்க முடியாமலும் இருக்கின்றன.

"ட்ரொட்ஸ்கிச இயக்கம் அவர்களுடைய ஏமாற்று கருத்துக்களை பகுத்தாய்ந்து விளக்கியது. இந்த அமைப்புக்கள் அனைத்திற்கும் மாறாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடக்க புள்ளியாக இருப்பது எந்த நாட்டினதும் தேசிய நிலைமை அல்ல, மாறாக உலக அரசியல் மற்றும் உலகப் பொருளாதாரம், "என்று நோர்த் கூறினார்.

ITN இன் 6:30 பிற்பகல் சிங்கள செய்தி தொகுப்பானது, பத்திரிகையாளர் மாநாடு குறித்த மூன்று நிமிட அறிக்கை மற்றும் நோர்த்தின் புத்தகங்களின் மேல் அட்டைகளை காண்பிப்பதையும் உள்ளடக்கி இருந்தது. அந்த வலைச் சேவையின் ஆங்கில மொழி செய்தி சேவை, அதே போல் "வசந்தம்", அதன் தமிழ் மொழி தொகுப்பு, மேலும் சுருக்கமான செய்திகளை வெளியிட்டன.