Print Version|Feedback
“Migrants are not criminals, we are international workers!”
The migrant caravan and the fight to unite the international working class
“புலம்பெயர்ந்தவர்கள் குற்றவாளிகள் இல்லை, நாங்கள் சர்வதேச தொழிலாளர்கள்!”
புலம்பெயர்வோர் நடைபயணமும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமும்
Eric London
23 October 2018
ஹோண்டுராஸின் சான் பெட்ரோ டு சுலாவை விட்டு அமெரிக்காவை நோக்கி அக்டோபர் 13 இல் தொடங்கிய புலம்பெயர்ந்தவர்களின் நடைபயணம் பரந்த கவனஈர்ப்பை பெற்றிருப்பதுடன், இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வறிய மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிம்மதிக்காக ஒருங்கிணைந்த ஒரு சில நூறு புலம்பெயர்ந்தவர்களின் ஒரு சிறிய குழுவாக தொடங்கிய அது, சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக 7,000 பேர்களின் கண்டங்கள் தழுவிய அரசியல் ஆர்ப்பாட்டமாக விரிவடைந்துள்ளது.
மெக்சிகன், மத்திய அமெரிக்கன் மற்றும் அமெரிக்க ஸ்பானிஷ்-மொழி செய்தி ஒளிபரப்பு நிறுவனங்கள் அந்த நடைபயணம் குறித்து செய்திகளை நேரடியாக வழங்கி வருகின்ற நிலையில், தென் மெக்சிகோ நெடுகிலும் அதன் பயண வழியைப் பின்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கானவர்கள் செய்திகளைப் பார்வையிட்டு வருகின்றனர். தென் மெக்சிகோவின் உள்ளூர்வாசிகள் உணவு, உடை, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி அந்த புலம்பெயர்வோர் குழுவை உற்சாகப்படுத்துகின்றனர்.
அந்த நடைபயணத்தில் இருப்பவர்கள், நசுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களாக தங்களைக் காணவில்லை மாறாக தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையான பிரதிநிதிகளாக காண்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் மெக்சிக்கன் மற்றும் குவாத்தமாலா பொலிஸின் வன்முறை தாக்குதல்களுக்கு முன்னால், “புலம்பெயர்வோர் குற்றவாளிகள் இல்லை, நாங்கள் சர்வதேச தொழிலாளர்கள்!” என்ற அவர்களின் கோஷங்கள், வறுமை, வன்முறை மற்றும் ஊழலால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் அதிர்கின்றன.
இந்த அனைத்து தொழிலாளர்களும் மத்திய அமெரிக்காவின் "வடக்கு முக்கோண பகுதியின்" (Northern Triangle) நிலைமைகளில் இருந்து தப்பி வருகிறார்கள் என்கின்ற நிலையில், அந்நிலைமைகள், அவற்றின் அடிவேரில், ஒரு நூற்றாண்டாக அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடூர குற்றங்களின் விளைவாகும்.
குவாத்தமாலாவில், அமெரிக்கா 1954 இல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட Jacobo Árbenz க்கு எதிராக ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முடுக்கிவிட்டு, சர்வாதிகாரி Castillo Armas ஐ நிறுவி, 1960 இல் இருந்து 1996 வரையில் நீடித்த 36 ஆண்டுகால உள்நாட்டு போருக்கு களம் அமைத்தது. 1980 களின் ஆரம்பத்தில், அமெரிக்க ஆதரவிலான Efraín Ríos Montt இன் சர்வாதிகாரம் தொழிலாளர்கள் மற்றும் ஏழை கிராமத்தவர்கள் மீது பரந்தளவில் பாரிய படுகொலையை நடத்தியது, பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு விடப்பட்ட மாயன் பழங்குடி மக்களுக்கு எதிரான கணக்கிட்ட இனப்படுகொலையும் அதில் உள்ளடங்கும்.
அண்டையில் உள்ள எல் சல்வடோரில் வசிப்பவர்கள் 1979 இல் இருந்து 1992 வரையிலான உள்நாட்டு போர் கொடூரங்களைச் சகித்து கொண்டிருந்தார்கள், அந்த உள்நாட்டு போரில் அண்மித்து 100,000 பேர் உயிரிழந்தனர். வியட்நாமில் அது நிறைவேற்றிமுடித்த பூமியை எரிக்கும் உத்திகளைப் பயன்படுத்திய அமெரிக்க இராணுவம், எல் சல்வடோர் அரசாங்கத்தை வழிநடத்தியது. அவ்வரசாங்கம் அவ்வாறே Archbishop Óscar Romero போன்ற அதிருப்தியாளர்களைப் படுகொலை செய்து, Sumpul ஆற்று படுகொலை அட்டூழியங்களை நடத்தியது. அங்கே தான் ஹோண்டுராஸிற்குள் தப்பிச் செல்ல முயன்ற 600 கிராமத்தவர்களைத் துருப்புகள் படுகொலை செய்தன.
வரலாற்றுரீதியில் அப்பிராந்தியம் எங்கிலும் பாரிய படுகொலை செய்வதற்கு அமெரிக்காவின் தொடக்க களமாக ஹோண்டுராஸ் சேவையாற்றி உள்ளது. 1980 கள் நெடுகிலும், அமெரிக்கா அந்நாட்டில் துணைஇராணுவ "கொண்ட்ரா" படைகளுக்குப் பயிற்சி அளித்ததுடன், அவர்களை, 1979 இல் அமெரிக்கா ஆதரவிலான Somoza இன் சர்வாதிகாரத்தைத் தூக்கிவீசிய புரட்சிக்குப் பின்னர், சூறையாடப்பட்ட நிக்கராகுவாவுக்கு அனுப்பியது.
அப்பிராந்தியம் எங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கிளர்ச்சிகள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஒடுக்கியதன் மூலமாக United Fruit Company போன்ற அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாக்க ஏகாதிபத்தியம் செயல்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மொத்தத்தில் மில்லியன்களில் இருப்பார்கள். முன்னாள் அமெரிக்க தளபதி ஸ்மெட்லி பட்லெர் வார்த்தைகளில் குறிப்பிடுவதாயின், “வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்காக அரை டஜன் கணக்கான மத்திய அமெரிக்க குடியரசுகளைச் சீரழிப்பதில் நான் உதவினேன்,” என்றார்.
பெருநிறுவனங்களின் பெயர்கள் மாறியுள்ளன என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் தீவிரமடைந்து மட்டுமே உள்ளது. வெறுக்கப்பட்ட ஹோண்டுரஸ் ஜனாதிபதி Juan Orlando Hernández பதவியில் உள்ளார் ஏனென்றால் அவருக்கு முன்பிருந்த Porfirio Lobo Sosa, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Manuel Zelaya ஐ 2009 இல் வெளியேற்றிய ஒபாமா நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து நிறுவப்பட்டார்.
2014 இல், ஹோண்டுஸ் சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர் Berta Cáceres, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முடுக்கிவிடுவதில் அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் தனிப்பட்டரீதியில் பாத்திரம் வகித்தார் என்பதற்காக அவரை கண்டித்தார். அமெரிக்க ஆதரவிலான அந்த அரசாங்கம் மார்ச் 2016 இல் Cáceres ஐ படுகொலை செய்தது.
இத்தகைய வரலாற்றுடன், மத்திய அமெரிக்கா உலகின் மிக சமத்துவமற்ற பிராந்தியமாக இருக்கிறது, ஹோண்டுரஸ் அதன் மிகவும் சமநிலையற்ற நாடாக உள்ளது. ஹோண்டுரஸ் மக்களில் அறுபத்தி எட்டு சதவீதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர், 44 சதவீதத்தினர் அதீத வறுமையில் வாழ்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த தொழிலாளர்களை அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்க இராணுவத்தை பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ள நிலையில், குவாத்தமாலா மற்றும் மெக்சிகோவில் அவர்கள் செய்ததைப் போல எல்லையைக் கடந்து நடந்து வர முயன்றால் அந்த புலம்பெயர்வோரைப் படுகொலை செய்ய அவர் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய அபாயகரமான தயாரிப்புகளை ஜனநாயகக் கட்சி திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. சனியன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைவர்கள் சார்லஸ் ஸ்கூமெர் மற்றும் நான்சி பிலொசி கூறுகையில், ட்ரம்ப் "எப்பாடுபட்டாவது விடயத்தை மருத்துவ காப்பீட்டில் இருந்து புலம்பெயர்ந்தமவர்கள் பக்கம் மாற்றுவதில்" ஈடுபட்டுள்ளார் என்றார்கள், மேலும் ட்ரம்பின் பாசிசவாத அச்சுறுத்தல்களுக்கு விடையிறுக்கவும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
பேர்ணி சாண்டர்ஸ் விஸ்கான்சினில் நேற்று ஜனநாயகக் கட்சி செனட் வேட்பாளர் டாம்மி பால்ட்வினுக்காக பேசிய 30 நிமிட சுற்றுப்பயண உரையில், எல்லையை மூடி இராணுவத்தை நிலைநிறுத்துவதென்ற ட்ரம்பின் சூளுரை குறித்து எதுவும் குறிப்பிடக் கூட இல்லை. பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுகள் சம்பந்தமான ஜனநாயக கட்சியின் மிரட்சியூட்டும் கொந்தளிப்புடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு வன்முறை, கற்பழிப்பு மற்றும் பாலியல் அடிமைத்தனத்திலிருந்து தப்பி வரும் பல பெண்கள் உட்பட வறிய புலம்பெயர்ந்தோரின் தலைவிதி குறித்து அவர்களின் மவுனம், #MeToo பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தையே காட்டிக்கொடுத்து விடுகிறது.
இந்த மவுனம், ஜனநாயகக் கட்சியைச் சுற்றி செயல்படுகின்ற மற்றும் தங்களைச் சோசலிச அமைப்புகள் என்று அழைத்துக் கொள்ளும் அமைப்புகளிலும் நிரம்பியுள்ளது. அமெரிக்காவுக்கான ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அவர்களின் வலைத் தள பக்கத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் சமீபத்திய தாக்குதல் குறித்து குறிப்பிடவே இல்லை, DSA ஐ சேர்ந்த ஜாக்கோபின் சஞ்சிகையோ அல்லது சர்வதேச சோசலிச அமைப்பின் Socialist Worker பத்திரிகையோ அவர்களின் முதல் பக்கத்தில் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து எந்த கட்டுரையும் வெளியிடவில்லை. இத்தகைய தேசியவாத, முதலாளித்துவ-சார்பு அமைப்புகளுக்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு இது சமீபத்திய ஒரு ஆதாரம் மட்டுமே ஆகும்.
எல்லா தேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்த நடைபயணத்தை வர்க்க கூட்டாளிகளின் ஒரு நேசப்படையாக அங்கீகரிக்க வேண்டியது அவசரமானதாகும்.
முதலாளித்துவத்தின் கீழ், பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையானது, பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு முற்றிலுமாக அடிபணியச் செய்யப்பட்டுள்ளன. புயற்காற்றின் புழுதியைப் போல, போர்களும், கூலிகளில் குறைப்பு அல்லது மாற்றங்களும் மற்றும் பண்டங்களின் விலைகளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அவர்களின் வீடுகளில் இருந்தும், அவர்களின் குடும்பங்களில் இருந்தும் மற்றும் அவர்கள் கலாச்சாரங்களில் இருந்தும் அவர்களைப் பிய்த்தெறிந்து, உலகின் வெகுதூர மூலைமுடுக்குகளில் பாதுகாப்பு தேட அவர்களை நிர்பந்திக்கின்றன.
ஆனால் புலம்பெயர்ந்தவர்களுக்கு முன்நிற்கும் ஆழ்ந்த அபாயங்கள் ஒருபுறம் இருந்தாலும், பாரிய புலம்பெயர்வுக்கான நிகழ்சிப்போக்குகளும் மற்றும் குறிப்பாக இந்த நடைபயணமும் புரட்சிகரமான தாக்கங்களைக் கொண்டுள்ளன.
முதலாளித்துவத்தின் கீழ் தேசிய-அரசுகளாக சட்டங்கள் மூலம் உலகம் பிளவுபட்டிருப்பது பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் விருப்புகள் மற்றும் சடரீதியிலான தேவைகளுக்குப் பொருத்தமற்றது என்பதை தேசிய எல்லைக்கோடுகளைக் கடந்து அணிவகுப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கம் இந்த யதார்த்தத்தை நிரூபித்து வருகிறது. எல்லைகளைக் கடந்து அணிவகுப்பதன் மூலமாக, இந்த நடைபயணமானது, மனித உயிர்களை அடிமைகளாக கொள்முதல் செய்வது மற்றும் விற்பனை செய்வதைச் சட்டபூர்வமாக்கும் சட்டங்களைப் போலவே, புலம்பெயர்வை "சட்டவிரோதமாக" ஆக்கும் சட்டவிதிகள் மனிதயினத்தின் முன்னேற்றத்தை முடுக்குபவை என்பதை நிரூபிக்கின்றன.
“முதலாளித்துவமும் தொழிலாளர்களின் புலம்பெயர்வும்" என்ற 1913 கட்டுரை ஒன்றில் விளாடிமீர் லெனின் பின்வருமாறு விவரித்தார்:
“கடுமையான வறுமை மட்டுமே மக்களை அவர்களின் சொந்த மண்ணை விட்டு அகல நிர்பந்திக்கிறது என்பதிலும், முதலாளித்துவவாதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மிகவும் வெட்கமற்ற விதத்தில் சுரண்டுகிறார்கள் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. ஆனால் தேசங்களின் இந்த நவீன புலம்பெயர்வின் முற்போக்கான முக்கியத்துவம் குறித்து பிற்போக்குவாதிகள் மட்டுமே தங்களின் கண்களை மூடிக் கொள்ள முடியும்... முதலாளித்துவம், உள்ளூர் வாழ்வின் நாட்பட்ட அழுகிப்போன பழக்க வழக்கங்களை உடைத்து, தேசிய எல்லைகள் மற்றும் தப்பெண்ணங்களை முறித்து, அமெரிக்கா, ஜேர்மனி, அதற்கு அப்பாலும் அனைத்து நாடுகளின் பெரிய பெரிய ஆலைகள் மற்றும் சுரங்கங்களின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒட்டுமொத்த உலகின் பெருந்திரளான உழைக்கும் மக்களை [வர்க்க போராட்டத்திற்குள்] ஒருங்கிணைத்து வருகிறது... ”
அமெரிக்க தொழிலாளர்கள் தெற்கிலிருந்து வரும் அவர்களின் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவதைக் கோருகிறது:
- அமெரிக்காவுக்குள் வரும் நடைபயணத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வ நுழைவு வழங்க வேண்டும்
- குடியமர்வு மற்றும் சுங்க அமுலாக்க ஆணையம் (ICE), சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையம் (CBP) ஆகியவைக் கலைக்கப்பட வேண்டும் மற்றும் இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லை பிரதேசம் நீக்கப்பட வேண்டும்
- அமெரிக்காவில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள அனைத்து புலம்பெயர்ந்தோரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்
- இந்த நடைபயணத்தில் வருபவர்கள் மற்றும் அனைத்து புலம்பெயர்ந்தோர்களுக்கும் வேலைகள், வீடுகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் கல்விசார் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
- மத்திய அமெரிக்காவை மீளக்கட்டமைக்க பல ட்ரில்லியன் டாலர் வேலைதிட்டம் வேண்டும், இதற்காக செலுத்தப்படும் தொகை அமெரிக்க பில்லியனர்களின் செல்வ வளத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட வேண்டும்
- அனைத்து தொழிலாளர்களுக்கும், துன்புறுத்தப்படும் அச்சமின்றி உலகெங்கிலும் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான உரிமை கிடைக்க வேண்டும்